’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 83

[ 39 ]

வேங்கடத்திற்கு வழிபடுநடை செல்லும் விண்ணடியார் எழுப்பிய இசை முதலில் தொலைவில் ஏதோ சிற்றூர் இருப்பதைப்போல எண்ணச் செய்தது. பின்னர் காற்றில் அது வலுத்து செவிதொட்டு அகன்றது. “அங்கு ஓர் ஆலயம் உள்ளது” என்றான் உக்ரன். அருகே புதர்களுக்கு அப்பால் அவர்களின் இசை எழுந்ததுமே சண்டன் “விண்ணிறைவழியினர்” என்றான். “யார் அவர்கள்?” என்றான் வைசம்பாயனன். “இசைச்சூதர்கள் போலிருக்கிறார்கள்” என்றான் சுமந்து. ஜைமினியின் தோளில் இருந்த உக்ரன் “பாடி ஆடுகிறார்கள். பாட்டில் ஒலியிலேயே ஆட்டத்தின் அலை உள்ளது” என்றான்.

“விண்ணளந்தோனை முழுமுதல்தெய்வமென வழிபடுபவர்கள். ஒவ்வொரு நிலத்திலும் ஒவ்வொரு முறையில் விரிந்துகொண்டிருக்கிறது இவ்வழிபாடு. வடக்கே பசும்புல்வெளிகளின் தலைவனாக அவனை வழிபடுகிறார்கள். விரிந்த நிலத்தின் நடுவே அவன் ஆலயங்கள் அமைந்துள்ளன. அங்கே அவன் முப்பிரிப் பேரரவு மேல் அறிதுயில்கொண்டிருக்கிறான். ஆய்ச்சியரும் ஆயரும் நோன்பிருந்து தாமரைமலர்க் குடலைகளுடன் பாற்குடம் சுமந்துவந்து அவனுக்குப் படைத்து வழிபடுகிறார்கள். இங்கே திருவிடத்திலும் தமிழ்நிலத்திலும் மலைநின்ற நெடுமாலாக அவனை வணங்குகிறார்கள். அவனை வழிபட இசையே வழி என்று சொல்கிறார்கள்” என்றான் சண்டன்.

விண்ணடியார் அணுகும்தோறும் மரக்கிளைகளில் இருந்து பறவைகள் எழுந்து பறந்தன. தண்ணுமையின் ஒலி செவியை கூர்மையாக தொட்டது. “தாளமென்றால் இதுதான்… காலம்போலவே பிழையற்றது” என்றான் ஜைமினி. “ஆம், தென்னிலமே இசையாலும் தாளத்தாலும் ஆனது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாளக்கருவிகள் இங்குள்ளன. செல்லும்தோறும் ஊருக்கொரு முழவுவகையை நீங்கள் காணமுடியும். தொழில்சூழ்கையிலும் ஓய்வுகொள்கையிலும் வழிபடுகையிலும் பாடிக்கொண்டே இருப்பது அவர்களின் வழக்கம். அவர்களின் ஊர்களில் குழலோ யாழோ முழவோ ஒலிக்காத பொழுதென ஏதுமில்லை” என்றான் சண்டன்.

“அவர்கள் இசையை நூற்றிமூன்று பண்களென வகுத்துள்ளனர். அத்தனை பொழுதுகளுக்கும் உரிய பண்கள் அவர்களிடம் உள்ளன. முதுகுருகு முதுநாரை என நூற்றெட்டு இசைநூல்கள் அவர்களிடமுள்ளன. குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என ஏழு இசைநிலைகளை வகுத்துள்ளனர். மயிலகவு, பசுவின் குரல், ஆட்டின் சினைப்பு, அன்னத்தின் விளி, கூகைக்குமுறல், குதிரைக்கனைப்பு, யானைப்பிளிறல் என ஏழு உயிரொலிகளில் இருந்து எழுந்தவை இசைநிலைகள் என்பது அவர்களின் கூற்று” என்று சண்டன் சொன்னான்.

