’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 78

[ 30 ]

மலையில் நின்றது தனிமரம். காய்ந்த மலர்களும் சருகுகளும் உதிர்ந்து அதன் காலடியை மூடின. எடையிழந்து எழுந்தாடி காற்றைத் துழாவின கிளைகள். பின்னர் மலர்களையும் கனிகளையும் உதிர்த்து தனக்கே அடிபூசனை செய்தன. பின்னர் இலைகளையும் காய்களையும் உதிர்க்கத்தொடங்கியது மரம். மெல்ல பிஞ்சுகளும் தளிர்களும் உதிரலாயின. இறுதியில் வெறுமையை சூடிநின்ற கிளைகள் உதிர்ந்தபின்  அடிமரம் வேர்மேல் உதிர்ந்தது. வேர் மண்ணில் பிடிவிட்டது. ஆணிவேரின் குவைக்குள் ஓர் உயிர்த்துளி மட்டும் அனன்றது.

புவியை உண்டு முன்னகர்ந்தது மண்புழு. உடலே நாவென சுவையறிந்தது. நாவே குடலென நெளிந்து செரித்தது. உண்ட மண்ணும் உமிழ்ந்த மண்ணும் நிகரென்றாக உப்பை மட்டும் எடுத்து உடல்நெளிவாக்கிக் கொண்டது. இன்மையைச் சென்றடைந்து திரும்பி நோக்கியபோது புவி ஒரு மண்குவியலென தன் பின்னால் எழுந்திருக்கக் கண்டது. தன் மூச்சை இழுத்து படம் கொண்டது. மேலும் பசித்து தன் வால்நுனியின் அசைவைக் கண்டு வெருண்டெழுந்தது. மும்முறை நிலம் கொத்தியெழுந்தபின் பாய்ந்து அதைக் கவ்வி உண்டது.

தன் நிழல் கண்டு விழிவிரித்து உடல்சிலிர்த்து நின்றது மான். செவியசைந்தபோது நீருள் எதிரி ஒன்று செவியசைக்கக் கண்டு உடல் வெருண்டு அவ்வெருட்சியை தான் கண்டது. அலையின் ஆழத்திலிருந்து ஆடிய அதன் விழிகளின் அருகே விழியென மிதந்து சென்றது மீன். சிறகசைத்தன மூன்று மீன்கள். கோடி மான்விழிகள் ஒளிநோக்குடன் முகில் துழாவிச்சென்றன. உடலெங்கும் விழியாகும் ஒரு நீல விழியாகி வான்நோக்கிக் கிடந்தது சுனை. அதன்மேல் அலையலையலை என விழுந்துகொண்டிருந்தன மரம் உதிர்த்த பனித்துளிகள். ஒரே பனித்துளி. ஒன்றுபோல் ஒன்றென முடிவிலாது பனித்து உதிர்ந்தது விசும்பு.

குத்துவிளக்கிலிருந்து திரை வழியாக சுவடியடுக்கில் பற்றி ஏறியது அனல். நெறி நூல்களை உண்டது. இலக்கண நூல்களை உண்டது. காவியங்களை உண்டு எழுந்து வேதங்களை பற்றிக்கொண்டது. சுவடிகள் எரிந்து நெளிந்து துவண்டு கருகி சாம்பலாக அவை கொண்ட சொற்கள் எரிமேல் எழுந்து சிறகடித்து கூவிச் சுழன்று பறந்தன. பின்னர் அவையும் சிறகுகள் கருகி அனலிலேயே விழுந்து அனல்பற்றி எரிந்து கூவிச் சுழன்று மூழ்கி மறைந்தன. அனல் என்ற சொல்லாக அனல் மட்டும் எரிந்தது. அச்சொல் வெளியில் நின்று தவிக்க அனல் அணைந்தது. அச்சொல் எழுந்து வானில் பரவி மறைந்தது.

