புத்தகக் கண்காட்சியில் ஒரு புதியபெண்

book-06-1483711765

இந்தக்கடிதம் எனக்கு அளித்த மகிழ்ச்சியை வாசகர்களில் சிலர் உணரக்கூடும். முதன்முதலாக புத்தகக் கண்காட்சிக்குச் சென்ற ஒரு தீவிரவாசகியின் கொந்தளிப்பும் நிலைகொள்ளாமையும் பரவசமும் இதில் உள்ளன. நான் புத்தகக் கண்காட்சிகளை தவிர்க்கத்தொடங்கி பல ஆண்டுகளாகின்றன. சலிப்பு என்றில்லை, ஆர்வம் பெரிதாக எழவில்லை. ஆனால் இக்கடிதத்தின் கொப்பளிப்பு என்னை நினைவுகளுக்குள் அமிழ்த்திவிட்டது

ஜெ

*

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

எந்த ஆண்டும் இல்லாத புதிய ஆண்டாக ஒரு புதுமையான ஆண்டாக எனக்கு இந்த இரண்டாயிரத்து பதினேழாம் ஆண்டு ஆரம்பித்துள்ளது. இதற்கு காரணம் நாற்பதாவது சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு நான் சென்றதுதான். எனக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை எங்கள் அப்பாதான் ஏற்படுத்தினார்கள். எண்பத்து ஏழிலிருந்து என்று நினைக்கிறேன். வெள்ளிக்கிழமையில் வரும் சிறுவர் மலருக்காய் தவமிருப்பேன். இன்னும் கோகுலம் மாத இதழும் ராணி காமிக்ஸும் வீட்டுக்கு வந்துவிடும். அப்போது வீட்டுக்குள் நுழைந்ததும் எப்போதும் முதலில் செய்யும் சாப்பிடும் வேலை கூட செய்ய நேரம் ஒதுக்கமாட்டேன். வரிசையாக அனைத்தையும் வாசித்துவிட்டு ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டுவிட்டுதான் அங்கிட்டு இங்கிட்டு நகர்வேன்.

என் சேதி எங்கள் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தெரியுமாதலால் நான் எல்லாவற்றையும் முடிக்கும் வரை என்னிடம் எதுவும் பேசமாட்டார்கள். பேசினாலும் எனக்கு எதுவும் காதில் விழாது என்பதையும் அவர்களின் கேள்விக்கு பதிலும் கிடைக்காது என்பதையும் அறிந்திருந்தார்கள். அடுத்த நாள் தேர்வு நாளாக இருந்தாலும் எனக்கு அந்த கதைப் புத்தகங்களை ஒரு பக்கம் விடாமல் பார்த்து வாசித்து முடித்தபின்தான் நிம்மதியாக படிக்க முடியும். இல்லாவிட்டால் காதுக்குள் வண்டு ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும். இந்த என் கதைப் புத்தகப் பைத்தியம் என் அம்மா அப்பாவுடன் எங்காவது வெளியூர் செல்கையிலும் தொடரும். ரோட்டோரத்தில் புத்தகக்கடை எதையாவது பார்த்துவிட்டால் அப்பாவின் வேகநடைக்கு கைபிடித்து பின்னே ஓடும் என் கை அப்பாவின் கையை இழுத்துக்கொண்டு அப்படியே நின்றுவிடும். நிற்கும் என்னை மீண்டும் இழுத்துக்கொண்டு போக வேண்டிய இடத்துக்கு கொண்டுபோய்விடுவார்கள்.