விண்ணடியார் உருவங்கள் தெரியத்தொடங்கின. அனைவருமே மஞ்சளாடை அணிந்து மஞ்சள் தலைப்பாகையுடன் விண்ணிறைவனின் காலடிகளை நெற்றியில் வரைந்துகொண்டு கைகளில் இசைக்கருவிகளை ஏந்தி மீட்டியபடியும் பாடி ஆடியபடியும் வந்தனர். அவர்கள் வணங்கியபடி நின்றிருக்க அருகணைந்த பின்னரும் அவர்களால் இசையிலிருந்து இறங்க முடியவில்லை. முதலில் வந்தவர் முழவை நிறுத்திவிட்டு வணங்கியபின்னரும் பிறர் இசையை தொடர்ந்தனர். மெல்ல இசை ஓய்ந்த பின்னரும் அவர்களின் உடல்களில் இசை ததும்பிக்கொண்டிருந்தது. சிவந்து கலங்கி புறநோக்கிழந்து பித்தர்விழிகள் போலிருந்தன கண்கள்.

அவர்களின் முதல்வர் கண்ணீர் வழிய கைகளைக் கூப்பியபடி மிகுவுணர்ச்சியுடன் “விண்ணவன் புகழ் இனிதாகுக! விண்ணவன் பெயர் இனிதாகுக! விண்ணவன் பொழுது இனிதாகுக!” என்றார். சண்டன் “சிவமேயாம்!” என்று மறுவாழ்த்து உரைத்தான். “வணங்குகிறேன், அந்தணர்களே. உங்களைக் கண்டது எங்கள் இன்பேறு” என்றார் முதல்விண்ணடியார். நால்வரும் அவரை முறைப்படி வணங்கினர். ஜைமினி “தாங்கள் எவரென்று நாங்கள் அறியலாமா?” என்றான். “நாங்கள் தென்னிலத்திலிருந்து வேங்கடம் செல்லும் விண்ணடியார். ஒவ்வொருவரும் ஒருவகை தொழில் செய்வோர். இவர்கள் இருவரும் உழவர்கள். அவர்கள் மூவரும் கம்மாளர். பிறிதொருவர் வணிகர். நான் அந்தணன்” என்றார் முதல் விண்ணடியார்.

“மழைவிழும் ஆறுமாதகாலம் எங்கள் ஊர்களில் தொழில்செய்து பொருளீட்டுவோம். அதன்பின் இல்லம் துறந்து விண்ணளந்தோன் நினைவொன்றே நெஞ்சில் நிறைந்திருக்க ஊர்கள்தோறும் செல்வோம். அங்கே எங்கள் இறைவனின் புகழ்பாடி அம்மக்கள் அளிக்கும் உணவை உண்டு சாவடிகளில் தங்கி மறுநாள் கிளம்புவோம். எவ்வூரிலும் ஒருநாள் இரவுக்குமேல் தங்குவதில்லை. தென்னிலத்தின் மாலிருஞ்சோலையில் தொடங்கி வடபுலத்து வேங்கடம் வரை வந்து திரும்பிச்செல்வோம். ஊர்துறந்து கிளம்பியபின் எங்களுக்குப் பெயர்கள் இல்லை. அனைவருமே விண்ணடியார் என்றே அழைக்கப்படுவோம்.”

“அனைவருமே இசையறிந்திருக்கிறீர்கள்” என்றான் சுமந்து. “இசையினூடாக மட்டுமே அவனை அறியமுடியுமென்பதனால் இசையை அறிந்தோம். நோக்குக இளையோரே, இதோ வசந்தம் எழுந்துள்ளது. இப்புவியின் பல்லாயிரம் கோடி மலர்களில் மணமென எழுந்து தேன் என ஊறிக்கொண்டிருப்பவன் அவனே. சற்று சித்தம் திறந்தால் இந்த மரத்தில் அந்தப் பாறையில் அப்பால் மலைகளில் அனைத்திலிருந்தும் அவன் மணமும் இனிமையும் எழுந்துகொண்டிருப்பதை உணர்வீர்கள். இனிது இப்புவி, ஏனென்றால் இது அவனை தன்னுள் கரந்திருக்கிறது. இவ்வினிமையில் கணமும் வீணாகாமல் திளைப்பதற்கென்றே மானுடப்பிறவியை அவன் அளித்துள்ளான்” என்றார் விண்ணடியார்.