முட்டைவிட்டு எழுந்த கணமே தன்னை பறவை என்று அறிந்தது ஓர் உயிர். முதற்கிளைவிட்டு எழுந்து வானில் சுழன்றதன் பேருவகையால் ஆட்டுவிக்கப்பட்டது. இரைதேட இணையறிய முட்டை மீறிய குஞ்சுகளுக்கு சிறகளிக்க பறந்துகொண்டே இருந்தது. முதிர்ந்து இறகுகள் உதிர்ந்து எடைமிகுந்து ஒரு சிறுகிளையில் அமர்ந்து குளிர்ந்துவரும் உடலை உணர்ந்தது. “என் வாழ்நாளின் பொருள்தான் என்ன?” என்று எண்ணியபோது வாழ்நாளெல்லாம் தான் பறந்த தடங்கள் அனைத்தையும் வானில் ஒரு வலை எனக் கண்டது. விழிதிருப்ப அருகே ஒரு சிலந்தி நெய்த வலையைக் கண்டு உளம்திகைத்து பின் புன்னகைத்தது.

கொந்தளித்த கடல் எழுந்து கார்முகிலென வான் நிறைத்தது. கோடிகோடி துளிகளென்றாகி மண்ணை அறைந்து மூடி பெருகிச் சுழித்து திரண்டு ஓடி கடலாகியது. துளியென்றாகாத நீரின் ஓர் அணு வானில் எஞ்சியது. அதன்மேல் விழுந்த விண்மீன்களின் ஒளியால் அதுவும் ஒரு விண்மீன் என்றாகியது. கீழ்வானில் நீலநிறம் கொண்டு மின்னிய அதை மீன்கணங்கள் கண்டுகொண்டு விழிதுளித்து நோக்கிநின்றன. விடாய்கொண்ட பறவைகள் அதை நோக்கி நா நுணைத்தன. விண்ணிலொரு கடலென்று அது நின்றது. மண்ணிலொரு துளியென கடல்.

ஏழாம் கடலென்பது வானமே. ஆறுகடல்களாக அலையடிப்பதன் அமைதி அது.

*

கரிய தேவன் ஒருவனால் ஓட்டப்பட்ட கரிய தேர் வந்து நின்றது மாளிகை முகப்பில். கதவிடுக்கின் வெள்ளிக்கோல் கரிய பட்டையென்றாகியது. திறந்து வெளிவந்து படிகளில் நின்றான். அவன் உடல் கனலாக ஆடைகள் எரிந்துகொண்டிருந்தன. அத்தழலில் இருந்து மாளிகையின் கதவும் சுவரும் பற்றிக்கொண்டன. அவன் தசைகள் உருகிச் சொட்டி விழுந்த துளிகளும் புகையுடன் எரிந்தன. வாய் திறந்தபோது உள்ளிருந்து தீ பறந்தது. மூக்கினூடாகப் புகை எழுந்தது.

ஏழு குதிரைகளும் எண்ணை மின்னும் கருவண்ணம் கொண்டவை. அவற்றின் திறந்தவாய்களும் நாக்குகளும் பற்களும்கூட கரியவை. கருங்கல் குளம்புகள் கற்தரையில் முட்டும் ஓசை. கரிய இரும்பாலான தேரின் சகடவட்டமும் கரிய ஒளியே கொண்டிருந்தது. அதன் பீடத்தில் எழுந்த தேவனின் கண்விழிகளும் பற்களும் கைநகங்களும் கருஞ்சிப்பிபோல இருளொளி கொண்டிருந்தன. அவன் இரும்புக் குறடுகள் கல்லில் ஒலிக்க அணுகி பணிந்து “வருக!” என்றான்.

“ஏன்?” என அவன் கேட்டான். “வருக!” என்று அவன் மீண்டும் சொல்லி கைகாட்டினான். “நீ யார்?” என்றான். “நான் குரோதன். என் தலைவர் உன்னைத் தேடி வந்துள்ளார்.” அவன் எரிந்துகொண்டே சென்றான். உள்ளே கரிய பட்டுத்திரை அசைந்தது. “யார்?” என்றான். “அவரை அதர்வன் என்கிறார்கள் தேவர்கள். அழிவற்ற ஆற்றலே அவர் என வழிபடுகின்றனர் முனிவர்.”