எந்த ஒரு புதிய புத்தக வாசனையையும் இந்த அளவு இந்த திருநாளில் நான் அனுபவித்ததுபோல அருகே நின்று முகர்ந்து பார்த்ததுபோல இல்லை இந்த ஞாயிற்றுக்கிழமை வம்சி பதிப்பகத்தாரின் ஸ்டாலில் புத்தகங்களை விற்பனைக்கு அவர்களோடு சேர்ந்து நானும் துணிகளை விலக்கிவிட்டு அடுக்கி வைத்ததைப்போல ஒரு இனிமையான சுகத்தை இந்த முப்பத்தெட்டு வருட வாழ்க்கையில் நான் ஒருநாளும் அனுபவித்ததில்லை. மொத்தம் எழுநூறு ஸ்டால்கள். இத்தனை புத்தகங்களை கோடிக்கணக்கில் என் வாழ்நாளில் ஒருமுறையாவது பார்த்துவிடுவேன் என போன வெள்ளிக்கிழமை வரை என் கனவிலும் நினைக்கவில்லை. ஏனெனில் நான் இதுவரை பார்த்ததெல்லாம் எங்கள் அப்பா எங்கள் நால்வரையும் அடிக்கடி அழைத்துச் செல்லும் திருச்சி மெயின்கார்டுகேட்டின் பெரிய பழைய புத்தகக்கடையைத்தான். அதில் பாதி புத்தகங்களுக்கு அட்டை இருக்காது. என் அம்மா அப்பா இருவரும் ஆசிரியப் பணியை தொழிலென நினைக்காமல் தொண்டென உழைத்தவர்கள். நாங்கள் நான்கு சகோதரிகளும் எங்கள் பெற்றோரைப் போலவே விடுப்பெடுக்காமல் பள்ளிக்கு ஒழுங்காக செல்லும் சமத்துப் பெண்கள். மூத்த பெண்ணாகிய எனக்கும் என் தங்கைகளுக்கும் எங்கள் பெற்றோரால் இதுவரை எந்த புத்தக கண்காட்சிகளுக்கும் அழைத்துச் செல்லப்பட்டிருக்கும் பாக்கியம் கிட்டவில்லை என்பது நிச்சயம் ஒரு மனக்குறைதான். ஆனால் அந்தக்குறையே எனக்கு இந்த வருடம் முதல்முறையாக என் கணவரால் அழைத்துச் செல்லப்படும் பாக்கியம் கிடைத்தபோதுதான் தெரிந்தது. இந்த கடிதத்தை தங்களுக்கு எழுதிக் கொண்டிருக்கும்போதுதான் என் பதின்மூன்று வயது பையனை இத்திருவிழாவுக்கு அழைத்துவராமல் அவனுடைய தாத்தா பாட்டி அதாவது என் பணிஓய்வு பெற்ற பெற்றோர்கள் விருப்பத்தின் பேரில் எங்கள் உறவினரின் சமயசடங்கு விழாவொன்றிற்கு அனுப்பி அவனுக்கு குறை வைத்துவிட்டேனே என்ற குற்றவுணர்வு எழுகிறது. ஆனால் அவனை அழைத்துச் சென்றிருந்தால் என்னால் முழுச்சுதந்திரத்துடன் என் இத்தனை வருட ஆவல்தீர இந்த அமிர்தத்தை ஆசையாசையாய் அள்ளிப் பருகியிருக்கமுடியாது. என்னை யோசிக்கவே விட்டிருக்கமாட்டான். எதை எடுப்பது எதை விடுப்பது எதை பார்ப்பது எதைத் தவிர்ப்பது எல்லாம் அவன் விருப்பத்திற்கேற்ப நடக்கவேண்டும் என அவன் கெஞ்சலிலும் கொஞ்சலிலும் என்னை தடுமாற வைத்திருப்பான். இந்த எழுநூறு ஸ்டால்களையும் ஒரே நாளில் சுற்றிக்கூட பார்க்க நேரமிருக்காது என அறிவேன். “நீ என்னிடம் ஆசைப்பட்டு வாங்கித்தரக் கேட்பது இது ஒன்றைத்தான். எப்படி என்னால் மறுக்க முடியும்? வா அழைத்துச் செல்கிறேன். உனக்கு விருப்பமான அளவு அள்ளிக்கொள்” என – வெள்ளிக்கிழமை இரவு பாலிமர் செய்திகளில் ஜனவரி ஆறிலிருந்து பத்தொன்பது வரை இதுபோல அனைத்து பதிப்பகங்களிலிருந்தும் புத்தகங்கள் திருவிழாக்கோலம் பூணவுள்ளன என கேட்டதும் நிலைகொள்ளமுடியாமல் அருகில் சிறிது உடல்நிலை சரியில்லாமல் காய்ச்சலிலிருந்த என் கணவரிடம் “என்னை அமிஞ்சிக்கரைக்கு கூட்டிட்டு போகமுடியுமா உங்களால? உங்களுக்கு ஜுரம்னு தெரியுது. ஆனா நீங்க மெட்ராஸ்க்காரர். பச்சையப்பாஸ தெரியும். டக்குனுபோயி இறங்கிடுவீங்க. நானு திருத்துறைப்பூண்டிலேர்ந்து எட்டுமணிநேரம் தனியே கோயம்பேட்டுக்கு வாந்தியெடுத்து போய் அங்கேர்ந்து அமிஞ்சிக்ககர போய் செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இண்டியன் ஸ்கூல கண்டுபிடிச்சி போய்ச்சேருறதுக்குள்ள ஒருநாளே போயிடுமே. நானு எங்கிட்டேர்ந்து புத்தகத்த பாக்குறது. சுத்திவர்றதுக்கே நாளு பத்தாதே என மலைத்துப்போய் பேசினதுக்குதான் அப்படி சொன்னார்கள். சொன்னதோடு மட்டுமல்லாமல் என் புத்தக வாசிப்பை அறிந்த அவர்கள் சனிக்கிழமையே எனக்கு பஸ் ஒத்துக்காது என ட்ரெய்னுக்கு டிக்கெட் புக் பண்ணிவிட்டார்கள்.

