ஜெ.மோ அவர்களுக்கு,
வழக்கம் போல் நூலகத்திற்கு செல்லும் பொழுது பாலகுமாரனோ, சுஜாதாவோ இல்லை பட்டுக்கோட்டை பிரபாகரனோ போன்றோரின் நாவல்கள் ஏதேனும்; கண்ணில் தென்படாதா…? என்று அடுக்கி வைத்திருந்த புத்தகங்களை திருப்பி கொண்டிருக்கையில் சட்டென்று என் கண்ணில் பட்டது அந்த ‘ஏழாம் உலகம்’. என் ஆசான் செந்தில் குமார் அவர்கள் எப்போதோ ஒரு கலந்துறையாடலில் ஜெயமோகனின் ‘ஏழாம் உலகம்’ படித்திருக்கிறாயா…? என்று கேட்ட நிகழ்வு அந்த புத்தகத்தை பார்த்த அடுத்த கணம் உள் மனதினுள் எட்டி பார்த்தது.
ஜெயமோகனின் படைப்பை நானும் தொட்டுப் பார்த்திருக்கிறேன் என்று மற்றவர் முன் பெருமை கொள்வதற்காகவே தங்களின் படைப்பை வீட்டிற்கு எடுத்து சென்றேன். வாசிக்க ஆரம்பித்த சில நிமிடங்களிலே ஏழாம் உலகத்துக்குள் நானும் புகுந்துவிட்டேன். தெய்வத்தின் தரிசனத்திற்காக ஒருவறை ஒருவர் இடித்துக்கொண்டு அரோகரா என்று கோஷமிட்டு பழனிக்கு சென்று வந்திருந்த சம்பவங்கள் எல்லாம் என் கண் முன் விரியத் தொடங்கின. அப்பொழுதெல்லாம் என் பார்வை உருப்படிகளின் மேல் விழுந்திருக்குமா என்பதை என்னால் சரியாக யூகிக்க முடியவில்லை. ஒரு சில நாவல்கள் வேறு உலகத்திற்கு அழைத்து செல்வது சாத்தியம். ஆனால் காணாத ஒர் உலகிற்கு அழைத்து செல்வது சாத்தியமா என்ற கேள்விக்கு தங்களின் நாவல் விடை கொடுத்துவிட்டது. ஜெயமோகனின் எழுத்துக்களை மெனக்கெட்டு தான் வாசிக்க கூடும் என்று பலர் சொல்லி நான் கேள்விப்பட்டிருக்கிறேன், பார்த்திருக்கிறேன். என்னை பொறுத்த மட்டில் அவை தான் தங்களின் தனித்துவம் என்பதை இனி வரும் நாட்களில் ரீங்காரமாக சொல்லிக்கொண்டிருப்பேன்.
ஒவ்வொரு உருப்படிகளையும் தாங்கள் விவரிக்கும் பாணி அவர்களின் உருவத்தை மட்டும் அல்ல அவர்களின் வாழ்கை சூழலையும் சேர்த்து காட்டுகிறது. பேறு காணுவதற்காகவே முத்தம்மையை விலை பேசாமல் வைத்திருப்பது, அவள் பெற்ற குழந்தைகள் எங்கெங்கையோ விலை பேசி போக அதை கடவுளே பார்த்து கொள்வான் என்று சொல்வது, போன்ற இடங்களிலெல்லாம் உருப்படிகளின் நீதியற்ற வாழ்வு பளிச்சிடுகிறது. நாவலை படித்து முடித்து இரண்டு நாட்களை கடந்த போதிலும் தங்களின் காதாபாத்திரங்கள் அவ்வப்போது மனதில் தோன்றி இம்சை செய்துகொண்டிருக்கின்றன. ஜெ.மோ அவர்களே…! ரத்தமும், சதையுமாக எழுதப்பட்ட நாவலிலும் கூட கேளிக்கை பேச்சுகளை எப்படி உங்களால் கையாள முடிந்தது…? குறிப்பாக குய்யனின் நையாண்டி பேச்சுகள் என் உதட்டில் இருந்து சிரிப்பை வரவைக்காமல் இல்லை. கால்கள் இல்லாத நிலைமையிலும் கூட உடலுறவுக்காக எருக்கையை போலிஸார் சைக்கிளில் அமர்த்தி செல்வதும், மேம்போக்காக பெருமாள் கட்டிய தாலியை நினைத்து அவள் வெட்கி தலை குணிவதும் போன்ற நிகழ்வுகள் என் மேனியை சுருங்கச் செய்ய தவறவில்லை. எவரிடமாவது ஏழாம் உலகத்தை பற்றி விவரித்துகொண்டே இருக்க வேண்டும் என்று ஆசை தான். ஆனால் படித்தால் ஒழிய எவ்வளவு விவரித்தாலும் தங்களின் நாவலில் உள்ள உலகத்தை காணுவது சாத்தியமற்றது.
தன் இஷ்டம் போல் உருப்படிகளை உருட்டிக்கொண்டிருக்கும் பண்டாரத்தின் மீது கூட எனக்கு வெறுப்பு உண்டாகவில்லை. உருப்படிகளே வாஞ்சையுடன் மோலாளி… மோலாளி… என்று அழைக்கும் போது வாசகனான எனக்கு மட்டும் எப்படி பண்டாரத்தின் மீது வெறுப்பு உண்டாகும். வில்லத்தனத்தை அள்ளிக்கொட்டிய நாவல்கள் எத்தனையோ… அவை எல்லாம் கதாபாத்திரத்தின் மீதான உணர்ச்சிகளை திட்டி தீர்ப்பதற்கே படைக்கப்பட்டிருக்கும். ஆனால் தங்கள் நாவலில் தோன்றும் வண்டிமலை, பெருமாள், மாதவபெருமாள், குமரேசன் போன்ற கதாபாத்திரங்களின் வில்லத்தனங்கள் இம்மியளவும் கூட நெஞ்சை சீண்டி பார்க்கவில்லை. இவர்களின் செயல் இப்படி தான் வரையறுக்கப்பட்டிருக்கிறது, இவர்களின் குணம் இப்படி தான் பழக்கப்பட்டிருக்கிறது, ஏதோ ஒரு வகையில் அனைவரும் நல்லவர்களே என்று தாமாகவே மனது சாந்தப்படுகிறது.