அஞ்சியபடி அவன் நடந்து சென்று தேரிலேறி அத்திரையை விலக்கினான். உள்ளே புகைமூடிய அனல் என அமர்ந்திருந்தது எரியுடல் கொண்ட தெய்வம். கரிய முட்கள் என மயிர் சிலிர்த்த பன்றிமுகம். வெறிமயங்கிய கருமணிக்கண்கள். “வருக!” என அவனை கைநீட்டி அழைத்தது. எட்டு கைகளில் வாளும் வேலும் வில்லும் அம்பும் பாசமும் அங்குசமும் குளிர்மலரும் அமுதகலமும் கொண்டிருந்தது. அனல் அனலை என அவன் அத்தெய்வத்தின் மடியில் அமர்ந்தான். சவுக்கு சொடுக்கப்படும் ஒலி கேட்டது. தேர் அசைந்து சகட ஒலியுடன் கிளம்பியது.

அவனுக்கு எதிர்வந்தது பிறிதொரு கரியவண்ணத் தேர். அதன் கொடி புகைச்சுருள் என பறந்தது. அதிலமர்ந்திருந்தவனின் எரிவிளிம்புகளை அவன் கண்டான். “அவன் உன் வெஞ்சினத்தின் இலக்கு. அவனை வென்றால் நீ முற்றடங்கி குளிர்வாய். பாண்டவனே, நீ சென்றடையத் தடையென எப்போதும் இறுதியில் எழுந்து நிற்பது இதுவே” என்றது தெய்வம். “யார் அவன்?” என்றான் அர்ஜுனன். “உன் உடன்பிறந்தோன். யுகமடிப்புகள்தோறும் நீங்கள் போரிட்டே வருகிறீர்கள்.”

அர்ஜுனன் விழிகூர நோக்கியதுமே அடையாளம் கண்டுகொண்டான். “என் படைக்கலங்களில் ஒன்றை எடுத்து அவனை எதிர்கொள்க!” என்றது பன்றிமுகத் தெய்வம். அவன் உடல் விம்மி பின் மெல்ல தணிந்து “அந்த மலர் என் படைக்கலமாகுக!” என்றான்.  அதர்வன் புன்னகையுடன் “அவ்வாறே ஆகுக!” என்றான். அர்ஜுனன் எடுத்து வீசிய அந்த மலர் பெருகி மாமழையென்றாகி அக்கரிய தேர்மேல் பொழிய அது குளிர்ந்து நீர்ப்புகையெழ நின்றது. அனல் அணைந்து அது அமைவதை அவனால் காணமுடிந்தது.

புன்னகையுடன் ஏதோ சொல்ல முயன்ற கணம் ‘ஆம்! ஆம்! ஆம்!’ என்னும் முழக்கத்தைக் கேட்டபடி அவன் உதிர்ந்து தேர்த்தட்டிலிருந்து கீழே விழுந்தான். அவன் எரிதல் அணைந்துவிட்டிருந்தது. எழுந்து நின்றபோது தன் உடலின் மென்மையையும் மணத்தையும் அறிந்தான். பூனைமயிர் படர்ந்த முகமும் நாண் இழுத்த கைவில்போன்று இறுகிய இளைய உடலுமாக அவன் முதிராஇளைஞனாக மாறிவிட்டிருந்தான்.

பேரியாழின் நரம்புகளின் அதிர்வுபோன்ற ஒலியைக் கேட்டு அவன் நோக்கினான். இளஞ்செந்நிற தாமரைமலர் நீரலையில் எழுந்தமைந்து  அணுகுவதுபோல வந்த தேர் ஒன்று தெரிந்தது. செந்தாமரையின் மலர்ந்த ஏழு  இதழ்கள் போன்ற குதிரைகள் குளம்புகளை உதைத்து கழுத்து திமிறி கனைப்போசையுடன் நின்றன. அதை ஓட்டிவந்த பாகன் மலர்நடுப்புல்லி போலிருந்தான்.  இறங்கி தலைவணங்கி “நான் காமன்” என்றான். “இது என் தலைவனுடன் நீங்கள் செல்லும் தேர்.”

