அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
விஷ்ணுபுரத்தின் வாசகர்கள் அனைவருக்கும் ஒரு தனித்துவமான பயனுண்டு. அவர்களது, ஓராண்டு பசியும் ஒரே விழாவில் தீர்க்கப்படுவதோடு, அடுத்த ஓராண்டிற்கான பசியும் அழகாய், அர்த்த புஷ்டியுடன் தூண்டிவிடப்படுவதுமே அது. விஷ்ணுபுரம் விருது விழா 2017 முடிந்து சொந்த ஊருக்கு மீள்வதற்கு, கோவை பேருந்து நிலையத்திற்கு செல்லும் போது – ஆப்பிள் கடைக்காரர், ஆட்டோ ஓட்டுநர், பேருந்திற்காக காத்திருக்கும் யாரோ ஒரு அக்கா, குடித்துவிட்டு மல்லாந்திருக்கும் ஒருவர் என – எந்த ஒரு முகத்தைப் பார்த்தாலும், அவர்களை இலக்கிய வாசகர்களாகவே நினைத்துக் கொள்ளும் மனத்தின் விசித்திரத்திலிருந்து, இவ்விழா ஏற்படுத்தும் பாதிப்பின் தீவிரத்தை குறிப்பிட விழைகிறேன்.
ஜெ பல இடங்களில் திருவிழாக்கள் பற்றிச் சொல்லும் போது, ஒரு பெரும் மக்கள் திரள் ஒற்றை முகம் கொள்ளும் விந்தையைச் சொல்வார். அதை, இவ்விழா நிகழ்வுகள் நடந்த இரண்டு நாட்களிலும், நாமும் நண்பர்களும் துல்லியமாய் அனுபவித்தோம் என்று பின்னர் தோன்றியது. குறிப்பாக, விருது விழாவில், வெளிவந்த கைதட்டல்களும், கண்ணீர் ததும்பல்களும் அப்படியே ஒற்றை முகமாய், ஒற்றை மனமாய் ஒரு திரளோர் வடித்தது.
விழாவிற்கு வருகையில், என் மனதில் இருந்த எண்ணம், அல்லது ஒழுங்குணர்வு என்பது ‘ஜெயமோகன் அவர்களிடமும் பிற ஆளுமைகளிடமும் நாம் ஒவ்வோர் அசைவையும் கற்றுக் கொள்ளவும், மெளனமாய் ரசித்து மகிழ்ந்து கொள்ளவும் மட்டுமே இவ்விழாவிற்குச் செல்கிறோம்; காரணமின்றி, அதிக பிரசங்கித் தனமாக, ஜெவை அணுகி, பேசி தொந்தரவு செய்யும் விதமாக எதுவும் செய்துவிடக்கூடாது’ என்று இருந்தது. காரணம், இது தனிப்பட்ட ‘ புதியவர்கள் சந்திப்பு’ போன்ற விழா அன்று; மாறாக ஆண்டுதோறும், பெருகிவரும், தீவிர வாசகர்களையும் அவர்களது ‘ஆர்வ மற்றும் ஆர்வகோளாறுகளை’யும் கொண்ட விழா என நினைத்ததே.
மாறாக, நான் விழாவில் நுழைந்து, பின்னால் சென்று நின்று, ‘நாஞ்சில் நாடன்’ அவர்களைக் கவனித்து ரசித்துக் கொண்டிருக்கையில், எதார்த்தமாக ஜெவே என்னருகே வந்து, சில நிமிடங்கள் என்னைத் தழுவி விசாரித்தது பெரும் பேறு. அப்பேறு பல சந்தர்ப்பங்களில் தொடர்ந்தது என்னை, இரு நாட்களில். ஜெ அவர்கள் மீது எல்லோரும் – குறிப்பாக புது வாசகர்கள் – தனது, வியப்பை தன் மீதான தனிப்பட்ட நல்லூழாகவே குறிப்பிடுகிறார்கள். அனைத்து உண்மையான வாசகர்களுக்கும், ’ஜெயமோகன் தன்னுடன் வெகு சிறப்பாக இம்முறை உரையாடினார்; தன்னை வெகு நெருக்கமாக உணர்ந்து வைத்துள்ளார்’ என்ற மகிழ்வும், வியப்புமே எஞ்சியிருக்கிறது.
