புத்தாண்டில்…

2

அன்புடன் ஆசிரியருக்கு

 இந்த வருடத்தை உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்லியபடியே தான் தொடங்கினேன். 2014 டிசம்பரில் முதற்கனல் வாசித்தேன். இந்த மூன்று டிசம்பர்களுக்கு இடையில் நான் வாசித்தவற்றை எண்ணிக் கொள்கிறேன். அதிலும் உங்களுடன் முறையான உரையாடல் தொடங்கியது கீதை உரையை கேட்ட பின்னே என்பதே ஒரு வித பெருமிதத்துடன் என்னால் உணர முடிகிறது. அதன் பிறகு வெய்யோன். வெண்முரசு நாவல் வரிசையில் எழுச்சியும் கொந்தளிப்புமாக வெகு அணுக்கமாக உணர்ந்த நாவல் வெய்யோன். அதன் பிறகு விஷ்ணுபுரம் கொற்றவை ஆகிய நாவல்களை மீள் வாசிப்பு செய்ததுடன் பின் தொடரும் நிழலின் குரல் வெள்ளையானை காடு போன்ற உங்களுடைய மற்ற பெரிய நாவல்களையும் ரப்பர்ஏழாம் உலகம்கன்னியாகுமரி உலோகம் இரவு, கன்னி நிலம், அறம் தொகுப்பு இணையத்தில் கிடைக்கும் மற்ற சிறுகதைத் தொகுப்புகள் சிலுவையின் பெயரால், முன் சுவடுகள், புல்வெளி தேசம் இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் என பெரும் புனைவுகளில் இருந்து அபுனைவுகள் வரை நீண்டது. மேலும் காண்டீபம் வரை வெண்முரசை மீண்டும் வாசித்தேன்.

எதை வாசிக்கலாம் என யார் கேட்டாலும் அவர்களிடம் முதலில் பரிந்துரைக்கும் நூலாக நவீன தமிழ் இலக்கிய அறிமுகம் இருந்தது. மேலும் தலைகீழ் விகிதங்களையும் பொன்னியின் செல்வனையும் பள்ளியில் படிக்கும் போது ஒரே நேரத்தில் வாசித்தேன். இரு படைப்புகளுமே என்னை கவர்ந்தன. ஆனால் இரண்டுக்கும் இடையே ஒரு தெளிவான வேறுபாட்டை உணர முடிந்தது. அவ்வேறுபாடு என்ன என்பதை புறவயமாக பிறருக்கும் எடுத்துக் கூறும் வகையில் விளக்கிய நூல் நாவல் கோட்பாடு.

இவ்வாண்டில் அறிமுகம் செய்து கொண்ட இரு பெரும் படைப்பாளிகள் அசோகமித்திரனும் டால்ஸ்டாயும்தண்ணீர்,  கரைந்த நிழல்கள், இன்று என அவர் படைப்புகளை கால வரிசைப்படுத்தி அடுக்கும் போது ஒரு படைப்பாளியின் பரிணாம வளர்ச்சியை கண் முன்னே காண முடிந்தது. டால்ஸ்டாயின் நாயகர்கள் வழியே அவரின் பரிணாம வளர்ச்சியை காண முடிந்தது. போரும் வாழ்வும் (மொழிபெயர்ப்பு டி.எஸ்.சொக்கலிங்கம்) அன்னா கரீனினா(மொழிபெயர்ப்பு: நா.தர்மராஜன்) புத்துயிர்ப்பு(மொழிபெயர்ப்பு:கிருஷ்ண்ணையா) என அவருடைய பெருநாவல்களையும்  தால்ஸ்தோய் குறுநாவல்களும் சிறுகதைகளும் (மொழிபெயர்ப்பு: நா.தர்மராஜன்) எனும் நூலையும் வாசித்தேன்.

