’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 75

[ 24 ]

காலையில் பார்வதி அர்ஜுனனைத் தொட்டு “புலர்கிறது, இங்கு மிக முன்னதாகவே காலையொளி எழுந்துவிடும்” என்றாள். அவன் திடுக்கிட்டு விழித்தெழுந்து உடல்நடுங்க காய்ச்சல் படர்ந்த விழிகளால் அவளை நோக்கினான். “என்ன?” என்றாள். “இல்லை” என அவன் தலையசைத்தான். அவன் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. “என்ன?” என அவள் மீண்டும் கேட்டாள். அவன் தலையை அசைத்தபடி எழுந்து அமர்ந்தான். “கனவில் இருந்தீர்களா?” அவன் ஆம் என தலையை அசைத்தான். “என்ன கனவு?” என்றாள். அவன் தலையை அசைத்தபடி புரண்டு அமர்ந்து அவள் திறந்துவைத்திருந்த சாளரத்தினூடாக வெளியே வெண்ணிற வானம் தெரிவதை நோக்கினான்.

அவள் “நீங்கள் கிளம்பலாம். இன்னும் சற்றுநேரத்தில் எங்கள் ஊர் துயிலெழுந்துவிடும்” என்றாள். ஆடையணிந்து மென்மயிர் மேலுடையின் தோல்நாடாவை கட்டாமல் விட்டிருந்தாள். இருகைகளையும் தூக்கி கூந்தலை அள்ளிச் சுழற்றி முடிந்தபடி “இப்போது பனிமேல் ஒளி படர்ந்திருக்கிறது. வெண்திரை. எவரும் பாராமல் கிளம்பிச் சென்றுவிடமுடியும்” என்றாள். அவள் விழிகளை நோக்காமல் அவன் அந்தச் சாளரத்தையே நோக்கிக்கொண்டிருந்தான். அந்த அறை நீருக்குள் இருப்பதுபோல நெளிந்துகொண்டிருந்தது. காலையொளி சாளரத்தில் எழுந்தபின்னரும் பறவைகளின் ஒலியே இல்லாமலிருப்பது விந்தையாக இருந்தது.

“கிளம்புங்கள்” என்றாள். அர்ஜுனன் “உன் தந்தையும் தமையன்களும் எழட்டும்… அதன்பொருட்டே காத்திருக்கிறேன்” என்றான். ஒரு கணம் அவள் விழிகள் நிலைத்தன. பின்னர் புன்னகையுடன் “நன்று” என்றாள். அர்ஜுனன் “அவர்கள் எவரும் இறந்துவிடமாட்டார்கள்” என்றான்.  “தெரியும்” என்று அவள் புன்னகையுடன் சொன்னாள். அர்ஜுனன் “வேறென்ன தெரியும்?” என்றான். “நீங்கள் வெல்வீர்கள்” என்றாள். “எப்படி?” என்று கேட்டபடி அவன் கைகளை தலைக்குமேல் கோத்துக்கொண்டான். “நீங்கள் எப்போதும் வெல்பவர்.”

அர்ஜுனனின் விழிகள் சுருங்கின. அவள் “உங்கள் நடத்தையிலிருக்கும் நிமிர்வு அதைத்தான் காட்டுகிறது. சிலருக்கு ஊழ் அவ்வாறு அமைகிறது, அவர்கள் வெற்றியன்றி எதையும் அடைவதே இல்லை” என்றாள். அவனை அவள் அறிந்துகொள்ளவில்லை என உணர்ந்ததும் அவனுக்கு ஒளிந்திருக்கும் உவகை ஒன்று ஏற்பட்டது. “நேற்று நான் இங்கிருந்து கிளம்பிச்சென்றேன்” என்றான். அவள் “என்னை விட்டுவிட்டா?” என்றாள். “ஆம்” என்றான் அர்ஜுனன். “என்னிடம் கிளம்பிச்செல்லும்படி அறிவுறுத்தினார் வணிகர்தலைவர். செல்லும் வழியில் சிலர் என்னை அச்சுறுத்தினர். அவர்களை வென்றுவிட்டு திரும்பிவந்தேன். ஏனென்றால் அச்சுறுத்தலுக்குப் பணிவது என் இயல்பல்ல.”

“என் தமையனாகத்தான் இருக்கவேண்டும்” என்று அவள் சொன்னாள். “அவர் இன்னமும் வீடுதிரும்பவில்லை.” அர்ஜுனன் “அஞ்சவேண்டியதில்லை, அப்பாதையில் முதல் நடமாட்டம் தொடங்கும்போது விடுவிக்கப்படுவார். குளிருக்கான ஆடைகளும் அவர்கள் உடலில் இருந்தன” என்றான். அவள் கண்களின் முனையிலிருந்த மெல்லிய நகைப்பு அவனை புன்னகைக்க வைத்தது. “உனக்கு அவரை நான் வென்றது உவகையூட்டுகிறதுபோலும்” என்றான். “இல்லை என்று சொல்வேன் என நினைக்கிறீர்களா?” என்றாள். அவன் நகைத்தான்.