எப்படி இத்தனை செறிவுடைய விழாவினிடையே, ஒவ்வொருவரையும், ஒரே அளவிற்கு சென்று சேர ஜெயமோகனால் முடிகிறது என்று யோசித்து வியக்கும் நேரத்தில், ‘இன்றைய காந்தி’ யை அறிந்தவருக்கு இது இயல்பே என்பதும் உடன் தோன்றுகிறது. Positive Gossip – அவர் இல்லாத போது அவரைப் பற்றிய நேர்மறையான பேச்சு – என்ற ஒன்று ஜெயமோகனுக்கு, கிடைத்த அளவிற்கு மனப்பூர்வமாக யாருக்கும் கிடைக்கும் என்று தோன்றவில்லை.
தாமஸ் மண் பற்றிய அறிமுகத்தை நான் கோரியபோது, ஜெ வழங்கிய அறிமுகமென்பது மனதை அரித்துக் கொண்டிருக்கிறது. Death in Venice ஐ இப்புத்தாண்டில் தொடங்கப் போகிறேன். தொடர்ந்து, தாமஸ் மண்ணை வாசிக்கும் திட்டம் உள்ளது. மேலும், இலக்கிய வினாடி வினாவைச் சுட்டி குறிப்பிடாதவர்கள் யாருமில்லை என்பதே அதன் வீச்சினைப் பேசுகிறது. நான் பாரதிநாதன் அவர்களது ‘தறியுடன்’ நாவலை பெற்றேன் அந்நிகழ்வில். அதற்கும் ஒரு சிறு அறிமுகம் ஜெவிடமிருந்து கிடைத்தது கூடுதல் மகிழ்வு.
ஒரு பேரதிர்ச்சி என்னவென்றால், இன்னும் ஓராண்டில் வெண்முரசு நிறைவு பெறும் என்று ஜெ தெரிவித்ததே. உடனேயே அந்நிறைவால் வரப்போகும் வெறுமை மனதில் வெட்டிச் சென்றது. இருந்தாலும், எங்களை ‘அசோகவனம்’ வழிதெரியாமல் உள்ளிழுத்துக் கொள்ளும் என்று நினைக்கையில் அவ்வெறுமை விலகுகிறது. வெண்முரசு நாவல்களை மீள்வாசிப்புக்கு உட்படுத்த வேண்டும்.
சென்ற முறை 2016ல் விஷ்ணுபுரம் விழாவின் நிறைவு தந்த கிளர்ச்சி என்னை ஒரு வாசகனாக்கியது. இந்த முறை, என் வாசிப்பிற்க்கான, வெகு சவால்களை உருவாக்கிவிட்டிருக்கிறது. ஒவ்வொரு, புதிய நாளையும் ஒரு புத்தாண்டிற்குச் சமமான மனக்கிளர்ச்சியுடன் அணுகிடும் மனப்பண்பை உருவாக்கிய வாசிப்பு என்பது விஷ்ணுபுரத்தின் தாக்கமே. விஷ்ணுபுரத்தின் விரல்கள் இன்னும் ஓராண்டிற்கு என்னைத் தழுவிக்கொண்டே இருக்கப்போகிறது.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்களுடன்,
நன்றி.
கோ.கமலக்கண்ணன்
அன்புள்ள கமலக்கண்ணன்
என்னைப்பொறுத்தவரை திரும்பிப்பார்க்கையில் நண்பர்களுடன் பேசிய, பயணம்செய்த நாட்களே இலக்கிய வாழ்க்கையை அர்த்தப்படுத்துபவையாக உள்ளன. ஆகவே இலக்கியம் என்பதை ஒரு பெரிய நட்புக்கூடலாகவே எப்போதும் பார்க்கிறேன். இதற்குள் விழுமியங்கள் உண்டு. இலக்கியம் என்னும் பொதுவட்டம் முக்கியமானது. அதற்குள் அனைவரும் நண்பர்களே. ஆகவேதான் நட்பில் கசப்புகளைச் சேர்க்கும் எதையும் எதன்பொருட்டும் ஒப்புக்கொள்வதுமில்லை
விஷ்ணுபுரம் விருதுவிழாவைப்பொறுத்தவரை வந்தவர்களை இனிய வரவாக எடுத்துக்கொண்டேன். வராத சிலரை எண்ணிக்கொண்டும் இருந்தேன். நண்பர் பெங்களூர் ‘சர்வர்’ கிருஷ்ணன், ஏ.வி.மணிகண்டன், அருணாச்சலம் மகராஜன் விஜயகிருஷ்ணன் ,ரகு , மொரப்பூர் தங்கமணி என அவர்களின் பட்டியலே அடிக்கடி மனதுக்குள் வந்துசென்றது.வெ.அலெக்ஸ் உடல்நலமின்றி இருப்பதனால் வரமுடியவில்லை. இது ஒருவகையான வருடாந்தர நட்புக்கூடல்தான் . இதே இனிமையுடன் தொடரவேண்டும்.