“அறிக, கனிந்து தன் முட்டைகளை தேனிலேயே இடும் அன்னைத்தேனீ அவன். தேனில் வளர்ந்து தேனே சிறகாகி எழுந்து தேன் தேடி அலைந்து தேனை உணவாக்கி வாழ்ந்து மறைவதொன்றே நம் கடன்” என்றார் இன்னொரு விண்ணடியார். “ஆகவே, நாங்கள் அவன் புகழன்றி வேறேதும் பேசுவதில்லை. அவன் இசையன்றி ஏதும் பாடுவதில்லை. அவன் அழகை மட்டுமே எங்கள் விழிகள் நோக்கும். அவன் மணம் மட்டுமே எங்கள் மூக்குகள் அறியும். அவனைப்போல் இனிக்கும் அன்னம் மட்டுமே எங்கள் உணவு. எங்கள் குரல் தித்திப்பதை நீங்கள் உணர்வீர்கள், ஏனென்றால் எங்கள் உடல் தித்திக்கிறது. உள்ளம் திகட்டாது தித்திக்கிறது. இளையோரே, அவன் பள்ளிகொண்ட பாற்கடலே எங்கள் இறுதியினிமை” என்றார்.

சண்டன் “ஆம், அவ்வாறே ஆகுக!” என்றான். “நன்று சூழ்க!” என முதல் விண்ணடியார் வாழ்த்தினார். “இன்று காலையிலேயே எங்கள் நெஞ்சு மேலும் மேலுமென இனிக்கத் தொடங்கிவிட்டிருந்தது. கூசக்கூச இனிமை. என்னவனே, பெருமாளே, போதும் இது என உளத்துள் கூவினேன். ஏன் என எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். உங்களை நோக்கியதுமே அது ஏன் என அறிந்தேன். இதோ, விண்ணளந்தோன் புகழ் வளர்க்கும் ஐவரை கண்முன் காண்கிறேன். சாம்பல்பூசிய மாவிரதச்சைவர் அவர்களை அழைத்துவருவதும் அவன் ஆடலே” என்றார்.

இன்னொருவர் “ஆம், கண்டதுமே என் நெஞ்சு இனித்து விழிகள் நிறைந்துவிட்டன. நான்கு திசைகளென நால்வர். அந்நான்கையும் அணைக்கும் விண் என ஒருவர். இளஞ்சூதரே, தாங்கள் எங்கள் மால்வண்ணன் என கண்முன் எழுந்து இந்நாளை பெருகவைத்தீர். தங்கள் பாதங்களை சென்னிசூடும் நல்லூழ் வாய்த்தது எங்களுக்கு” என்றார். அவர்கள் எழுவரும் வந்து அந்தணர் நால்வரின் கால்களையும் தொட்டு வணங்கினர். உக்ரனின் கால்களை எடுத்து சென்னிசூடி விழிகளில் ஒற்றிக்கொண்டனர். “எந்தையே, எம்பெருமானே, விண்ணளந்தோனே, உன்சொல் பெருக நீயே முகம்கொண்டெழுகிறாய் போலும்” என்றார் ஒருவர்.

அவர்களின் விழிநீரும் விம்மலும் நால்வரையும் வியப்புகொள்ளச் செய்தன. ஒருவரை ஒருவர் விழியசைவுகளால் நோக்கிக்கொண்டனர். அவர்கள் வணங்கிக்கொண்டிருக்கையிலேயே முதல்வர் முழவை மீட்டி “ஒரு கால் தூக்கி உலகேழும் அளந்தவனே, திருமால் என தென்மலை மீது எழுந்தவனே, கருமாமணியே, கன்னலின் சுவையே, கரியோனே, பெருமாளே, பழவடியார் சொல்லில் இனிப்பவனே” என கூவ இன்னொரு விண்ணடியார் “பைம்பால் ஆழி அலை நடுவே அமைந்தவனே, ஐம்பால் இனமும் அடிபணியும் அருளோனே” என ஏற்றுப்பாடினார். அவர்கள் அக்கணமே பிறிதுருக்கொண்டவர்களென இசைக்குள் மூழ்கினர். இசை அவர்களின் அசைவென்றாகியது. விழியறியாத நீரலை என அவர்களை எற்றி அலைக்கழித்து எடுத்துச்சென்றது.

