வெண்கடல் – விமர்சனங்கள்

Untitled

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

தங்களது ‘வெண்கடல்’ சிறுகதைத் தொகுப்பினை சில நாட்கள் முன்புதான் படித்து முடித்தேன். ‘கைதிகள்’ அப்பு போலீசால் கொன்று புதைக்கப்படுவது ஒருவித பதைபதைப்பை ஏற்படுத்தியது அதே சமயம், சாகும் போதும் அவனது சிரிப்பும் நடத்தையும், உறுதியும், போலீஸ் தரப்பிற்கு எந்த வகையிலும் குறைவில்லாத கொடூரம் அவனது இயக்கத்தின் தரப்பிலும் உள்ளது என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. மரணத்தை சிரிப்புடன் ஏற்க ஒன்று ஞானியாக இருக்க வேண்டும் அல்லது ஆழமான கொள்கை வெறியனாக இருக்கவேண்டும் என்று தோன்றியது. வெல்லப்பாகில் தள்ளிக் கொல்லப்பட்ட எளிய அந்த பெண்ணிடம் மனம் பரிவு கொள்கிறது. அந்த நாயுடு கொல்லப்பட்டிருக்க வேண்டும். ‘அம்மையப்பம்’ – எந்த கலைஞன் ஆனாலும் அவனுக்குரிய இடம் கிடைக்காவிட்டால், புரிந்தவர்களின் பரிதாபத்திற்கும் புரியாதவர்களின் கேலிக்கும் உரித்தாகிறான் என்று தோன்றியது. ‘வெண்கடல்’ – தாய்மை உணர்வு. ‘வெறும் முள்’ – ஏசுவை கிழக்கத்திய கண்ணோட்டத்தில் விரிவாக வரலாற்றுப் புனைவாக தரும் எண்ணம் உண்டா? – இதை சொல்லும் போது இன்னொரு எண்ணம் – இந்து கோயில் போலவே கோபுரங்களுடன் கட்டப்பட்ட ஒரு கிறிஸ்தவ கோயிலின் புகைப்படத்தை முகநூலில் சில நாட்கள் முன்பு பார்த்தேன். கோபுரத்தில் ஏசுவின் பொம்மை இருக்கிறது. சிரிப்பாக இருந்தது, பாடுபட்டு இந்துக்களை கிறிஸ்தவர்களாக கன்வெர்ட் செய்துவிட்டு பிறகு தங்கள் கடவுள் ஏசுவை இந்துவாக கன்வெர்ட் செய்து மொத்தமாக இந்து சமயத்திற்குள் வந்து விடுவார்களோ என்று. எவ்வாறாயினும் ஏசுவின் வேர்கள் கீழைத் திசையின் ஆழங்களுள் தொடர்பற்றதாக இருக்க முடியாது என்று எண்ணுகிறேன்.

வழக்கம் போல் உங்கள் வலை. தினமும் எப்படியும் படிக்கவைத்து விடுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக – பின்னர் வேகமாக வருவேன்.

வாழ்க உமது ஓய்வறு எழுத்து!

இறைவன் ‘ஜெயத்தை’ உங்களுக்கும்,

உங்கள் எழுத்துக்களின் மீதான “மோகத்தை’ எனக்கும் தரட்டும்.

உங்கள் திருக்குறள் உரை கேட்க ஆவலுடன் எதிர்நோக்கும்,

அன்புள்ள,

விக்ரம்

 

 

ஜெயமோகனின் “வெண்கடல்”, வாழ்வின் வெளிச்சங்கள்

நவீன இலக்கிய உலகில் கடந்த ஆண்டு சில அதிர்வுகளை ஏற்படுத்திய “அறம்” சிறுகதைத் தொகுப்பிற்குப் பிறகு 2013–ஆம்-ஆண்டு வெளிவந்துள்ளது ஜெயமோகனின் “வெண்கடல்” சிறுகதைத் தொகுப்பு.

