’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 81

[ 35 ]

அர்ஜுனன் கைலையின் மண்ணில் எடுத்த அந்தக் கூழாங்கல்லை நோக்கிக்கொண்டிருந்தான். அதன் பொருளென்ன என்று அவனுக்குப் புரியவில்லை. ஆனால் அவர்கள் அதை கேலிக்கென சொல்லவில்லை என்பதை அவர்களின் முகக்குறி காட்டியது. கொம்பன் அவனிடம் “நீங்கள் அடுகலை கற்றவரா?” என்றான். “உங்கள் அடுமுறை நானறியாதது” என்றான் அர்ஜுனன். “எதுவானாலும் அடுமுறை நன்றே. அட்ட உணவு அமுது” என்றான் கொம்பன். அர்ஜுனன் “அடாத உணவு?” என்றான். அவன் சற்று எண்ணிநோக்கி “அதுவும் அமுதே” என்றான்.

எண்ணியிரா கணத்தில் நூறு சிறுவர்கள் மன்றுக்குள் நுழைந்தனர்.  பெருங்கூச்சலுடன் மன்றை நிறைத்து சுழன்று கைவீசி துள்ளி விரிந்தோடினர். ஒரு சிறுவன் சடையனின் தோள்மேல் தாவி அப்பால் விழுந்து எழுந்து ஓடினான். ஒருவனின் தோளில் குமரன் இருப்பதை அர்ஜுனன் கண்டான். அவன் “ஓடு ஓடு ஓடு” என துள்ளிக்கொண்டிருந்தான். “இச்சிறுவர்களை வெறிகொள்ளச் செய்பவன் அவனே” என்றார் எரியன். “ஆம், அவனைச் சுற்றியே எப்போதும் இவர்கள் அனைவரும் இருக்கிறார்கள்” என்றார் பேயன்.

“என் இளையோன்” என்றான் கொம்பன் பெருமிதத்துடன். “நானும் இதைப்போல அவனை தூக்கிக் கொள்வேன்.” சடையன் “அவர்களுடன் சென்று விளையாடுவதுதானே?” என்றார். “ஏன்?” என்றான் அவன் புரியாதவனாக. “சிறுவர் என்றால் விளையாடவேண்டுமே?” என்றார் பேயன். “ஏன்?” என்று அவன் மீண்டும் கேட்டான். “விளையாடாவிட்டால் எப்படி உடல் உறுதிகொள்ளும்?” என்று பேயன் கேட்டார். “நான் நிறைய உண்பேன். என் உடல் உறுதியாகும்” என்றான் கொம்பன். “நன்று, அவனுக்குரியதை அவன் செய்கிறான்” என்று எரியன் நகைத்தார்.

இல்லத்திலிருந்து காளன் வருவதை அர்ஜுனன் கண்டான். அவனுக்குப் பின்னால் காளி ஒரு பெரிய மரக்குடைவுக் கொப்பரையுடன் வந்தாள். கொம்பன் முகம் மலர்ந்து “அது இன்கடுங்கள். இங்குள்ள நெடும்பனைகளில் ஊறிய தேன்” என்றான். “பனைகள் எங்குள்ளன?” என்றான் அர்ஜுனன். “அங்கே மேற்குச்சரிவில். அங்குதான் வெம்மையும் மிகுதி. மழையும் குறைவு” என்றபின் அவன் “இன்கடுங்கள்ளில் மூதாதையர் பாடல்கள் உறைகின்றன என்று எந்தை சொன்னார்” என்றான். “இளையோர் கள்ளருந்தலாமா?” என்றான் அர்ஜுனன். “இளையோர் எதையும் அருந்தலாம்” என இயல்பாக சொல்லிவிட்டு அவன் தந்தையை நோக்கி ஆவலுடன் சென்றான்.

காளன் சிரித்தபடியே அணுகினான். கொம்பன் அன்னையிடமிருந்து கொப்பரையை வாங்க முயல அவள் அவனை வெருட்டி விலக்கியபடி வந்தாள். காளன் அர்ஜுனன் அருகே  வந்ததும் “இவர்கள் காலகுடியின் மூத்தவர்கள். இவர்களின் அருள் பெற்றுவிட்டாயா?” என்றான். “ஆம்” என்றான் அர்ஜுனன். அவன் கையிலிருந்த கூழாங்கல்லை நோக்கியபின் சிரித்து “பாசுபதம் அளித்துவிட்டார்களா?” என்றான் காளன். அர்ஜுனன் மெல்ல புன்னகைத்து “ஆம், ஆனால் அது இத்தனை எளிதென்று நான் அறிந்திருக்கவில்லை” என்றான்.