“விந்தையானவர்கள்” என்று உக்ரன் சொன்னான். “பனித்துளிகள் சொட்டி நிற்கும் காலைச்செடி போலிருக்கிறார்கள்” என்றான் ஜைமினி. பிறர் ஒன்றும் சொல்லாமல் தங்களுக்குள் மூழ்கியவர்களாக நடந்துவந்தனர். ஜைமினி அவர்களைப்பற்றி பேசவிரும்பினான். “அவர்கள் எதைக் கண்டார்கள்? நம்மில் எழும் எந்தச் சொற்பெருக்கை அவர்கள் சொல்கிறார்கள்?” என்றான். உக்ரன் “நீங்கள் இயற்றப்போகும் நூல்களை” என்றான். “நானா?” என்றான் ஜைமினி. ஆனால் அவன் முகம் மலர்ந்துவிட்டிருந்தது. “ஆம், நீங்கள் நால்வருமே நூல்களை எழுதுவீர்கள் என்றார்கள் அவர்கள்” என்றான் உக்ரன்.

“சரி, அப்படியென்றால் நீர்?” என்று ஜைமினி கேட்டான். “நான் நான்கையும் ஒன்றாக்குவேன் என்றார்கள்” என்று உக்ரன் சொன்னான். “நான் அனைத்தையும் பாடலாக ஆக்குவேன். பாடியபடி…” காலை உதைத்து எம்பி கைகளை விரித்து “விண்ணில் பறப்பேன்… பறவைபோல பறப்பேன்” என்றான். நிலையழிந்து ஜைமினி தள்ளாடி நின்று சிரித்துக்கொண்டு “விழப்போகிறீர்” என்றான். “நான் விழமாட்டேன்… நான் இப்போது பறந்துகொண்டிருக்கிறேன்… வண்டுபோல. கந்தர்வர்களின் இசையை கேட்கிறேன்” என்று உக்ரன் சொன்னான்.

பிறமூவரும் பேசப்போவதில்லை என்று தெரிந்ததும் அவர்களுக்குள்ளேயே பேசத்தொடங்கினர். “நீர் நான் எழுதுவதை எப்படி பாடுவீர்?” என்றான் ஜைமினி. “முழவு…” என்றபின் உக்ரன் “என் முழவு… என் முழவு எங்கே?” என்றான். “தொடங்கிவிட்டீரா? அதை பிறகு எடுத்துத் தருகிறேன்.” உக்ரன் “என் முழவு… என் முழவு” என்று சிணுங்கியபடி துள்ளினான். “சரியான…” என்று சலித்துக்கொண்ட ஜைமினி “இரும்…” என அவனை இறக்கி தன் மூட்டையைப் பிரித்து முழவை எடுத்து அவனிடம் அளித்தான். “என் அரணிக்கட்டை…” என்று உக்ரன் சுட்டிக்காட்டினான். “அது எதற்கு உமக்கு?” என்றான் ஜைமினி. “எனக்கு வேண்டும் அது.”

ஜைமினி அதை எடுத்துத்தர ஒரு கையில் முழவும் இன்னொரு கையில் அரணிக்கட்டையுமாக அவன் “என்னை தூக்கு” என்றான். மூட்டையைக் கட்டியபடி ஜைமினி “இரும்” என்றான். “நான் கூட்டிச்செல்லமாட்டேன்” என்றான் உக்ரன். “விட்டுவிட்டுப்போய்விடுவேன்.” சண்டன் திரும்பிப்பார்த்தான். நோக்கு எங்கோ உட்திரும்பியிருக்க அவை சிலைவிழிகள் போலிருந்தன. “அவர் கண்கள் திரும்பியிருக்கின்றன…” என்றான் உக்ரன். “ஓவியத்துணியின் பின்னால் நின்று பார்ப்பதுபோல தெரிகிறார்.” ஜைமினி சிரித்தபடி திரும்பிப்பார்த்தான். சண்டன் தாடியை நீவியபடி முன்னால் சென்றான்.