“உண்மையிலேயே பிடித்திருக்கிறது. ஆண்மான்கள் கொம்புகோப்பதை பெண்மான்கள் நின்று  விரும்பி நோக்குவதை கண்டிருக்கிறேன்” என்றாள் அவள். வெளியே குரல்கள் கேட்கத்தொடங்கின. “நன்று, முதற்புலரியிலேயே வணிகர்கள் அவ்வழி சென்றுவிட்டார்கள்” என்றபடி அர்ஜுனன் எழுந்தான். தன் ஆடையை அணிந்துகொண்டு வில்லை வலத்தோளிலிட்டு அம்புத்தூளியை இடத்தோளிலிட்டபடி கதவைத்திறந்து வெளியே சென்றான். அங்கிருந்த இரண்டு முதியபெண்கள் அலறியபடி எழுந்துகொண்டனர். அறைகள் தோலுறையிடப்பட்டவை என்பதனால் ஒலி வெளியே வருவதில்லை என எண்ணிக்கொண்டான். முகப்புக் கதவைத்திறந்து திண்ணையில் இறங்கினான்.

பெண்களின் அலறலோசை கேட்டு எழுந்து திரும்பியவர்கள் உள்ளிருந்து அவன் வருவதை கண்டார்கள். கூச்சல்களுடன் பலர் வேல்களைத் தூக்க அர்ஜுனன் அவர்களை நோக்கி விழிகளை திருப்பவில்லை, ஆனால் அவன் உடல்விழிகள் அவர்களை நோக்கிவிட்டன. முந்தையநாள் அவனிடம் தோல்வியடைந்த முதன்மை வீரன் கையசைத்து அவர்களை தடுத்தான். அர்ஜுனன் நிமிர்ந்த தலையும் இயல்பான நடையுமாக திண்ணை முனையில் சென்றுநின்றான். உரத்த குரலில் “குலத்தோரே, மூத்தவர்களே, நான் இந்த இல்லத்துப் பெண்ணை காந்தர்வமுறைப்படி மணம்கொண்டிருக்கிறேன். ஷத்ரிய குலத்தவனாகிய என் பெயர் அர்ஜுனன். அஸ்தினபுரியின் குருகுலத்து அரசனாகிய பாண்டுவின் மைந்தன்” என்றான்.

அங்கு நின்றிருந்த முதியவர்கள் வியப்பொலி எழுப்பினர். சிலர் அவனைப் பார்க்கும்பொருட்டு முண்டியடித்து முன்னால் வந்தனர். அறைகூவும் குரலில் அர்ஜுனன் சொன்னான் “செவிகூருங்கள்! நீங்கள் திரளாக என்னைத் தாக்கினால் இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் படைகொண்டுவந்து உங்கள் குடிகளை முற்றாக அழிப்பது முறை என்றாகிறது. நீங்கள் இங்கு அமைத்திருக்கும் இந்தப் பாறைக்காவல் எல்லாம் என் தமையன் படைகொண்டுவந்தால் ஒரு பொருட்டே அல்ல என்று உணருங்கள்.” ஒவ்வொரு முகத்தையாக நோக்கியபடி “இல்லையேல் எனக்கு நிகரான ஒரு வீரன் எழுந்து வந்து என்னுடன் போர்புரியட்டும்” என்றான்.

அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கினர். “இல்லை, உங்களில் இருவர் என்னிடம் போரிடட்டும்.” அவர்களை நோக்கியபடி அவன் மீண்டும் சொன்னான் “அன்றி ஐவர் போரிடட்டும்.” மெல்லிய நகையமைந்த இதழ்களுடன் மீண்டும் நோக்கியபின் “உங்கள் வீரர் பதின்மர் ஒரே காலத்தில் என்னிடம் போரிடலாம். என் அறைகூவல் இது” என்றான். இளைஞன் ஒருவன் கைகளைத் தூக்கியபடி ஏதோ சொல்ல முன்னால் வந்தான். முதியவர் ஒருவர் அவனைத் தடுத்து “நீர் மாவில்லவராகிய பார்த்தன் என்றால் இங்குள்ள நூறுபேர்கூட உம்முடன் நிகர்நின்று போரிட இயலாது. எங்கள் இளையோரை நீர் கொல்லாமல் விட்டமைக்காக நன்றி சொல்கிறோம்” என்றார்.

