அரசின் பணப்பரிமாற்றத் திட்டத்தை ஆதரித்த சில பொருளாதார நிபுணர்களில் சுர்ஜித் பல்லா மிக முக்கியமானவர்.
ஜனவரி ஏழாம் தேதி இந்தியன் எக்ஸ்ப்ரஸ் செய்தித்தாளில், சமூக நலத் திட்டங்களான பொது விநியோக முறை மற்றும் ஊரக வேலைவாய்ப்புத் திட்டங்களை நிறுத்திவிட்டு, அனைவருக்கும் அடிப்படை வருமானம் என்னும் ஒரு திட்டத்தை முன்வைக்கிறார்.
சமூக நலக் கொள்கைகளின் அடிப்படையை தலைகீழாகப் பார்க்கிறது இந்தக் கொள்கை.
அதன் தொடர்ச்சியாக இன்று வெளியான இன்னொரு கட்டுரை – எதிர்மறை வருமான வரி. அதாவது Negative Income Tax. இதை அவரும் அர்விந்த் விர்மானி என்னும் இன்னொரு நிபுணரும் எழுதியிருக்கிறார்கள்
இந்த இரண்டு கட்டுரைகளையும் தொடர்ச்சியாகப் பார்க்கும் போது, இந்த அரசு மிகவும் பெரிதாக இந்தத் தளங்களில் திட்டமிடுகிறார்கள் என்பது புரிகிறது. வரப்போகும் பட்ஜட்டிற்கான வெள்ளோட்டமாக இந்தக் கட்டுரைகள் இருக்கலாம் எனக் கருதுகிறேன்.
இவை மிக நிச்சயமாக, இந்தியப் பொருளாதார வரலாற்றைப் புரட்டிப் போடக் கூடிய திட்டங்கள்.
இவர் சொல்வதில் மிக முக்கியமானது:
குறிப்பிட்ட அளவுக்கு மேல் வருமானம் பெறும் அனைவருக்கும் ஒரே அளவில் 12% வருமான வரி. இப்போது அது பல அடுக்குகளாக இருக்கிறது.
India Income tax slabs 2016-2017 for General tax payers
Income tax slab (in Rs.) | Tax |
0 to 2,50,000 | No tax |
2,50,001 to 5,00,000 | 10% |
5,00,001 to 10,00,000 | 20% |
Above 10,00,000 | 30% |
உலகின் மிக முக்கிய நாடுகளின் வருமான வரி, இது போன்ற அடுக்குகள் நிறைந்தவை தாம். அமெரிக்காவும் 10-39 சதம் வரையான அடுக்கைக் கொண்டது.
இந்த அடுக்கின் பின்னுள்ள வாதம் – அதிக வருமானம் உள்ள மனிதர்கள், அரசுக்கு அதிகமாகப் பங்கைச் செலுத்த வேண்டும் என்பதே. லைசென்ஸ் பர்மிட் ராஜ்ஜியத்தில், இது முட்டாளதனமாக 90% வரை இருந்தது. ஆனால், 80 களுக்குப் பிறகு, இவை படிப்படையாகக் குறைக்கப்பட்டு, இப்போது 30% ஆக இருக்கிறது.
இந்த 12% என்பது, இப்போது, இந்தியர்கள் சராசரியாகச் செலுத்தும் வருமான வரி. இதை எல்லோருக்குமான ஒரு அளவாக்கும் போது. அதிகச் செல்வம் சேர்க்கும் மனிதர்களுக்கு, கறுப்புப் பணம் சேர்க்கும் ஆசை குறைந்து, வரி செலுத்தும் விகிதமும், எண்ணிக்கையும் அதிகமாகும் என்கிறார்.
இத்திட்டத்துக்கு இன்னொரு புறமும் உள்ளது. அதாவது வருமான வரி செலுத்தும் அளவுக்கு வருமானம் இல்லாதவர்களுக்கு, அரசு வழங்கும் மானியம். அதாவது 2.5 லட்சம் வரை வருமானத்துக்கு மேல் உள்ளவர்கள் தாம் வருமான வரிகட்டுவார்கள் என்றால், அதற்குக் கீழுள்ளவர்களுக்கு மானியம். பல்லாவின் யோசனைப்படி, வருமானமே இல்லாதவருக்கு, அரசு வருடம் 30000 ரூபாய் வழங்கும். அதிலிருந்து படிப்படியாக வருமானம் உயர உயர, மானியம் குறையும். வருடம் 2.5 லட்சம் வருமானம் உள்ளவருக்கு எந்த மானியமும் வராது.
இந்த மானியம், அரசின் கஜானாவில் இருந்து வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படும்.
இந்த யோசனை நிறைவேறினால், பொது விநியோக முறை, ஊரக வேலை வாய்ப்புத் திட்டங்கள் போன்ற திட்டங்கள் நிறுத்தப்படும். அவற்றில் உள்ள ஊழல்களும் இருக்காது என்கிறார்.
இந்த யோசனை, 40 களில் இங்கிலாந்து அரசியல்வாதி ஒருவரால் முன்வைக்கப்பட்டு, பின்பு 50 களில் மில்டன் ஃப்ரீட்மேன் என்னும் அமெரிக்க சுதந்திரச் சந்தை பொருளாதார நிபுணரால் ஒரு கொள்கையாக முன்வைக்கப்பட்டது.
இதில், ஒரே வருமான வரி என்பது 30-35 நாடுகளில் வழக்கத்தில் உள்ளது. ரஷ்யா / கஜக்கிஸ்தான் / ரோமானியா / பல்கேரியா / பொலீவியா என்பவை இதில் முக்கிய நாடுகள். எந்த முன்னேறிய நாட்டிலும் இது போன்ற ஒரு வரிவிதிப்பு இல்லை – ரஷ்யா தவிர.
