அன்பின் ஜெ..
முதலில் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தி விடுகிறேன். நான் தாள் பணம் இல்லாப் பொருளியலுக்கு எதிரானவன் இல்லை. இணையப் பொருளாதாரப் பரிவர்த்தனையின் பெரும் நுகர்வோன். மாதந்தோறும் தான்ஸானியாவில் இருந்து சென்னைக்குப் பணம் அனுபுவதில் துவங்கி, எனது இந்திய மொபைல் எண்ணுக்கான பில், ரயில், விமான டிக்கட்டுகள், என மகனுக்கு சில சமயம் ஃபிளிப் கார்ட்டில் பணம் கட்டுவது வரை செய்கிறேன். என் போன்ற சந்தைப் பொருளாதார நெடுஞ்சாலையில் பயணிப்பவர்க்கு, இது பெரும் வசதி.
ஆனால், தான்ஸானியாவில் எனது அனைத்துப் பரிவர்த்தனைகளும் பணத்தில் தான். எனது வங்கி அட்டைகளை கடந்த 1 ஆண்டில் ஒரு முறை உபயோகித்திருக்கிறேன். பரிவர்த்தனைகளில் பாதுகாப்பின்மை காரணம்.
இப்போது அரங்கசாமியின் கடிதத்துக்கான பதில்:
- மொபைல் வழிப் பரிமாற்றம்:
ஆஃப்பிரிக்காவில் மொபைல் வழிப் பணப்பரிமாற்றத்தைத் துவங்கியது வோடாஃபோன் நிறுவனம். ஏர்டெல்லும் நடத்துகிறது.
இதுபற்றிய கருத்துக்களை குழுமத்தில் எழுதியிருந்தேன். அக்காலகட்டத்தில் அண்ணன் அரங்கசாமி, மோதியின் ஆபத்துதவியாக, முக நூலில் களமாடிக் கொண்டிருந்தார். கவனிக்க வில்லை எனக் கருதுகிறேன்.
ஆஃபிரிக்காவில் வங்கிகள் அதிகம் இல்லை. எனது நிறுவனத்துடன் வியாபாரம் செய்யும் மிகப் பெரும் வங்கிக்கு, டார் எஸ் ஸலாம் தவிர வெளியூரில் உள்ள கிளைகள் 40 மட்டுமே. இந்தியாவில் 25-30 சத நிலப் பரப்புள்ள நாட்டுக்கு இது கொஞ்சம் கூட பத்தாது. எனவே, வோடஃபோன் இச்சேவையை அறிமுகப் படுத்தியவுடன் பற்றிக் கொண்டது. இது முதலில் கென்யாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
வங்கிகள், இச்சேவைக்கு 2% வசூலிக்கிறார்கள். டார் எஸ் ஸலாமில் ஒரு தொழிலாளியின் மாத வருவாய் – 500000 ஷில்லிங். அதில் அவர் 300000 ஷில்லிங் தன் வீட்டுக்கு அனுப்ப வேண்டுமெனில்
2% வங்கிச் சேவைக்கு என 6000 ஷில்லிங் தருகிறார். இதை விடச் செலவு குறைவாக அவர் வீட்டுக்குப் பணம் அனுப்ப முடியாது.
ஆனால், இது முதல் நிலைப் பணப்பரிவர்த்தனை மட்டுமே. இதை ஊரில் உள்ள அவர் மனைவி, மொபைல் வழியாகப் பணமாகப் பெற்றுக் கொள்கிறார். அங்கிருந்து, அவரின் பணப்பரிவர்த்தனை முழுவதும் காகிதப் பணத்தில் தான்.
எனது நிறுவனத்தில் 109 பெரும் வண்டிகள் உள்ளன. அவை தான்ஸானியாவின் மூலை முடுக்கெங்கும் உள்ள அங்காடிகளுக்குப் பொருட்களை நேரில் கொண்டு விற்கின்றன. 100% விற்பனை, தான்ஸானியாவின் வருவாய்த் துறையுடன் இணைக்கப்பட்ட மின்ணணுக்கருவியின் வழியாக. ஆனால், அதற்கான பணம், காகிதமாகத் தான் பெறப்படுகிறது. நிறுவனத்தின் வருட வருமானம் 130 பில்லியன் ஷில்லிங் ( கிட்டத்தட்ட 390 கோடி. இதில், பணமாக நாங்கள் நிகழ்த்தும் வியாபாரத்தின் மதிப்பு 275 கோடி).
