ஜல்லிக்கட்டு பற்றி…

index

அன்புள்ள ஜெயமோகன்,

ஜல்லிக்கட்டு தடைப் பற்றி எதாவது ஒரு கடிதம் மற்றும் அதற்கான பதில் உங்கள் தளத்தில் வருமென்று எதிர்பார்த்தேன்.

ஜல்லிக்கட்டு தடைப் பற்றி உங்கள் கருத்தினை அறிய ஆவல்.

பண்பாடு என்ற பெயரில் பிராணிகளை துன்புறுத்துவது அனுமதிக்க முடியாது என்ற உச்ச நீதிமன்றத்தின் கருத்தினை எவ்வாறு அணுகுகிறீர்கள்?

அன்புள்ள,

பாலாஜி

பெங்களூர்

*

அன்புள்ள பாலாஜி,

முன்பு இதேபோன்ற ஒரு ’வலை’யில் சிக்கிய அனுபவம் எனக்குண்டு. கோயில்களில் யானைகளை பயன்படுத்துவதைத் தடுக்கவேண்டும் என குரல்கொடுக்கும் ஓர் அமைப்பு [மிகத்தீவிரமாக இப்போதும் இருக்கிறார்கள். தடைவாங்கவும்கூடும்] என்னை அணுகியது. அவர்களின் பேச்சு அப்போது எனக்கும் சரியென்றே பட்டது. பொதுவான உயிர்வதைகள் கூடாது, அதற்கெல்லாம் பண்பாட்டு மரபுகள் காரணமாக அமையக்கூடாது என நினைப்பவன் நான். ஒரு பொது மனுவில் கையெழுத்திட்டேன். ஆதரித்து எழுதவும் செய்தேன்.

உண்மையிலேயே வணிகரீதியாக யானைகளைப் பயன்படுத்துவது அவற்றுக்கு இழைக்கும் அநீதியாக ஆகிறது. அதை கட்டுப்படுத்தத்தான் வேண்டும். கோயில்களிலேயானாலும் கறாரான நெறிமுறைகள் பேணப்பட அரசு ஆணையிடவேண்டும்.ஆனால் மெல்லமெல்ல அதன் வேறுபக்கங்கள் என் கவனத்தில் வந்தன. ஒட்டுமொத்தமாகவே இச்செயல்கள் அனைத்துக்கும் பின்னணியிலிருப்பவை தன்னார்வக்குழுக்கள். அந்நிய நிதிபெறுபவை.

தன்னார்வக்குழுக்கள் செய்யும் எந்தச்செயல்மீதும் எனக்கு ஆழமான ஐயம்தான் உள்ளது. ஒரு தேசத்தின் பண்பாடு, சமூகவியல் , பொருளியல் சூழலில் அந்நியநிதிபெறும் அமைப்புக்கள் மேலாதிக்கம் செலுத்துவது மாபெரும் பிழை. அதன்பின்னாலுள்ள வலைப்பின்னல்களை நாம் அறியவே முடியாது. எனவே முதலில் ஐயம் கொள்வோம், அவர்கள் அந்த ஐயத்தை ஆதாரபூர்வமாக, செயல்கள் வழியாக நீக்குவார்கள் என்றால் மட்டும் மேலே பேசுவோம் என்பதே என் எண்ணம்.

ஜல்லிக்கட்டுக்கு எதிராக மிகப்பெரிய செலவில் ஒருங்கிணைந்த முறையில் தன்னார்வக்குழுக்கள் முன்னெடுக்கும் இயக்கத்தின் நோக்கம், அதன் பின்னணி ஆகியவற்றைக்குறித்து நான் ஆழ்ந்த ஐயமே கொண்டிருக்கிறேன். அதைப்பற்றி நிபுணர்கள் சொல்லும் கருத்துக்களை கூர்ந்து நோக்கி வருகிறேன். என் ஆதரவு ஜல்லிக்கட்டு நிகழவேண்டும் என்றே. அது உயிர்வதை என்றால் நாமே அதைப்பற்றிப் பேசுவோம், படிப்படியாக நம்மை மாற்றிக்கொள்வோம்.இவர்கள் நம்மை ஆளவேண்டாம்.