சோதனையென சனிக்கிழமை டேலியாகவில்லை. இரவு ஒன்பதேகாலுக்கு மன்னார்குடியில் ட்ரெயினைப் பிடிக்கவேண்டும். திருத்துறைப்பூண்டியிலேயே மணி எட்டாகிவிட்டது. ஒருமணி நேரம் மன்னார்குடிவரை பேருந்தில்தான் செல்லவேண்டும். அகல ரயில் பாதை போடுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட வேலைகள் இன்னமும் எங்களூரில் தொடரப்படவில்லை. என் மனம் பறந்த வேகத்திற்கு நாங்கள் ஏறியமர்ந்த பேருந்தின் டிரைவரும் பறந்தார்.

இதைவிட வியப்பு என்னவென்றால் “என்ன இப்படி கிளைமாக்ஸ்ல ட்ரெயினை பிடிக்க வர்றதுமாதிரி ஒம்போது மணிக்கு வர்றீங்க…கெட்டியமா ஆட்டோவ பிடிச்சிக்குங்க. குறுக்குப்பாதைல போப்போறேன். ரோடு சரியிருக்காது. ட்ரெயினு கரெக்டா இன்னும் காமந்நேரத்துல கௌம்பிருமே. இப்படி சிரிச்சி பேசிட்டு இருக்கீங்க. உங்கள பாத்தா எனக்குதான் டென்ஷனாயிருக்கு” என்று வேகவேகமாக ஆட்டோவை மேடும்பள்ளங்களிலும் குலுக்கலுடன் ஓட்டியபடியே பேசிக்கொண்டு பஸ்ஸாயிருந்திருந்தால் இருபது நிமிடங்கள் இழுக்கப்படும் தொலைவை பத்தே நிமிடங்களில் சுருக்கிவிட்டார். “சார் எனக்கு போவணும்னு விதியிருந்தா கண்டிப்பா ட்ரெயின்ல நாங்க போவோம் சார். எனக்காக ட்ரெயினு நிக்கும் சார்” என எனக்குத் தெரிந்த தத்துவம் பேசினேன் டிரைவரிடம்.