கைகளைக் கூப்பியபடி அவர் அவனருகே வந்தார். “உங்கள் மூத்தவரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். எங்கள் அரண்களெல்லாம் மானுடர்களுக்கு. காற்றின் மைந்தனுக்கல்ல. நாங்கள் எளியவர்கள், எங்கள் தனிநெறிகளுடன் இங்கு வாழ்கிறோம். அந்நெறிகளைப் பேணும்பொருட்டே மண்ணில் வாழும் மானுடர்களிடமிருந்து எங்களை முற்றிலும் அகற்றிக்கொண்டிருக்கிறோம். ஏனென்றால் முன்பு அம்மானுடரால் அகற்றப்பட்டவர்கள் நாங்கள். சிப்பியில் பிறந்தவர்கள் சிறகு பெற்றது இங்குதான். எங்கள் வாழ்க்கை இங்கு சிறுகச்சிறுக தழைத்துச் செறிந்துள்ளது. சிலந்திவலையை அறுத்துச்செல்லும் கருவண்டுபோல நீங்கள் உட்புகுந்திருக்கிறீர்கள்.  இது முறையா என்பதை நீங்களே முடிவுசெய்துகொள்க!” என்றார்.

“மூத்தவரே, உங்கள் குலமுறைமைகளையும் அறநெறிகளையும் இறையாணைகளையும் நான் போற்றுவேன். ஆனால் பெண்ணின் கருப்பைக்குமேல் எந்த நெறியும் முற்றாணை கொண்டதல்ல” என்று அர்ஜுனன் சொன்னான். “பெண்ணின் விழைவு என்பது நீர்தேடி மண்ணுக்குள் செல்லும் வேர்போன்றது. அறியவொண்ணாதது. தன் வேட்கையையே விசையெனக் கொண்டு புதுவழி தேர்வது. கிளைகளை வெட்டலாம். அடிமரத்துக்கு கற்சுற்றமைக்கலாம். வேர்களை எவரும் மட்டுப்படுத்துவதில்லை. கட்டற்ற வேர்களே செழித்த மரத்தின் வல்லமை என்பதை உணருங்கள்.”

“உங்கள் பெண்ணைக் கவர நான் இங்கு வரவில்லை. ஆனால் என்னை தடுக்கும்பொருட்டு உங்கள் இளையோர் வந்து சூழ்ந்தபோது அவர்களின் அச்சத்தைக் கண்டேன். அவர்களை எளிதில் வெல்லமுடிந்தபோது அவர்களின் ஆற்றலின்மையைக் கண்டேன். உங்கள் மகளிர் இன்னமும் சிறைப்பட்டிருப்பார்களென்றால் உங்கள் குலம் பாறைமேல் மரமென வேரொடுங்கி தேம்பி அழியும் என்று எண்ணினேன். ஆகவேதான் இங்கே வந்தேன்” என்றான் அர்ஜுனன். “இவள் உங்கள் குலத்தின் அரசி. இவள் கருவில் உங்கள் குடிவழிகள் பாடிப்பரவும் மாவீரர்கள் எழுவார்கள்” என உள்ளே சுட்டிக்காட்டி சொன்னான்.

அங்கே நிகழ்வதை நோக்கி ஊரிலிருந்து ஒவ்வொருவராக வந்து கூடத்தொடங்கினர். குலத்தலைவரை அழைத்துவர சிலர் ஓடினர். “என்ன? என்ன நிகழ்கிறது?” என்றார்கள் சிலர். முதியவர் ஒருவர் அவர்களை கைதூக்கி அமைதிப்படுத்திவிட்டு அர்ஜுனனிடம் “நாங்கள் எங்களை கின்னரர்களுக்கு ஒப்புக்கொடுத்தவர்கள், ஷத்ரியரே” என்று உரைத்தார். “எங்களை இங்கு வாழச்செய்தவர்கள் அவர்கள். நீங்கள் மீறியது எங்கள் நெறிகளை அல்ல, அவர்களின் ஆணைகளை. உங்களை தண்டிக்கவேண்டியவர்கள் அவர்கள். நீங்கள் போரிடவேண்டியதும் அவர்களுடன்தான்.”

உடனே “ஆம், ஆம்” என்று குரல்கள் எழுந்தன. “கின்னரர்கள் வரட்டும்… அவர்கள் முடிவு சொல்லட்டும்” என்றனர் சிலர். குலத்தலைவர் “அவர்கள் இனிமேல் வரப்போவதில்லை என நாம் அறிவோம்” என்று கைகாட்டி அவர்களை அடக்கினார். “நாம் இவர்களை நம் பூசகமன்றுக்குக் கொண்டுசெல்வோம். நம் தெய்வங்களுடன் உரையாடுபவர் நமது முதுபூசகர் மட்டுமே. அவர் சொல்லட்டும்.” “ஆம், அதுவே முறை” என்று குரல்கள் எழுந்தன. “அவர் அனைத்துமறிவார். அவர்மேல் எழும் தெய்வங்களின் ஆணை வரட்டும்.”