ஜெ
அன்புள்ள ஜெயமோகன்,
வணக்கம். ஒருவாரமாகியும் இன்னும் ” விஷ்ணுபுரம்” விழா நினைவுகளிலிருந்து நான் மீண்டு வரவில்லை.
உங்களுள் “வண்ணதாசன்” புகுந்து விட்டது போல் இருந்தீர்கள் .இல்லை நீங்கள் சுபாவமாகவே இப்படித்தானா எனக்குத்தெரியவில்லை.” வைக்கம் முகம்மது பஷீரின்” கதையை சொல்லும் போது ஈஸிசேரில் அமர்ந்து ஓரக்கண்ணால் பஷீரைப்பார்க்கிற அந்த “சேவல்”உங்கள் விவரிப்பில் என் கண்முன்.
எதெதற்காகவோ ஒன்றுமே சாதிக்காமல், தான் தான் பெரிய ஆள் என்று புழங்குகிற மனிதர்கள் இருக்குமிடத்திலிருந்து வந்த நான், சுவற்றோரமாக சாய்ந்து கூட்டத்தின் கடைசியில் நின்றுகைகட்டி மற்றவர்கள் பேசுகிறதை பொறுமையாக்க்கேட்கிற ” ஜெயமோகனை” பார்த்த போது அத்தனை இஷ்டமாக இருந்தது.
சலூன் வைத்திருக்கிற “காசர்கோடு மலையப்பனை” நினைவுபடுத்தி பேசினபோதும்,” வண்ணதாசன்” என்கிற ஸ்க்ரூ ட்ரைவர் அன்பை மட்டுமே திறப்பது. அது ஏன் ஒரு சமூகத்தின் பிரச்சனையை பேசவில்லை எனக்கேட்பது சரியல்ல” என்றபோதும் உங்களின் இக்கருத்திற்காக ஒலித்திட்ட கைத்தட்டலில் என் கை ஓசை அதிகமாக இருந்திருக்கும்.
உங்கள் மகன் “அஜிதனை” பற்றி,” சவுக்கு” எழுதின நாட்களில் நீங்கள் தருமபுரியிலிருந்தது பற்றி எனக்கு பதில் தர நீங்கள் பேசினபோது இத்தனை எளிமையான மனிதரா என வியக்க வைத்தீர்கள்.விழாமேடையில் நீங்கள் வண்ணதாசனை கூட்ட மாகப்பறந்த மின்மினி பூச்சிகளுக்கு ஈடாக , சுடாத,எரிக்காத காட்டுத்தீயாகஇருள் பிரியாத நேரத்தில் மொத்த காட்டையுமே வெளிச்சம் போட்டுக்காட்டின மின்மினி பூச்சிகளாக சொன்னது சிலிர்த்தது. அபாரம் ஜெயமோகன்.
விஷ்ணுபுரம் விழா அறிவித்ததிலிருந்தது உங்கள் வலைப்பக்கத்தை நான் வாசித்துக்கொண்டிருக்கிறேன்.அதில் இடம்பெற்ற வண்ணதாசன்விருது தொடர்பான கடிதங்களில்” செல்வராஜின்” கடிதத்தை முன் வைத்து வண்ணதாசன் பேசின ஏற்புரையில் கூட்டம் கரைந்ததற்கு நீங்கள் அல்லாமல் வேறு யாரும் காரணமில்லை.
உங்களின் மொத்த கதைகளையும் படித்தும் ,மற்றெல்லோரின் புத்தகங்களையும் படித்தும்,வரிக்கு வரி நினைவில் வைத்துக்கொண்டு நடைபெற்ற போட்டிகளில் வென்று உங்களோடு விவாதித்த பல அறிவுஜீவி வாசகர்களின் பார்வையில் படும்போது அத்தனை விவரமில்லாதவர்களாக ,ஒரு சாதரண மேலெழுந்தவாரியாக படிக்கிற வாசகர்களாக வண்ணதாசனின் வாசகர்களாகிய நாங்கள் தெரிந்திருப்போம். அதைபற்றி எந்த புகாருமில்லை. ” செல்வராஜ்” எழுதினது போல அறிவாளியாக மாற எல்லாம் எனக்கு விருப்பமில்லை.