“அரியவை, அடைதற்கரியவை என்பது எளியமானுடரின் எண்ணம்” என்றான் காளன். “ஆனால் மெய்நோக்கினால் அரியதொன்றை உணர்ந்த ஒருவன் அதை சென்றடையாமல் ஓய்வதில்லை. அவ்வுணர்வை அடைவதே அரிது” என்றபடி அங்கிருந்த உருளைக்கல் ஒன்றில் அமர்ந்தான். காளி அருகே வந்து கொப்பரையை நடுவே வைத்து அதிலிருந்து மூங்கில் குவளையில் நுரையெழும் கள்ளை ஊற்றி அர்ஜுனனுக்கு அளித்தாள். “அவர் மிகுதியாக அருந்தினால் நோயுறுவார்” என்றான் கொம்பன். “வாயை மூடு… விலகிச்செல்” என்றாள் காளி.

கள் இனிப்பும் புளிப்பும் கலந்த மணத்துடன் இருந்தது. “அருந்துக!” என்றாள் காளி. அர்ஜுனன் பிறரும் குவளைகளை வாங்குவதற்காக காத்தான்.  “தந்தை இரவில்தானே அருந்துவார்?” என்றான் கொம்பன். “அப்பால் செல்லும்படி சொன்னேனா இல்லையா?” என்று அவள் கையை ஓங்க அவன் அதை பொருட்படுத்தவே இல்லை. காளன் கையில் குவளையை வாங்கியதுமே குடித்துவிட்டு புறங்கையால் வாயை துடைத்துக்கொண்டு மீண்டும் நீட்டினான். “போதும் போதும்” என்று கொம்பன் சொன்னான்.

காளன் இன்னொரு குவளையை வாங்கி அதே விரைவில் மாந்திவிட்டு “நன்கள்… பனைவேர் அறிந்த அனல் ஊறியிருக்கிறது அதில்” என்றான். முதியவர்கள் குவளைகளை பெற்றுக்கொண்டதும் “முதியவர்களுக்கு ஒரு குவளைக்குமேல் அளிக்கலாகாது” என்றான் கொம்பன். “சும்மா இருக்கப்போகிறாயா இல்லையா?” என்றாள் காளி. அர்ஜுனன் அந்தக் கள்ளின் துவர்ப்பை முதலிலும் புளிப்பை பிறகும் உணர்ந்தான். உடல் உலுக்கிக்கொண்டது. பின் அடிநா இனிப்பு கொண்டது. காளன் மீண்டுமொரு குவளை கள் பெற்றுக்கொண்டான். “போதும், தந்தையே” என்றான் கொம்பன்.

“இவன் குடிக்கவிடமாட்டான்” என்றாள் காளி. “போதும், அவனே அருந்தட்டும்” என்றான் காளன். அச்சொல் முடிவதற்குள் கொம்பன் கொப்பரையை தூக்கிக்கொண்டு அப்பால் சென்றான். “அதை முழுக்க அவர் அருந்துவாரா?” என்றான் அர்ஜுனன் வியப்புடன். “அருந்துவான். ஆனால் மயக்கு கொள்வதில்லை” என்றாள் காளி திரும்பி நோக்கி சிரித்தபடி. “ஏன்?” என்றான் அர்ஜுனன். “மயக்கெழுந்தால் உணவருந்த முடியாதே” என்றாள். அர்ஜுனன் புன்னகையுடன் கையிலிருந்த குவளையை உருட்டியபடி முதியவர்களை பார்த்தான். அவர்கள் குவளைகளை கைகளில் வைத்தபடி பழுத்த விழிகளில் சிரிப்புடன் கொம்பனை பார்த்தனர்.

