சேலம் வானவன் மாதேவி இயலிசை வல்லபி சகோதரிகளைப்பற்றி நிறையவே எழுதியிருக்கிறேன். தசையிறுக்க நோயால் அவதிப்பட்டுவந்த இருவரும் தங்கள் உடல்குறையை தன்னலமில்லாத சேவையால் கடந்துசென்றவர்கள். தங்களைப்போன்ற நோய்கள் கொண்டவர்களுக்காக அவர்கள் ஆற்றிய பணி மிகப்பெரியது. அவர்களின் ஆதவ் அறக்கட்டளை மிகப்பெரிய இயக்கமாக ஆகி பல குழந்தைகளுக்கான அடைக்கலமாக இன்று மாறியிருக்கிறது.
வானதி மிகச்சிறந்த இலக்கியவாசகி. வெண்முரசு குறித்து தொடர்ந்து அவரது எதிர்வினை வந்துகொண்டிருந்தது. அசாதாரணமான மன உறுதியும் வாழ்க்கைமேல் நம்பிக்கையும் கொண்டவர். கடும் வலியில். உடல்செயலின்மையில் அவதிப்பட்டுவந்தபோதும் அவர் முகத்தில் எப்போதுமே புன்னகையும் மலர்ச்சியும்தான் காணக்கிடைத்தது. வானதியைப்போன்றவர்கள் அனைத்தும் அமைந்தும் அவநம்பிக்கை எனும் நோயால், அதன்விளைவான சோர்வால் அவதிப்படும் பிறருக்கு மிகச்சிறந்த முன்னுதாரணம்.
கடந்த பல மாதங்களாகவே வானதி கடும் உடல்நலச்சிக்கல்களில் அவதிப்பட்டார். இறப்பு மூலம் விடுதலை அடைந்தார். சில இறப்புகளே முழுமை என்னும் பொருள் அளிக்கின்றன.
வானதிக்கு அஞ்சலி