“ஆமா மேடம் என்னைக்காவது பத்து நிமிஷம் லேட்டாகூட வண்டி போயிருக்குது…சார்…எழுபது ரூபாய ரெடியா எடுத்துவச்சிக்குங்க சார்” என்றதும், “சார் நீங்க ஒண்ணும் கவலப்படாதீங்க. நீங்க சொன்னபடி முன்னாடியே எழுபது ரூபாய கைல எடுத்துவச்சிகிட்டேன். அம்மா நீ சார் ஆட்டோவ நிப்பாட்னதும் அப்டியே பைய மாட்டிக்கிட்டு குதிச்சிர்ற. திரும்பிப்பாக்காம நிக்காம ஓடிட்டே இருக்கணும். என்னம்மா?” என என் கணவர் ஆட்டோவின் இரைச்சலையும் மீறி சவுண்டாக சொன்னதும் எனக்கு ஆட்டோவில் இருளில் வீடுகள் நிறைந்த தெருவில் ரோட்டில் போய்க்கொண்டிருக்கிறோம் என்பதையும் மறந்து வாய்திறந்து கலகலவென சிரித்துவிட்டேன். அதேபோல நின்றதும்- விட்டால் ஆட்டோக்காரர் ட்ரெயினின் வாசல் வரை ஆட்டோவை விட்டிருப்பார். ரயில் நிலைய மேடை தடுத்துவிட்டது- டக்கென வெளியே குதித்தேன்.

ஆனால் ஓடக்கிளம்பிய நான் ஒரு வினாடி திரும்பி ஆட்டோவின் முகப்பைப் பார்த்துவிட்டு ஆட்டோக்காரரிடம் “சுபேதா வாழ்க. தேங்க்ஸ்” என பாதி ரஜினி ஸ்டைலில் சல்யூட் அடித்துவிட்டு “ஓடு ஓடு” என இறங்கிக்கொண்டே கூறிய என் கணவரின் சொற்களையும் காதில் வாங்கிக்கொண்டு ஓடும் வேகத்தில் விழுந்து விடக்கூடாதே என புடவையையும் சற்றே தூக்கிக்கொண்டு ஓட்டம் பிடித்தேன். நல்லவேளை. ட்ரெயின் அங்குதான் நின்று கொண்டிருந்தது. அப்போது ஆரம்பித்த திருவிழாக் கொண்டாட்ட மனநிலை அடுத்த நாள் இரவு எட்டு மணி வரையில் அடங்கவில்லை. எனக்கு எப்படி இதை மேற்கொள்ளப் போகிறோம் என உள்ளே நுழையும் வரை ஒரு ஐடியாவே இல்லை. பதினோரு மணிக்குதான் நுழைவுச்சீட்டு தரப்படும் என ஏழுமணிக்கே சென்ற எங்களிடம் சொன்னதும் பெருத்த ஏமாற்றமாக இருந்தது.

சற்றுத் தொலைவு நடந்து சென்று காலை சிற்றுண்டி முடித்தோம். மீண்டும் திரும்பி அப்பள்ளி வளாகத்தில் இதற்கென ஏற்பாடு செய்யப்பட்ட மேடை கொண்ட பந்தலில் அமர்ந்தோம். அங்கே வேலை செய்பவர்கள் முதல்நாள் போடப்பட்டிருந்த குப்பைகளை சுத்தம் செய்துகொண்டிருந்தார்கள். மொபைல் ஹோட்டல் ஒரு பந்தலுக்குக் கீழே. ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி இடங்களில் மொபைல் கழிவறைகள் பெரிய ஃப்ரிட்ஜ் ஒன்றுக்குள் நுழைந்து வெளிவருவதைப்போல இருந்தது.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கர்த்தர் ஒருவரை மட்டும் சேவிப்பவர்கள் அங்கேதான் கூடுவார்கள் போல. ஏழரை முதல் ஒன்பதரை வரை அந்த ஜெபக்கூடத்திற்கு சென்றுகொண்டிருந்தார்கள். ஸ்பீக்கரில் ஒருவர் தொடர்ந்து ஸ்தோத்திரப் பாடல்களைப் பாடிக் கொண்டேயிருந்தார். ஒரு பெண்மணி இடையிடையே ரட்சகரின் வசனங்களை வாசித்துக் கொண்டுமிருந்தார். நவீன இசைக்கருவிகளின் ஒத்துழைப்பும் இடையிடையே. நான் இதைப் போல எங்கேயும் வெறுமனே காத்திருக்க விரும்புவதில்லை. இப்போது “ஆரோக்கிய நிகேதனம்” வாசித்துக் கொண்டிருந்ததால் அப்புத்தகத்தை கையோடு பையில் எடுத்துச் சென்றிருந்தேன்.

