ஜெ,
ஜல்லிக்கட்டு பிரச்சினை குறித்து எண்ணும்போதெல்லாம் அது வெறும் சாதிப்பெருமைக்காக நடத்தப்படுவது, தலித்களை இதுவரை அண்டவிடாதது அழியட்டுமே, என்ன இப்ப என்ற மனநிலையில் இருந்தேன்.
காங்கயம் கார்திகேயன் சிவசேனாதிபதி முகம் இந்த போராட்டங்களில் தென்படத்துவங்கியபோது கவனிக்கத் துவங்கினேன். காங்கயத்தில் நாட்டுமாடுகளை பாதுகாக்கும் அமைப்பை, விதை நெல் போல அதன் விந்தணுக்களை சேகரிக்கும், வழங்கும் அமைப்பை நடத்துபவர்.
(தனிப்பட்டமுறையில் தெரிந்த மிக நேர்மையானவர் என்பதும் நம் வாசக நண்பர் பிரபாகரன் அவர்களின் நண்பர் என்பதுவும் கூடுதல் காரணங்கள்)
விவசாயிகளுக்கு இன்று ஏற்படும் எந்த சிக்கலையும் அவர்களால் தீர்த்துக்கொள்ள முடியாது. ஏனென்றால் விவசாயத்துக்கு நேர்ந்துவிடப்படுபவர்கள் குடும்பத்தின் படிக்க இயலாத கடைநிலை குடும்ப உறுப்பினர்கள்தான். அவர்களுக்கு முன் பிரம்மாண்டமாக நிற்பது ஆங்கிலம் ஏகபோகம் செய்யும் மீடியாவும் அவர்களை வெளியே நிறுத்தும் அரசமைப்பும் உள்ளன.
இந்த பேட்டியை முழுக்க பார்த்தேன். முதலில் ஏற்பட்டது மகிழ்ச்சி. காரணம் படித்த விவசாயிகள் தங்கள் சிக்கல்களுக்காக பேச முன்வருவதும் அவர்களுக்கு மக்களை நோக்கி பேசி திரட்டத் தெரிந்திருப்பதும், லாபி செய்ய கற்றுக்கொண்டுருப்பதும்தான், தமிழகமெங்கும் இளைஞர்கள் கல்ந்துகொள்ளும் இந்த மாதம் நடந்த கூட்டங்களுக்கு பின் உள்ளது இந்த டீம்தான்.
ஜல்லிக்கட்டு தடைக்கு பின் இருப்பது பல வருடங்களாக நீங்கள் பேசும் அதே NGO மாஃபியாதான். உலகளாவிய பின்னணி, இந்தியா முழுக்க இருக்கும் அரசு அமைப்புகளில் நிரம்பியிருக்கும், கூடவே பீட்டா போன்ற அமைப்புகளில் பதவியை கைக்கொண்டிருக்கும் NGO கூட்டம், பணபலம். உலகெங்கும் இருந்து இந்தியாவின் பால் உற்பத்தி, நுகர்வு மீது கண் வைத்திருக்கும் பன்னாட்டு அமைப்புகளின் பின்புலம்தான் அவர்களது நிதி.
சில வருடங்களுக்கு முன் சத்தமில்லாமல் காளைகளை காட்சிப்படுத்தக்கூடாத விலங்கினங்கள் பட்டியலில் (சர்க்கஸை தடை செய்யும் அதே சட்டப்பிரிவு) சேர்க்கிறார்கள், பின்பு கோர்ட்டுக்கு போகிறார்கள் அந்த சட்டப்பிரிவின் துணைகொண்டு, தடை வாங்கிவிட்டார்கள். மத்திய அரசாலேயே எதுவும் செய்யமுடியாத நிலைக்கு கொண்டு சேர்த்துவிட்டார்கள்.
இதில் முக்கியமான விஷயம் இதுதான்,
வழக்கு நடத்த ஒருமுறை ஆஜராக அவர்கள் வழக்கறிஞர்களுக்கு செலுத்தும் தொகை ரூபாய் இரண்டரை கோடி -ஒரு முறைக்கு- 80 வழக்கறிஞர்கள், இவர்களை தன்னார்வ விவசாயிகள் எப்படி எதிர்கொள்வர்கள்?
இவர்கள் வேறெந்த மாடுகளுக்கு எதிரான அநீதிகளுக்கும் எதிராக வழக்கு தொடுக்கவில்லை. காயடிக்கப்படாத மாடுகள் மட்டுமே பங்குபெரும் தமிழக, மகாராட்டிர காளை இனங்கள் பங்குபெறும் நிகழ்ச்சிக்கெதிராக மட்டுமே பேசுகிறார்கள். பொதுவாகவே நம் விவசாயிகள் காளைக்கன்றை வளர்ப்பதில்லை. சினை ஏற்ற உள்ளூர் கால்நடை மருத்துவமனையில் விந்துவங்கி உண்டு (பெரும்பாலும் இறக்குமதி) காளைகளை வளர்க்க ஒரே காரணம் ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ் போன்றவைதான். அவற்றை அழித்தால் பின்பு நாட்டுமாடுகள் இனமே அற்றுப்போகும்.
ஜல்லிக்கட்டு போன்றவற்றை முறைப்படுத்த முயல்வது வேறு, அதை அடியோடு அழிக்க முயல்வது வேறு. பீட்டா, இந்திய அரசின் வதைத்தடுப்பு அமைப்புகள் என எல்லாவற்றையும் ஆக்கிரமித்துள்ள NGO கூட்டம் (அமரிக்க குடி உரிமை கொண்ட), பின்னணியில் பெரும் அந்நிய நிதி.
அவசியம் இந்த வீடியோ பாருங்கள், இடதுபக்கம் வெள்ளை சட்டை அணிந்திருப்பவர் கார்திகேயன் சிவசேனாதிபதி.
அரங்கா