இந்தப் பணத்தை எங்கள் விற்பனைப் பிரதிநிதிகள் அலுவலகத்திற்குக் கொண்டு வரும் வழியில் சில முறை கொள்ளையடிக்கப்படுகின்றன. சில முறை, பணத் தேவை காரணமாக, எங்கள் ஊழியர்களே எடுத்துக் கொண்டு மறைந்து விடுவார்கள். கொள்ளையும் திருட்டும் பெரும் அகௌரவமான காரியங்கள் என கருதப்படுவதில்லை இங்கே. வருடம் இவ்வாறு, நாங்கள் இழக்கும் தொகை 150 மில்லியன் (45 லட்சம்).
நான் இங்கே சேர்ந்த புதிதில், கேஷ்லெஸ் / டிஜிடல் என உணர்ச்சி வசப்பட்டு, உள்ளூர் மொபைல் நிறுவனங்களை அணுகி, நாங்கள் வருடம் 90 பில்லியன் ஷில்லிங் பணமாக புழங்குகிறோம். அவை பாதுகாப்பான முறைகள் அல்ல என்பதால், உங்கள் சேவைகளை உபயோகிக்கலாம் என்று பேசினோம். அவர்கள் சேவைக்கு 2% செலவு ஆகும் என்றார்கள்.
”அய்யா, நாங்கள் சில்லறைப் பணமாற்றம் பேச வில்லை.. 91 பில்லியன்” என்றோம்.
அவர்கள் தங்கள் மேலதிகாரிகளிடம் பேசி, சேவைக் கட்டணத்தை 1.90% ஆகக் குறைத்தார்கள். அதாவது, 91 பில்லியன் ஷில்லிங் புழக்கத்துக்கு, இவர்கள் சேவைக்கு நாங்கள் செலுத்த வேண்டிய தொகை 890 மில்லியன் ஷில்லிங்(2.6 கோடி ரூபாய்). இதற்கு உள்ளூர்க் கொள்ளையர்களே மேல் என விட்டு விட்டேன்.
தான்ஸானியாவில் எங்களது நிறுவனம் பெரும் புகழ் பெற்ற நிறுவனம். இச்சந்தையில் 78% எங்கள் பற்பசை உபயோகிக்கப் படுகிறது. நாங்கள் பணமாகப் புழங்கும் சதவீதம் 70%.
ஆஃப்பிரிக்காவில் பணப் புழக்கம் இந்தியாவை விட மிக மிக அதிகம். அமெரிக்காவிலும் 45%. எனவே, இவர் சொல்லும் மொபைல் வழிப் பரிமாற்றம் ஓரிரவில், காகிதப்பணத்தை மாற்றியமைக்காது. அதற்குக் காலம் பிடிக்கும். அவ்வகைப் பரிமாற்றம் மக்களுக்கு நன்மையளித்தால், மாற்றம் மிக வேகமாக இருக்கும். ஆஃப்ரிக்கா போல.
- தொழிலதிபர்களுக்கு வரும் விவசாயக் காதல்:
வேளாண்மைக்கு வருமான வரி விதிக்கக் கூடாது என்பது எனது உறுதியான நிலைப்பாடு. 80% க்கும் மேலான விவசாயிகள் 2 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கும் இந்நாட்டில், அது வெறும் காகித விதியாகத்தான் இருக்கும். ஒரு பைசா வருமான வரியாக வராது.
1950 களில் 17 மில்லியன் டன்னாக இருந்த பால் உற்பத்தி, இன்று 150 மில்லியன் டன். 2-3 கால்நடைகள் வைத்திருக்கும் விவசாயிகள் செய்த உற்பத்தி. இன்று உலகின் மிகப் பெரும் பால் உற்பத்தியாளர் இந்தியா. இதற்குக் காரணம், பாலை உற்பத்தி செய்தால், நிச்சயம் ஒரு அதிக மாற்றமில்லாத விலைக்கு விற்க முடியும். விற்ற பணம் வாராவாரம் வீட்டுக்கு வந்து விடும். கரும்பு உற்பத்தியில், இந்தியா சில ஆண்டுகள் முன் வரை, உலகின் மிகப் பெரும் உற்பத்தி நாடாக இருந்தது. ஏனெனில், உற்பத்தி செய்த பொருள் நிச்சயமாகக் கொள்முதல் செய்யப்படும் என்பதும், பணம் கிடைக்கும் என்பதும்தான்.
உற்பத்தியை ஓரளவு சரியான விலையில் விற்கும் வாய்ப்பும் உடனடிப் பணமும் பெறும் வாய்ப்பும் இருந்தாலே இந்திய வேளாண்மை எழுந்து உட்கார்ந்து விடும்.
இரண்டாவது, இந்திய வேளாண்மையில், தொழிலதிபர்களின் பங்கு.