அவன் அந்தத் தேர் மீட்டிமுடித்த யாழென இசை விம்மிக்கொண்டிருப்பதை தன் உடலால் உணர்ந்தான். அணுகியபோது அவ்விசையை உள்ளம் உணர்ந்தது. “என் தலைவரை சாமன் என்கிறார்கள். வானில் கார் நிறைப்பவர். மரங்களை மலர்கொள்ளச் செய்பவர். யானைத்துதிக்கைகளை குழையச் செய்பவர். மான்விழிகளில் ஒளியாகுபவர். மலைத்தேன்கூடுகளுக்குள் இனிமையை நிறைப்பவர்” என்றான் காமன். “ஷட்ஜன், ரிஷபன், காந்தாரன், மத்திமன், பஞ்சமன், தைவதன், நிஷாதன் எனும் ஏழு புரவிகளால் இழுக்கப்படும் இந்தத் தேர் சுநாதம் எனப்படுகிறது.”

அவன் தேரைத் தொட்டதுமே தன் உடல் முழுக்க இசை நிறைவதை உணர்ந்தான். தேனில் துழாவிய நாக்கு என்றாகியது அவன் உடல். அவ்வினிமையை தாளமுடியாமல் அவன் விழிகசிந்தான். உடல்நடுங்கி அதிர தேருக்குள் ஏறி அங்கே முற்றிலும் மலர்ந்த தாமரை மலரென அமர்ந்திருந்த தெய்வத்தைக் கண்டான். புரவியின் தலை. விழிகள் நீல மலர்கள் போலிருந்தன. ஆறு கைகளில் வில்லும் அம்பும் மலரும் மின்கதிரும் கொண்டு அஞ்சலும் அருளலுமென அமைந்திருந்தது. “வருக, மைந்தா!” என அவனை கைபற்றி தன் அருகமரச் செய்தது.

இசையின் அலைகளில் எழுந்தமைந்து அவன் சென்றுகொண்டிருந்தான். எதிரே இளஞ்செந்நிறத் தேர் ஒன்று மிதந்தணைவதைக் கண்டான். “உன் காமத்தின் நிறைவை அளிப்பவள் அவள். நீ இக்கணம்வரை சற்றும் அறியாதவள். இளையோனே, எதிர்ப்படும் அத்தனை முகங்களினூடாகவும் நீ தேடிக்கொண்டிருந்தது அவளையே. இதோ, உனக்கு அவளை அளிக்கிறேன். விழைவை ஆற்றலெனக் கொண்டு எழுக! அத்தனை புலன்களாலும்  அவளை அடைக! இசைதலின் பேரின்பத்தை அறிந்து கடந்தெழுக!” என்றது அத்தெய்வம்.

ஒருகணம் எண்ணியபின் “அறிந்து அதைக் கடந்தவர் எவருமில்லை” என்றான். அக்கணமே அவன் ஒரு சிறுமைந்தனாக மாறி இடையில் கிண்கிணியும் கழுத்தில் ஐம்படைத்தாலியும் மட்டும் அணிந்து அத்தேரில் நின்றிருந்தான். அவனை அறியாமல் எதிர்த்தேர் கடந்து சென்றது. அவனை இரு கைகள் இறக்கி கீழேவிட்டன. கடந்து செல்வனவற்றை விழிமலர்ந்து புன்னகைத்து நோக்கியபடி அவன் அங்கே நின்றிருந்தான்.

பொற்குண்டலம் ஒன்று கீழ்த்திசையில் எழுவதைக் கண்டு கைகளை வீசி சிரித்தான். அது பெருகி அணுகியபோது பொன்னிறப் புரவிகள் இழுக்கும் ஒரு தேர் அது என்பதைக் கண்டான். பொன்னொளி தரையில் மஞ்சள் நீர் என பரவிக்கிடக்க அது வந்து அவனருகே நின்றது. பழுத்த வாழைப்பழச் சீப்பு என புரவிகள் நிலைகொள்ள பாகன் இறங்கி வந்து அவனிடம் “நான் மோகன். எந்தை யஜுர்வனின் தேருக்கு வருக!” என்றான்.

