‘கச்சர் கொச்சர்’

1
விவேக் ஷன்பேக்

 

அன்புள்ள ஜெயமோகன அவர்களுக்கு,

ஷான்பாக் மொழியாக்கம் பற்றிய உரையாடல் நடக்கும்போதே, அவருடைய நாவலான ‘கச்சர் கொச்சர்’ பற்றி உங்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று நினைத்தேன், ஆனால் சற்று தாமதமாகிவிட்டது. இந்நாவலைப் பற்றி நீங்கள் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கலாம். இதன் ஆங்கில பதிப்பு இலக்கிய வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது, அதனால் அந்நாவலின் கன்னட பதிப்பும் விற்று தீர்ந்துவிட்டது. பெங்களுர் வந்து பத்து ஆண்டுகள் ஆகியும் கன்னடம் கற்றுகொள்ளாததால், ஆங்கில மொழிபெயர்ப்பையே வாசிக்கமுடிந்தது. சமீபத்தில் நான் வாசித்த ஒரு அற்புதமான படைப்பு, அற்புதமான மொழிபெயர்ப்பு. ‘கச்சர் கொச்சர்’ நாவல் இந்திய நடுத்தர வர்க்க குடும்ப அமைப்பின் இருண்ட பக்கத்தையும், சுயநலம் மிகுந்த, குற்றவுணர்ச்சியும் கலந்த ஒரு கையறு நிலையை ஒரு மெல்லிய நகைச்சுவையோடு பேசுகிறது. இதை படிக்கும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் எல்லோராலும் நாவலோடு தன்னை பொருத்திப் பார்க்க முடியும். இந்நாவலை பற்றி ஒரு விமர்சகர் கூறியது போல் விவேக் இந்திய நடுத்தர வர்க்கத்தை ஒரு வெங்காயத்தை உரிப்பதை போல் கருணையே இல்லாமல் பிய்த்து போட்டுவிட்டார்.

 

1

சுமார் நூறு பக்கங்களில் மிகக் கச்சிதமான வடிவில் எழுதப்பட்ட ஒரு குறுநாவல். நீங்கள் கூறியது போல விவேக் எளிமையாகவும், சாதாரணமாகவும் எழுதினாலும், அதன் அடித்தளத்தில் இருக்கும் விஷயம் அவ்வளவு எளிமையானது அல்ல. பொதுவாக நடுத்தர மக்களின் வாழ்க்கையில் அரசு, பொருளாதாரம், கலாச்சாரம் ஏற்படுத்தும் மாற்றங்கள் நேரடியாகவோ உடனடியாகவோ இருக்காது, ஆனால் கண்ணுக்குத் தெரியாமல் ஒரு கால இடைவெளியில் மெதுவாக நடந்துவிடும். அவர்களின் அரண் கரையும்போது தங்களையே இழந்துவிடுவார்கள், மிக மூர்க்கமாக போராடும் தருணம் என்பது வெகு அரிது. யார் எதை செய்தாலும், அது குடும்பத்தில் உள்ள அத்தனை பேரையும் பாதிக்கும், அந்த அளவுக்கு இறுக்கமான ஒரு அமைப்பாக இருக்கும். ஒரு வகையில் இந்திய குடும்ப அமைப்பில் தனி நபர் என்று ஒருவர் இல்லையோ என்று நினைக்கத் தோன்றுகிறது. விவேக் ஷான்பாகின் நடுத்தரவர்க்கம் மீதான மிக கூர்ந்த அவதானிப்பு இந்நாவலில் மிக இயல்பாக வெளிப்பட்டிருக்கிறது. ஒரு உதாரணத்திற்கு, இந்நாவலில் சிறிய வீட்டிலிருந்து பெரிய வீட்டிற்கு மாறிய பிறகு, அந்த புதிய வீட்டில் சற்றும் பொருந்தாத சாமான்களை பற்றிய குறிப்பு. முதலில் பொருந்தாமல் தோன்றும், பிறகு யாரும் கவனிக்க மாட்டார்கள், பின்னர் யாருக்குமே தெரியாமல் மறைந்து போய்விடும். பொருட்கள் மட்டுமல்ல மாற்றங்கள் வரும்பொழுது, நாம் நம்பிய அத்தனை விழுமியங்களும், மதிப்பீடுகளும், கவனிக்கப்படாமலும், உதாசீனபடுத்தப்பட்டும், மறைந்துவிடும். அது போல இந்நாவலில் வரும் மனிதர்கள், குடும்பத்தில் ஆதாரமாய் இருக்கும் ஒருவரின் அதிகாரம், குடும்பத்தில் அனைவருக்காக உழைக்கும் ஒரு தாயின் சுயநலம், எல்லாவற்றையும் பொறுப்பில்லாமல் அனுபவிக்கும் ஒரு அக்காவோ, அண்ணாவோ என பல வண்ணங்களில் மனிதர்களை கொண்டு விவேக், நம் முன்னே சிலந்திவலை போல ஒரு குடும்பத்தை பின்னிக்கொண்டே செல்கிறார். முக்கியமாக இந்நாவலில் வரும் உரையாடல்கள், நடுத்தர வர்க்கத்தில் உடல் சார்ந்த வன்முறைவிட, அதற்கு தயார்படுத்தும் சொற்களின் வன்முறை எப்பொழுதும் என்னை பீதிக்குள்ளாக்கும். மறுநாள் காலை ஒரு கொலை விழுந்துவிடுமோ என்று தோன்றும்.

இது நிச்சயமாக இலக்கிய விமர்சனம் இல்லை, இருந்தாலும் மனதில் தோன்றுவதை தொகுத்து எழுதுவது அவ்வளவு எளிதாக இல்லை, இது இந்நாவலை பற்றிய என்னுடைய எளிமையான மனப்பதிவு மட்டுமே. நாவலில் சில இடங்கள் அசோகமித்ரனை நினைவுபடுத்தியது. விவேக் ஷான்பாக்கை பற்றி உங்கள் இணையதளத்தில் படித்திருந்தாலும், இந்த நாவலை பற்றி கேள்விப்பட்டதில்லை, பெங்களூர் இலக்கிய விழாவில் எதேச்சையாகத்தான் வாங்கினேன். மற்றும் ஒரு முறை எனது குருட்டு நம்பிக்கை பலித்துவிட்டது, அது – ஒரு நல்ல புத்தகம், அதன் வாசகனிடம் எப்படியோ சேர்ந்துவிடுகிறது.

இப்படிக்கு,

ராஜசேகர்

 

 

 

 

முந்தைய கட்டுரைதிருக்குறள் உரையாற்றுகிறேன், கோவையில்
அடுத்த கட்டுரைஏழாவது இருள்