“வயசு முத்தி பளுத்தாலும் செரி, சீக்கு வந்து சீரளிஞ்சாலும் செரி, ஆம்பிளை கண்ணுல ஆச எறங்காது” என்று ராமப்பன் சணப்பியிடம் சொல்லுவதும், “ஓட்டு உள்ளவன் செத்தாதான் அலு கொலக் கேசு. மத்ததெல்லாம் முனிசிபாலிட்டி கேசு. அதுதான் இந்தியன் பீனல்கோடு சட்டம்”; என்று தாணுபிள்ளை பண்டாரத்திடம் சொல்வதும் போன்ற வசனங்கள் மனிதனின் செயல்பாடுகளை தோலுரித்து காட்டுகிறது.
தனிப்பட்ட முறையில் அகமது கதாபாத்திரம் என்னை பெரிதும் கவர்ந்தன. கல்வி அறிவு உள்ளவன் எந்த இடத்திலும் சரி, எந்த ஒரு சூழ்நிலையிலும் சரி, எப்படி எல்லாம் தன் கல்வி திறமையை வெளிபடுத்துவான் என்பதற்கு அகமது ஓர் உதாரணம். குய்யன் ஆசை பட்டான் என்பதற்காக பணம் வசூலித்து பாயாசம் வாங்கி தருவது, உடல்நிலை சரியில்லாத எருக்கைக்கு மருந்து சீட்டு எழுதி கொடுப்பது, தாணுபிள்ளைக்கு மெமோ எழுதி கொடுப்பது, ஆங்கிலத்தில் நேரம் கேட்பது, குறிப்பாக பண்டாரத்திடம் பே ரோல் ஸிஸ்டை பார்க்க சொல்லி எடுத்துரைப்பது போன்ற இடங்களில் அகமது தனித்தே நிற்கிறான்.
உணர்ச்சிகளை பிழித்தெடுக்கும் நிகழ்வுகளும் அவ்வப்போது தங்கள் நாவலில் தலை காட்டுகின்றன. பிரிய மனமில்லாமல் ராமப்பனை எருக்கை அனைத்து கொள்வது, தன் குழந்தையை தொடுவதற்காக தொரப்பன் அனுமதி கேட்பது, தன் மகள் ஆசைப்பட்டாள் என்பதற்காக நடு ராத்திரியிலும் கூட பண்டாரம் வளவி வாங்க ஓடுவது இவை எல்லாம் அருகில் நின்று பார்ப்பது போலவே தங்கள் நாவல் உணரவைக்கிறது.
நாவலை முடிக்கும் நேரத்தில் சற்றும் எதிர்பாராத ஒரு சம்பவத்தை தங்கள் நாவலில் கொடுப்பீர் என்று சிறிதளவும் நான் நினைக்கவில்லை, பதினாறு வயதில் முத்தம்மை பெற்றெடுக்கும் கூனன் வலுக்கட்டாயமாக அவளின் மேல் அணையவிடுவது எவரும் நினைத்துபார்க்கமுடியாத ஒரு செயல் “ஒடயோரே…. ஓத்த வெரலு இவன் வேண்டாம் ஒடயோரே…” என்று முத்தம்மை கதறும் கதறல் படித்துகொண்டிருக்கும் போதே என் செவிகளில் விழுந்தது. ஏன் இப்படி யோசித்தீர்…? ஏன் இப்படி எழுதினீர்…? என்று என்னுள் நானே உங்களிடம் வாக்குவாதம் செய்தேன். நிதானித்து யோசித்து பார்த்தேன் இதில் தங்களின் பிழை என்ன இருக்கிறது. பணம் அள்ளவே இங்கு மனிதனின் செயல்பாடுகளை அடுக்கிக்கொண்டிருக்கிறது. பணத்திற்காக மனிதனை மனிதனே சரக்கு என்று சொல்லி கைமாற்றும் உலகத்தை காண்பித்துவிட்டீர் இனி வாக்குவாதம் செய்து என்ன பயன்…
எவ்வளவு போராடியும் என்னால் ஏழாம் உலகத்தில் இருந்து வெளிவர முடியவில்லை. என் இரயில் பயணங்களில் காணும் உருப்படிகளை தங்கள் நாவலுடன் இணைத்து பார்க்கிறேன். முருகன் கோவிலுக்கே போக கூடாது என்றெல்லாம் கூட சபதம் எடுக்கிறேன்… ஏன் இப்படி? யோசிக்க யோசிக்க ஒன்று மட்டும் புலப்படுகிறது. ஆம்… நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன் தங்கள் நாவலின் கதாப்பாத்திரங்கள் மூலமாக.
அடுத்த முறை நூலகத்திற்கு செல்லும் பொழுது தெரிந்தோ தெரியாமலோ தங்களின் படைப்பு என் கண்ணில் தென்படக்கூடாது என்றே வேண்டிக்கொள்கிறேன். இருந்தாலும் ஒரு வேண்டுகோள் தங்களின் வாசகர் பட்டியலில் என்னையும் இணைத்துக் கொள்ளவும் ப்ளீஸ்…!
இப்படிக்கு
பிரவின் குமார்.