அன்பின் ஜெமோ,
உங்கள் “மன்மதன்” கதையில் வரும் பார்வையற்ற நாயகனின் வார்த்தைகளில் பெரிதும் உந்தப்பட்டிருந்த நாங்கள், நீங்கள் சென்று வந்த ஹொய்சால கலைவெளிக்கு பயணம் வந்திருக்கிறோம். (சென்ற முறை தங்கள் வீட்டிற்கு வந்ததைப் போலவே இம்முறையும் புல்லட்டிலேயே பயணம்.)
இங்கே முதலில் பேளூர் சென்னகேசவர் கோயிலில், மாலைசூரியன் விழத்தொடங்குவதற்கு கொஞ்சமுந்தி பார்க்க ஆரம்பித்து நூற்றுக்கணக்கான செல்ஃபி இரைச்சல்களுக்கு நடுவே கோயிலை தரிசித்து ரசித்து முடித்தோம். இரவு பேளூரில் தங்கி காலை பெலவாடி வீரநாராயணர் கோயில் சென்றபோது, தனித்திருந்து தனிமைப்பட்டுப்போய் கிடந்த அக்கோயிலின் அர்ச்சகர் மிகப்பிரகாச முகத்தோடு அறிமுகமானார். தமிழ் நன்கு புரிந்து கொஞ்சம் நன்றாகவும் பேச முடிந்த அவரிடம் மிக திருப்தியாக வரலாறு, கதையெல்லாம் கேட்டோம்.
இங்கு கண்ட கிருஷ்ணரின் அழகில் லயித்திருந்தபோது, இந்த கிருஷ்ணரே இந்தியாவின் மிக அழகான ரூபமுடைய கிருஷ்ணர் என்று அங்கீகரிக்கப்பட்டது என்று சொன்னார். இந்த யெளவன பருவத்து கிருஷ்ணர் சிலையும் சரி இதற்கடுத்து ஜாவகலில் கண்ட சிறுவன் வயதுக் கிருஷ்ணரும் சரி அத்தனை கவர்ச்சியானவர்களாக, இருக்கிறார்கள். பேச்சிடையே அர்ச்சகர் ப்ரசாந்த், மற்ற ஹொய்சாள கோயில்களைப் பற்றி சொல்லிக்கொண்டு வரும் போதெல்லாம் இடைஇடையே நாங்கள் “ஒரு ரைட்டர்”, “ஆமா ஒரு தமிழ்ரைட்டர் சொல்லியிருக்கார்” என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தோம்.
நடுவே தடாலடியாடியாக, “நீங்க திருவட்டாறு கோயில் சென்றதில்லையா ஸ்வாமி? அதைப்பற்றி விஷ்ணுபுரம் என்றொரு நாவல் எழுதப்பட்டிருக்கிறது, மிக அருமையான நாவல்” என்று சொன்னபோது “ஆமா ஜெயமோகன் தானே” என்று புன்னகைத்தார். நீங்கள் மூன்று, நான்கு முறை வந்திருக்கிறீர்களாம். உங்களுக்கு இந்த கோயிலை மிகப்பிடிக்குமாம். குடும்பத்தோடு வந்து நிறைய நேரம் ஒருமுறை அளவளாவியிருக்கிறீர்களாம். தங்கள் மகன் அஜிதனை பற்றி தெரிந்திருக்கிறது. நீங்கள் கேரளாவை பூர்விகமாகக் கொண்டு தற்போது நாகர்கோயிலில் செட்டிலாகியிருப்பவராம். உங்களுடைய எழுத்துக்களை கொஞ்சம் ஆங்கிலத்தில் வாசித்திருக்கிறாராம். உங்களை மிகவும் பரிச்சயப்பட்டு அறிந்து வைத்திருக்கிறார்.
சிநேகிதர் போல. அவர் சொல்லிமுடிக்கவும் நாங்கள், “ஆமா அவர் இங்கு வந்து சென்ற பிறகு இதைப் பற்றி எழுதினார் அதை வாசித்து உத்வேகங்கொண்டு தான் இங்கே வந்திருக்கிறோம் என்று சொன்னதும் ரொம்ப உற்சாகமாகிவிட்டார். மிகந்த எழுத்துவன்மை கொண்ட ஒரு கிரியேட்டரால் தான் இப்படி வாசிப்பவரை செயலில் இழுத்துவர வைக்கமுடியும் இல்லையா?” என்றார். போட்டோ எடுத்துக் கொண்டு அடுத்து ஜாவகல் கோயிலுக்கு கிளம்பினோம்.
தற்போது கேதாரிஸ்வரர் கோயிலில்…..
அன்புடன்,
க. லெனின்
திருப்பூர்.