நதிப்பெருக்கில்

unnamed

சென்ற ஒருதலைமுறையாக நம் சிந்தனையில் ஒரு பெரிய சிக்கல் உருவாகியிருப்பதை நடராஜகுருவும் நித்ய சைதன்ய யதியும் பலமுறைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். சிந்தனைக்கு ஒரு தொடர்ச்சி உள்ளது. அது எளிய படிமங்களாக பழங்குடி வாழ்விலிருந்து எழுகிறது. பின்னர் சொல்வடிவமும் தர்க்கவடிவமும் பெறுகையில் தரிசனமும் தத்துவமும் ஆகிறது. அதன்பின் பிற தரிசனங்களுடனும் தத்துவங்களுடனும் உரையாடுகிறது. வாழ்க்கையின் பல்வேறு தருணங்களில் அன்றாட யதார்த்ததுடன் மோதுகிறது. விளைவாக வளர்சிதை மாற்றம் அடைந்து நம்மிடம் வந்துசேர்கிறது. நம்மிடமிருந்து வருங்காலம் நோக்கிச் செல்கிறது.

ஆனால் சென்ற தலைமுறைமுதல் நாம் தொல்நூல்களை அவற்றின் வேர்களையும், கடந்தகால வளர்ச்சிப்போக்கையும் முழுமையாக உதாசீனம் செய்து மொழிப்புலத்தில் இருந்தும் பண்பாட்டுப்புலத்தில் இருந்தும் முழுமையாகத் துண்டித்து எடுத்துக்கொண்டு சமகாலதேவைகளுக்கும் புரிதல்களுக்கும் ஏற்ப விளக்கிக்கொள்ள ஆரம்பித்துள்ளோம். திருக்குறள் இப்போக்கின் முதற்பெரும்பலி. பதஞ்சலி யோகசூத்திரம் வரை இந்த மனநிலையின் பலிகளாக ஆகியிருக்கின்றன. இது நம் கல்விச்சோம்பலின் விளைவு. மரபின்மீதான கல்வியை அளிக்கும் அமைப்புக்களின் வீழ்ச்சியும் இதற்குக் காரணம்.

அத்துடன் எளிய அரசியல்முன்முடிவுகளும், இனமொழிவட்டாரக் காழ்ப்புகளும் இதில் ஊடாடுகின்றன. சிந்தனைமரபு என்பது அத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாத முச்சந்தி அரசியல்வாதிகளின் உள்நோக்கங்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் ஏற்பத் திரிபடைவதென்பது மிகப்பெரிய அழிவு. மீட்டெடுக்கமுடியாத சரிவு அது. ஒவ்வொரு மெய்தேடியும் ஒவ்வொரு அறிதலுக்கும் இந்த காக்காக்கும்பலுடன் சண்டைக்கு நின்றாகவேண்டும் என்னும் நிலை மெல்ல இந்தியாவெங்கும் இன்று உருவாகிவிட்டிருக்கிறது

இதன் விளைவாக உருவான குறுகல்களே இன்று நம் மெய்நூல்கள் அனைத்தையும் சூழ்ந்துள்ளன. குறள் என்றாலும் கீதை என்றாலும் இரு எல்லைகளில் நின்றிருக்கும் குறுக்கல்களையே நாம் இயல்பாக அடைவோம். அவற்றைக் கடந்து அந்நூல்களைச் சென்றடைவதென்பது மிகப்பெரிய சவால். ஒவ்வொரு சிந்தனையின் மீது எடைமிக்க வெறுப்பும் கசப்பும் ஏற்றிவைக்கப்பட்டிருக்கிறது. எண்ணிப்பாருங்கள் , இன்று தமிழகத்தில் பிறந்த ஒருவர் அத்வைதவேதாந்தத்தை கற்கவேண்டுமென்றால் அவர் கடந்துவரவேண்டிய பொதுப்புத்தித் திரிபுகள், வெறுப்பு முத்திரைகள் எவ்வளவு!

இந்தச்சூழலிலேயே இந்தியமெய்யியல் சார்ந்து நான் சிலவற்றை எழுதத் தொடங்கினேன். எனக்கு அதில் பெரிய தயக்கம் இருந்தது. என் தகுதி சார்ந்து அல்ல, அது என் ஆசிரியர்களின் தகுதி. அதில் எனக்கு ஐயமில்லை. நான் இலக்கியவாதி, புனைவெழுத்தாளன் என்பதன் தயக்கம் அது. என் பணியிலிருந்து விலகிச்செல்வதைப்பற்றிய ஐயம். ஆனாலும் இங்கு அது தேவையாகிறதென்று உணர்ந்தேன். ஒன்று நவீன அறிவுச்சூழலுக்குரிய மொழிநடை எனக்கு உள்ளது. நவீன அறிவுச்சொல்லாடலின் பகுதியாகவும் இருக்கிறேன். ஆகவே என்னால் மட்டுமே சொல்லக்கூடிய சில உள்ளன எனத் தோன்றியது

ஆயினும் அபூர்வமாகவே இந்தத்தளத்தில் ஏதாவது எழுதியிருக்கிறேன். பெரும்பாலும் இவை சொற்பொழிவுகளின் வரிவடிவங்கள். நாம் சாதாரணமாக புழங்கும் நூல்களையும், சிந்தனைகளையும் அவற்றின் மெய்யியல்பின்புலத்தில் பொருத்தி முழுமையாகப்பார்ப்பதற்கான முயற்சிகள் என இவற்றைச் சொல்லமுடியும். அந்தக்கோணத்தில் இவை சில திறப்புகளை நிகழ்த்தக்கூடும். இதன் முதல்பதிப்பு தமிழினி வசந்தகுமாராலும் இரண்டாம்பதிப்பு சொல்புதிது சீனுவாலும் வெளியிடப்பட்டது. மூன்றாம்பதிப்பை வெளியிடும் கிழக்கு பதிப்பகத்திற்கு நன்றி

ஜெயமோகன்

[கிழக்கு வெளியீடாக வரவிருக்கும் இந்தியஞானம் நூலின் மூன்றாம்பதிப்புக்கான முன்னுரை]

முந்தைய கட்டுரைஏழாவது இருள்
அடுத்த கட்டுரைபுத்தகக் கண்காட்சியில் ஒரு புதியபெண்