முக்குடையும் பீலியும்

unnamed

2007ல் கிருஷ்ணன் உள்ளிட்ட ஈரோட்டு நண்பர்கள் அறிமுகமானபோது ஆண்டுக்கு இருமுறை ஈரோடு செல்லும் வழக்கமிருந்தது. அப்போது ஒருமுறை நண்பர்களுடன் இருசக்கரவண்டிகளில் விஜயமங்கலம், அரச்சலூர் உள்ளிட்ட சமணத்தலங்களுக்குச் சென்றிருந்தோம். இப்பகுதிகளில் எஞ்சியிருக்கும் ஓரிரு சமணர்களும் இந்துமதத்திற்கு மாறிவிட ஆலயங்கள் பெரும்பாலும் பூட்டியே கிடக்கின்றன. சில கோயில்களில் சமணதெய்வங்களுக்கு உள்ளூர் இந்துதெய்வங்களின் பெயர்களைச் சூட்டி வழிபடுவதும் நிகழ்கிறது

அன்று சமணம் பற்றி நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். சமணத்தின் மையக்கொடை என்பது இந்தியா முழுக்க வணிகப்பாதைகளை உருவாக்கி ஒரு மாபெரும் குருதியோட்டத்தை அமைத்ததுதான் என்று நான் சொன்னேன். சமணத்தின் அகிம்சைக்கொள்கை இந்தியாவெங்கும் பரவியிருந்த பல்லாயிரம் தொல்குடிகளை அவர்களுக்கிடையேயான பூசல்களை அகற்றி ஒருங்கிணையச் செய்தது. பண்பாட்டுப்பரிமாற்றத்தையும் வணிக ஊடாட்டத்தையும் உருவாக்கியது

சமணமதத்தின் இக்கொள்கை வணிகர்களின் வளர்ச்சிக்குச் சாதகமாக இருந்தமையால் வணிகர்கள் சமணத்தை வளர்த்தனர். இவ்வாறாக வணிகமதமாக சமணம் இந்தியாவில் படர்ந்தது. அரசர்கள் சமண மதத்தை தழுவினார்கள். ஏனென்றால் போரில்லாமலேயே நாடுகள் ஒருங்கிணைந்தன. கொள்ளை இல்லாமலேயே வரிவசூல் மூலம் கருவூலம் நிறைந்தது. இந்தியா தீர்த்தங்காரர்களின் பெருங்கருணை அளித்த கொடை

இன்றுகூட வடகிழக்கு மாநிலங்களின் பிரச்சினை இதுவே எனக்காணலாம். இந்துமதம், பௌத்தம் போன்ற பெருமதங்கள் வேரூன்றிய நிலங்களில் இனக்குழுப்பூசல்கள் இல்லை. மதம் அவர்களை ஒரு பெருந்தொகுப்புக்குள் அடுக்கி ஓர் ஒழுங்கை உருவாக்கிவிடுகிறது. இனக்குழுமதங்கள் ஓங்கிய பகுதிகளில் தீராமோதலும் குருதிவீழ்தலுமாகச் சென்றுகொண்டிருக்கிறது வரலாறு.

அந்த உரையாடலின் ஒரு பகுதியாக நான் சமணர்களின் ஐந்தறம் குறித்துச் சொன்னேன். உணவு, உறைவிடம், கல்வி, மருத்துவம், அறமுரைத்தல் என ஐந்து கொடைகளை அவர்கள் தங்கள் அடிப்படை அறச்செயல்களாகக் கருதினார்கள். சமண முனிவர்கள் படுக்கும் இடமே பள்ளி. பள்ளை என்றால் விலா. பள்ளி என்றால் படுப்பது [பள்ளியானையின் உயிர்த்து—கபிலர் குறுந்தொகையில்] சமணர்களின் குகையிடங்களில் படுப்பதற்கான பாறைவெட்டுக்களை அரசரும் வணிகரும் அமைத்துக்கொடுத்தனர். அவை பள்ளித்தலங்கள் என்று சொலப்பட்டன. அங்கே கல்வி அளிக்கப்பட்டமையால்தான் நாம் கல்விகற்குமிடத்தை பள்ளி என்று சொல்லத் தொடங்கினோம்.

இந்துமதம் அல்லாத மதங்களின் கூட்டுவழிபாட்டிடங்களை இங்கே பள்ளி என்று சொல்வது சமணச்சொல்லாட்சியிலிருந்து வந்ததே. கிறித்தவ இஸ்லாமிய வழிபாட்டிடங்களை பள்ளி எனச் சொல்வதுண்டு. உலகின் முதல் ‘மிஷனரி மதம்’ சமணம்தான். சேவை வழியாக மதக்கருத்துக்களை கொண்டுசென்று சேர்ந்த்தனர். இந்தியாவெங்கும் அவர்களின் மையங்கள் அன்னசாலைகள் என்றே அறியப்படுகின்றன. அன்னவாசலும் சித்தன்ன வாசலும் இன்றும் அவர்களின் மையங்களாக அறியப்படுகின்றன

