சந்திப்புகள் கடிதங்கள்

அன்பிற்கினிய நண்பர் ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்
நலமறிய ஆவல். மதுரை புத்தகச் சந்தையில் பண்டிதர் க அயோத்திதாசர் சிந்தனைகள் குறித்து பேசினோம்.
அதன் பிறகு நான் இயக்கிய அயோத்திதாசர் 35 நிமிட ஆவணபடம் ஒன்றையும் உங்களுக்கு அனுப்பினேன். தொலைபேசியில் உங்களோடு பேசியும் இருக்கிறேன். தமிழக ஆளுமைகள் குறித்து ஏறக்குறைய அனைவரையுமே எழுதி இருக்கிறீர்கள்.

பண்டிதர் க அயோத்திதாசர் சிந்தனைகள் குறித்தும் எழுதும்படி வேண்டுகிறேன்.

நிறைய கட்டுரைகளில் அவருடைய சிந்தனைகளை மேற்கோள் காட்டுகிறீர்கள். அயோத்திதாசர் சிந்தனைகளை முழுமையாகப் படித்தும் இருக்கிறீர்கள் அதனால் உங்களால் முடியும்.
அதனால் எழுதுங்கள் இப்போது மிக அவசியமாக இருக்கிறது.
தமிழ் பௌத்தம் அல்லது அயோத்திதாசர் சிந்தனைகள் குறித்து
உங்கள் கருத்துகளைச் சிறு வெளியீடாக வெளியிடலாம் என விரும்புகிறேன்

அனைத்தும் உங்கள் விருப்பம்தான்

தோழமையுடன்
பாரி செழியன்

http://www.ayyothidhasapandithar.blogspot.com/
http://www.ayothidhasar.com/

அன்புள்ள பாரிசெழியன்

அயோத்திதாசர் பற்றிய விரிவான பதிவுகளை எழுதவேண்டும் என குறிப்புகளை எடுத்து வைத்திருந்தேன். தமிழ்ப்பண்பாடு குறித்த அவரது அவதானிப்புகளை ஒட்டிச் சிலவற்றை எழுதலாமென எண்ணியிருக்கிறேன். பார்ப்போம்

ஜெ

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு

தங்கள் வீட்டில் உங்களைச் சந்தித்துவிட்டு வெளியே வரும்போது நன்றி சொல்லக்கூட மறந்துபோனேன் என்பதைப் பிறகே உணர்ந்தேன். உங்களின் ஆளுமை ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாகத்தான் இருக்குமென்று ஆறுதல்பட்டுக்கொண்டேன். உங்கள் வீட்டிற்கு வந்தபோது வழியில் ஆர்வமோடு பார்த்துக்கொண்டு வந்த காட்சிகள், திரும்பிவந்தபோது கண்களில் பட்டும், கண்களைத் தாண்டி, சிந்தனையைத் தொடவில்லை. வேறேங்கும் செல்லாமல் நேராகக் கூடங்குளத்திற்கேச் சென்றேன். வழிமுழுதும் உரையாடலை அசைபோட்டபடி. நண்பர் இசை முன்னமே குறிப்பிட்டிருந்ததுபோல், சந்திப்பிற்குப் பிறகு ஃபோனில் பேசிக்கொண்டே வந்தேன். சலனமே காட்டாத முதிர்ந்த பக்குவத்துடன் கூடிய உங்கள் முகபாவத்தைக் கேணி சந்திப்பில் கண்டேன். பொதுவாகவே எழுத்தாளர்களை எழுத்துக்களின் வழி காணக்கிடைக்கும் நெகிழ்ச்சியும், ரசனையும், மென்மையும் கொண்டு முகபாவம் யோசித்தால் அது கிட்டத்தட்ட பூர்ணம் விசுவனாதன் பேசுவதுபோல் இருக்கும். உங்களின் சலனமற்ற முகபாவத்தைவைத்து என் வருகை பற்றிய உங்களின் மன நிலையை அறிந்துகொள்வது கடினமானது.

