«

»


Print this Post

புதிய வாசகருக்கு…


jayakanthan_2161849f

 

நம் நாட்டில் இலக்கியம் கல்விநிலையங்களில் கற்பிக்கப்படுவதில்லை. வீடுகளில் இலக்கியம் சார்ந்த சூழலே இல்லை. பிழைப்புக்கான படிப்பு. அன்றாட வாழக்கை. நடுவே இலக்கிய அறிமுகம் ஏற்படுகிறது. படிக்க ஆசை. எப்படித்தொடங்குவது என்று தெரிவதில்லை

ஆரம்பநிலை வாசகர்கள் கதைச்சுவாரசியமும் ஓரளவு வெளிப்படையான அழகுகளும் கொண்ட எழுத்தாளர்களை வாசிக்கலாம். பழைய எழுத்தாளர்களில் முக்கியமாக, ஜெயகாந்தன் [சிலநேரங்களில் சில மனிதர்கள், பாரீஸுக்குப்போ, ஒருமனிதன் ஒரு வீடு ஒரு உலகம்] தி.ஜானகிராமன் [மோகமுள், அம்மா வந்தாள், அன்பே ஆரமுதே, மலர்மஞ்சம்] சுந்தர ராமசாமி [ஒரு புளியமரத்தின் கதை] சி.சு.செல்லப்பா [வாடிவாசல்] கி.ராஜநாராயணன் [கோபல்ல கிராமம்] ஆ.மாதவன் [கிருஷ்ணப்பருந்து] நீலபத்மநாபன் [பள்ளிகொண்டபுரம்] போன்றவர்கள். சிறுகதைகளில் புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி

அடுத்த தலைமுறை எழுத்தாளர்களில் நாஞ்சில்நாடன் [தலைகீழ் விகிதங்கள், எட்டுத்திக்கும் மதயானை] வண்ணநிலவன் [கடல்புரத்தில்] விட்டல்ராவ் [போக்கிடம்] சிறுகதைகளில் வண்ணதாசன், கந்தர்வன் நாவல்களை வாசிக்கலாம்.

சமகால எழுத்தாளர்களில் ஜெயமோகன் [ஏழாம் உலகம், இரவு] எஸ்.ராமகிருஷ்ணன் [உறுபசி] யுவன் சந்திரசேகர் [குள்ளச்சித்தன் கதை] இமையம் [கோவேறு கழுதைகள், ஆறுமுகம்] நாவல்கள்.

இரண்டுவகை எழுத்துக்களுக்குள் எடுத்த எடுப்பிலேயே போகாமலிருப்பது நல்லது. லா.ச.ரா மௌனி போன்ற எழுத்தாளர்ளின் நடை சிக்கலானது. அவற்றை எடுத்த எடுப்பிலேயே வாசிக்கையில் ஒரு தடை இருக்கும். அதன் விளைவாக தொடர்ந்து வாசிக்கும் ஆர்வம் மட்டுப்படக்கூடும். அதேபோல அசோகமித்திரன், பூமணி போன்றவர்களின் எழுத்துக்கள் அலங்காரமற்றவை. குறைத்துச் சொல்லிச் செல்பவை. அவற்றை வாசிக்கையில் ரொம்ப சாதாரணமாக இருக்கிறதே என்று தோன்றக்கூடும்

புதியவாசகர்கள் மூன்று விதிகளை நினைவில்கொள்ளவேண்டும். இலக்கியம் என்பது மற்ற கதைகளைப்போல ‘அடுத்தது என்ன?’ என்று புரட்டிப்புரட்டி வாசிக்கவேண்டிய ஒன்று அல்ல. அதிலுள்ள எல்லா வரிகளுமே முக்கியமானவை. .

இரண்டு இலக்கியம் ஒரு மையக்கருத்தைச் சொல்வது அல்ல. ஒரு வாழ்க்கையை நாம் கற்பனையில் வாழச்செய்கிறது அது. அந்த வாழ்க்கையில் நாம் என்ன அனுபவத்தையும் சிந்தனைகளையும் அடைகிறோமோ அதுதான் அந்த இலக்கியத்தின் சாராம்சாம்.

மூன்று, இலக்கியம் கொஞ்சம் சொல்லி நிறைய ஊகிக்கவைக்கும் கலை. ஆகவே இலக்கியப்படைப்பில் சொல்லப்படாமல் விட்டுவிடப்பட்டவை என்ன என்பதை நோக்கியே நாம் நம் கற்பனையை விரிக்கவேண்டும்.

வாசிப்பு வழிகாட்டி| புனைகதை: ஜெயமோகன்

தமிழ் ஹிந்து

 

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/94477/