நான்கு வேல்வீரர்களுடன் குலத்தலைவர் விரைந்து வந்தார். இருவர் ஓடிச்சென்று அவரிடம் நடந்தவற்றைச் சொன்னபடி உடன் வந்தனர்.  வந்ததுமே கைதூக்கி உரத்தகுரலில் “வீரரே, எங்களுடன் பூசகமன்றுக்கு வருக!” என்றார் குலத்தலைவர். “அவளும் வரட்டும்… அவள் ஊழையும் கின்னரரே முடிவு செய்யட்டும்” என்றாள் ஒரு முதுமகள். குலத்தலைவர் “மற்ற வணிகர்கள் அனைவரும் உடனே கூடாரங்களைக் கலைத்து மலையிறங்கட்டும்… நான் ஆணையிட்டேன் என உரை. நம் அரண்கள் பூசனையிட்டு மூடப்படட்டும். கின்னரர் நமக்கிடும் ஆணையை தலைசூடுவோம்” என்றார். நான்கு வீரர்கள் அவருக்குத் தலைவணங்கி ஈட்டிகளுடன் கிளம்பிச்சென்றார்கள்.

அர்ஜுனன் திரும்பி இல்லவாயிலை நோக்க அங்கே பார்வதி கவரிமானின் மென்மயிர்ப்பீலியை தலையணியாகச் சூடி வந்து நின்றிருப்பதைக் கண்டான். அவள் அவன் விழிகளை சந்தித்ததும் புன்னகை செய்தான். அத்தகைய தருணங்களில் பெண்களில் எழும் உறுதியை அவன் பலமுறை அறிந்திருந்தாலும் எப்போதும் எழும் அவ்வியப்பையும் அடைந்தான். அவர்கள் ஆண்களை நம்பியிருப்பதாக தோற்றமளிக்கிறார்கள். ஆனால் அந்தத் துணிவு ஆண்களைச் சார்ந்து உருவாவது அல்ல. எங்கிருந்து அது எழுகிறது என அவன் மீண்டும் தன்னிடமே கேட்டுக்கொண்டான்.

அத்தனை தோற்றநிமிர்வுக்கும் அடியில் அவன் சற்று அஞ்சிக்கொண்டிருந்தான். எதை அஞ்சுகிறோம் என்றே அறியாமலுமிருந்தான். அக்கணம் அவளுடைய அப்புன்னகையைத்தான் பற்றுறுதியாகக் கொண்டிருந்தான். எல்லா தருணங்களிலும் பெண்களின் துணிவை பற்றிக்கொண்டே என் எல்லைகளை கடந்திருக்கிறேன். எல்லைகளைக் கடக்கும்பொருட்டே அவர்களிடம் செல்கிறேன்.

[ 25 ]

முதுபாணன் ஒருவன் கைமுழவை முழக்கி அவர்களை பூசனைமன்றுக்கு இட்டுச்செல்லவிருப்பதை ஊருக்கு அறிவித்தான். அவர்கள் கைகளைத் தூக்கி குரலெழுப்பி அதை ஆதரித்தனர். “செல்க!” என்றார் குலத்தலைவர். அவர்கள் இருவரையும் நடுவே செல்லவிட்டு கின்னரஜன்யர் முன்னும்பின்னும் நிரைவகுத்தனர். முதலில் பாணன் சிறுமுழவை மீட்டியபடி சென்றான்.

அந்த மலைச்சரிவில் அத்தனை இல்லங்கள் இருப்பதை அர்ஜுனன் அப்போதுதான் உணர்ந்தான். தேனடைபோல பாறைகளைக் குடைந்து ஒன்றுக்குமேல் ஒன்றென குகையில்லங்களை அமைத்திருந்தனர். கற்களை அடுக்கி உள்ளே தோற்சுவரமைத்த உயரமற்ற இல்லங்கள் சரிவில் ஒன்றுக்குமேல் ஒன்றென எழுந்திருந்தன. தேனீக்கள்போல அவற்றிலிருந்து மக்கள் இறங்கி வந்து ரீங்கரித்தபடி அவர்களை சூழ்ந்தனர்.

