வண்ணநிலவனின் பொருமல்

download

 

 

அன்புள்ள ஜெ,

துக்ளக்கில் வண்ணநிலவன் எழுதியதாக வெளியான “யாரோ சிலர்” என்ற பதிவு அந்த வாசகரால் புரிந்து கொள்ளப்பட்ட வடிவம் என்று நினைக்கிறேன்.

“சாகித்ய அகாடமியின் சரியான தேர்வு” என்ற தலைப்பில் துக்ளக்கில் வெளியான வண்ணநிலவனின் பதிவு “. . . அவரது இலக்கியச் செயல்பாட்டிற்காக, இந்த ஆண்டு வண்ணதாசனுக்கு இரண்டு விருதுகள் கிடைதுள்ளன. ஒன்று – கடந்த 21-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட சாகித்ய அகாடமி விருது. இன்னொன்று – அவ்வளவாக வெளியுலகத்துக்குத் தெரியாத, கோவை நண்பர்கள் வழங்கும் விஷ்ணுபுரம் விருது. விருதுகளால் வண்ணதாசன் கொண்டாடப்படுவது ஒன்றும் புதிதல்ல. ஏற்கெனவே இலக்கியச்சிந்தனை விருது, இளையராஜா அளிக்கும் பாவலர் விருது, கலைமாமணி விருது, சாரல் விருது, எஸ். ஆர். எம். பல்கலைக்கழகம் வழங்கும் விருது என்று பல விருதுகளை வாங்கிக் குவித்தவர்தான் வண்ணதாசன். இந்த விருதுகளை மட்டுமல்ல, மேலும் பல விருதுகளையும் அடைய அவருக்கு எல்லாத்தகுதியும் உண்டு. . . . . ”

அன்புடன்,

S பாலகிருஷ்ணன், சென்னை

***

மதிப்பிற்குரிய திரு. ஜெயமோகன் அவர்களுக்கு

வணக்கம்

விஷ்ணுபுரம் விருது விழா வெற்றிகரமாக நிறைவடைந்தது மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தருகின்றது.

விழா ஏற்பாட்டாளர்களுக்கும், களத்தில் பங்குபெற்று உதவிய அனைத்து நண்பர்களுக்கும், நன்றியையும், வணக்கங்களையும் சமர்ப்பிக்கிறேன்.

விழாவில் பங்கேற்க முடியாதது வருத்தமும், மனச்சோர்வும் தருகின்றது, கலந்து கொள்ள முடியாத காரணத்தை முன்பே தங்களுக்கு எழுதி இருந்தேன்,

திரு H. S. சிவப்ரகாஷ் அவர்களின் ஆளுமையையும், அவரின் சிந்தனை மரபையும், கருத்துக்களின் ஆழத்தையும், தவறவிட்டது, தனிப்பட்ட முறையில் எனக்கு பெரும் இழப்பு,

இந்த ஆண்டு உதகை காவிய முகாமில் பங்குபெற வேண்டும் என ஆர்வத்துடன் விரும்புகிறேன், இப்பொழுதே கோரிக்கையும் வைக்கிறேன், அனுமதி அளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

தங்கள் எழுத்துக்களில், பல இடங்களில் திரு. நித்திய சைதன்யா யதி பற்றியும், குருகுலம் பற்றியும், நீங்கள் குறிப்பிட்ட கருத்துக்கள் மற்றும் அனுபவங்கள், என் மனதில் ஒரு படிவமாக பதிந்தது, ஒரு உணர்வு சித்திரமாக நிலை பெற்று விட்டது, குருகுலத்தில் தங்களை சந்தித்து உரையாடி, முகாமின் இலக்கிய தீவிரத்தில் திளைக்க வேண்டும் என்று ஆவல்கொள்கிறேன்.

02 -01 -2017 இல், வந்த யாரோ சிலர்! பதிவு, சிறு ஏமாற்றும் அளிக்கின்றது,

துக்ளக் இதழில் :

இந்த ஆண்டு வண்ணதாசனுக்கு 2 விருதுகள் கிடைத்துள்ளன, ஒன்று சாகித்திய அகாடமி விருது, இன்னொன்று, அவ்வளவாக வெளியுலகத்துக்கு தெரியாத, கோவை நண்பர்கள் வழங்கும் விஷ்ணுபுரம் விருது, விருதுகளால் வண்ணதாசன் கொண்டாடப்படுவது ஒன்றும் புதிதல்ல, ,,,,,,,,,என்று செல்கிறது அந்த கட்டுரை பகுதி

இதில் எந்த இடத்திலேயும் அவர் விஷ்ணுபுரம் விருதை, குறை சொல்ல வில்லை என்றெ எண்ணுகிறேன்,

தங்களுக்கு எழுதிய நண்பர், ஆர்வத்தின் காரணமாக, அவசர கோலத்தில் அப்படி எழுதியிருக்கலாம் என்று எண்ணுகிறேன்.