ஜல்லிக்கட்டு, கோயில்யானை வளர்ப்பு போன்றவை தடைசெய்யப்பட்டால் உயர்ரக காளைகள், நல்ல யானைகள் இல்லாமலாகும் என்றே நான் நினைக்கிறேன். சூழ்ந்திருக்கும் உயிர்களில் தரமேம்பாட்டை உருவாக்குவதில் மானுடப்பங்களிப்பு ஒன்று எப்போதும் உள்ளது. நம்மிடம் உள்ள நாய்கள் எல்லாமே மானுட உருவாக்கங்கள்தான். இயற்கைத்தெரிவின் இயல்பான விசையால் உருவானவை அல்ல. காளைகளும் யானைகளும் இன்றிருக்கும் உயர்ந்த தரத்தை மானுடனின் தெரிவு, ஈடுபாடு மூலமே அடைந்தன. அந்த ஈடுபாடு இல்லாமலானால் அவை அழியும் என்பதுதான் உண்மை

எல்லாவற்றையும் இயற்கைக்கு விட்டுவிடலாம் என ஒரு தரப்பு சொல்வதுண்டு. தத்துவமாகக் கேட்க சரிபோலவே இருக்கும்.உண்மையில் அப்படி விடக்கூடாது, விடமுடியாது. அப்படியென்றால் காட்டில்மட்டும் இயற்கைத்தெரிவால் ஓர் உயிரினம் அழிவதைப்பற்றி ஏன் நாம் கவலைப்படுகிறோம்? ஏன் அதில் தலையிடுகிறோம்?

ஜல்லிக்கட்டில் மாடுகள் ஓரளவு துன்புறுத்தவே படுகின்றன. அப்படிப்பார்த்தால் ஆலயத்தில் யானைகளும் வயலில் காளைகளும்கூடத்தான் துன்புறுத்தப்படுகின்றன. அவை அவற்றின் இயல்புநிலையில் அங்கே இல்லை. ஆனால் விலங்குகள் பழக்கப்படுத்தப்படுவதில் ஒரு பகுதி அது. அதற்கான எல்லைகள் அமைக்கப்படவேண்டும். அதை கண்காணிக்கவேண்டும். மானுடன் விலங்குகளை வளர்ப்பதை கைவிடவேண்டும் என்று அதற்குப்பொருள் இல்லை.

சிலகாலம் முன்பு வீட்டில் நாய்கள் வளர்ப்பது தவறு என எனக்கு ஒருவர் எழுதினார். ஏனென்றால் அது நாயைத் துன்புறுத்துவதாம். நாய் இயல்பாக காட்டில் வாழவேண்டுமாம். காட்டில் வாழும் நாய் வீட்டுநாயைவிட ‘மகிழ்ச்சியாக’ இருக்கிறது என எவர் சொன்னது? இந்த நாய் மானுடனால் உருவாக்கப்பட்டது. இது காட்டில் வாழாது. இதை வளர்க்காவிட்டால் இது அழியும். அதைச் சொன்னால் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

மார்த்தாண்டம் காளைச்சந்தை என் தந்தைக்கு ஒரு பெரிய புனிதத்தலமாக இருந்தது. வாரந்தோறும் ஐம்பதாண்டுக்காலம் அவர் அங்கே சென்றிருக்கிறார். நான் சென்றவருடம் அங்கே சென்றேன். சந்தையே இல்லை. ஏனென்றால் காளையே இல்லை. மாட்டுவண்டிகள் குமரிமாவட்டத்தில் இன்று அனேகமாக இல்லை. உழவுமாடுகளும் இல்லை. பசுக்களே மிகமிகக் குறைந்துவிட்டன.பண்ணைகளுக்கு வெளியே வீடுகளில் பசுவளர்ப்பதே அருகிவிட்டது.

விளைவாக அத்தனை காளைக்கன்றுகளும் இளமையிலேயே உணவுக்காகக் கொல்லப்பட்டு மாட்டுவகைகளே இல்லாமலாகிவிட்டன. பல ஆண்டுகளாக மானுடனால் தெரிவுகள் மூலம் உருவாக்கப்பட்ட தனிப்பண்புகள் கொண்ட அரிய காளை- பசு இனங்கள் முழுமையாக அழிந்துவிட்டன. இந்த இழப்பு பெரிதல்லவா?

உயிர்க்கருணை நோக்கில் பண்பாட்டை அணுகுவதில் நுணுக்கமான பல சிக்கல்கள் உள்ளன. மானுடவரலாற்றை, விலங்குப்பரிணாமத்தை அறியாத ஒற்றைப்படை நோக்குகள்தான் பலர்வாயிலிருந்தும் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. எல்லா தரப்புகளையும் கருத்தில்கொண்டு நிகழும் தொடர்விவாதத்தின் முடிவில் வந்தடையவேண்டிய தீர்மானங்கள் இவை. மேலிருந்து திணிக்கப்படவேண்டியவை அல்ல. அழிவுகள் உருவாகுமென்றால் அவை நிரந்தரமானவை. அதற்கு இவ்வாறு முடிவுகளைத் திணிப்பவர்கள் பொறுப்பேற்கப்போவதில்லை.

