கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகனுக்கு,

நீங்கள் சாட்டில் வந்த அன்று பெரிய உற்சாகம் ஏற்பட்டது. உங்களிடம் இருந்து வரும் ஒரு வார்த்தை ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம். நாலைந்து கடிதங்கள் வந்த பின்னர்தான் உங்கள் தளத்திற்கு சென்றேன். கவுன் அணிந்த தமிழன்னை. படித்து சிரித்தேன்.

ராஜராஜ சோழன் அருமையான கட்டுரை. இதே கருத்துத்தான் எனக்கும். பத்தாம் நூற்றாண்டு விவகாரத்தை இன்றைய கண்ணினால் பார்த்து அளப்பார்கள். மார்க் ட்வெய்ன் நிக்கர் என்று எழுதியதை இன்றும் பல மாநிலங்கள் எதிர்க்கின்றன. அவருடைய புத்தகங்களை நூலகத்தில் வைக்கக்கூடாது என்று எதிர்ப்பு.

சமீபத்தில் ஒரு அமெரிக்க பெண்ணை சந்தித்தபோது அவர் silver pattern பற்றி சொன்னார். எங்கள் ஊர் சாதிப் பாகுபாடு எவ்வளவோ மேல்.

அன்புடன்

அ.முத்துலிங்கம்

திரு. ஜெமோ அவர்களுக்கு,

வணக்கம். நான் உங்கள் நெடு நாள் வாசகன். இதற்கு முன் உங்களுக்கு இந்த கடிதம் எழுதி இருக்கிறேன்.

மனமெனும் நோய்..

உங்களுடைய பயணக் கட்டுரைகள் மிகவும் ஆர்வமூட்டும் வகையில் உள்ளன. இம்முறை ஊருக்கு வரும் போது கேரளத்தில் பத்து நாட்கள் பயணம் செய்ய உள்ளேன். மதுரையிலிருந்து மூனார், கொச்சின், எர்ணாகுளம், ஆலப்புழா, அதிரப்பள்ளி, வயநாடு சென்று திரும்புவதாக திட்டம். சும்மா போனோம் வந்தோம் என்று இல்லாமல், முடிந்த வரை கேரளத்தின் வரலாறு, வாழ்க்கை முறை போன்றவற்றை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது.

கேரளத்தைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எதுவும் நூல்கள் உள்ளனவா? நான் உங்கள் எழுத்துக்களை இணையித்திலேயே தொடர்ந்து வாசித்து வருகிறேன். கன்னியாகுமரி தவிர மற்ற நாவல்கள் எதுவும் இன்னும் வாசித்தது இல்லை. இந்த முறை ஊருக்கு வரும் போது கொற்றவை மற்றும் விஷ்ணுபுரம் வாங்கி வரத் திட்டம். உங்கள் நூல்களில் கேரளத்தை பற்றி நீங்கள் விரிவாக பேசியிருக்கும் நூல் எது?

என் பயணத்திட்டத்தில் உள்ள ஊர்களிலும், செல்லும் வழியிலும் தவிர்க்கக் கூடாத இடங்கள் என்று நீங்கள் நினைக்கும் இடங்களை தெரிவித்தால் மிகவும் உதவிகரமாக இருக்கும். என்னுடைய முந்தய கடிதத்தில் எனக்கு மாற்று மருத்துவ முறைகள் மீது இருக்கும் ஆர்வம் குறித்து தெரிவித்து இருந்தேன். இது தொடர்பான இடங்கள், ஆயுர்வேத கூடங்கள் எதுவும் மேற்கண்ட இடங்களில் உள்ளனவா? மேலும் நான் நவம்பர் மாதம் முழுவதும், மற்றும் டிசம்பர் முதல் வாரமும் மதுரையில் இருப்பேன். இடைப்பட்ட நாட்களில் வாசகர் கூட்டம், பயணத்திட்டம் எதுவும் இருந்தால் வந்து கலந்து கொள்ள ஆசை.

நன்றியுடன்
சதீஷ்

அன்புள்ள சதீஷ்

இன்றையதினம் கேரளத்தைப்பற்றி மட்டும் அல்ல எந்த ஊரைப்பற்றியும் தெரிந்துகொள்ள இணையமே போதுமான வழிகாட்டியாக அமையும்.

விரிவாகத்தெரிந்துகொள்வதாக இருந்தால்

P. Sankunni Menon (A History of Travancore from the Earliest Times, 1878)
Glimpses of Architecture In Kerala: Temples And Palaces, Ramu Katakam,

ஆகிய இரு நூல்களையும் சொல்வேன்.

மலையாளத்தில் சிறந்த நூல்கள் பல உள்ளன. பேரா நாலாங்கல் கிருஷ்ணபிள்ளை எழுதிய ‘மகாஷேத்ரங்களுடே நடையில்’ என்ற நூல்வரிசை ஒரு செவ்வியல் ஆக்கம்

ஜெ

Dear jeyamohan, Vanakkam. I am writing this from a PC without unicode. Please bear with my writing in English. Just now I went through your article ” Ilakkiya Virudhugal” from your blog. I am stunned by the sense of humour through out. Generally your tone is serious and scholastic. This is an introduction of another dimension of the writer. Thanks and regards,

(I have met you once in Chennai in a meeting in the year 2001. You patiently recalled my novel purushartham and offered your comments. I am a writer and srinivasan working in BSNL Tirunelveli knows me. I also work in BSNL..regards)

Sathyanandhan.

அன்புள்ள ஜெயமோகன்
இதுவே நான் உங்களுக்கு எழுதும் முதல் மடல்.நான் இணையதளத்தில் படித்தது குறித்து வேறு எவரிடமும் கேட்க தோன்றாததால் தங்களிடம் கேட்கிறேன்.
இந்த வலைப்பூவை முடிந்தால் படித்துவிட்டு தங்கள் கருத்தை சொல்லவும்.இதில் திராவிடர்கள் மேற்கிலிருந்து கிழேக்கே புலம்பெயர்ந்ததாகவும் , தமிழ்நாடு தான் திராவிடர்கள் கடைசியாக வந்து சேர்ந்த இடம் என்றும் குறிப்பிடுகிறார் , கூடவே தமிழ்தான் கடைசியாக தோன்றிய திராவிட மொழி என்றும் கூறுகிறார் அல்லது கூற விழைகிறார்.இது பற்றி தங்கள் கருத்தை அறிய ஆவல்.

அன்புடன்
ஜெயன்
jeyan perumal

அன்புள்ள ஜெயமோகன்
மன்னிக்கவும் முந்தைய மடலில் தொடுப்பை இணைக்க மறந்து விட்டேன்.
http://bantwal.blogspot.com/search/label/Dravidians

அன்புள்ள ஜெயன்

இந்தவகையான ஆய்வுகளை வாசித்து சலிப்பே ஏற்பட்டு விட்டது. ஆரியர்கள் வந்தார்கள். திராவிடர்களும் வந்தார்கள். அப்படியானால் இங்கே யார்தான் இருந்தார்கள்?

இந்த ஆரிய திராவிட இனப்பிரிவினை என்பது இங்கிருக்கும் மொழிகளுக்கிடையேயான பொதுவேறுபாடுகளை குறிக்க மட்டுமே பயன்படும் அடையாளம். அது இன அடையாளம் அல்ல

ஜெ

முந்தைய கட்டுரைநந்தலாலா இரு கடிதங்கள்
அடுத்த கட்டுரைநந்தலாலா,இளையராஜா, ஷாஜி