சடையன் “மீண்டும் மீண்டும் இவர்கள் இங்கு பிறந்தபடியே இருக்கிறார்கள். அழகனும் ஆனையனும்” என்றார். “இங்குள்ளவர்கள் இறப்பதே இல்லை” என்றார் எரியன். “தளிர்வந்து இலையாகி பழுத்துச் சருகாகி உதிர மரம் மாறா இளமையுடன் நின்றிருக்கிறது.” காளன் “காளி, பாசுபதம் அளிக்கப்பட்டுவிட்டது” என்றான். காளி “எப்போது?” என்றாள். அர்ஜுனன் “சற்றுமுன்” என்று நாணச்சிரிப்புடன் சொன்னான். “பாசுபதம் பெற்றவர்கள் மாகாலர்கள் என்றழைக்கப்படுவார்கள். இனி நீயும் காலனே” என்றான் காளன்.

உதட்டைச் சுழித்து நொடித்தபடி “இதெல்லாம் வீண்பேச்சு. அது எதற்கு உனக்கு? வீசிவிட்டு உன் அன்னையிடம் திரும்பு” என்றாள் காளி. அர்ஜுனன் பணிவுடன் “அன்னையே, நான் இதற்கென்றே அருந்தவம் இயற்றி இங்கே வந்தேன்” என்றான். அவள் முகவாயைத் தூக்கி “வந்து எதை அடைந்தாய்? இச்சிறுகல்லையா?” என்றாள். “இதைக்கொண்டு என்ன செய்யப்போகிறாய்?” அர்ஜுனன் அவள் விழிகளை நோக்கினான். “அங்கே உங்களுக்கென வேதங்கள் உள்ளனவே! ஏன் வேதங்களிலிருந்து வேதங்களென முளைக்கச் செய்கிறீர்கள்? ஏன் வேதவேர் தேடி ஆழ்ந்திறங்குகிறீர்கள்? அடைந்த வேதத்தை முற்றறிந்துவிட்டீர்களா என்ன?”

“ஏன் தொடுவானில் ஏதோ கனிந்திருக்கிறதென்று எண்ணி சென்றுகொண்டே இருக்கிறீர்கள்? இருந்த இடத்தில் நிறைந்து கனிவதற்கு உங்களைத் தடுப்பது எது?” என்று அவள் கேட்டாள். அவன் புன்னகையுடன் “தெரியவில்லை” என்றான். “ஏன் உன்குலத்துப் பெண்டிர் காடேகி தவமியற்றி கொடைகொள்ளவில்லை?” என்று கேட்டாள். “அவர்கள் அமர்ந்து முழுமைகொள்ள நீங்கள் மட்டும் ஏன் அலைந்து சிதைவுறுகிறீர்கள்?”

அர்ஜுனன் கைகூப்பி “நான் இதை எண்ணிப்பார்த்ததே இல்லை, அன்னையே” என்றான். காளன் எழுந்து அர்ஜுனனின் தோளைப்பற்றித் திருப்பி “நான் சொல்கிறேன், ஏனென்றால் நீயும் நானும் இங்குள்ள ஆண்கள் அனைவரும் இவர்களின் கருவறையிலிருந்து கிளம்பியிருக்கிறோம். இவர்களிடமில்லாத ஒன்று நம்மில் எழ வாய்ப்பில்லை. மண்ணிலில்லாதது மரத்தில் மணக்காது…” என்றான்.

திரும்பி கொம்பனைச் சுட்டி அவன் சொன்னான் “இதோ இவனுடைய தீராப்பசியும் இளையவனின் இனியஅழகும் இரண்டும் இவளுக்குள் இருப்பதை நான் கண்டிருக்கிறேன். இளையவனே, நீ உன் அன்னையின் அகம் தேடித்தவிக்கும் தொலைதிசைகளிலேயே அலைந்துகொண்டிருக்கிறாய்.” காளி சினத்துடன் “எதற்கும் இறுதியில் பெண்ணைப் பழி சொல்வதே வழக்கமாகக் கொள்க… வேறென்ன தெரியும் உங்களுக்கு?” என்றாள். “நீங்கள்தானே பெற்றீர்கள்?” என்றான் காளன். “நாங்கள் என்ன வெறுமனே பெற்றோமா? நீங்கள்தானே தொடக்கம்?” என்று அவள் கேட்டாள்.