ஜைமினி உக்ரனைத் தூக்கிக்கொண்டு உடன்சென்றான். அன்று பகலில் அவர்கள் உணவுண்ணவில்லை. அந்தியில் அவர்கள் சென்றிறங்கிய மலைச்சரிவில் பாதை இரண்டாகப் பிரிந்தது. சண்டன் நின்று “அந்தணர்களே, நான் இவ்வழியே செல்கிறேன். இது உங்களுக்குரியதல்ல” என்றான். ஜைமினி திகைப்புடன் “ஏன்?” ஏன்றான். “நான் செல்லுமிடத்திற்கு கரியானை என்று தென்மொழியில் பெயர். செம்மொழியில் காளஹஸ்தி. அங்கே சுவர்ணமுகி நதிக்கரையில் மலைக்குகைக்குள் நிறுவப்பட்ட சிவக்குறியை வழிபட்டு பிறவிமுழுமையை அடைய நான் சென்றுகொண்டிருக்கிறேன். நீங்கள் வந்தடையவேண்டிய இடம் அதுவல்ல.”

ஜைமினி ஏதோ சொல்ல வாயெடுக்க வைசம்பாயனன் விழிகளால் வேண்டாம் என்றான். “நீங்கள் செல்லுமிடமும் நோக்கமும் எனக்கு நன்றெனத் தெரிகிறது. நான் உங்களை இதுவரை அழைத்துவந்ததும் ஏன் என அவர்களின் சொல்வழி தெரிந்துகொண்டேன். நன்று, அப்பணி நிறைவுற்றது. நலம் சூழ்க!” என்றான் சண்டன். பின்னர் அவர்களிடம் விடைபெறாமல் நடந்து மலைச்சரிவில் இறங்கிச்சென்றான். அவர்கள் அவன் விட்டிலென தாவிச்செல்வதை நோக்கி நின்றனர்.

KIRATHAM_EPI_83

கீழே குறுங்காட்டுக்குள் முழவோசை கேட்டது. இருண்டகாடு பனித்துத் துளித்ததுபோல பிச்சாண்டவர் ஒருவர் கையில் முப்பிரி வேலுடன் சடைமகுடம் சூடி நீறணிந்த வெறும்மேனியுடன் எழுந்து வந்தார். தொடர்ந்து காளாமுகர்களின் ஒரு குழு நடனமிட்டபடி தோன்றி அப்பால் வளைந்து சென்றது. அவர்களுடன் சென்ற முதியபாணன் ஒருவன் முழவை மீட்டியபடி பாடினான். சண்டன் இயல்பாகச் சென்று அவர்களுடன் சேர்ந்துகொண்டான். அவர்கள் புதர்களுக்குள் மறைய பாடல் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது.

எரிமருள் காந்தள் செம்மலர் சூடி
எரிசிதைச் சாரம் மேனியிற் பொலிய
கரியுரி இருட்தோல் கைக்கோள் ஆக
விரிசடை அண்ணல் ஆடிய கொட்டி
நிலைபிறழ் வடவை நிமிர்ந்தெழு சூலொடு
கலைஇய வேங்கை கடுந்துடி உடுக்கை.

[ 40 ]

உக்ரனுடன் அவர்கள் இருளெழுந்த பின்னர்தான் அருகிலிருந்த சிற்றூருக்குச் சென்று சேர்ந்தனர். ஊர்வாயிலில் தொலைபயணிகள் அறிந்து வரும்பொருட்டு உயர்ந்த கற்றூண் மேல் அகல் விளக்கேற்றப்பட்டிருந்தது. அவர்கள் அணுகியதும் நாய்க்குரைப்போசை கேட்டு ஊர்த்தலைவர் அகல்சுடருடன் வந்து வணங்கினார். “வருக அந்தணர்களே, தங்கள் கால்களால் எங்கள் ஊர் தூய்மைகொண்டது” என முகமன் உரைத்தார். அவர்களை கால்கழுவச்செய்து ஊருக்குள் அழைத்துச்சென்றார். அவர்களுக்குரிய மாற்றாடையும் குடிநீருமாக அவர் துணைவி அருகே வந்து நின்றாள். இருவரும் தொழுது அழைத்துச்சென்றனர்.