கிட்டத்தட்ட 3 மணி நேரத்துக்கும் மேல் பேசியிருக்கிறீர்கள் என்பதே என் வருகை குறித்த உங்கள் மன நிலையறிய ஒரு வழிகாட்டியாக அமைந்திருந்தது. முந்தின நாள் இரவு நண்பர்களுடன் நள்ளிரவு வரை நேரம் செலவழித்துவிட்டு, உறக்கமில்லாமல் தூங்குமூஞ்சியாக, தொண்டையடைப்பு, இருமல் சகிதம் வந்துசேர்ந்தேன். பேசவே சிக்கலாக தொண்டையடைப்பு இருந்தது. தனியாகப் பேருந்தில் வரும்போது, யாருடன் என்ன பேசி பேச்சு தடங்கலற்று, தொண்டைக்கமறல் இல்லாமல் இருக்கிறதா என்று எப்படிப் பரிசோதிப்பது? மெதுவாக பாடிப்பார்த்துக்கொண்டேன். நீங்கள் என்னுடன் பேசத்துவங்குகையில் கொட்டாவியாக விட்டுக்கொண்டிருந்தீர்கள், பாவம். என் தூங்குமூஞ்சி காரணமா? இல்லை நான் மிகவும் அலுப்பூட்டுகிறேனா? என்றெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தேன். மேலும் எனக்காக நீங்கள் என் இலக்கியப் பரிச்சய அளவிற்கு இறங்கி வந்து விளக்கம் சொல்லிக்கொண்டிருந்தீர்கள் என்றும் அப்போதே உணர்ந்தேன். பேட்டிகளைக் குறிப்பெடுக்காமல் நினைவிலிருந்து மீட்டே எழுதுவதாகச் சொல்லியிருக்கிறீர்கள். உங்களளவுக்கு எனக்கு நினைவாற்றல் இருக்காது. ஆனாலும், அன்று நான் உங்களிடம் கேட்டவை கிட்டத்தட்ட அனைத்துமே எனக்கு நினைவிலிருக்கிறது. செல்பேசியில் பதிவு செய்திருக்கலாம். எடுத்தவுடனே சம்பிராதயமாக, பத்திரிக்கைகளிலிருந்து வந்தவர்களைப்போல் பதிவு செய்ய கூச்சமாக இருந்தது. கடைசியில் பேசிய அரை மணி நேரப் பதிவு மட்டும் செல்லில் இருக்கிறது. அது, மீண்டும் மீண்டும் கேட்க , அசைபோட உதவுகிறது.

இதற்குமுன் எந்த ஊரை நெருங்கும்போதும் இப்படி நான் சிலிர்ப்பை உணர்ந்தவனில்லை. இம்முறை நாகர்கோயிலை நெருங்க நெருங்க என் மனம் சிலிர்த்தது. அவசரம் கொண்டது. காரணம் நீங்கள் மற்றும் சுந்தரராமசாமிதான். பேருந்து நிலையத்தில் அரசு விரவுப்பேருந்து டிக்கட் பெறும் இடத்தில் நிற்க நேர்ந்தபோது, ஜெயமோகன் ஒரு முறையாவது இந்த இடத்தில் நின்றிருப்பார் என்று மனம் விரைந்தது.பார்வதிபுரம் பேர் கொண்ட பேருந்தைக் காணும்போதெல்லாம் மின்சாரம் அடித்தது. பின் சில நாட்களில் என் மனம் தணிந்தது. ஆரவாரம் கொண்ட மனம் அடங்கிய ஒரு நாளில்தான் உங்களைச் சந்தித்தேன். இருந்தபோதும், இடையூறாக எந்த வகையிலும் நான் ஆகிவிடக்கூடாதே என்ற வகையில் மட்டும் தயக்கம் இருந்தது. கல்பாக்கம் வந்து ஒரு வாரம் ஆகிறது.

தங்களின் இணையதளத்தில் நான் படிக்கமூடியாமல் விடுபட்டுப்போனவைகளில் சிலவற்றை படித்தேன். ஊர்புகுதல் உட்பட. நீல பத்மநாபனின் தலைமுறைகள் நாவலின் இறுதிக்கட்டம் பற்றி நாம் பேசிக்கொண்டிருந்தோம். கதையின் நாயகியும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொள்வாள் என்று நீங்கள் குறிப்பிட்டபோது, நான் அதில் சந்தேகம் எழுப்பினேன். வந்து புத்தகத்தில் பார்த்தால் அவள் சாகவில்லை. அப்படித்தான் முடித்திருக்கிறார். எதற்கும் உங்கள் கவனத்திற்குக் கொண்டுவரலாமே என்றுதான் குறிப்பிடுகிறேன்.

நான் மானசீகமாக ஓவ்வொரு நாளும் உங்களிடம் உரையாடிக்கொண்டேயிருக்கிறேன். ஆனால், நேரில் பேச வாய்த்தபோது அமைதியாக சில நிமிடங்களை கடத்தினேன். இது வினோதமானதுதான்.தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பும் நன்றிகளும்.

ச.முத்துவேல்.