காளன் எழுந்து கைகளைத் தட்டியபடி “இப்போது சொல்லிவிட்டாய் அல்லவா? நான்தான் தொடக்கம்… போதுமா? முடிந்துவிட்டதா?” என்றான். நடனமிட்டபடி “சொல்! தோற்றாய் என்று சொல்…” என்றான். அவள் முகம்சீற “சொல்மாற்றவேண்டாம். அது வேறு பேச்சு” என்று கூவினாள். “எல்லாம் ஒரே பேச்சுதான்… சொல்வதெல்லாம் இங்குதான் காற்றில் இருக்கும். அந்தக் காற்றுதான் இதுவும்” என்றான் காளன். “அப்படியா? சொல் மாறாதா? அப்படியென்றால் நேற்று பேசிய பேச்சு ஒன்றை சொல்கிறேன்” என்று அவள் கைநீட்டி கூவ “கையை நீட்டிப்பேசாதே…” என்று அவன் கூவினான்.

இருவர் நடுவே இயல்பாக புகுந்து இப்பால் வந்த கொம்பன் “கடுங்கள்ளின் அடிமண்டி சிறந்தது…” என்றான். “எங்கே?” என்றான் அர்ஜுனன். “முழுக்க முடிந்துவிட்டது. ஆனால் குடிலுக்குள் மேலே ஓர் உறியில் இருக்கிறது கள். நாம் சென்றால் எடுத்து குடிக்கலாம்” என்றான். சடையன் “அதாவது அவன் முழுக்கொப்பரையையும் குடித்ததுபோக அடிமண்டியை உனக்குத் தருவான், இளையோனே” என்றார். காளி சொல் நிறுத்தி திரும்பி “அங்கே என்ன செய்கிறாய்? போய் விளையாடு” என்றாள். “பன்றி ஆறிக்கொண்டிருக்கிறது” என்றான் கொம்பன். “அதை சுடும்போது அழைப்போம். சுடுவதற்குள் தின்றாகவேண்டுமா என்ன? போ” என்றாள். அவன் தயங்கியபடி நின்று பன்றியை காதலுடன் நோக்கிவிட்டு அப்பால் சென்றான்.

அவள் அர்ஜுனனிடம் “இதோ பார் இளையோனே, இந்த பாசுபதமெல்லாம் உனக்கெதற்கு? எளியவனாக இரு. ஒவ்வொரு உயிருக்கும் அளிக்கவேண்டியதென்ன என்று உலகாளும் அன்னைக்குத் தெரியும்… போ!” என்றாள். “நில், பெண்சொல்லைக் கேட்டால் அடுக்களைக்குள் இருக்கவேண்டியிருக்கும். பெற்றுப் புறந்தருவார்கள். எஞ்சிய வாழ்நாளெல்லாம் திரும்ப கருவறைக்குள் இழுக்க முயல்வார்கள்” என்றான் காளன். “நான் உங்களிடம் பேசவில்லை. பித்தர்களிடம் பேச நான் பிச்சி இல்லை” என்று காளி சொன்னாள்.

“நீதான் பிச்சி, பேய்ச்சி” என்று காளன் கூச்சலிட்டபடி அவளை நோக்கி சென்றான். அமர்ந்திருந்த சடையன் ஒரு கல்லை எடுத்து காளன்மேல் எறிந்து “நில், இதோ இவரிடம் சொல், பாசுபதம் என்றால் என்ன என்று” என்றார். “பாசுபதம் என்றால்…” என அவன் சொல்லெடுக்க முனைந்து சொல் தகையாமல் குழம்பி மூவரையும் நோக்கிவிட்டு “அது பெரிய ஒரு…” என்றபின் “அதாவது அது பாசுபதம் என்னும்…” என்றபின் காளியிடம் “என்னடி அது?” என்றான். “எனக்குத் தெரியாது” என்று அவள் சொன்னாள். “என் கண் அல்லவா? என் கரியோள் அல்லவா? நான் உனக்கு நீ கேட்ட வெள்ளைச் செண்பகப்பூவை நாளை கொண்டுவந்து தருவேன்” என்றான் காளன்.