முன்னுரையில் ஜெயமோகனே குறிப்பிட்டிருப்பது போல இதில் உள்ள 11 சிறுகதைகளும் வெவ்வேறு தளத்திலியங்கும் பல்சுவைத் தன்மை கொண்டவை.

பொதுவாகவே ஜெயமோகனின் கதைகளில் உரையாடல்கள் நேர்த்தியாக இருக்கும். கதைகளுக்கேற்ப அவை ஆழமாகவும் இருக்கக் கூடும். “குருதி” சிறுகதையின் இறுதியில் சேத்துக்காட்டார் கூறும்”மனுசனா வாழணும்ல—-நாயா, பன்னியா வாழாதே; மனுஷனா வாழு—-மனுஷனா வாழுலே—-லே, மனுஷனா வாழுலே” எனும் சொற்கள் முகத்திலே அறைகின்றன என்றால் “நிலம்” கதையில் ‘உன்னைப் பார்த்தா கே.ஆர்.விஜயா மாதிரின்னு சொன்னாங்க; அவ என்ன உன்னைய மாதிரி உளுந்து நெறத்திலயா இருக்கா?” என்று அவன் முதலிரவில் கேட்டான். “ஆ, அவள பெயிண்ட் அடிக்கறதுக்கு முன்னாடி பாத்துட்டு வந்து கேளுங்க” என்றாள் அவள்” என்பவை மயிலிறகால் வருடுவதுபோல் இருக்கின்றன.

அதுபோலவே அவர் புதிய, புதிய மனத்திற்குள் பதியவேண்டிய உவமைகளை எழுவதையும் பார்க்கலாம். ”சூடான முயலை வெளியே எடுத்துக் கருகிய காதுகளையும் கால்களையும் பிய்த்து முறு முறுவென அப்பளம் வற்றல் தின்பது போலத்தின்று——————-”

”வேடத்துக்குள்ளிருந்து வெளிவரும் சதனம் ராமன் நாயர் பூவுக்குள்ளிருந்து வரும் வண்டுபோலத் தோன்றுவார்”

”அவர் எங்கோ நினைப்புக்கு அப்பாற்பட்ட புராண காலத்தில் இருந்து நழுவி நழுவி விழுந்து வந்துகொண்டே இருப்பார் பசுவைப் பிளந்து கன்று சலமும் நீருமாக வந்து தொழுவத்தில் கிடப்பது போல”

”விளக்கின் சுடர் சிறிய சங்குப் பூவின் இதழ்போல அசையாமல் நின்றது”

ஆனால் இத்தொகுப்பில் அதிகமான உவமைகள் இல்லை. பாத்திரங்கள் மற்றும் படைப்பாளன் கூற்றிலும், உரையாடல் மூலமாகவும் கதை நகர்ந்து செல்கிறது

தொகுப்பின் மிகச்சிறிய கதை ‘தீபம்’. தனக்கு நிச்சயமாகிவிட்ட முறைப்பெண்ணின் வீட்டுக்குச் செல்கிறான் முருகேசன். வீட்டில் மாமன் அத்தை யாரும் இல்லை. லட்சுமி மட்டும் இருட்டில் இருந்தே பழங்கால வழக்கப்படி வரவேற்று உரையாடி இருக்கச் சொல்கிறாள். இருட்டில் நின்றுகொண்டு இருக்கும் அவளிடம் “எப்ப வந்தாலும் இருட்டயில்ல பாத்துட்டுப் போறம்——-?” என்கிறான் முருகேசன்.

அவளோ “சாமியைக் கூட இருட்டிலதான் பாக்கிறீய’ என்கிறாள். இவனோ “சாமிய வெளக்கு கொளுத்திக் காட்டுறாங்களே” என்று பதில் கூறுகிறான்.