இன்னொரு பக்கம் இரு விஷயங்களைச் சுட்டவேண்டும். ஒன்று இந்த நீதிமன்றத்தீர்ப்பு மட்டையடியாக முன்வைக்கப்படவில்லை. இதை அவமதித்துப்பேசுபவர்கள் தீர்ப்பை வாசித்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. நான் முன்னரே இணைப்பை அளித்திருக்கிறேன், இத்தளத்தில் -கிருஷ்ணனின் கடிதத்துடன்.

வாசித்தால் தெரியும் இத்தீர்ப்பு ஓர் உயர்நிலை நோக்குடன், ஒட்டுமொத்த இயற்கைப்பேணுதல் சார்ந்த பார்வையுடன் தான் அளிக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே இந்திய நீதிமன்றங்கள் அத்தனை வழக்கிலும் இயற்கையைப்பேணுவதற்கு ஆதரவாக, சூழலியலுக்குச் சாதகமாகவே தீர்ப்பளிக்கின்றன என்று பார்த்தால் இத்தீர்ப்பு மிக இயல்பானதே

ஆனால் இதில் கிராமியப்பொருளியல் சார்ந்தும், நம் உயிர்வளப் பேணுதல் சார்ந்தும் போதிய அளவுக் கவனம் அளிக்கப்படவில்லை என்பது நம் தரப்பு ஆனால் அது நீதிமன்றத்தில் சரியாக முன்வைக்கப்படவில்லை என்றே கொள்ளவேண்டியிருக்கிறது.

நம் அரசு நீதிமன்றத்தீர்ப்பை எளிதில் அரசு மீறமுடியாது. நாம் சர்வதேச அளவில் பல்வேறு ஒப்பந்தங்கங்களால் புரிந்துணர்வுகளால் கட்டுண்டிருப்பதனால் அது பலபடிகளாக எடுக்கவேண்டிய ஒரு நடவடிக்கையாகவே இருக்கமுடியும்.

ஆனால் நாம் என்ன செய்கிறோம்? இங்கே ஜல்லிக்கட்டை ஆதரிக்கவும் அதே தன்னார்வக்குழுக்கள் வந்து நின்றிருக்கின்றன. அவர்கள் இதை ‘தமிழர்கள்’ மீதான ’இந்திய’ அரசின் தாக்குதலாகச் சித்தரிக்கிறார்கள். உணர்வுகளைத் தூண்டி விடுகிறார்கள். இதே தடை இந்தியாமுழுக்க உள்ள வெவ்வேறு வகை ஜல்லிக்கட்டுகளுக்கு எதிரானது என்றுகூட நாம் யோசிப்பதில்லை.

இங்கே ஜல்லிக்கட்டுக்கு எதிராக நின்றிருக்கும் தன்னார்வக்குழு அரசியலை எதிர்க்கும் நாம் அதே தன்னார்வக்குழு அரசியலால் உருவாக்கப்படும் அரசியல் திரிபுகளை அப்படியே அள்ளித்தின்று கக்கிக்கொண்டிருப்பவர்கள். இந்த முரண்பாட்டையும் நாம் கண்டுகொள்வதில்லை. ஜல்லிக்கட்டு மேல் நமக்கு ஆர்வமிருக்கும் என்றால் இந்த தன்னார்வக்குழுக்களின் சட்டவியூகத்தை அதே ஆற்றலுடன் நீதிமன்றத்தில் முறியிடிக்கவேண்டும். எல்லா தளங்களிலும் இவர்களை அடையாளம் கண்டுகொள்ளவேண்டும். பொங்கல் தோறும் கூச்சலிட்டுவிட்டு அமைந்துவிடக்கூடாது.

அதற்கப்பால் நமக்கு இதில்பேசப்படும் உயிர்வளப்பேணல் சார்ந்து அக்கறை இருக்குமென்றால் அதை ஜல்லிக்கட்டுடன் நிறுத்திக்கொள்ளாமல் நீடித்த கவனமாக, செயல்பாடாக மாற்றிக்கொள்ளவேண்டும்

ஜெ

 

ஜல்லிக்கட்டுத் தீர்ப்பு கிருஷ்ணன்

ஜல்லிக்கட்டு தீர்ப்பு அரங்கசாமி

 

முந்தைய கட்டுரைஜல்லிக்கட்டுத்தடை- ஒரு பேட்டி
அடுத்த கட்டுரைமழை- கடிதங்கள்