“எனக்குத் தெரியாதென்று சொன்னேனே?” என்றாள் காளி. “நான் உனக்கு எரிமுகடேறிச்சென்று அருமணி கொண்டுவந்து தருவேன். சொல்!” என்றான் காளன். அவள் கண்களில் சிரிப்புடன் சிறிய உதடுகளை அழுத்தியபடி “என்னவென்று தெரியாமல்தான் இத்தனை தொலைவுக்கு அழைத்துவந்தீரா?” என்றாள். “நான் எங்கே அழைத்துவந்தேன்? அவனை நீதான் வரச்சொன்னாய்.” அவள் சிரித்துவிட்டாள். “அப்படியென்றால் எதை எண்ணி தலைதொட்டு வாழ்த்தினீர்?” அவன் “அது எல்லோரும் வாழ்த்துவதுதானே? மேலும் நான் முதியவன்” என்றான்.

“முதியவனா? நேற்று அப்படி சொன்னதற்குத்தானே முப்பிரிவேலை எடுக்கப்போனீர்?” என்று அவள் சொல்ல “அதை பிறகு பேசுவோம். பாசுபதம் என்றால் என்ன? சொல், அதை எப்படி சொல்வது?” என்றான். அவள் “அந்த கரிக்குழாயை எடுத்து புகையை இழுப்பதுதானே? வந்துகொட்டுமே சொல்லும் ஆட்டமும்… எனக்கு வேலை இருக்கிறது” என எழுந்தாள். அவன் பாய்ந்து அவள் கையைப்பிடித்து “சொல்லிவிட்டுச் செல்… என் செல்லம் அல்லவா?” என்றான்.

“என்னிடம் இனிமேல் சண்டை போடக்கூடாது” என்றாள். “இல்லை, மெய்யாகவே இல்லை” என்றான். “நான் சொல்வதை எல்லாம் ஒப்புக்கொள்ளவேண்டும்” என அவள் கையை நீட்டினாள். அதைப்பற்றி அவன் “நான் என்றைக்கு மீறினேன்?” என்றான். “இப்போது சொல்லுங்கள், இன்னும் சற்றுநேரத்தில் அங்கே வந்து மல்லுக்கு நிற்பீர்… சிறியவனை வேறு காணவில்லை. எந்த மரக்கிளையில் இருக்கிறான் என்றே தெரியவில்லை.” அவன் அவள் தாடையைப்பிடித்து “எத்தனைமுறை கேட்டுவிட்டேன்! சொல்லடி!” என்றான்.

அவள் “இளையவனே, ஓர் அனல்கொழுந்தின் முடியை காணமுடியுமா?” என்றாள். அர்ஜுனன் அவ்வினாவால் ஒரு கணம் திகைத்து பின் “கண்ணுக்குத் தெரியும் நுனி…” என்றபின் “ஆம்! அது முடிவிலாது சென்றுகொண்டிருக்கிறது. அது வானமேயாகிறது” என்றான். “அதன் அடியை?” என்றாள். அவன் தலையசைத்து “இன்மையிலிருந்து எழுந்து ஒளியென்றாவதையே காணமுடியும். அது விறகில் அந்த மரம்நின்ற மண்ணில் மண்ணென்றான பொருளில் இருக்கிறது. முடிவிலாதது” என்றான்.

“அனலின் அடிமுடியை காண்பதெப்படி?” என்று அவள் கேட்டாள். “எப்படி?” என்று காளன் அவளிடம் ஆவலாக கேட்டான். “ஆமாம், நீங்களே கேளுங்கள்! உங்களிடம் கற்கவந்த இவன் முன்னால் வைத்தே கேட்டு இழிவுகொள்ளும்” என கைநீட்டி காளனை திட்டியபின் “இளையோனே, அனலை அறிவதற்கு ஒரே வழி அனலென்றாவதே. அனலென்பது அனைத்தையும் தானென்றாக்கும் பெருவிழைவின் வெளிச்சம். அனலுடன் இணைக, அனலாகுக!” என்று சொன்னாள். “அதுவே பாசுபதம் எனப்படுகிறது.”