எங்களுக்கான பந்தலில் அமர்ந்து விரித்து விட்டதிலிருந்து தொடர ஆரம்பித்தேன். ஒவ்வொருவராக வந்து சேர்ந்தார்கள். பத்தரை மணிக்கெல்லாம் பந்தல் நிரம்பி வழிய ஆரம்பித்துவிட்டது. புத்தகத் திருவிழாவிற்கான கூட்டத்தைப் பார்த்து இதுவரை அனுபவித்திராத பரவசத்தை அனுபவித்தேன். ஆளாளுக்கு விசாரித்துவிட்டு பதினோரு மணிக்குத்தான் விடுவாங்களாம் என பொறுமையிழந்து பொறுமையோடு காத்திருந்ததை ஆசை தீர பார்க்க ஒருமுறை பந்தலுக்குள் கண்களை சுழலவிட்டேன். அப்படியே எனக்கு இருவர் தள்ளி அமர்ந்திருந்த இருவரைப் பார்த்து ஆடிப்போய்விட்டேன்.

உருவம் குள்ளமாய் இரு கால்களிலும் கட்டைக்கால் பொருத்திக்கொண்டு நான்குசக்கர இருக்கையில் ஒரு சிறுவனும் சிறுமியும், பதினைந்திலிருந்து இருபதுக்குள் இருக்கலாம். எதைப் பற்றியோ மிகவும் சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்தார்கள். என் பார்வை உடனே எதிரிலிருந்த கண்காட்சி அரங்கத்திற்கு சென்று மீண்டது. ஆமாம். அவர்கள் அந்த சக்கர இருக்கையிலேயே அமர்ந்து கொண்டு அந்த மேடையில் எப்படி ஏறுவார்கள்..சறுக்குப்பாதை உள்ளதா என கவனித்தேன். இருந்தது. “தேங்க்யூ ஜீஸஸ்” என தானாகவே என் இதயம் பேசிக்கொண்டது.

இப்படி நினைத்துக் கொண்டிருக்கையிலேயே மனிதக்கடல் என இன்னொரு வியப்பு. அந்த ஜெபக்கூட்டத்திலிருந்து வெளியேறிய விதவிதமான வண்ணமயமான இந்திய, ஆங்கிலோ இண்டிய, தமிழிய மனிதர்கள். ஒட்டுமொத்த சென்னையே இங்குதான் வந்துவிட்டதோ என திகைப்புடன் அவர்கள் முடிவில்லாத வெள்ளம் கரைபுரண்டோடி எங்கள் பந்தலுக்கு முன்னே ஓடிக்கொண்டேயிருப்பதைப்போல வந்துகொண்டேயிருந்ததை இமைமூடாமல் விழித்துப் பார்த்துக்கொண்டேயிருந்தேன்.