ஆனால் “தேவதேவனையும், நாஞ்சில் டனையும்,பாட்டையாவையும், கலாப்ரியாவையும, சுகாவையும், பாவண்ணனையும், பவா செல்லதுரையையும் இன்னும் தன் எளிமையான ஆங்கிலத்தால் அனைவரையும் கவரும்படி உரை நிகழ்த்தின கன்னட எழுத்தாளர் ” சிவப்ரகாஷ்” அவர்களையும் சந்திக்கும் வாய்ப்பும் ,அவர்கள் பேசுவதை கேட்கும் அருமையான நேரமும் உங்களால் ,உங்களை மையமாகக் கொண்டு நடத்தப்பெறும் “விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தால்” சாத்தியமானது.
உங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துகளும், பேரன்பும், நன்றியும்.
காயத்ரி சந்திரசேகர்
அன்புள்ள காயத்ரி,
உண்மைதான். பின்மயக்கம் மிஞ்சிப்போய்விடக்கூடாது, புத்தாண்டில் வேறு விஷயங்களில் ஈடுபடவேண்டும் என்று சொல்லிக்கொள்கிறேன். இருந்தாலும் நீடிக்கிறது.
நான் எப்போதும் சொல்வதுபோல விஷ்ணுபுரம் விழா ஒரு நட்புக்கூடலாகவே இருக்கவேண்டும். நட்பார்ந்த சந்திப்புகள் வழியாக, அரட்டைகள் வழியாக நாம் கற்றுக்கொள்வது மிக அதிகம். அதில் மேல் கீழ் என எவருமில்லை. விவாதங்கள் நிகழலாம், ஆனால் அவை மிகச்சிறிய வட்டத்திற்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்குள் மட்டுமே நிகழவேண்டும். அங்கே அகங்காரம் இருக்கக்கூடாது
விஷ்ணுபுரம் கூட்டத்தில் ஒருவனாக இருப்பதில் அபாரமான மகிழ்ச்சி ஒன்று உண்டு. நான் அவ்வப்போது சந்திக்கும், பெரும்பாலும் கடிதங்கள் மூலம் மட்டுமே உரையாடும் பலரை அங்கே சந்திக்கிறேன். விவாதங்களில் ஈடுபட்டு அதை இழக்க விரும்பவில்லை
ஜெ
***
முந்தைய பதிவுகள்
விஷ்ணுபுரம் விழாப்பதிவு1 விஷ்ணு
விஷ்ணுபுரம் விழாப்பதிவு3 ராகேஷ்
விஷ்ணுபுரம் விழாப்பதிவு4 சுரேஷ் பிரதீப்
விஷ்ணுபுரம் விழாப்பதிவு8 யோகேஸ்வரர்
விஷ்ணுபுரம் விழாப்பதிவு 9 சிவமணியன்
விஷ்ணுபுரம் விழாப்பதிவு11 குறைகள்
விஷ்ணுபுரம் விழாப்பதிவு 12 சசிகுமார்
விஷ்ணுபுரம் விழாப்பதிவு 13 ராஜீவ்
விஷ்ணுபுரம் விழாப்பதிவு 16 தூயன்
ஒருங்கிணைதலின் கொண்டாட்டம் ஜெயமோகன்
விஷ்ணுபுரம் விருதுவிழா பதிவு 18
விஷ்ணுபுரம் விருதுவிழா பேசப்பட்டவை கிருஷ்ணன்
உரைகள்
காணொளிகள்
எச் எஸ் சிவப்பிரகாஷ் உரை
புகைப்படங்கள்
புகைப்படங்கள் ஆனந்த் சீனிவாசன்
========================================================
விஷ்ணுபுரம் விருதுகள்- கடந்தவை பதிவுகளின் தொகுப்பு
========================================================
விஷ்ணுபுரம் விருது வண்ணதாசனுக்கு இதுவரை கட்டுரைகள்
வண்ணதாசன் கேந்திப்பூவின் மணம் ராஜகோபாலன்
வண்ணதாசன்- சாளரத்தில் குவியும் ஒளி சுனீல் கிருஷ்ணன்
வண்ணதாசன் குகைக்குள் விளக்கேற்றிய வெளிச்சம் எம் ஏ சுசீலா
வண்ணதாசன் -வண்ணமும் மென்மையும் – சௌந்தர்
வண்ணதாசன் – சிவசக்தி நடனம் கடலூர் சீனு
========================================================
========================================================
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 1
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 2
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 3
சிறுகதைகள் நான் வண்ணதாசன் சரவணன்
வண்ணதாசன் ஒன்றையே எழுதுகிறாரா?