அர்ஜுனன் கைகூப்பினான். “நான் உனக்கு இனிமேல் விளக்குகிறேன். மிகமிக எளியது.  அதாவது நாம் அனலை ஒரு சிறு மண்குழாயில் எடுத்துக்கொள்கிறோம். அதில்…” என காளன் தொடங்க “இதோ பார்! வரும்போதே சொன்னேன் உன்னிடம், இந்த புகையாட்டெல்லாம் உனக்கு வேண்டியதில்லை. இவரிடம் நீ கற்கவேண்டியது ஒன்றே. இருநிலையழிந்து ஒன்றென்றாதல்” என்று அவள் சொன்னாள். “அதை அவரிடம் கேட்காதே. சிவப்புகையை உன் மூச்சில் திணிப்பார். அவருடன் இருந்து அவரென்றானதை அறி!”

அவள் எழுந்து செல்வதை அர்ஜுனன் நோக்கிநின்றான். காளன் “அவளுக்கு எல்லாமே தெரியும்” என்றான். அர்ஜுனன் “எனில் ஏன் ஓயாது பூசலிடுகிறீர்கள்?” என்றான். “பூசலா? நாங்களா?” என காளன் திகைத்தான். “ஆம், நானே பலமுறை கண்டேனே!” என்றான் அர்ஜுனன். “அதுவா பூசல் என்பது? அவளை நான் வேறு எப்படித்தான் அணுகுவது?” என்று காளன் சொன்னான். “அவளை சற்றுநேரம் தனித்துவிட்டுவிட்டால் பனியிலுறையும் ஏரி என அமைதிகொண்டுவிடுவாள். அதன்பின் எரிமலை எழுந்தாலொழிய சொல்மீளமாட்டாள்.”

அர்ஜுனன் “ஆம், அவ்வாறே நானும் எண்ணினேன். அன்னை எண்ணுவதும் பேசுவதும் இயங்குவதும் பிறர் பொருட்டே” என்றான். அவன் சொன்னதை செவிகொள்ளாத காளன் எழுந்து  தன் புலித்தோலை இடையில் சீரமைத்து “அவள் அங்கே தனித்திருக்கிறாள். நான் அவளிடம் சென்று பாசுபதம் பற்றிய இந்தக் கதையை அவள் எங்கே தெரிந்துகொண்டாள் என்று கேட்டுவருகிறேன். பெரும்பாலும் நானே சிவப்புகை வெறிப்பில் சொன்னதாக இருக்கும். அதை இங்கே சொல்லி என்னை அறிவிலி என்று காட்டிவிட்டுச் செல்கிறாள்” என்றபடி நடந்தான்.

[ 36 ]

அவன் செல்வதை நோக்கி சிரித்த எரியன் “இக்குடியின் ஆண்களும் பெண்களும் இப்படித்தான் எப்போதுமிருக்கிறார்கள்” என்றார். சடையன் திரும்பி பாறைகளாக பெருமுகம் கொண்டிருந்த அன்னையரையும் தந்தையரையும் சுட்டி “அவர்களும் இப்படித்தான் இருந்திருப்பார்கள். அன்னையரின் புன்னகைக்கு வேறொரு ஏது இருக்க வாய்ப்பில்லை” என்று நகைத்தார்.

“அன்னை சொன்னவற்றுக்கு என்ன பொருள், சடையரே?” என்றான் அர்ஜுனன். சடையன் “இளையோனே, கீழே மண்ணில் வாழும் உங்களை ஆள்வது இருமை. அன்னமும் எண்ணமும் என, உள்ளமும் உடலும் என, சொல்லும் பொருளும் என, துரியமும் சித்தமும் என  அனைத்தும் இரண்டெனப் பிரிந்துள்ளன அங்கு. உங்கள் வாழ்வின் துயரென்பது அப்பிளவு அளிக்கும் துன்பமே. நீங்கள் அடையும் இன்பமென்பது அவ்விருநிலை அகன்று அமையும் சிலகணங்கள் மட்டுமே. உணவில் உறவில் காமத்தில் கலையில் அறிதலில் ஊழ்கத்தில் அதை அறிகிறீர்கள்” என்றார்.

“ஊன்சுவை கண்டபின் கூண்டிலடைபட்டிருக்கும் சிம்மக்குருளை போன்றிருக்கிறீர்கள் நீங்கள். அறிந்த ஒன்றை அடைவதற்கான தவிப்பு.  தவமென்பது என்ன? இரண்டழியும் முழுநிலை. இருத்தல்நிறைவு. இன்மையென்றாதல்” என சடையன் தொடர்ந்தார். “காளனை நீ ஏன் போரில் வெல்லவில்லை என்றறிக! உன் வாழ்நாளெல்லாம் நீ கற்ற விற்கல்வி என்பது உளமென உடலை ஆக்கும் பயணமே. உன் உடல் உள்ளமென்றே ஆகிவிட்டமையால்தான் நீ இருநிலை வில்லவன் எனப்படுகிறாய்.”

