புத்தாண்டுக் குறிப்பில் லண்டன் பயணம் குறித்த நினைவுகளில் நான் லண்டன் பிரபுவை விட்டுவிட்டேன் என நண்பர் ஒருவர் கூப்பிட்டுச் சொன்னார். சொரேர் என்று உறைத்தது. அது ஏன் என்று நானே மண்டையைத் தட்டிக்கொண்டேன். பிரச்சினை இதுதான். ஒருவரை முதலில் எப்படிப் பார்க்கிறோமோ அப்படித்தான் ஆழ்மனம் பதிவுசெய்துகொள்கிறது. லண்டன் பிரபு ஊட்டி சந்திப்புகளுக்கு வந்து அறிமுகமானவர். அந்நினைவுடன் கலந்தே அவர் முகம் இருப்பதனால் லண்டனுடன் அவர் தொடர்பு படவே இலை.
இது ஏன் என்பதை எவ்வளவு மண்டையை குடைந்தும் புரிந்துகொள்ள முடியவில்லை. நினைவுகளை உள்ளம் சேமிக்கும் விதம் அது. இவ்வளவுக்கும் ஒவ்வொரு ஊட்டி சந்திப்புக்கும் ‘பிரபு ஆப்செண்டா?” என்று கேட்டு அவர் லண்டன்வாசி என்று கிருஷ்ணன் சொல்வார். ஐரோப்பியப் பயணத்தில் அவரை நினைவூவுகூர வேண்டும் என்பதற்காகவே ”எனக்கு ஒரு லண்டன்பிரபுவை தெரியும்” என கட்டுரை எழுதப்போகிறேன் என்று கேலியும் செய்திருந்தேன்.
இன்னொரு விஷயம் பெயர்கள். என்னுடன் இரண்டு ஆண்டுக்காலம் பயணங்கள் பல செய்தும்கூட ராஜமாணிக்கத்தை ராஜரத்தினம் என்றே நினைவில் வைத்து அப்படியே கூப்பிட்டுக் கொண்டிருந்தேன். அவரும் அதை திருத்துவதே இல்லை. பின்னர் மெல்ல நானே திருத்திக் கொண்டேன். ‘மோட்டார்’ சீனிவாசன் இன்னொரு சீனிவாசனுடன் ஊட்டி சந்திப்புக்கு வந்தார். இருவரும் கடலூர்காரர்கள் என ஏன் என் மனப்பதிவு இருக்கிறது என யோசித்தேன். அவர்கள் கடலூர்க்காரரான மணிமாறனுடனேயே இருந்தமையாலா?
இம்முறை கமலக்கண்ணனைப் பார்த்தபோது கோவைக்காரரான தாமரைக்கண்ணனை நினைத்துக்கொண்டு அவர் எங்கே என்று கேட்டேன். அருகிலேயே நின்றிருந்தார். தூயன் போன்ற பெயர்களுக்குச் சிக்கல் இல்லை. அவை மறப்பதே இல்லை. ஆனால் சிங்கப்பூர் நெப்போலியனும் இவரும் நெருக்கமானவர்கள் என ஒரு மனச்சித்திரம். ஏனென்றால் நெப்ஸ் புதுக்கோட்டைக்காரர். மாரிராஜையும் மலைச்சாமி அழகரையும் ஏதோ வகையில் தொடர்பு படுத்தி வைத்திருக்கிறது உள்ளம்
அதைவிடச் சிக்கல் மொழி. சக மலையாளியான நிர்மால்யாவிடம் என்னால் தமிழில்தான் பேசமுடியும். அவர் மனைவியிடம் மலையாளத்தில் பேசுவேன். அவர் மனைவியிடம் பேசிவிட்டு திரும்பி அவரிடம் பேசும்போது இயல்பாகவே மலையாளம் தமிழாகிவிடுகிறது. பலமுறை முயன்றுபார்த்தேன். இருவருக்குமே சிரிப்பு. அதேபோல பச்சைத்தமிழரான மலையாள நடிகர் பாலா வை சந்தித்தால் மலையாளத்தில்தான் பேசமுடியும். இன்று காலைமுதல் பலமுறை முயன்றேன். வாய் பிடிவாதமாக தமிழ்பேச மறுத்துவிட்டது.