அப்படி பட்ட ஒரு தவறான கேள்விக்கு, தங்களுடைய பதில், சிறு ஏமாற்றும் அளிக்கின்றது.

நான் திரு. வண்ணதாசனின் வாசகன் அல்ல,,அவரின் எழுத்தின் மேல் எனக்கு பெரும் ஈர்ப்பு இருந்தது இல்லை, அவர் மீது தங்கள் வைக்கும் விமர்சனைங்களை ஏற்கிறேன்.

ஆனால், நான் திரு, ஜெயமோகன் அவர்களின் வாசகன், அதனாலேயே எனக்கு என்று ஒரு வாசிப்பு தரம் இருக்கிறது என்று எண்ணுகிறவன் நான். அந்த தரம், சில ஆதாரமற்ற கேள்விகளுக்கான பதில்களால் சஞ்சலம் அடைவதை என் மனம் விருப்பவில்லை.

இதை ஒரு வேண்டுகோளாக முன்வைக்கிறேன்.

நன்றி

வே. அழகு மணிகண்டன்

***

அன்புள்ள ஜெ

வண்ணநிலவன் பற்றிய உங்கள் பதிவு வருத்தமளிக்கிறது. அந்தப்பதிவில் சொல்லப்பட்டிருந்த வரி வண்ணநிலவன் எழுதியது அல்ல. அதை முகநூலில் பிச்சைக்காரன் என்பவர் எழுதியிருந்தார். அவர் ஒரு வம்புப்பத்திரிகையில் வேலைபார்ப்பவர். நாலாந்தர கிசுகிசுக்களையும் திரிப்புகளையும் எழுதிவருபவர். உங்களைப்பற்றியும் நிறைய அவதூறுகளை எழுதியிருக்கிறார். அவரோ அல்லது வேறுயாரோ அதை உங்களுக்குக் கடிதமாகவும் எழுதியனுப்பிவிட்டார்கள். வண்ணநிலவன் உத்தேசித்தது அது அல்ல

செல்வக்குமார்

*

அன்புள்ள நண்பர்களுக்கு

வண்ணநிலவன் சென்ற பல ஆண்டுகளாக எழுதிவரும் ஒற்றைவரிக் குசும்புகளின், பொருமல்களின் ஒரு பகுதியாகவே நான் அந்த வரியை வாசித்தேன். இதை பொதுவாக உதாசீனம் செய்துவிட்டுச் செல்லலாம். அதுவே என் வழக்கம். ஆனால் இதுவே ஒருவகை ‘கருத்தாடலாக’ சென்றகாலச் சிற்றிதழ்ச் சூழலில் இருந்துவந்தது. அத்தகைய தருணங்களில் எல்லாம் நேருக்குநேராக நின்று அப்பட்டமாக உடைத்து பேசுவதையே மாற்றுவழியாக, சரியான முறையாக, நான் செய்திருக்கிறேன். சுந்தர ராமசாமி இப்படி பூடகமாக எழுதியபோதும்கூட.

வண்ணநிலவன் விஷ்ணுபுரம் விருதைப்பற்றி ஒரு வரி சொல்லத்தெரியாதவர் அல்ல. அது எவரால் ஏன் வழங்கப்படுகிறதென அறியாத அப்பாவியும் அல்ல. இது போன்ற தந்திரங்கள் உண்மையான தீவிரத்துடனும் அர்ப்பணிப்புடனும் செய்யப்படும் இலக்கிய முயற்சிகளை, அவற்றில் ஈடுபட்டுள்ள பலநூறு இளையதலைமுறையினரின் ஆர்வத்தைச் சிறுமை செய்பவை.

ஜெ

முந்தைய கட்டுரைவண்ணதாசன் ஆவணப்படம்
அடுத்த கட்டுரை’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 77