யாரோ சிலர்!

download

 

ஜெ,

துக்ளக்கில் வண்ணநிலவன் எழுதியது இது..

வண்ணதாசன் பல விருதுகளைப் பெற்றவர்.. இவ்வாண்டு கோவையை சேர்ந்த யாரோ சிலர் நடத்தும் விஷ்ணுபுரம் எனும் அமைப்பின் விருது கிடைத்தது

உங்களைப்பற்றி அவரிடம் எடுத்துச் சொல்ல நான் சென்னை செல்லலாம் என நினைக்கிறேன்

ஜெயராமன்

*

அன்புள்ள ஜெயராமன்,

இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்பு நான் ஒரு விமர்சனக்குறிப்பு எழுதினேன். வண்ணநிலவன் கதைகள் சுந்தர ராமசாமி உட்பட பிராமணர்களால் சில குறிப்பிட்ட பிராமணக் கதாபாத்திரச் சித்தரிப்பு காரணமாக கொண்டாடப்பட்டவையே ஒழிய கணிசமான கதைகள் உளவியல் நுட்பமோ பார்வை விரிவோ இல்லாத செண்டிமெண்ட் படைப்புகள்தான். வார இதழ் கதைகளின் இன்னொரு வடிவங்கள் அவை. தளுக்கான ஆண்பெண் உறவுகளை மட்டுமே வாசிப்பதில் ஆர்வம் கொண்டு எழுந்துவந்த ஒரு தலைமுறையை அவை கவர்ந்தன – என்று .. அன்று ஆரம்பித்த மனச்சிக்கல் இது

பொதுவாகவே ‘நான்லாம் ஒண்ணுமே இல்லீங்க’ என்று ஆரம்பிக்கும் அதீதப்பணிவு, தன்னிரக்கம் ததும்பும் எளிமை போன்றவற்றை நடிக்கும் இவ்வகை மனிதர்கள் வன்மங்களை ஆண்டுக்கணக்காக சுமந்துகொண்டு அலைவதைக் காணலாம். இன்றுவரை இந்த பிள்ளைப்பூச்சி படும் பாடை பார்க்கையில் அப்படி கறாராக எழுதியிருக்கவேண்டாமோ என்ற இரக்கமே ஏற்படுகிறது. அது எதையும் முடிந்தவரை கூர்மையாக சொல்லவேண்டும் என்ற வெறி இருந்த காலம். இவர்கள் எழுதும் பல்லிமிட்டாய்களையே சப்பிக்கொண்டிருந்த ஒரு வாசகச்சூழலை உடைக்கவேண்டியிருந்த கட்டாயம். சரிதான், இனி ஒன்றும் செய்வதற்கில்லை..

ஜெ

 

முந்தைய கட்டுரைஆசிரியனின் பீடம்
அடுத்த கட்டுரை’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 76