அர்ஜுனன் அப்பெண்களின் விழிகளை நோக்கினான். அவை அவனை நோக்கியபின் அவளைச் சென்று சந்தித்து மீண்டன. கிளர்ச்சியும் ஆவலும் பதற்றமும் கொண்ட விழிகள். ஆனால் அவையனைத்திலுமே ஒரு களிப்பும் இருப்பதை சற்றுகழித்தே அவன் உணர்ந்தான். அவளை திரும்பிப்பார்க்கவேண்டுமென விழைந்து அதை கட்டுப்படுத்திக்கொண்டான். அவள் விழிகளின் களிப்பைத்தான் அவர்கள் பகிர்ந்துகொள்கிறார்கள். அவளுடன் தங்களை இணைத்துக்கொள்கிறார்கள். கண்முன் எழுந்த பலநூறு ஆடிகளில் அவள்தான் பெருகிச் சூழ்ந்திருக்கிறாள்.

அவள் முகம் அப்போது மலர்ந்திருக்கும் என அவன் உய்த்து அறிந்தான். அவள் உடலெங்கும் நடனமென ஒரு துள்ளல் இருப்பதை அணிகளின் ஓசையே காட்டியது. வென்றவளின் ஊரணிக்கோலம் என நடந்துகொண்டிருப்பாள். அவள் கால்கள் நிலம்படுகின்றனவா? அவள் விழிகளுக்கு முன் மானுடர் எப்படி தெரிகிறார்கள்?

அப்போது தோன்றியது அந்தத் துணிவு எங்கிருந்து வருகிறதென்று. ஆண்கள் இழப்பதற்கே அஞ்சுகிறார்கள். நிலத்தை, மரபை, குலத்தை, குடியை, பெயரை, இல்லத்தை. திரும்பிவரும் வழியை உறுதி செய்துகொள்ளாமல் செல்வது எப்போதுமே அவர்களுக்கு இயல்வதல்ல. பெண்கள் கூட்டுப்புழு சிறகு பெற்றதுபோல பெற்றவையும் கொண்டவையும் பூண்டவையுமான அனைத்திலிருந்தும் பறந்தெழுபவர்கள். திரும்பி நோக்காமல் சென்றுவிடும் வல்லமை கொண்டவர்கள். மலையிறங்கும் ஆறுகள். அவர்கள் சென்றடையும் இடம் மட்டுமே சித்தமென எஞ்சுகையில் இழப்பென ஏதுமில்லை.

அந்த எண்ணம் எழுந்ததுமே அவன் இயல்புநிலையை அடைந்தான். அதுவரை இருந்த சிறிய பதற்றம் முழுமையாக விலகியது. ஒரு புதிய எண்ணம் எழுவதைப்போல இன்பமளிப்பது வேறேதுமில்லை. அது தன் கணு ஒன்று முளைப்பதைக் காணும் மரக்கிளையின் இன்பம்போலும். அவனுடைய நடை எளிதாகியது. விழிகளை ஓட்டி அச்சூழலை நோக்கியபடி நடந்தான். அவன் இயல்படைந்ததை அவளும் உணர்ந்ததை அவள் அணியோசை சற்று நிலைத்ததிலிருந்து அவன் உணர்ந்தான். விழிபடும் உணர்வை தோல் எப்படி அடைகிறது என்பது தீராவிந்தை என்று தோன்றியது.

எண்ணியிராத கணத்தில் அவனை ஓர் உணர்வு ஆட்கொண்டது, அப்பெண்ணுடன் அவன் அப்படி முன்னரும் நடந்திருப்பதாக. எங்கே எங்கே என தவித்தலைந்த உள்ளம் பின்பு உணர்ந்தது அவளை அவன் நன்கறிந்திருந்தான் என. ஒரே பெண். திரௌபதி, உலூபி, சித்ராங்கதை, சுபத்திரை, சுபகை… வெவ்வேறு உருவம்கொண்டெழுந்து ஆட்கொள்கிறார்கள். அவர்கள் என்றுமிருப்பவர்கள்.

எங்கோ சென்றலைந்த சித்தம் இயல்பாக நீண்டு தொட்ட ஓர் முனை அவனை சிலிர்க்கச்செய்தது. அவள் பெயர் பார்வதி என அவன் நினைத்துக்கொண்டான். மலைமகள். நிலமகளும் அலைமகளும் என்றானவள். திருமகளும் சொல்மகளும் அனல்மகளுமென உரு நிறைந்தவள். அவளை திரும்பி நோக்கினான். அவள் நிமிர்ந்த தலையுடன் புன்னகை நிலைத்த முகத்துடன் நடந்துகொண்டிருந்தாள். ஏதோ களிமயக்கிலென கண்கள் சிவந்திருந்தன.