இந்தக்குளறுபடிகள் அளிக்கும் சின்ன உறவுச்சிக்கல்கள் பல. அவ்வப்போது நண்பர்களிடம் மன்னிப்பு கோரவேண்டியதுதான் லண்டன் பிரபுவுக்கு ஒரு மன்னிப்புக்கடிதம் அனுப்பினேன். அதன்பின் தொடர்பினூடாகச் சென்று அவர் சு. வேணுகோபால் பற்றி எழுதிய பழைய கட்டுரையை வாசித்தேன். நல்ல கட்டுரை. ஆனால் குறிப்பு என்று சொல்லவேண்டும். இதை அவர் இன்னமும்கூட விரிவாக்கி எழுதலாம். இதில் அவர் ஓர் அவதானிப்பை நிகழ்த்துகிறார். சு.வேணுகோபால் மானுட உள்ளங்களின் இருண்மையை எழுதுபவர். ஆனால் அவ்வப்போது வரும் ஒளி ஒரு சிறு துயரம் போன்ற கதைகளில் தெரிகிறது. அதுவே அவரது சாரம் என தோன்றுகிறது
இந்தவகையான அவதானிப்புகள்தான் இலக்கியவிமர்சனத்திற்கான தொடக்கங்கள். ஆனால் இதை மேலும் கூர்மையாக்கி, பொதுவான கொள்கையாக்கி உசாவிக்கொள்ளவேண்டும். ஏன் எழுத்தாளர்கள் தீமையை எழுதுகிறார்கள்? ஏன் அதில் ஏதாவது ஒளி தென்படாதா என ஏங்கி துழாவுகிறார்கள்? வேறு எழுத்தாளர்களுடன் சு. வேணுகோபாலை ஒப்பிட்டு அதை விரிவாக்கிக்கொள்ளலாம். எழுத்தாளர்கள் இருவகையில் மானுடக்கீழ்மையை எழுதுகிறார்கள். மானுடக்கீழ்மை என்பது மனிதனின் அகம் இயல்பாக வெளிப்படும் ஒர் உச்சம் என எண்ணும் படைப்பாளிகள் உண்டு. மானுட அறத்துக்கான தேடலில் மானுடக்கீழ்மையை கண்டு சீற்றம்கொண்டு எழுதுபவர்கள் உண்டு. சு. வேணுகோபால் எந்தவகை? அவரது கதைகளில் கீழ்மைச் சித்தரிப்பில் கண்டுகொண்டமையின் கொண்டாட்டமா அல்லது அறச்சீற்றமா எது வெளிப்படுகிறது?
ஒரு விமர்சனம் ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரிலிருந்து பொதுவான அறக்கேள்விகளை நோக்கிச் செல்லும்போதே ஆழமான விமர்சன ஆய்வாக ஆகிறது. இலக்கியவிமர்சனம் என்பது அபிப்பிராயம் என்பதிலிருந்து வேறுபடும் இடம் இதுவே. ஓர் எழுத்தாளனின் புனைவுலகிலிருந்து மேலெழுந்து அடிப்படை வினாக்களை எழுப்பிக்கொள்ளுதல், அந்த அடிப்படைவினாக்களை அந்தச்சூழல், அந்த மரபு எப்படி கையாண்டது என்பதைப் பார்த்து மதிப்பிடுதல், அந்தப்பின்புலத்தில் அந்த மரபில் அந்த எழுத்தாளர் எப்படி பொருள்கொள்கிறார் என்பதை மீண்டும் மதிப்பிடுதல் – இதுவே இலக்கியவிமர்சனத்தின் வழி
அப்படி எழுப்பிக்கொண்டால் சு.வேணுகோபாலை ஜி.நாகராஜன், கி.ராஜநாராயணன், கு.அழகிரிசாமி, புதுமைப்பித்தன் என ஒரு வரிசையில் நிறுத்திப்பார்க்கமுடியும். அறக்கேள்விகளை, மானுட இருண்மைகளை அவர் கையாளும் விதம் முன்னோடிகளிடமிருந்து எப்படி முன்னகர்ந்திருக்கிறது என்பதை நோக்கியிருக்கமுடியும். அந்தப்பயணம் மேலும் விரிவான ஒரு கட்டுரையாக ஆகி வாசகர்களுக்கு புதிய திறப்பை அளித்திருக்கும். இப்போது லண்டன்பிரபுவின் கூடிய கட்டுரை நல்ல வாசகனை “ஆம், நானும் அதையே நினைத்தேன்” என்று மட்டுமே சொல்லவைக்கும். அவர் ஓர் ஒட்டுமொத்தநோக்கை முன்வைத்திருந்தால் நல்ல வாசகன் விவாதிக்க எழுந்திருப்பான். அவனை தனக்குள்ளேனும் விவாதிக்க வைப்பதே விமர்சனத்தின் ஒரே நோக்கம்.
இலக்கியவிமர்சனத்தின் நோக்கமும் பணியும் படைப்பிலிருந்து எழும் சிந்தனைகளை விரித்து ஒட்டுமொத்த மரபை, முழுமையான சிந்தனைப்புலத்தை நோக்கி கொண்டுசெல்வதும் அங்கிருந்து பெற்ற முடிவுகளின் அடிப்படையில் அந்த நூலையும் ஆசிரியரையும் மீண்டும் மதிப்பிடுவதும்தான். தன் முடிவுகளை மட்டுமே சொல்வது எளிய மதிப்புரை மட்டுமே. லண்டன்பிரபு தொடர்ந்து எழுதவேண்டும்
சரி, ஒரு போட்டி வைப்போம். இந்தக்கட்டுரையில் இருந்து இதேவினாவை எழுப்பி மேலே சென்று ஒரு கட்டுரையை நண்பர்கள் எழுதமுடியுமா? மூன்றுகட்டுரைகளை இந்த தளத்திலே பிரசுரிக்கிறேன். பரிசாக என் நூல்கள் அனுப்பிவைக்கப்படும். 15 நாட்கள், ஜனவரி இருபத்தொன்றாம் தேதிக்குள் அனுப்பலாம்.
சு வேணுகோபால் சிறப்பிதழ் கட்டுரை லண்டன் பிரபு