அதற்குள் “டீ குடித்துவிட்டுவருகிறேன்” என வெளியே சென்ற என் கணவர் திரும்பி வந்ததும் “கிறிஸ்டி இந்த பக்கம் வரிசையா டிஜிட்டல் போர்டு நிறைய வரிசையா வச்சிருக்காங்க. அதுல ஸ்டால் நம்பர்ஸ் போட்ருக்குது. நீ போய் அத படிச்சி பாத்தீனா உனக்கு ஒரு ஐடியா கிடைக்கும். ஒரேநாள்ல பாத்துரமுடியும்னா பாரு. எனக்கு லீவ் இல்ல. நான் நைட் பஸ் பிடிச்சி நாளக்கி ஆஃபீஸ் போயாகணும். உனக்கு நைட் தங்குறதுக்கு வேணும்னா ஏற்பாடு பண்ணிட்டுபோறேன். நீ நாளைக்கும் இருந்து பொறுமையா பாத்துட்டு வா. மொதல்ல அங்க போய் பாத்துட்டு வந்துரு” என்றார்

விடுவிடென சென்றேன். வரிசையாக புத்தக பதிப்பகத்தார்களின் போர்டுகள் பிரபல எழுத்தாளர்களின் படங்களுடன் ஸ்டால் நம்பர்ஸுடன் விளக்கமாக. கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்ததே என என் கணவருக்கு மனதில் நன்றியைச் செலுத்திவிட்டு தங்கள் நவீன தமிழிலக்கிய அறிமுக நூலில் நான் எடுத்துவைத்திருந்த கடைசி பத்துபக்க ஜெராக்ஸின் பின்பக்கத்தில் அனைத்து விவரங்களையும் குறித்துக் கொண்டேன். வம்சி, காலச்சுவடு, தமிழினி, சந்தியா, உயிர்மை…..இந்தப் பெயர்களிலேயே என்னமோ இருக்கிறது!

“எனக்கு ஐடியா கிடச்சிடுச்சு மாமா என்ன பண்றதுன்னு” என அவர்களிடம் கூறினேன். நுழைவுச்சீட்டுடன் உள்ளே நுழைந்தோம். பெருங்கடலொன்று என்னை வாரிச்சுருட்டி உள்வாங்கியதைப்போல் உணர்ந்தேன்.

மனம் முழுவதும் விவரிக்க இயலா படபடப்பு. ஒவ்வொருவரும் தங்களுக்கு புத்தகம் இல்லாமல் போய்விடுமோ என அவசரம் அவசரமாக தேடியதைப்போலவும் வாங்கியதைப்போலவும் பரபரப்பாக காட்சியளித்தது. வேகவேகமாக நடந்தார்கள். நான் வம்சிக்கு செல்லும் வழியில் பார்த்தபோது புத்தகங்களை கைகள் நிறைய தூக்கமுடியாமல் நிரப்பி வைத்துக்கொண்டு ஒரு ஜோல்னாப்பைக்காரர் பில் போடக் கொடுத்ததைப் பார்த்தேன். என்னடா இது மக்கள் இந்த வேகத்தில் இவ்வளவு அள்ளினால் நான் சுற்றிவந்து பார்த்து வாங்குவதற்குள் தீர்ந்துவிட்டால் என்ன செய்வது என நானே நினைத்து சிரித்துக் கொண்டேன்.

ஆனால் நான் கடிவாளமிட்ட குதிரை போல் நேரே நான் குறித்து வைத்துக்கொண்ட பதினைந்து ஸ்டால்களுக்கு மட்டும்தான் சென்றேன். அங்கிருந்த பதிப்பகங்களில் இருந்த தங்கள் நூல்கள் அனைத்துமே என்னிடமும் என் நண்பனிடமும் இருந்தன. காலச்சுவட்டில் நாங்களிருவரும் வாசிக்க விரும்பிய தாங்கள் சிபாரிசு செய்த “நூறு வருட தனிமை”யைப் பார்த்ததுமே அள்ளி அணைத்துக் கொண்டேன்.