அவர்களுக்குரிய குடிலுக்குச் சென்றதும் ஜைமினி “தமிழ்நிலத்தில்தான் துணைவியும் வந்து விருந்தினரை வரவேற்கிறார்” என்றான். சுமந்து “ஆம், அதை நான் பயின்றறிந்துள்ளேன்” என்றான். அவர்கள் அருகிருந்த சுனையில் நீராடி வந்ததும் உணவு வெம்மையுடன் சித்தமாக இருந்தது. ஊர்த்தலைவரும் ஊரார் மூவரும் தங்கள் துணைவியருடன் வந்து அவர்களுக்கு அன்னம் பரிமாறினர். “துயின்றெழுக, அந்தணர்களே! நாளை புலரியில் எங்கள் ஊர்ச்சிறார்களுக்கு சொல்லளிக்கவேண்டும் தாங்கள்” என்றார் ஊர்த்தலைவர். அவர்கள் சென்றதும் ஐவரும் குடிலின் முன் அமர்ந்துகொண்டனர்.

வானில் விண்மீன்கள் இறைந்து கிடந்தன. ஜைமினி அவற்றை நோக்கிக்கொண்டிருந்தான். சுமந்து “விண்மீன்களைக் கொண்டே மண்ணில் என்ன நிகழவிருக்கிறதென்று சொல்லும் கலை ஒன்றுண்டு வடமேற்கே” என்றான். “விண் ஒரு பெருநூல். அனைத்தும் எழுதப்பட்டுள்ளது அதில் என அந்தக் கலையறிந்த நிமித்திகர் சொன்னார்.” வைசம்பாயனன் “விண்ணுக்கு நிகரான ஒரு காவியத்தை மண்ணில் எழுதவேண்டும் ஒருவர்” என்றான்.

“எந்தக் காவியமும் ஒருவரால் எழுதப்படுவதில்லை. ஆறுபோல அது ஊறித்தொடங்கி பெருகி துணைகளை இணைத்துக்கொண்டு செல்கிறது” என்றான் பைலன். ஜைமினியின் மடியில் ஒரு கையில் முழவும் மறுகையில் அரணிக்கட்டையுமாக உக்ரன் துயில்கொள்ளத் தொடங்கினான். “மிக மெலிந்திருக்கிறார்” என்று அவன் கையையும் தோளையும் வருடியபடி சுமந்து சொன்னான். “இனி இவரே நம் வழிகாட்டி என்றார் சண்டர்” என்றான் ஜைமினி குனிந்து உக்ரனின் தலையை வருடியபடி. “இவர் நீரல்ல, நெருப்பு. எதையும் இணைத்துக்கொள்வதில்லை, உண்டு தான் தழலாகிறார்.”

குழந்தை ஒன்று சிணுங்கியது. அன்னை “லோ லோ லோ” என மென்மையாக பாடினாள். இரவுப்பறவை ஒன்றின் குரலென அது ஒலித்தது. குழந்தை மேலும் சிணுங்கிவிட்டு அழத்தொடங்கியது. அவள் அதை இழுத்து தன் முலைக்காம்பை வாயில் செருகினாள். குழந்தை வாய் அதுங்கும் ஓசை. பின்னர் எழுந்த மிக இனிய ஓசையின்மை. அவள் ம்ம் என வண்டுபோல ரீங்கரித்தபின் பாடலானாள்.

“இவன் என் மைந்தன்! அரசியே கேள், இவன் வில்விஜயன்
கார்த்தவீரியனுக்கு நிகரானவன், சிவனுக்கு அணுக்கமானவன்
இந்திரவஜ்ரத்தை படைக்கலமாகக்கொண்டவன்
அதிதிக்கு விஷ்ணு எப்படி மகிழ்வளித்தானோ
அப்படி உனை நிறைக்கப்போகும் இளையவன் இவன்
குந்தியே கேள் இவன் பாண்டவரில் பெருவீரன்”

“மகாவியாசரின் வரிகள். அவருடைய அர்ஜுனோதயம் என்னும் நீள்பாடல்” என்று ஜைமினி சொன்னான். உக்ரன் எழுந்து அமர்ந்து மழுங்கலாக “அவர் பாடினார்!” என்றான். “யார்?” என்றான் ஜைமினி. “அவர்… நீண்ட தாடி… அன்னையைப்போன்ற கண்கள். முதியவர்…” சுமந்து “கனவு கண்டீரா?” என்றான்.