அகிற்புகை மணக்கும் அத்தேரினுள்ளில் கலைமான் உருவில் அமர்ந்திருந்தது நான்கு கைகளில் மலரும் அமுதும் அஞ்சலும் அருளலும் கொண்ட தெய்வம். கவர்கொம்புகளில் மலரும் தளிரும் எழுந்திருந்தன. “வருக, குழந்தை!” என அவனை அள்ளி தன் மடியில் அமர்த்திக்கொண்டது. “இங்கு தெரியும் அனைத்தும் உன்னுடையதே. நீ விழைந்தவையும் அடையாதவையும் மட்டும் நிரைவகுக்கும் வெளி இது. நிறைக!” என்றது.

அவன் விழிவிரித்து வாயில் கையை விட்டுக்கொண்டு ஒவ்வொன்றையாக பார்த்தான். பின் சிணுங்கி அழுதபடி “அம்மா வேண்டும்” என்றான். “இவற்றில் எதை வைத்து விளையாட விழைகிறாய் நீ?” என்றது தெய்வம். “ஒன்றுமே வேண்டாம். அம்மாவிடம் செல்கிறேன். அம்மா மட்டும் போதும்” என்றான். “இதை நீ இனி அடைய முடியாது. இது மிகமிக அரியது” என அவனுக்கு ஒவ்வொன்றாக சுட்டிக்காட்டியது. “அம்மா! அம்மாவிடம் செல்கிறேன். அம்மா அம்மா” என அவன் அலறி கால்களையும் கைகளையும் உதைத்தபடி திமிறி அழத்தொடங்கினான்.

அழுது மூச்சு சிக்கிக்கொள்ள உடல் நீலம்பாரித்து அவன் துடித்தான். “அம்மா அம்மா” என்று உதடுகள் அசைந்துகொண்டே இருந்தன. அவனை இறக்கி படுக்கவைத்துவிட்டுச் சென்றது தேர். புழுதியில் அவன் கிடந்து நெளிந்து அழுதான். வெண்மை ஒளிரும் தேர் ஒன்று அவனருகே வந்து நின்றது. வெண்புரவிகள் காலோய்ந்து மூச்சு சீறின. அதிலிருந்து சாந்தன் எனும் பாகன் இறங்கினான். அம்மகவை இரு கைகளால் அள்ளி எடுத்து தேருக்குள் அமர்ந்திருந்த தெய்வத்திடம் அளித்தான்.

வெண்பசுவின் தலையும் அஞ்சலும் அருளலுமென மலர்ந்த இரு கைகளும் கொண்டிருந்தாள் ரிக் என்னும் அன்னை. யஜுர்வன், சாமன், அதர்வன் என்னும் மூன்று மைந்தர்களைப் பெற்றவள். அவள் அவனை தன் முலைகளுடன் அணைத்து அமுதுக்காம்புகளை அவன் வாயில் வைத்தாள். ஆவலுடன் சப்பி உறிஞ்சி உண்ண உண்ண அவன் சுருங்கி ஒரு மொட்டென்று ஆனான். அவனை தன் இடையில்லிக்குள் செலுத்தி கருவறைக்குள் வைத்துக்கொண்டாள். அங்கே அவன் கைகள் குவித்து உடல்சுருட்டி அமைந்தான்.

அவன் உடல் பொன்னாகியது. உருகிச்சொட்டும் பொற்துளி என அவள் கருவறைக்குள் இருந்து அவன் பிறந்தெழுந்தான், ஒன்பது சூரியன்கள் ஒளிவிட்ட பிறிதொரு உலகில். “ஹிரண்யகர்ப்பனே, வருக!” என்று ஓர் அறிந்த குரல் அவனை அழைத்தது.

