பொருள்மயக்கம்

வில்லியம் எம்சன்
வில்லியம் எம்சன்

 

பொருள்மயக்கம் என்பதை ஒரு குறையாகவே பொதுவான வாசிப்பில் சொல்கிறோம். ‘ஆசிரியர் சொல்லவந்ததை தெளிவாகச் சொல்லியிருக்கிறார்’ என்ற வரியை அடிக்கடி மதிப்புரைகளில் பார்க்கிறோம். ஆனால் இலக்கியத்தில் அவ்வாறு சொல்லவந்த விஷயம் என்ற ஒன்று இல்லை. இலக்கியம் எப்போதும் ஆசிரியன் அறியவிரும்பும் ஒரு மன எழுச்சியை அவனே மொழியைக்கொண்டு வடித்துக்கொள்ள முயல்வதுமட்டுமே. நல்ல இலக்கிய ஆக்கங்களை ஆசிரியனாலேயே விளக்கிவிடமுடிவதில்லை.

ஆகவே இலக்கிய ஆக்கங்களில் மொழி அடையும் புதிய அர்த்தங்கள் முக்கியமானவையாகின்றன. மொழியில் சொல்லுக்கும் பொருளுக்கும் இடையேயான உறவின் சாத்தியக்கூறுகளை அதிகரிப்பதுதான் இலக்கியத்தின் சவாலாக இருக்கிறது. புழக்கம் மூலம் மொழி அளிக்கும் மாறாத அர்த்தங்களை சிதைப்பதே இலக்கியத்தின் பணியாக கருதப்படுகிறது. இன்று மிக விரிவாகப்பேசப்பட்டுவிட்ட இந்த கருத்துக்களை பல வருடங்களுக்கு முன்னர் வில்லியம் எம்ப்ஸன் என்ற இலக்கிய திறனாய்வாளர் இலக்கியவாசிப்பின் கோணத்தில் விவாதித்திருக்கிறார்.

1930ல் பிரிட்டிஷ் இலக்கிய விமர்சகரான வில்லியம் எம்ப்சன் [William Empson] பிரசுரித்த ‘ஏழுவகை பொருள் மயக்கம்’ என்ற பிரபலமான விமரிசனக் கட்டுரையில் ஒரு குறிப்பிட்ட இலக்கியச் சொல்லாட்சி வாசகனுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள்களை அளிப்பதில் உள்ள ஏழுவகைக் காரணங்களை அல்லது ஏழுவகைச் சாத்தியங்களைப் பட்டியலிட்டார். அவை

1)ஒரே சொல்லாட்சி படைப்பில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப அடையும் பொருள் மயக்கம். உதா-‘பொன்னகரம் பொன்னகரம் என்கிறீர்களே. இதுதான்ய்யா பொன்னகரம்’ (புதுமைப்பித்தன் பொன்னகரம் சிறுகதை) என்றவரி. அக்கதையில் காயமடைந்த கணவனுக்கு பால் கஞ்சிக் காய்ச்ச ஒரு பெண் விபச்சாரம் செய்கிறாள். அவசியமான எளிய ஒன்றைக்கூட அடையமுடியாமல் ஒரு பெண் விபச்சாரத்துக்கு செல்லும் நகரம் என்ற பொருளில் அவ்வரியைப் படித்தால் ஒரு பொருள் வரும். அவள் விபச்சாரம் செய்வதே கணவன் மீதான பிரியத்தால்தான் என்று எடுத்துக்கொண்டால் வரும் பொருள் இன்னொன்று.

2) படைப்பின் வரிகள் பலவகையான பொருள்களை அளித்தாலும் ஒட்டுமொத்தப் படைப்பு இன்னொரு முழுப்பொருளை அளிக்கும்படி இருப்பது. உதா:’பாஞ்சாலி சபதம்’ (பாரதி) பாஞ்சாலி சபதம் செய்யும் வரிகள் வரும்போதுதான் பாரததேவியே பாஞ்சாலியாக உருவகிக்கப்பட்டிருக்கும் பொருளை அளிக்கிறது. அப்பொருள் மையமாக இருக்கையில் பிற வர்ணனைகள்  தனித்த பொருளை அளிக்கின்றன.