உடனே அவள் உள்ளேபோய் சாமி கும்பிடும் லட்சுமி விளக்கை ஏந்தி வருகிறாள். அதன் ஒளியில் அவள் முக அழகை முழுமையாகப் பார்க்கும் முருகேசன் “இனிமே எங்கயானாலும் ஒரு சாதாரண விளக்கே போதும்; உன் முகத்தை நானே பாத்துக்குவேன்” என்று கூறுவதுடன் கதை முடிகிறது

பெண்ணை மங்கள விளக்கென்றும் குடும்ப விளக்கென்றும் கூறும் மரபில்தான் இக்கதை எழுந்து நிற்கிறது. தீபம் அழகு; பெண்ணும் அழகு; அதுவும் இலட்சுமி விளக்கை எடுத்து வரும் லட்சுமியே அழகு. தீப ஒளியில் முழுமையாக மனத்தளவிலும் உணர்ந்து விடுகிறான் முருகேசன். பெண்களைப் பாடாய்ப்படுத்தும் இன்றைய உலகில் பெண்களைப் புனிதப்படுத்தும் இக்கதை இருவரின் உரையாடல்களிலேயே உலவுகிறது.

ஜெயமோகன் கதைகள் பெரும்பாலும் ஆற்றொழுக்காய்ச் சென்று தன்போக்கிலேயே இயற்கையாய் முடிவு பெறும். படித்து முடித்த வாசக மனத்தில் ஒரு தேடல், ஒரு முரண், ஒரு முடிச்சு அல்லது ஒரு கேள்வி ஏதாவது ஒன்று எழத்தான் செய்யும்.

டெல்லிக்கு பத்மஸ்ரீ விருது வாங்கச் சென்ற ஷண்முகனின் அப்பா அளவுக்கு அதிகமாகக் குடித்துவிட்ட நிலையிலும் கதகளி ஆடும் சதனம் ராமன் நாயரின் காலில் விழுந்து “மன்னிக்க வேண்டும்; மன்னிக்க வேண்டும்” என்று கேட்பது ‘விருது’ கதையில் தெரிகிறது. காரணம் வாசகனை ஊகிக்க வைக்கிறது.

அதுபோலவே ‘கைதிகள்’ கதையில் காட்டில் ‘என்கவுன்ட்டர் செய்யப்படுவன் யாராக இருக்கும் என்ற கேள்வி நமக்குள் எழுகிறது. ஜெயமோகன் கூறுவதுபோல அது ‘அறம்’ தொகுப்பில் சேர்க்க வேண்டிய உண்மைக் கதை. காலனின் தூதனாக அல்லது காலனாகவே தொடர்ந்து வரும் கருங்குருவி எல்லாம் முடிந்ததும் காணாமல் போகிறது. இருந்த ஒரு சாட்சியும் அதுதான். அதனால் என்ன பயன்? சங்க இலக்கியத்தில் “நானும் தலைவனும் சந்தித்தமைக்குச் சான்று அங்கிருந்த ஒரே ஒரு குருகுதான், அதுவும் சாட்சி சொல்ல வராது” என்று தலைவி கூறுவது நினைவுக்கு வருகிறது..

கதையின் இறுதியில் வரும் ‘பஞ்ச்’ வசனம் ஜெயமோகன் கதைகளில் பெரும்பாலும் இருப்பதில்லை. சுடப்படுமுன் அந்த அயிட்டம் ‘இங்க வேலை ரொம்ப கஷ்டம்தான் இல்ல தோழர்” என்று கேட்கிறான். அந்தத் தோழர் என்ற சொல் ஆயிரம் ஊகங்களுக்கு இடம் தருகிறது.

இதுபோலவே கிடா, வெண்கடல், நிலம் கதைகளிலும் பார்க்க முடிகிறது. ‘கிடா கதையில் தனக்கு முடிவு செய்யப்பட்ட ஜானகி தன் தம்பியை விரும்புவதை அறிகிறான் அண்ணன். இறுதியில் பெரியவர்களிடம் தம்பிக்கே அவளை நிச்சயம் செய்யச் சொல்கிறான்.