என் நண்பன் வாசிக்க விரும்பிய தேவதேவன், தேவதச்சன் இல்லையென்று சொல்லிவிட்டாார்கள். எனக்கு கவிதை அவ்வளவாக நெருக்கமாகவில்லை. ஏற்கெனவே கவிதைக்கு அணுக்கமானவன் இன்னும் நெருங்கட்டுமே என கலாப்ரியா, மனுஷ்யகுமாரனை வாங்கினேன். ஒரே ஒரு தஸ்தவ்யேஸ்கி அபூர்வமாக வெண்ணிற இரவுகளில் கிடைத்தார். பாரதியார் தமிழில் மொழிபெயர்ப்பு செய்த பகவத் கீதை என்னைக் கவர்ந்தது. காலச்சுவடுகளை விட்டு வெளியே வர எனக்கு மனமேயில்லை.

அசோகமித்திரன் முழுச் சிறுகதைகள் தொகுப்பு, தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைத் தொகுப்பு, ஜெயகாந்தன் சிறுகதைத்தொகுப்பு, புதுமைப்பித்தன் சிறுகதைத் தொகுப்பு, மோகமுள், மரப்பசு, லாசரா வின் புத்ர, சுந்தர ராமசாமி, எஸ்.ரா., சூர்யமைந்தனின் மானாவாரி மைந்தர்கள், நான்கு வேதங்கள் பெரிய பெரிய சைஸில். பிரதாப முதலியார் சரித்திரம், கமலாம்பாள் சரித்திரம், பாற்கடல், ….வரிசையாக நான் இந்த பத்து பதினைந்து குட்டி அரங்கினுள் பார்த்தவையை மட்டும் பட்டியல் போட்டாலே இன்னும் பக்கங்கள் நீண்டுவிடும்.

என் பையனுக்காகவே எழுதியுள்ளதைப்போல சிறுசிறு சிறார் நாவல்கள் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியதை பத்து பதினைந்து அள்ளிக்கொண்டேன். அவன் மிகவும் விரும்பிய இராமாயணம், மகாபாரதம் இரண்டும் இணைந்து பேக் செய்யப்பட்டதை டிஸ்கவரியில் தள்ளுபடியுடன் கொடுத்தார்கள். ஒவ்வொரு அரங்கிலும் தனித்தனியாக பத்து என்றும் பதினைந்து என்றும் டிஸ்கௌண்ட் போட்டு பில் போட்டார்கள். என் கணவருக்கு உடம்பு சரியில்லாததால் “நான் வெளியே பந்தலில் அமர்ந்திருக்கிறேன். என்னால் நிற்க முடியவில்லை. நீ வாங்கிட்டு வா” என சொல்லிவிட்டு போய்விட்டார்கள்.

கொஞ்ச நேரத்துக்கு முன்தான் சிலரை கவனித்தேன். ஆங்காங்கே சிலர் அமர்ந்திருந்தார்கள். ஏன் என்றால் வாங்கியதை வைத்துக்கொள்ளும் காப்பாளிகளாக சிலர் வந்திருந்தார்கள். அவ்வளவையும் தூக்கி சுமந்து அடுத்த அரங்கினுள் சுற்றமுடியாதல்லவா…அதற்காக சில வயதானவர்கள் வந்திருந்தார்கள். அதாவது வரவழைக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் சிறுவர்களுடன் சேர்ந்து ஐஸ்க்ரீம் சுவைத்துக்கொண்டே காவல்பணியைப் புரிந்துகொண்டிருந்தார்கள். ஒரு குட்டி அரங்கினுள் ஒரே சவுண்ட். என்னடாவென எட்டிப் பார்த்தால் அங்கு வரும் சின்னஞ்சிறு பிள்ளைகள் விளையாடவென்றே ஒரு அரங்கினை ஒதுக்கியிருந்தார்கள்.