“ஆனால் அந்நிலையிலும்கூட உன் உளம்வேறு உடல்வேறுதான்.  உளம் உடலுக்கு அப்பால் வியந்தபடி தனித்திருக்கிறது. எங்கள் குலத்துக் காளனின் உடல் அவன் உள்ளமேயாகும். அவன் உடலுள்ளம் அம்புகளைத் தவிர்க்க விழைந்தாலே போதும். ஆற்றுவதல்ல அவன் செயல், ஆவதேயாகும்” என்றார் பேயன். “அதைத்தான் நீ கற்பதற்கு வந்தாய். அறியக்கற்பது கல்வி. ஆவதற்கான வழியே பாசுபதம்.”

“இளையோனே, இந்நிலம் என்றும் இவ்வண்ணமே இருந்தது. மண்ணின் அல்குல்குழி இது  என்று சொல்கின்றன எங்கள் கதைகள். விண்நீர் முதலில் விழுந்த இடம். உயிர்த்துளி முதலில் முளைத்த நிலம்.  எங்கள் குலமுதல்வனை என்றோ யாரோ சிவப்பன் என்றனர். பின் வந்தோர் அச்சொல்லை சிவம் என்றாக்கினர். அவன் ஆளும் இந்நிலத்தை சிவநிலம் என்றுரைத்தனர்” என்றார் எரியன்.

“இங்கு வாழ்ந்திருந்தார் அவர். அவர் இடம் அமைந்த துணையை சிவை என்கின்றன கதைகள். அவர்களின் முகமென்ன என்றறியோம். அன்றி, இந்நிலத்தைச் சூழ்ந்தமைந்த பாறைகள் அனைத்திலும் செதுக்கப்பட்டிருக்கும் அத்தனை முகங்களும் அவர்களுடையனவே என்று சொல்வோம்” என சடையன் சொன்னார். “திமிலெழுந்த வெண்காளை ஒன்று அவருக்குத் துணையென்றிருந்தது. அதனால் அவர் பெயர் பசுபதி எனப்பட்டது. மழு அவர் படைக்கலம். உடுக்கு அவர் காலம். மான் அவர் கொடி. பைநாகம் அவர் கழுத்தணிந்த ஆரம். கதைகள்சொல்லி வரைந்ததெடுத்த ஓவியமே இன்று அவர்.”

“வாழ்வாங்கு வாழ்ந்து நிறைந்தவர் அவர்” என்று சடையன் சொன்னார். “விண்ணுடன் நேர்த்தொடர்பு கொண்டிருந்தார். ஒளியணையாத சொல் வகுத்தார். பித்தர், எருக்குமாலை சூடும் பேயர், ஆட்டர், ஆராக்காதலர். ஒருமுறை இந்நிலத்தைச் சூழ்ந்திருந்த மலைகள் நகைக்கத்தொடங்கின. வானில் பெருமரங்கள்போல முகில்கள் எழுந்து நின்றன. அதன் பொருள் அறிய தன் வெள்விடை ஏறி தனித்து மலையேறிச் சென்றார். மீள்கையில் அவர் நுதலில் ஒரு செவ்விழி திறந்திருந்தது. ஊன்விழி கடந்து கண்டமைக்கு சான்று அது.”

“இங்கு பிறந்திறந்த பல்லாயிரவரில் அவர் மட்டும் தன் முதிர்ந்த துணைவியுடன் வெள்ளெருது ஊர்ந்து அந்த முடிமலைமீது ஏறிச்சென்று மறைந்தார் என்கின்றன மூதாதைச் சொற்கள். குடியினர் கூடிநின்று கைதொழுது அவர்கள் செல்வதை நோக்கி நின்றனர். மேலேறிச்சென்றவர் ஏழாவது நாள் விசும்புகடந்து செல்லும் அனலுருவாக மலைமேல் எழுந்து நின்றார். பதினெட்டு நாட்கள் அத்தழல்பேருரு வானை ஏந்தியிருந்தது. பின் அது குளிர்ந்து செம்முகிலென ஆனபோது கூனலிளம்பிறையொன்றைச் சூடியிருந்தது. பிறைக்குளிர்கொண்டு அதன் பித்து அணைந்தது.”