“இவன் வெல்வான் எங்கும் பணியமாட்டான்
எதையும் கொள்ளமாட்டான் எப்போதும் தனித்திருப்பான்
மெய்யறிந்திருப்பான் மெய்கடந்து முழுமையடைவான்
ஃபால்குனன் பார்த்தன் விஜயன் பாரதன் ஜிஷ்ணு
தனஞ்சயன் கிருஷ்ணன் ஸவ்யசாசி கிரீடி”

என அப்பெண்ணின் குரல் தொடர்ந்து கேட்டது. “அவர்தான் பாடுகிறார்” என்று உக்ரன் சொன்னான். அரையிருளில் அவன் புன்னகை வெண்மையாகத் தெரிந்தது. “அழகானவர். என்னை நோக்கி சிரித்தார்.” வைசம்பாயனன் “என்ன சொன்னார்?” என்றான். “என்னை அவர் அழைத்தார்… வா என்று கைகாட்டி… இதோ இப்படி” என்றான் உக்ரன்.

அவன் விழிகள் மீண்டும் சரிந்தன. படுத்துக்கொண்டு புன்னகையில் கன்னங்களில் குழி இருக்க அப்படியே நீள்மூச்சு எழ துயில்கொள்ளலானான். “ஓடி வருவேன்” என்றான். பின்னர் மெல்ல அசைந்து வாயை சப்புக்கொட்டி “என்னிடம் அரணிக்கட்டை இருக்கிறதே, உங்களிடம் இருக்கிறதா?” என்றான். வைசம்பாயனன் அருகே வந்து “மகாசூதரே” என்றான். “ம்?” என்றான் உக்ரன். “எப்படி செல்வீர்கள் அங்கே?” என்றான் வைசம்பாயனன். “ம்?” என்றான் அவன். “எப்படி அங்கே செல்வீர்கள்?” அவன் சொல்லாமல் மூச்சுவிட்டுக்கொண்டிருந்தான். “சொல்லுங்கள் மகாசூதரே, எப்படி அங்கே செல்வது?”

உக்ரன் “பாட்டு வழியாக” என்றான். “எப்படி?” என்றான் வைசம்பாயனன். உக்ரன் துயில்மூச்சு விட்டுக்கொண்டிருந்தான். வைசம்பாயனன் “அனைத்தும் நிமித்தங்களாக ஒலிக்கின்றன, ஜைமின்யரே. நாம் ஐவருமே ஒருவரிடம்தான் செல்லப்போகிறோம். அனல்பெருந்தூணை அறியச்சென்ற தெய்வங்களைப்போல” என்றான். ஜைமினி “ஆம்” என்றான். “மகாநாராயணவேதம் அவர் சொற்களில் முழுமைகொள்ளப்போகிறது” என்றான் பைலன். ஜைமினி உள எழுச்சியுடன் பெருமூச்சுவிட்டான்.

குழந்தை துயில்கொண்டுவிட்டதுபோலும், அந்தப் பெண் பாட்டை முடித்துவிட்டாள். உடலசைத்துப் படுக்கும்போது அவள் மூச்சுவிடும் ஒலி மிக அருகே என கேட்டது. “மாவிண்ணவச் சொல் கோக்கும் முனிவரே, மண்ணளக்கும் வியாசரே, தென்குமரி மகேந்திரமலையமர்ந்தவரே காப்பு” என்று சொல்லி விரல்சொடுக்கி கோட்டுவாய் இட்டாள். திரும்பிப்படுக்கும் ஒலியும் மீண்டும் ஒரு கோட்டுவாயும் கேட்டன. “ஓம் ஓம் ஓம்” என்று அவள் சொன்னாள்.

“அன்னை வாக்கு” என்று ஜைமினி கைகூப்பினான். சுமந்துவும் பைலனும் வைசம்பாயனனும் கைகூப்பி “ஓம் ஓம் ஓம்” என்றனர்.

[கிராதம் முழுமை]

வெண்முரசு விவாதங்கள்

முந்தைய கட்டுரைநடைதிறப்பு
அடுத்த கட்டுரைபணமில்லா பொருளியல் -எதிர்வினைகள்