ஒவ்வொரு பாதையிலும் குடிநீர்க்கேன்கள் கலர் கலர் டம்ளருடன். மதியம் மணி இரண்டு. சாப்பிட அழைப்பு வந்தது. என் கணவர் என் நேரத்தை சேமிக்க வகை செய்து வெளியிலிருந்து பார்சல் வாங்கிவைத்துக் கொண்டு அழைத்திருந்தார்கள். அவசரம் அவசரமாக சாப்பிட்டேன். தமிழினியில் பாதி எடுத்த நிலையில் அப்படியே அவர்களிடம் “தனியே வையுங்கள் சாப்பிட்டுவிட்டு உடன் வந்துவிடுகிறேன்”என்றேன். அவர்களோ, “லேட் பண்ணாதீங்க மேடம். ரொம்ப நேரம் தனியே வைத்திருக்க முடியாது. இடமில்லை. ஒன்று சேர்த்து அடுக்கிவிடுவோம்” என்றார்கள். அதனால் வேகமாக திரும்பி மீண்டும் கடலுக்குள் புகுந்துவிட்டேன்.

எனக்கு, என் நண்பனுக்கு, என் பையனுக்கு, என் தங்கைக்கு தையல் சம்பந்தமான புத்தகங்கள், என் தங்கையின் ஒன்றாம் வகுப்பு படிக்கும் குமாரத்திக்காக, அப்பாவுக்கு என நாற்பது புத்தகங்கள் வாங்கினேன். இதுவே என் வாழ்வில் அதிகமான வாங்குதலாகும். நானே என் சொந்த சம்பாத்யத்தில் எனக்குப் பிடித்ததை வாங்கியதாகும். அன்று என் மனம் அடைந்த சந்தோஷத்திற்கும் நிறைவிற்கும் அளவே இல்லை. அடுத்த முறை எங்கு புத்தகக் கண்காட்சி நடைபெறுவதாக கேள்விப்பட்டாலும் உடன் விடுப்பெடுத்து என் பையனையும் விடுப்பெடுக்கச் சொல்லிவிட்டு அழைத்துச் செல்லவேண்டுமென இருக்கிறேன்.

நிறைவுடன் முடித்துக்கொண்டு பந்தலுக்குத் திரும்புகையில் அப்போதுதான் திரை நட்சத்திரங்கள் சார்லி, சிவகுமார் இவர்களின் மேடைப் பேச்சு முடிந்து கீழிறங்கி வந்தார்கள். இருவரும் மிக அருமையாக பேசியதாக என் கணவர் கூறினார். கவிஞர் வாலி, சாவி, சோ இவர்களின் நூல்களை அன்று வெளியிட்டார்களாம். சார்லி அவர்கள் பேசியதிலிருந்து ஒவ்வொரு படைப்பாளியும் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டேன் என என் கணவர் என்னிடம் ஊருக்குத் திரும்பும் வழியில் பகிர்ந்துகொண்டுவந்தார்கள்.

நான் தங்கவில்லை. அனைத்தையும் பார்க்கவில்லை. எனக்கு உடல்நிலை சரியில்லாதவர்களை தனியே அனுப்ப மனம் வரவில்லை. எத்தனை நாள் கொடுக்கப்பட்டாலும் இந்தக்கடலை முழுமையாக நீந்திக் கடக்கமுடியாது என எண்ணி ஒரே நாளுடன் முடித்துக் கொண்டேன். ஆனால் வாங்கி வந்தவற்றை அவரவர்களிடம் ஒப்படைத்தபோது அவர்கள் அடைந்த மனக்கிளர்ச்சியைக் கண்டு எனக்கு எழுந்த உளவெழுச்சியை எந்த சொல்லாலும் வர்ணிக்க இயலாது.

இப்படிக்கு,
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு
வாழ்த்துக்களுடன்,
மேரி எர்னஸ்ட் கிறிஸ்டி.

 

 

 

முந்தைய கட்டுரைநதிப்பெருக்கில்
அடுத்த கட்டுரைகலைஞர்களை வழிபடலாமா?