சமணர்களால் உருவாக்கப்பட்ட அறச்சாலைகள் ஒருவர் ஒருநாளில் நடக்கும் தொலைவுக்கு ஒன்றென்று இந்தியா முழுக்க உள்ளன என்று வாசித்திருந்தேன். அதைச் சொன்னபோது உண்மையிலேயே அப்படி இருக்கின்றனவா, இன்று எப்படி இருக்கின்றன என்று பார்க்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஐந்து ஆண்டுகள் கழித்து 2102ல் தான் அப்பயணம் சாத்தியமானது. ஜனவரி 15 ஆம் தேதி ஈரோட்டிலிருந்து கிளம்பினோம். நான், கே.பி.வினோத்,கிருஷ்ணன், ராஜமாணிக்கம், முத்துகிருஷ்ணன், கே.வி.அரங்கசாமி, கடலூர் சீனு ஆகியோர். வழியில் அரங்கசாமி இறங்கிக்கொள்ள செந்தில்குமார் தேவன் சேர்ந்துகொண்டார்.

நாங்கள் எண்ணியதற்கு மாறாக இந்தியா முழுக்க சமணர்களின் அறச்சாலைகள் செயல்பட்டுக்கொண்டிருந்தன என்பதுதான் எங்கள் பயணத்தின் கண்டடைதல். பெப்ருவரி 13 வரை நீண்ட ஒருமாதகாலப் பயணத்தில் மிகக்குறைவாகவே நாங்கள் வெளியே தங்க நேர்ந்தது. பெரும்பாலும் சமண அறநிலைகளில் இலவசமாக உணவும் உறைவிடமும் கிடைத்தது. எங்கள் பயணநோக்கம் கூட அவர்களால் கேட்கப்படவில்லை. சில இடங்களில் எங்களுக்காக மட்டுமே சமைத்தனர். ஆளரவமில்லா மலைகளின் அடியிலிருந்த சமணநிலைகளில் எங்களுக்காகவே துப்புரவுசெய்து தங்கவைத்து உபசரித்தனர். காருக்கான செலவைத்தவிர்த்தால், உணவு, உறைவிடம் வழியில் டீ சாப்பிட்டதெல்லாம் சேர்த்து தலைக்கு 2500 ரூபாய்தான் மொத்தச்செலவு.

இன்று நினைக்கையில் சிலிர்க்கச்செய்யும் பயணமாக இருக்கிறது இது. பின்னர் எத்தனையோ பயணங்கள். ஆனால் இந்தப் பயணம் அளவுக்கு எதுவுமே முழுமையானதாக அமையவில்லை. முற்றிலும் அறியப்படாத ஒரு வரலாற்றினூடாகச் சென்றதுதான் அந்த முழுமைக்கான காரணம். பல சமண ஆலயங்களில் நாங்கள் மட்டுமே இருந்தோம். பலவற்றை வழிவிசாரித்துத் தேடி அலைந்து கண்டுபிடித்தோம். பல இடங்களில் வழி தவறினோம். எதிர்பாராத ஆச்சரியங்கள் எங்கும் இருந்தன. பொதுவரலாறு மறந்துவிட்டுக் கடந்துசென்ற மாபெரும் பண்பாட்டுச்சின்னங்கள், மகத்தான கலைக்கூடங்கள். இன்று ஒரு பெரும் கனவுபோலிருக்கிறது அப்பயணம்

இக்கட்டுரைகளை திருத்தி எழுதி நூலாக்கவேண்டுமென்றே இத்தனைநாள் காத்திருந்தேன். ஆனால் திருத்தி எழுதமுடியவில்லை. காரணம் அந்த மனநிலைக்குள் மீண்டும் செல்லமுடியவில்லை. ஒவ்வொருநாளும் பயணம் முடிந்து வந்து நீராடிவிட்டு அமர்ந்து அன்றைய அனுபவத்தை எழுதி இணையத்தில் ஏற்றிவிட்டுத் தூங்கச்செல்வேன். பலசமயம் கொந்தளிப்பான பதிவாக இருக்கும். சிலசமயம் வெறும் குறிப்புகளாக எஞ்சும். இயல்பாகவே இவை அந்தந்த நாளின் மனநிலையை பிரதிபலித்தன. இலக்கிய ஆக்கமாக இவற்றின் மதிப்பு என்னவென்று தெரியவில்லை, இப்படி ஒருவகையான கச்சாத்தன்மையுடன் இருப்பதே சரியான பதிவு என்று இப்போது படுகிறது

இந்நூலை என் அன்புக்குரிய குமரகுருபரனின் நினைவுக்குச் சமர்ப்பிக்கிறேன்.

ஜெயமோகன்

முந்தைய கட்டுரைபணமில்லா பொருளியல் -எதிர்வினைகள்
அடுத்த கட்டுரைசென்னை கொண்டான்