அன்புள்ள ஜெ,

கவனிக்காமல் விட்டுவிட்ட இலக்கிய முன்னோடிகளை கௌரவிப்பது குறித்து ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தீர்கள். தற்போது அம்முனைப்பு செயல்வடிவம் பெறுவது மிக்க மகிழ்ச்சி. அதேபோல் ‘கூட்டங்களில் பெரும்பாலானவர்களிடம் உரையாட முடியவில்லை. இனிமேல் உரையாடல் வடிவில் ஏதேனும் நிகழ்ச்சியை அமைத்தால் நல்லது’ என்றும் ஒருமுறை குறிப்பிட்டிருந்தீர்கள். நம் சூழலில் அமைதியாக இப்படி ஒரு ஆக்கப்பூர்வமான இலக்கிய அமைப்பு இருப்பது எவ்வளவு அபூர்வமானது. மகிழ்ச்சியாய் இருக்கிறது.

நான் உங்கள் மூலமே நாஞ்சில் நாடன், தேவதேவன் இருவரையும் அறிவேன், அவர்கள் படைப்புகளை மேல் அதிகம் வாசித்து அறிய ஆவல். சென்ற முறை இந்தியாவிலிருந்து கிளம்பும் போது அம்மா மூட்டை மூட்டையாக மசாலாப் பொடிகளை கொடுத்தனுப்பினார்கள். ஹ்ம்ம். இந்தமுறை கிலோக்கணக்கில் புத்தக மூட்டைகள்தான்..

ஒரே திசையில் பயணம் செய்பவர்கள் எப்படியும் ஒரு புள்ளியில் சந்திக்க நேரிடுவது போல, தமிழ் தமிழக இந்தியா வரலாறு பண்பாடு இலக்கியம் தத்துவம் இந்துமரபு ஆகியவற்றில் ஆர்வம் உடைய எவரும் உங்களை எப்படியும் வந்தடைவார்கள் என்பதை உணர்கிறேன். ஆனால் 25 வயது கழித்து உங்கள் எழுத்துக்களை படிக்க நேர்ந்தது என் துரதிர்ஷ்டமே. கடந்த ஊட்டி சந்திப்பு, கோவை சந்திப்புகள் பற்றி படித்த போது ‘அய்யோ’ ஒத்த ஆர்வமுடைய இத்தனை பேரை ‘நான் மிஸ் பண்ணிடனே’, என்றெழுந்த ஆதங்கமும் ஆவலுமே என் விண்ணப்பம்.

தளத்தில் சில சமயம் சிலர் உங்களை ஆசான் என்றும் குரு என்றும் தலைவர் என்றும் அழைப்பதை கவனித்திருக்கிறேன். அவற்றைப் படிக்கும் முன்பே உங்களை என் மானசீக குருவாக, ஆதர்சமாக ஆக்கிக் கொண்டேன் என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நம் கல்வித்திட்டம்,தாய்மொழிக்கல்வி,தமிழக இந்திய வரலாறு குறித்தும் என் ஐயங்களை உங்களிடம் விரிவாக பேசி தெளிவுபெற விரும்புகிறேன்.

டிசம்பர் 25 முதல் ஜனவரி 20-25 வரை விடுமுறையில் வர இயலும். அதற்குள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வாசித்து முடிக்கப் பார்க்கிறேன். வாசகர் சந்திப்புகள் சாத்தியம் இல்லையெனினும் நிச்சயம் உங்களை நேரில் சந்திப்பேன். என் பயணத் திட்டம் உறுதியானவுடன் உங்களுக்கு மறுபடியும் எழுதுகிறேன்.

உங்கள் அன்பு வாசக/மாணவன்,
செந்தில்

வணக்கம் சார்..

உங்கள் தளத்தில் அப்படியே மேய்ந்து கொண்டிருந்தேன்..படிப்பறை படங்கள் கட்டுரையை மீண்டும் படித்தேன். அசோகமித்திரன் பற்றி நான்கு வருடங்களுக்கு முன்னால் ‘காதல்’ இதழுக்கு எழுதிய எழுதிய கட்டுரை. இப்போது எழுதியிருந்தால் இன்னும் சில விடயங்களை எடுத்திருப்பேன். இந்த கட்டுரையை எங்கோ தொலைத்து விட்டார் என நவினிடம் ஒரே சண்டை. அப்புறம் இரண்டு வருடம் கழித்து கிடைத்தது. அவருடைய திருப்பம் கதையைப் பற்றி எழுதியிருந்தேன். கீழ் உள்ள இணைப்பில் படிக்கலாம்.

அக்கா, பிள்ளைகள் நலமாக இருக்கிறார்களா?

http://www.vallinam.com.my/issue5/column2.html

அன்புடன்,
சு.யுவராஜன்

முந்தைய கட்டுரைவெ.சா-ஒருகாலகட்டத்தின் எதிர்க்குரல் 2
அடுத்த கட்டுரைகிறித்தவப்பாடல்கள், கடிதங்கள்