இதில் சில நேர்மறை அம்சங்கள் இருக்கின்றன.
மிகக் குறைந்த வருமான வரி என்பதால் வரி கட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். வழக்கமாகக் கட்டுபவர்களும், தமது வருமானத்தைச் சரியாக கணக்குக் காண்பிக்கும் வாய்ப்புகள் உள்ளன. ஏன் 12% வரி என்றால், அதுதான், 2013-14 ஆம் ஆண்டு இந்தியர்கள் சராசரியாகச் செலுத்திய வரி என்கிறது கட்டுரை.
வெளிநாடுகளில் கொண்டு சென்று பதுக்கப்படும் பணத்தின் அளவு குறையும்.
தற்போதுள்ள பொது விநியோக முறையில் உள்ள ஊழல் அளவு குறையும்.
சில எதிர்மறை அம்சங்களும் உள்ளன.
இன்றையப் பொது விநியோக முறை, அரசின் உணவு தானியக் கொள்முதலோடு இணைக்கப்பட்டிருக்கிறது. இது தொடருமா எனத் தெரியவில்லை. தொடரவில்லையெனில், அரசு உணவு தானியங்களின் மிகப் பெரும் கொள்முதலாளி. இது நிறுத்தப்பட்டால், தானிய உற்பத்திக் காலங்களில் பெருமளவில் விலை வீழ்ச்சி ஏற்படும். கிட்டத்தட்ட 30-40% உணவு தானிய உற்பத்தி அரசால் கொள்முதல் செய்யப்படுகின்றது.
நிறுவன ஊழியர்களின் ஊதியத்துக்கு வரி விதித்தல் எளிது. தொழில் செய்வோரின் வருமானத்தை எவ்வாறு கணக்கிடப் போகிறார்கள். இது பெரும் பிரச்சினை. பட்டயக் கணக்காளர்களின் துணை கொண்டு நஷ்டக் கணக்கு எழுதுவது மிக எளிது. இதற்கான வரி விதிப்பு வழி ஒன்று தேவை.
மிக நிச்சயமாக பொது விநியோக முறையை நிறுத்தி விட்டு, நேரடியாகப் பண மாநியம் வழங்குவது, பின் தங்கிய மாநிலங்களில் உள்ள ஏழை மக்களுக்கு எவ்வாறு சாத்தியம் எனத் தெரியவில்லை. வங்கிகள் அதிகமில்லாத மாநிலங்களில், இது பெரிதும் பாதிப்பை உருவாக்கும்.
2.5 லட்சம் வருமானத்திற்குக் குறைவானவர்களின் வருமானத்தைக் கணக்கிடும் முறை சரியாக இருக்க வேண்டும்
இந்தத் திட்டம் முன்னோக்கிய திட்டமாக எனக்குத் தோன்றுகிறது. ஆனால், இதைச் செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்களை அரசு முன்கூட்டி யோசித்து, மாற்றுத் தரப்பினரையும் அழைத்துப் பேசி, மாநில அரசுகளோடும் உறவாடி மட்டுமே செயல்படுத்த முடியும். செயல்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டால், பணப்பரிமாற்றத்தை விட அதிகப் பிரச்சினைகளை உருவாக்கும்.
எனக்குத் தோன்றுவது இது:
முதல் ஆண்டில், வருமான வரி வரம்பை 12% ஆக மாற்றலாம்.
நேரடி மானியத் திட்டத்தை, சோதனை முறையில் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், மிக முன்னேறிய, மிகவும் பின் தங்கிய பகுதிகளில், ஒரு மாவட்டம் முழுதும் அமுல் படுத்தலாம். இதில் உள்ள பிரச்சினைகளைக் களைந்து, அடுத்த ஆண்டு நாடெங்கிலும் அறிமுகப்படுத்தலாம்.
அரசு தானியக் கொள்முதல் திட்டத்தைக் கைவிடாமல், உற்பத்திக் காலங்களில், கொள்முதல் செய்யவோ அல்லது நல்ல விலை கொடுக்கவோ ஒரு புதிய திட்டம் வகுக்க வேண்டும் – இது நிறுத்தப்பட்டால், அது பெரும் நாசத்தில் போய் முடியும்.
வியாபாரம் செய்பவர்களின் வருமான வரியை நிர்ணயிக்க புதிய வழிகள் கொண்டு வரப்பட வேண்டும். இன்று, நிறுவனப்படுத்தப்பட்ட பெரும் நிறுவனங்கள் / ஊழியர்கள் எவரும் வரி ஏய்ப்பதில்லை, ஆனால், சிறு / மத்திய அளவிலான வியாபாரிகள் மிகப் பெரும் ஏய்ப்பாளர்கள்.
சுருங்கச் சொல்வதானால், பணப் பரிமாற்றத் திட்டம் போல், இங்கே அதிரடி தேவையில்லை. தகுந்த சோதனைகள் செய்து, பிழைகளைக் களைந்து முன் செல்லலாம். அதேபோல், கொள்கை அருமை. இதன் வெற்றி, அதை நிறைவேற்றுவதில் தான் இருக்கிறது.
ஒரு வேளை 12% வரி விதிப்பின் குறிக்கோள்கள் எட்டப்படவில்லையெனிலும், பெரிதாக நஷ்டம் ஏற்படாது.
இந்தக் கொள்கை, வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டால், அது வரி வசூலிப்பில், ஊழல் குறைப்பில் மிக முக்கியமான அத்தியாயமாக இருக்கும்
பாலா