3)சிலேடை. உதா:சாதாரண வாழ்க்கை வாழும் மனிதன் இவன். அதை சாதா ரண வாழ்க்கை வாழும் என பிரித்துக்கொள்வதன் மூலம் மேலதிக பொருள்வரும்படி எழுதியிருப்பார் சி.மணி

4)ஆசிரியனின் தெளிவற்ற மனநிலையை வெளிப்படுத்தும் முகமாக சொற்கள் அமைக்கப்பட்டிருத்தல். உதா: மலையுருகிப் பெருக்கெடுத்த நதி மடியுமோ நிரந்தரமாய்? அத்தனை பெரிய கனலை வெளிப்படுத்த வல்லதோ ஒரு சிறுசொல்? (தேவதேவன்). இங்கே கனலுக்கும் சொல்லுக்குமான உறவைப்பற்றிய கவிஞரின் மனப்பிம்பம் ஒரு புகைமூட்டத்திற்குள்ளேயே உள்ளது.

5)பல தளங்களில் பொருள் தந்து நிற்கும் படிமம். உதா:சூளைச் செங்கல் குவியலிலே தனிச்சொல் ஒன்று சரிகிறது. (ஞானக்கூத்தன்).

6)இலக்கியப் படைப்பு தன்னளவில் பொருள்தராது நிற்கையில் வாசகனே அதற்கு பொருளை தன்விருப்பப்படி கற்பனை செய்துகொள்ளுதல். இது சாதாரணமாக நிகழக்கூடிய ஒன்றே. மிகச்சிறந்த உதாரணம் என்றால் பிராம் ஸ்டாக்கரின் டிராக்குலா. ஆசிரியர் டிராக்குலாவை குறியீடாக ஆக்கவில்லை. ஆனால் அப்படித்தான் அது வாசிக்கப்பட்டது.

7) எழுத்தாளனின் மனப்போராட்டம்  எழுத்தில் தெரிவதனால் எழுத்து மாறுபட்ட அர்த்தங்களை அளித்தல். உதாரணம்: அன்னா கரினினா நாவலில் (தல்ஸ்தோய்) அன்னாவின் ஒழுக்க மீறலை கண்டிக்க முனையும் தல்ஸ்தோய் அவளுடைய காதலின் தீவிரத்தையும் அங்கீகரிக்கும் தன்மையை அடைந்து திட்டவட்டமாக முடிவெடுக்க முடியாத நிலைடில் தவிக்கிறார். எனவே அன்னாவின் தற்கொலையானது இயற்கை அளித்த தண்டனை அல்லது ஓர் அவலம் என்ற இரு தளங்களில் பொருள் வரும்படி அமைந்துவிடுகிறது.

எம்ப்சனின் கொள்கைகள் ஒரு படைப்பு உருவாக்கும் வாசிப்புத்தன்மையை படைப்பின் பின்னால் உள்ள ஆசிரியனில் தேடுவதனால் உருவானவை. இங்கே படைப்பு முழுக்க முழுக்க ஆசிரியனின் அகவெளிப்பாடாகக் கருதப்படுகிறது. வாசகனின் வாசிப்பு உருவாக்கும் சாத்தியங்கள் முற்றிலும் கணக்கில் கொள்ளப்படுவது இல்லை. ஆகவே பிற்கால மொழியியல் சார்ந்த திறனாய்வு இதை நிராகரித்துவிட்டது. ஆனால் உண்மையில் படைப்பை வாசகன் எழுத்தாளன் எந்தக்கோணத்தில் வேண்டுமென்றாலும் பார்க்கலாம். இது படைப்பின் கோணத்தில் பார்ப்பது, அவ்வளவுதான். அவ்வகையில் இன்றும் பயனுள்ளதே

 

முதற்பிரசுரம் Nov 26, 2010 /மறுபிரசுரம்

 

முந்தைய கட்டுரைசென்னையில் பாவண்ணன் விழா
அடுத்த கட்டுரைதூத்துக்குடி