“செந்தழலென எழுந்தவரை சிவப்பர் என அழைக்கலாயினர் எங்கள் குடிகள். அவர் கொண்ட மூவிழியையும் பிறையையும் தாங்களும் அணிந்துகொண்டனர்” என்று சடையர் சொன்னார். மன்றில் இருந்த சிவக்குறியைச் சுட்டி “நீத்தோருக்கு கல்லமைத்து வணங்குதல் எங்கள் குடிவழக்கம். கிடைக்கல்லாக அன்னையரும் நிலைக்கல்லாக தந்தையரும் நின்று மலரும் கள்ளும் ஊனும் படையல்கொண்டு அருள்புரிவார்கள். மலையேறிச் சென்று அனலென எழுந்த அன்னையையும் தந்தையையும் வழிபட கிடைக்கல்மேல் நிலைக்கல் நாட்டி ஒன்றென வழிபடலானோம். அதுவே எங்கள் மன்றுகளில் இன்று சிவக்குறி என அமைந்துள்ளது.”

KIRATHAM_EPI_81

“பாசுபதம் எங்கள் வேதம்” என்று எரியன் சொன்னார். “எரியென எழுந்த மூதாதையின் ஒலிகளிலிருந்து எங்கள் குடிமூத்தோர் எடுத்தமைத்தது அது. இளையோனே, உங்கள் வேதங்கள் மானுடர் எரியிடம் உரைப்பவை. எங்கள் வேதம் எரி மானுடரிடம் உரைப்பது. எரியென்றானவர்களுக்குரிய மொழி அது. மானுடப் பொருள்தொடாத் தூய்மை உடையது.”

“அது முந்நூறாயிரம் நுண்சொற்கள் கொண்டது. நூறாயிரம் நுண்சொற்கள் எண்ணங்களாகவே உள்ளன. நூறாயிரம் நுண்சொற்கள் மூச்சென அமைந்துள்ளன. நூறாயிரம் நுண்சொற்கள் ஒலியென்றாகின்றன. இறுதிச் சொல் ஒன்று மட்டுமே மொழியென்று வருகிறது. அதை நாங்கள் ஓம் என்று உரைக்கிறோம். அதுவரையிலான அத்தனை நுண்சொற்களையும் ஏற்று மெய்யென்று சான்றுகூறுகிறது அவ்வொரு மொழிச்சொல்” என்றார் சடையன்.

“அச்சொற்களும் அதனுடன் இணைந்த ஆயிரத்தெட்டு விரல்குறிகளும் இணைந்ததே பாசுபதவேதம். வேதமென மண் அறிந்த முதல்வேதம் அதுவே” என்றார் எரியன். அர்ஜுனன் நீள்மூச்சுடன் மெல்ல நெகிழ்ந்தமைந்தான். “மூத்தோரே, ஓம் எனும் அம்மொழிச் சொல்லை முதலென்றாக்கி ஒலிக்கத் தொடங்கியவையே எங்கள் வேதங்கள் அனைத்தும்” என்றான். “அசுரரும் நாகரும் நிஷாதரும் கொண்ட வேதங்கள் எல்லாம். நால்வேதமென்றான வாருணம், மகாருத்ரம், மாகேந்திரம், மகாவஜ்ரம் அனைத்தும்.”

பேயன் “ஆம், அவை எங்கள் வேதத்தின் நீர்ப்பாவைகள்” என்றார்.  “இன்று இந்த மண்ணின் துளியொன்றைப் பெற்று எங்களுள் ஒருவனாக ஆனாய். பாசுபதத்திற்குள் நுழைந்து முழுமைகொள்க!” என்று சடையன் அர்ஜுனனை வாழ்த்தினார். அர்ஜுனன் கைகூப்பினான்.

முந்தைய கட்டுரைஅபிப்பிராயசிந்தாமணி
அடுத்த கட்டுரைதாளில்லா பொருளியல் குறித்து -கார்த்திக்