அவர்கள் பூசனைமன்றுக்குச் சென்றுசேர்ந்தபோது பெருந்திரள் உடனிருந்தது. நான்கு ஊர்களுக்கு நடுவே இருந்த பெரிய பாறைச்சரிவு ஒன்றில் இருந்தது மேலே கூரையில்லாத இறைப்பதிட்டை. அணுகுந்தோறும் நீர்வரிகள் சூடி காட்டெருது என நின்றிருந்த மையப்பாறை தெளிவுகொண்டது. ஆயிரம்பேர் நிற்பதற்கு ஏற்ற பெரிய பாறைப்பரப்பின் நடுவே ஆளுயரத்தில் நின்ற அதன்மேல் புடைப்புச்சிற்பமாக ஏழு கின்னரர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டிருந்தன. பலிபீடமாக போடப்பட்டிருந்த தட்டைக்கல் மேல்  மலர்களும் காலையில் படைத்த அன்னமும் இருந்தன. அவற்றை சிறுகுருவிகள் எழுந்தமர்ந்து கொத்திக்கொண்டிருந்தன. முழவோசையில் அவை எழுந்து வளைந்து மிக அப்பாலென நின்றிருந்த தேவதாரு மரத்தின் இலைத்தழைப்பை அடைந்து புகுந்து மறைந்தன.

இறைபீடத்தின் அருகே கற்பாளங்களை அடுக்கிக் கட்டிய சிறிய இல்லமொன்றிருந்தது. அதனுள் இருந்து முதுபூசகர் எழுந்து வந்து அவர்களை நோக்கிநின்றார். அவர்கள் அருகணைந்ததும் அவர் கைகளை விரித்துக்காட்ட தொடர்ந்து வந்த அனைவரும் அகன்று நின்று பெரிய வட்டமொன்றை சமைத்தனர். குலத்தலைவரும் குடிமூத்தார் எழுவரும் மட்டும் அவர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு அருகே சென்றனர். முழவோசை நின்றது. அதுவரை இருந்த அகஒழுங்கை அவ்வமைதி சிதறடிக்க மரம் முறிந்து விழுந்ததும் வானில் தவிக்கும் பறவைகளென நிலையழிந்தன எண்ணங்கள்.

பூசகர் வெண்ணிற மென்மயிர் ஆடை அணிந்து தலையில் வெண்கவரிமானின் பனிக்குச்ச வாலை இறகுபோல் அணிந்திருந்தார். கந்தக மஞ்சளோடிய சுண்ணத்தாலானதுபோன்ற முகம். உலர்ந்த சேற்றுக்குழிபோல் விரிசல்கள் சூழ்ந்த விழிப்பள்ளத்திற்குள் கண்மணிகள் மங்கிய சிப்பி போலிருந்தன. ஒன்றன்மேல் ஒன்றென அணிந்த மயிர்த்தோலாடைக்குள் அவர் உடல் வெறும் எலும்பாலானதுபோல் தோன்றியது. மெல்லிய நடுக்கம் ஒன்று அவர் உடலில் ஓடிக்கொண்டிருந்தது. சிவந்த கீறல்போன்ற உதடுகள் உள்ளடங்கியிருந்தன. “வருக!” என அவர் சொன்னபோது பற்கள் கூழாங்கற்கள்போல் தெரிந்தன.

அவர் கைகாட்டி அவர்கள் இருவரையும் பலிபீடத்தருகே போடப்பட்டிருந்த கல்மணைகளில் அமரும்படி சொன்னார். அர்ஜுனன் அமர்ந்தபின்னர்தான் ஏழு கின்னரர்களின் காலடியில் மல்லாந்துகிடந்த ஊர்ணநாபனை கண்டான். அது அவன் சிலைதானா என மீண்டும் கூர்ந்து நோக்கினான். எட்டு கைகளும் பெருவயிற்றின்மேல் புடைத்த விழிகளும் பற்கள் செறிந்த வாயுமாக கிடந்த ஊர்ணநாபனின் அனைத்து விரல்களிலிருந்தும் எழுந்த சரடுகளை கின்னரர் பற்றிக்கொண்டிருப்பதை மெல்லிய கோடுகளாக செதுக்கியிருந்தனர். அவன் ஆணுறுப்பு வேர்போல மண்ணில் ஆழ்ந்திறங்கியிருந்தது.

பூசகர் அவனை நடுங்கும் தலையுடன் நோக்கிக்கொண்டிருந்தார். பின்னர் திரும்பி குலத்தலைவரையும் பிறரையும் விலகிச்செல்லும்படி கைகாட்டினார். அவர்கள் குழப்பத்துடன் ஒருவரை ஒருவர் நோக்கியபின் விலகிச்சென்றனர். அவனை சற்றுநேரம் நோக்கியபின் பூசகர் மெல்ல முனகினார். பின்னர் “நீர் இந்திரப்பிரஸ்தத்தின் இளவரசரான அர்ஜுனன் என அறிந்தேன்” என்றார். “ஆம்” என்று அவன் சொன்னான். “நீர் என் குடிப்பெண்ணை மணந்ததை முதுதந்தையாக நான் ஏற்கிறேன்” என்று அவர் சொன்னார். “இக்குடி பெருகவேண்டுமென்றால் இது மண்ணுக்கு இறங்கியாகவேண்டும். வேலிகளை உடைத்து இதன் வேர்கள் செல்லவேண்டும்…”