இதுவரை, இந்திய வேளாண்மைப் பொருளாதாரத்தில், நேரடியாக வேளாண்மையில் ஈடுபட்ட நிறுவனங்கள் காஃபி மற்றும் டீத் தொழிலில் ஈடுபட்டன. டாட்டா / ஹிந்துஸ்தான் லீவர் / கைத்தான் போன்றவர்கள். இதில் 2005 ல், டாட்டா நிறுவனம், டீ உற்பத்தியில் ஈடுபடுவது, லாபமில்லா ஆட்டம் என, தனது எஸ்டேட்களை, தொழிலாளர்களுக்கே விற்று விட முடிவு செய்தது.
http://www.thehindu.com/2005/02/12/stories/2005021203021500.htm
1999 ல், 27 மாஞ்சோலை கண்ணன் தேவன் டீ எஸ்டேட் தொழிலாளிகள் ஒரு போராட்டத்தில் நெல்லையில் மரித்தது நினைவிருக்கலாம். அதன் பின் விளைவு இது. தொழிலாளிகளுக்கு அதிகக் கூலி கொடுக்க முடியவில்லை. அதற்கான விற்பனை விலை சந்தையில் இல்லை.
உற்பத்தியை விட, ப்ராண்ட் செய்வதும், விற்பனை செய்வதும் அதிக லாபகரமானது என்பதை டாட்டா நிறுவனம் ஒத்துக் கொண்டு விலகியது.
மேற்கத்திய நாடுகளில், வேளாண்மையில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. அதனால், பெரும் பண்ணைகள் சாத்தியமாகின்றன. அங்குமே, வேளாண்மை பெரும் லாபகரமானதல்ல. அரசு மானியங்கள் இல்லையேல் மரித்துவிடும்.
இந்திய வேளாண்மை, கோடிக்கணக்கான சிறு விவசாயிகளின் வாழ்க்கையோடு தொடர்புடையது இது. நிலக் கொள்முதல் அதிக விலையும், பெரும் சிக்கலும் கொண்டது. (பூர்வாசிரமத்தில், பெரும் நிறுவனம் ஒன்றின் ஏற்றுமதி வேளாண்மைத் திட்டத்துக்கான நிலக் கொள்முதல் செய்த அனுபவம் உண்டு). ஷிமோகாவில் சர்க்கரை ஆலை 4000 ஏக்கர் நிலம் வைத்திருந்தது. கரும்பு உற்பத்திக்காக. ஆனால், அவர்களால், தொடர்ச்சியாக, அந்நிலத்தை உபயோகித்து கரும்பு உற்பத்தியில் ஈடுபட முடியவில்லை.
ஏனெனில், 9 மணிக்குத் துவங்கி 5 மணி வரை அலுவலகம் போல் செய்யப்படுவதல்ல வேளாண்மை. இன்று அது, விவசாயிக்கு வேறு வழியில்லாததல் பெரும்பாலும் செய்யப்படுகிறது. நிலத்தின் விலையைக் கணக்கில் கொண்டால், வேளாண்மை ஒரு லாபகரமான தொழில் அல்ல.
இன்று வேளாண்மைக்கு வருமான வரி இல்லை என்னும் விதியைப் பயன்படுத்தித் தப்பாட்டம் ஆடுபவர்கள் பெரும் தொழிலதிபர்களும், அரசியல்வாதிகளும்.. தில்லியின் ஃபார்ம் ஹவுஸஸ், சுப்ரியா சூலே, ஜெயலலிதாவின் திராட்சைத் தோட்டம் முதலியவை இதில் அடங்கும். எனவே வேளாண்மைக்கு இருக்கும் வரிவிலக்கைப் பயன்படுத்துபவர்கள். ஒரு தொழிலையும், வரி ஏய்க்க வேளாண்மையையும் செய்பவர்கள். இவர்களுக்கு வேளாண்மையின் மீது இருப்பது காதலல்ல. நிலமதிப்பின் மீதுள்ள காமம். வரி ஏய்ப்பு வசதியின் மீதுள்ள மோகம்.
தாழ்மையுடன் வேண்டிக் கேட்டுக் கொள்வதெல்லாம், அய்யா விவசாயிகள் பாவம். பெரும் தொழிலதிபர்களாகிய உங்களுக்குப் பல நூறு வழிகள் உள்ளன. அவர்களை விட்டு விடுங்கள்.