*

எரிந்தது முதற்புரம். செந்தசைக்கோட்டை சூழ் பெருநகரம் அணுவெனக் குறுகியது. விதையுள் கருவென ஆகியது. இருப்பென்றும் இல்லையென்றும் ஆடும் ஓர் ஊஞ்சல். எரிந்தது மறுபுரம். வெள்ளிச் சிலந்தி பின்னிய வலைநகரம். ஒரு கண்ணி பிறிதொன்றை ஆக்கும் நெசவு. அவிழ்ப்பதே இறுக்குவதாக ஆகும் அவிழாச்சுழல். எரிந்தது பிறிதொரு புரம். பொன்னிறக் கருவறை. ஆடிகள் தங்களுள் நோக்கி அமைத்த மாநகரம். எதிர்ப்பவரை அள்ளி தன் குடிகளென்றாக்குவது. கோடிக் களம் கொண்ட ஆடல். கோடிக் காய்கள் நின்றிருக்கும் களம். எரிந்தழிந்தது முப்புரம். செம்பு எரிந்தது. எரிந்தது வெள்ளி. உருகி அழிந்தது பொன். மூவிழி அனலில் தழல் மூண்டழிந்தது முப்புரம். கைப்பிடி நீறென்றாகியது. எஞ்சியது அது. நீறெனும் வெண்மை.

[ 31 ]

ஸ்ரவ்யம் என்னும் காட்டில் ஓர் ஆண்குயில் மஞ்சள் கொடி ஒன்று பறப்பதைக் கண்டு அருகணைந்தது. அது கொன்றைமரம் பூத்திருப்பது என்று அறிந்ததும் தன் உடல் விம்மி இறகுகள் எழுவதை உணர்ந்தது. சிறகுகளைச் சுழற்றியபடி மாதவிக்கொடி ஒன்றின் வளைவிலிருந்து ஊசலாடியபோது தன் அலகிலிருந்து அன்றுவரை அறிந்திராத இன்னிசை ஒன்று எழுவதைக் கேட்டது. அவ்விசையின் சுழலில் இன்னும் இன்னுமென தித்தித்துச் சென்றுகொண்டிருந்தது.

பின் அதை கேட்பவர் எவர் என உணர்ந்து விழிப்புகொண்டது. மிக அருகே வரிவரியென உடலிறகு கொண்டு அமைந்திருந்த பெண்குயிலை கண்டுகொண்டது. அதை நோக்கி தன் விடாயை பாடியது. விடை எழாமை கண்டு தன் தனிமையைச் சொன்னது. அதை துயரென்று மீட்டியது. அதன் விழிகளைக் கண்டதும் ஒலியடங்கியது. அவள் கொண்ட அமைதி தன் இசையின் உச்சமென உணர்ந்தது.

வீக்‌ஷம் என்னும் காட்டில் ஓர் ஆண்மான்  குளிர்ச்சுனை ஒன்றில் குனிந்து நீர் அருந்தியபோது தன்னருகே நின்ற துணைமானை அங்கு கண்டது. நீரில் ஒளியென நடனமிட்ட அவ்வழகைக் கண்டு பெருங்காதல்கொண்டு முத்தமிட்டது. விடாய் மிகுந்து  நாகுவித்து தன் துணைவியை அள்ளி அள்ளிக் குடிக்கலாயிற்று. ஒரு துளியும் குறையாமல் தன் உடல் ஊறி நிறைந்துகொண்டிருப்பதை உணர்ந்து மயங்கி நின்றிருந்தாள் அவள்.

தம்சம் என்னும் காட்டில் இரு யானைகள் சேற்றுப் பரப்பொன்றில் இறங்கி தங்கள் உடல் எடையை இழந்தன. துதிக்கை தழுவியும் உடல் வழுக்கியும் இணைந்து பிளிறியும் காதல்கொண்டன. மதமெழுந்து கன்னம் நனைந்த களிறு கொம்புகளால் பிடியைத் தூக்கிச் சுழற்றி வீசியது. சினம்கொண்ட பிடி எழுந்து திரும்பி துதிக்கையால் களிற்றை அறைந்து தன் சிறு தந்தத்தால் அதன் விலாவை குத்தியது. காடதிர முழங்கியபடி களிறு பிடியைக் குத்தி தந்தத்தை இறக்க பிடி அலறிய ஒலியில் பறவைகள் வானிலெழுந்தன.