அவர் குரல் முனகல்போல ஒலித்தது. “ஏனென்றால் மேலே செல்ல இடமில்லை. மேலே அவர்கள் இருக்கிறார்கள். கின்னரர்கள். அவர்களின் வாழ்க்கை வேறு. அவர்கள் விழைவதை எல்லாம் வானமே அளிக்கும். அவர்களுக்கு மண்ணே தேவையில்லை.” அர்ஜுனன் அவர் உதடுகளையே நோக்கிக்கொண்டிருந்தான். அவர் உடலின் அனைத்து நரம்புகளும் விசையழிந்து தளர்ந்திருப்பதை உணரமுடிந்தது. “ஆனால் நாங்கள் இங்கு எங்கள் வாழ்க்கையை வாழவில்லை. கட்டுண்டிருக்கிறோம். நாங்கள் அடிமைகள். அவர்களால் வளர்க்கப்படும் விலங்குகள். எங்கள் உடல்களை அவர்கள் ஆளவில்லை. எண்ணங்களில் நிறைந்திருக்கிறார்கள்.”

அவருடைய விழிகள் ஒளிகொண்டபடியே வருவதை தன் உளமயக்கா என அவன் ஐயத்துடன் நோக்கினான். “அவர்கள் முடிவெடுக்கவேண்டும். அவர்கள் ஒப்பாமல் இங்கு எதுவும் நிகழமுடியாது.” அவர்தான் பேசுகிறாரா என அர்ஜுனன் ஐயுற்றான். அவருடைய விழிகள் நிலைகுத்தி நின்றன. இமைகள் அசையவில்லை. “அவர்களை வென்றுவருக… அவர்களை வென்றுவருக! இளவரசே, இக்குலத்தை விடுதலைசெய்க!” என்று அவர் சொன்னார். அவர் குரல் அவ்வுடலில் இருந்து எழவில்லை. சொற்களை அறியாமல் சிறிய இதழ்கள் நடுங்கிக்கொண்டிருந்தன. காற்றில் ஏதோ பசையை அளாவுவதுபோல அவர் விரல்கள் அசைந்தன.

அர்ஜுனன் “அவர்களின் படைகளேதும் இங்கில்லையே! ஆண்டுக்கு ஒருமுறைகூட அவர்கள் இங்கு வருவதுமில்லை” என்றான். “ஆம், அவர்கள் எவ்வகையிலும் இங்கில்லை. இளையவரே, இங்கு ஆண்டுதோறும் பொருட்களுடன் இறங்கி வருபவர்களும் அவர்களல்ல” என்றார் பூசகர். “அவர்கள் மேலே இருக்கிறார்கள். நாம் அவர்களை நோக்கவும் முடியாது.” அவர் இல்லை இல்லை என்பதுபோல தலையை அசைத்தார். “அவர்களின் படைக்கலங்களை நாங்கள் அறிந்ததில்லை. அவர்களின் ஒரு சொல்லையேனும் நாங்கள் கேட்டதில்லை. ஆனால் இங்குள்ள ஒவ்வொரு உள்ளத்தையும் அவர்கள் ஆள்கிறார்கள். இங்குள்ள மரங்களையும் பாறைகளையும்கூட கையாள்வது அவர்களே.”

அர்ஜுனன் அவ்விரல்களையே நோக்கிக்கொண்டிருந்தான். அவை எதையோ நெய்கின்றன. “ஏனென்றால் அவர்கள் எங்கள் கனவுகளுக்குள் புகுந்திருக்கிறார்கள். இவையனைத்தையும் சமைக்கும் கனவை எங்களுக்குள் அவர்களே அமைக்கிறார்கள். கனவுவழியாக எதையும் மீறிச்செல்லலாம். இளையவரே, கனவை மீறிச்செல்வது எளிதல்ல மானுடனுக்கு… கனவுகளை அடிபணியச் செய்தவன் கருவுக்குள் நோய்கொண்ட குழவி… கனவுகளே மீறல். கனவுகளே கடத்தல். கனவுகளே ஆக்கல். இளையவரே, கனவுகளும் பிறருடையதென்றானவன் அடிமையென்றறியாமல் அடிமையென்றிருக்கும் இழிசினன்.”