நிதியமைச்சரிடம் கேட்டுக் கொள்வது, இதுவரை, இந்த இரட்டைத் தொழில் அதிபர்கள் செய்வதெல்லாம், வரி ஏய்ப்பு. தயங்காமல், இரண்டாவது தொழிலாக வரும் விவசாய, வருமானத்துக்கு வரி விதியுங்கள். ஏற்கனவே விவசாயத்துக்கு வரிவிதிக்க வேண்டுமென, நகர்ப்புர மக்கள் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். முதல் நிலையில், இவர்கள் மீது வரிவிதியுங்கள்.
அடுத்த நிலையில், உண்மையிலேயே வரி விதிக்கும் அளவுக்கு விவசாயிக்கு வருமானம் வருகிறதா என அவர்கள் கோவணத்தைக் கூட விடாமல் சோதனை செய்யுங்கள். இருந்தால், அவர்களுக்கும் வரி விதியுங்கள்.
அடுத்ததாக ஜெயராமனின் கடிதம் – நன்றி.
எனது கட்டுரையைப் படித்தால், அது பணமில்லாப் பொருளாதாரத்துக்கு எதிரானதல்ல எனப்து புரியும். ஆனால், அதுதான் இந்தியாவை மாற்றப்போகிறது என இன்றைய சூழலில், வலுக்கட்டாயமாகத் திணிக்கப் பட்டால், அது பொருளாதாரத்தின் கீழ் நிலையில் இருக்கும் மக்களைத் தான் பாதிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதனால், சொல்பவரின் கிரடிபிலிட்டி பாதித்தால் ஒன்றும் கெட்டுவிடப் போவதில்லை. இந்தக் கூப்பாடுதான், பிரதமரின் புத்தாண்டுச் செய்தியைப் பாதித்திருக்கிறது. அமர்த்தியா சென்னின் / மன்மோகன் சிங்கின் கிரடிபிலிட்டி இதனால் கீழிறங்கிவிடப் போவதில்லை.
பணம் என்பது பொருளாதாரச் செயல்பாட்டை பரிமாறிக் கொள்ளும் ஒரு கருவி. படகுக்குத் துடுப்பு போல. ஆனால், மரத்துடுப்புக்குப் பதிலாக, ஃபைபர் க்ளாஸ் துடுப்பைக் கொடுத்தால், அது படகை வேகமாகச் செலுத்த உதவும். ஆனால் அது பொருளாதாரத்தையே மாற்றியமைக்கும் எனச் சொல்லும் வாதத்தின் எல்லைகளை அறிந்து கொள்வது நல்லது.
2 G ஊழலில், அரசுக்கு 1,70000 கோடி வருமான இழப்பு என்ற ஆடீட்டரின் குரல் கேட்டு இந்தியா உணர்ச்சி வசப்பட்டது.
மோதியின் இத்திட்டத்தால் 1% பொருளாதர வளர்ச்சி குறைந்தாலும், இதே அளவு மதிப்பு குறைகிறது என்பதையும் உணர்ந்தால், இதன் மீது வைக்கப் படும் விமர்சனங்களுக்குப் பதிலளிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
பாலா
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்! நான் உங்கள் நெடுநாளைய வாசகர். எதோ எனக்கு தோன்றியதை இங்கு பகிர்ந்து இருக்கிறேன், தப்பு இருந்தால் மன்னிக்கவும்.
தாளில்லாத பொருளியல் நுகர்வு கலாச்சாரத்தையும், பதுக்கல்களையும் அதிகப்படுத்தும். எல்லா தகவல்களும் ஓரே இடத்தில் இருப்பதினால், அறிவும், பேராசை பிடித்தவர்களும் எங்கு, எப்போது, எது தேவை என கண்டுபிடித்து, பதுக்கி பின் விலையேற்றி விற்பார்கள். இதுதான் முகநூல், வாட்ஸ்அப், டிவிட்டர் வியாபரமே.
சாதரண மக்களுக்கு பணத்தின் மதிப்பு தெரியாமல், வரவுக்கு மேல் செலவு செய்ய வைத்து, மேலும் கடன் கொடுத்து அவனை நிரந்தர கடனாளியாக்கி அவனை ஓட ஓட வேலை செய்ய வைப்பார்கள். இதுதான் இன்று அமெரிக்காவில் நடந்து கொண்டு இருக்கிறது. கார்ப்பரேட் மக்களின் நோக்கமே அவர்களின் கடையிலோ அல்லது இணையதளத்திலோ நுழைந்தவுடன், உங்களின் மனதை அவர்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடுவார்கள். உங்களை அடித்து, உதைத்து பிடுங்குவதை விட இது மோசம்.
இதை நான் முழுமையாக எதிர்க்கவில்லை, ஆனால் சாதாரண மக்களுக்கு தேவை இல்லை.
நன்றி!
அசோக்.