சினம்கொண்ட இரு பேருடல்களும் வெடிபடும் ஒலியுடன் மத்தகங்களால் முட்டிக்கொண்டன. துதிக்கைகளைப்பற்றி ஒன்றை ஒன்று உந்திச் சுழற்றின. மரங்கள் கடைபிழுது விழுந்தன. கிளைகள் ஒடிந்து சொரிந்தன. பாறைகள் சரிவில் உருண்டன. உழுத வயலென்றாகியது காடு. இருபெரும் அடிமரங்கள் நடுவே பிடி சிக்கிக்கொண்டது. களிறு அதை அடக்கி மேலேறி உடலிணைந்தது. இருவர் கொண்ட விசைகளும் எதிரெதிர் முட்டி அசைவிழந்தன. குருதி வழியும் புண்கள் இனிக்கத் தொடங்கின.

ரம்யம் என்னும் காட்டில் இரு தட்டாரப் பூச்சிகள் காற்றில் இணை கண்டுகொண்டன. ஆணும் பெண்ணும் தங்கள் சிறகுகளை இணையாக்கி உடலை ஒன்றாக்கி எழுந்தமைந்த இளங்காற்றில் சுழன்று பறந்தன. இரு சிறகுகளும் ஒற்றைவிசை கொண்டபோது ஒன்றுக்கொன்று முற்றிலும் எடையற்றவையென்றாகின. தொடுவுணர்வு மட்டுமே அவற்றிடையே இருந்தது. சிறகுகள் முற்றிலும் பொருந்தியசைந்த கணத்தில்  தங்கள் காதலால் மட்டுமே அவை தொட்டுக்கொண்டன.

தன்யம் என்னும் காட்டில் அரசித் தேனீயின் அரண்மனையை தேனால் நிரப்பின தேனீக்கள். காடெங்கும் மலர்ந்த பல்லாயிரம் மலர்களின் இனிமை. அவற்றை தேடிச் செல்லவைத்த மணம். அவற்றை உண்டு சுமந்து வருகையில் எழுந்த இசை. அவற்றை நிறைத்தபின் ஆடிய நடனம். விழிசொக்கி அமர்ந்திருந்த பெண்ணின் முன் ஒன்று நூறு ஆயிரமென பெருகியது ஆண். ஒன்று நூறு ஆயிரம் என விரிந்து அன்னையைச் சூழ்ந்தது தந்தை.

*

ஊழ்கத்திலமைந்திருந்த அம்மையப்பனின் உடலில் இருந்து தன் கருணையால் பிரிந்தெழுந்தாள் அன்னை. மெல்ல அவனைத் தொட்டு எழுப்பினாள். “அருந்தவம் முதிர்ந்துவிட்டது அவனுக்கு. இன்னமும் பிந்துதல் அழகல்ல” என்றாள். விழித்தெழுந்து புன்னகைத்து “முலை ஊறுகிறது போலும் உனக்கு” என்றார் ஐயன். “குழவியின் அழுகையை நெடுநேரம் பொறுத்தல் எந்த அன்னைக்கும் அரிது” என்றாள் அவள்.

குனிந்து கீழே ரிஷபவனம் என்னும் சோலையை பார்த்தார் பசுபதி. அங்கே அவன் அருகமைந்து தவம் செய்த கருங்கல் சிவக்குறி உயிர்கொண்டு விதையென்று ஆகிவிட்டிருந்தது. “ஆம், இது தருணம்” என்று அவர் சொன்னார். “குழவியின் உயிர்விசைபோல் அன்னையை மகிழ்விப்பது பிறிதொன்றில்லை” என்றாள் தேவி.

முந்தைய கட்டுரைமழையில் நிற்பது….
அடுத்த கட்டுரைவிவேக் ஷான்பேக்- மீண்டும் ஒரு கடிதம்