அவர் விரல்களைவிட்டு அவன் விழிகள் முகத்துக்குச் சென்று இயல்பாக மீண்டபோது அவை மெல்லிய சிலந்திவலைச் சரடை பின்னிக்கொண்டிருப்பதை கண்டான். விழிகளை பலமுறை இமைத்து அதை நோக்குமயல் என தள்ளமுயன்றான். ஆனால் மேலும் மேலும் அவை தெளிவடைந்தன. அச்சரடுகள் தரையில் படர்ந்து நீண்டு பனிவெண்மைக்குள் புகுந்து மறைந்தன. அவர் குரல் எழுந்தது. பெரும்பன்றியின் உறுமல்போன்ற ஆழமும் கார்வையும் கொண்ட ஒலி. “இங்கு காத்திருக்கிறேன். இந்த மண்ணின் அடியில்” என்றார் அவர். “சென்று வென்றுவருக… அவர்களை வென்று வருக!”

“நீங்கள் யார்?” என்றான் அர்ஜுனன். அவ்வினாவுடன் இயல்பாக அவன் விழிதிரும்பி ஊர்ணநாபனை நோக்கியது. “அடியிலிருப்பவன். தோற்கடிக்கப்பட்டவன்” என்று அவர் சொன்னார். “என் சரடுகள் அறுபடுவதில்லை…” அவர் முன்னும்பின்னும் உடலை ஊசலாட்டினார். கைகள் மேலே தூக்கி விரிந்தபோது அந்தச் சரடுகள் ஒளியாலானவை என தெரிந்தன. “செல்க… மலையேறிச் செல்க… வென்று மீள்க…” அர்ஜுனன் சித்தம் உறைந்திருக்க அவரை நோக்கிக்கொண்டிருந்தான். “நீ வெல்வாய்… நீ வென்றாகவேண்டும்!”

அவன் அப்போதுதான் அவள் இருப்பை உணர்ந்தான். திரும்பி நோக்கியபோது அவள் துயிலில் என விழிசொக்கி அவர் உடலின் ஆட்டத்திற்கிணைய மெல்ல ஆடிக்கொண்டிருப்பதை கண்டான். அவள் அவருடன் அச்சரடுகளால் பிணைக்கப்பட்டிருந்தவள் போலிருந்தாள். அப்படி எண்ணியதுமே அவன் அச்சரடுகளை பார்த்துவிட்டான். “ஆம்” என்று அவன் சொன்னான். “நான் சென்று வெல்கிறேன்.” அவர் தலை சொடுக்கிச் சொடுக்கி திரும்பியது. காற்றில் துழாவிய கைகள் எதையோ வனைந்தன. கலைத்து மீண்டும் அமைத்தன. “ஆம் ஆம் ஆம்” என்றார். “நீ வென்று வருவாய்… நீ வென்று வந்தாகவேண்டும்!”

மெல்ல அவர் வலப்பக்கமாக சரிந்து விழுந்தார். கால்கள் மெல்ல உதைத்துக்கொண்டு அமைந்தன. அவன் பெருமூச்சுடன் உடலை இயல்பாக்கிக்கொண்டான். அருகே பார்வதியும் பக்கவாட்டில் சரிந்து விழுந்திருந்தாள். அவன் அவளைப்பற்றி சற்று உலுக்கினான். அவள் விழித்துக்கொண்டு “என்ன?” என்றபின் பூசகரை நோக்கி திகைப்புடன் “என்ன ஆயிற்று?” என்றாள். “விழித்துக்கொள்வார்” என்றான். “என்ன சொன்னார்?” என்றாள். “நான் இன்று காலை கண்ட கனவை விளக்கினார்” என்றான் அர்ஜுனன்.

KIRATHAM_EPI_75

அவள் விளங்காமையுடன் நோக்கினாள். “நீ ஒரு பெருஞ்சிலந்தியாக பதினாறு கைகள் விரித்திருந்தாய். உன் கையிலிருந்து எழுந்த ஒளிச்சரடுகளில் நான் சிக்கியிருந்தேன். நீ வெறிகொண்டு நடனமிட நானும் அச்சரடுகளால் ஆட்டுவிக்கப்பட்டு ஆடிக்கொண்டிருந்தேன்” என்றான் அர்ஜுனன். அவள் அவன் சொற்களை உள்வாங்கிக்கொள்ளவில்லை. திரும்பி பூசகரை நோக்கி “என்ன சொன்னார்?” என்றாள். “நீ காலையில் இட்ட ஆணையைத்தான்” என்றான் அர்ஜுனன். “என்ன?” என்று அவள் அவனிடம் திரும்பி கேட்டாள். அவன் “நான் இன்றே கிளம்புகிறேன்” என்றான்.

வெண்முரசு விவாதங்கள்

முந்தைய கட்டுரைபுத்தாண்டில்…
அடுத்த கட்டுரைஎன் சிறுகதைகள் ஒலிவடிவாக