தம்பி தன்னை அவள் விரும்புவது “உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்க “நமக்குப் பிடிச்சிருக்கிறவங்களுக்கு நம்ம மேலே பிரியமிருக்கான்னுதானே நாம பாப்பம்” என்று அண்ணன் கூறுவது இன்னும் ஒரு கதை இக்கதையில் மறைந்துள்ளதைக் காட்டுகிறது. இக்கதையில் கிடா, அதைவெட்டுவது, குடிப்பது எல்லாமே நம் கண் முன்னால் தெரிவது போல ஜெயமோகன் எழுத்து அமைந்துள்ளது.

’நிலம்’ கதையில் தனக்குக் குழந்தை இல்லாவிடினும் மனைவியை விட்டு விட்டு வேறு பெண்ணை மணம் முடிக்க மறுக்கிறான் சேவுகப்பெருமாள். ஆனால் அவன் நிலம், நிலம் என்று பல வழிகளில் சேர்த்துக் கொண்டே இருக்கிறான். அவன் மனைவி ராமலட்சுமி “பிள்ளையில்லாமே எதுக்கு சாமி இந்த மண்ணாசை?” என்று கோயிலில் படுத்திருக்கும் பண்டாரத்திடம் கேட்கிறாள். பண்டாரமோ “பிள்ளை இல்லாததனாலதான்———-” என்று கூறிச் சிரிக்கிறார்.

உலகில் ஆசை இல்லாதவர் யாரும் இல்லை. ஓரிடத்தில் ஆசை வைக்க இயலாமல் போனால் அந்த ஆசையை அளவுக்கு மீறி வேறோர் இடத்தில் வைப்பதே உலக இயல்பு. அதை உணர்ந்த பண்டாரம் பிள்ளைமேல் வைக்க இயலாப் பற்றைத்தான் அளவு கடந்து நிலத்தின் மீது அவன் வைப்பதாக மறைமுகமாய் உணர்த்துகிறார்.

”வெண்கடல்” அற்புதமான கதை. தாய்ப்பாலே இங்கு வெண்கடலாகிறது. குழந்தை இறந்து பிறக்கிறது. தாய்க்கோ மார்புகளில் பால் கட்டிவிட இரண்டு நாள்களாய்த் துடிக்கிறார். நாட்டு வைத்தியரிடம் அழைத்துக் கொண்டு வரப்பட அவர் குளத்தின் அட்டைகளைக் கொண்டுவந்து மார்புகளில் கட்டுகிறார். வலிக்காமல் அட்டைகள் பாலை உறிஞ்சி எடுத்துவிட அவள் குணமாகிறாள். வைத்தியர் அட்டைகளக் கொண்டுபோய், கோழிக்குப் போடச் சொல்ல அவளோ “அய்யோ, வேண்டாம் அய்யனே ………………….கொல்ல வேண்டாம், எனக்க பாலு குடிச்ச சீவனாக்கும் அதெல்லாம்………………”என்கிறாள். கதை இந்தக் கூற்றில்தான் நிற்கிறது. தாயின் இதயம் கொண்டு சென்ற மேலை நாட்டுக்கதை நினைவுக்கு வருகிறது.

தன்னுடலையே தேசமாக உருவகிக்கும் மகாத்மாவைக் குறியீடாகக் கொண்ட ‘பாபு’ வே பாத்திரமாக உலவும் கதை ‘நீரும் நெருப்பும்’ உணர்வுக் குவியல்.

ஜெயமோகனே குறிப்பிடுவதுபோல் கதைகள் எல்லாம் பல்சுவைத் தன்மை தருகின்றன. ‘பிழை’ மற்றும் ‘வெறும் முள்’ இத்தொகுப்பிற்குள் ஒத்துவராமல் துருத்திக் கொண்டு நிற்பதையும் சொல்லித்தானாகவேண்டும். வம்சி யின் நூல் அமைப்பு நேர்த்தியாக உள்ளது.

வளவதுரையன்

முந்தைய கட்டுரைசெ(ஜ)ய மோகா… நிறுத்து! உன் வசைஎழுத்தை!!!!
அடுத்த கட்டுரைமிருகவதை என்னும் போலித்தனம்