கல்லூரியிலேயே சுந்தர ராமசாமியின் ஒரு புளிய மரத்தின் கதை வாசித்திருக்கிறேன். அவருடைய பிற நாவல்களான ஜே.ஜே சில குறிப்புகள் மற்றும் குழந்தைகள் பெண்கள் ஆண்கள் ஆகியவற்றை இவ்வருடம் வாசித்தேன். பிந்தையதே எனக்கு அணுக்கமாக இருந்தது.

தமிழின் முன்னோடி படைப்பாளிகள் சிலரையும் இவ்வாண்டு வாசிக்க முடிந்தது. .நா.சுவின் பொய்த்தேவு .சா.ராவின் புத்ர பா.சிங்காரத்தின் கடலுக்கு அப்பால் மற்றும் புயலிலே ஒரு தோணி .மாதவனின் புணலும் மணலும் ஜி.நாகராஜனின் குறத்தி முடுக்கு ஜெயகாந்தனின் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் வேதசகாயகுமார் தொகுத்த புதுமைபித்தன் சிறுகதைகள் என நவீன தமிழ் இலக்கியத்துக்கு என்னை அறிமுகம் செய்து கொண்டேன். 

அம்மையால் ஊட்டி சந்திப்புக்கு வர முடியாமலாகி பின்னர் கொல்லிமலை சந்திப்பில் கலந்து கொண்டது சிறந்த அனுபவம். மேலும் சங்கரர் உரை காந்தியம் தோற்கும் இடங்கள் சிங்கப்பூர் பயணம் என உங்களுடைய அனைத்து செயல்பாடுகளையும் jeyamohan.in வழியே ஏறக்குறைய அருகிருந்து காண முடிந்தது. 

அனைத்திற்கும் மகுடம் சூட்டியது போல விஷ்ணுபுரம் விருது விழாவின் இரு நாட்கள். குறைந்த நாட்களிலேயே வண்ணதாசனை வெகு நெருக்கமாக உணர முடிந்தது. இரா.முருகன் பவா செல்லதுரை என நிகழ்ச்சியில் பங்கேற்ற படைப்பாளிகளை வாசிக்கவும் விஷ்ணுபுரம் விருது விழா களம் அமைத்தது. கொல்லிமலை மற்றும் கோயம்புத்தூர் சந்திப்புகள் வழியே ஜினுராஜ்,சிவா,சசிகுமார்,ஷாகுல், சுஷில், விஷ்ணு பிரகாஷ், கமலகண்ணன், பிரபு, மகேஷ் (சிலர் விடுபட்டிருக்கலாம்) என பல நண்பர்கள் அறிமுகமாயினர்என் அலுவலக சூழலிலும் கிறிஸ்டி, மணிகண்டன் என சில இலக்கிய வாசகர்கள் இவ்வாண்டு அறிமுகமாயினர். 

வெய்யோனில் தீர்க்கதமஸின் மறு ஆக்கம் குறித்து என்னுடன் நீங்கள் பகிர்ந்து கொண்டதுடன் என்னுடைய இவ்வாண்டு தொடங்கியது. உக்கிரசிரவஸ் சௌதி குறித்த  சொற்களுடன் இவ்வாண்டு நிறைவுற்றிருக்கிறது. நினைவில் நிறுத்தக் கூடிய மிகச் சிறந்த ஆண்டாக இதனை மாற்றிய உங்களுக்கும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திற்கும் என் உளப்பூர்வமான நன்றிகள். 

புத்தாண்டு வாழ்த்துக்களுடன்

 அன்புடன்

சுரேஷ் பிரதீப்

***

அன்புள்ள சுரேஷ்

புத்தாண்டு நினைவின் மிகச்சிறந்த அம்சம் சென்ற ஆண்டை நிறைவுடன் நினைத்துப்பார்ப்பதுதான். நான் அப்படி நிறைவுடன் எண்ணிக்கொள்ளாத புத்தாண்டு ஏதும் சென்ற இருபத்தைந்தாண்டுக்காலத்தில் கடந்துசென்றதில்லை. ஆனால் நான் புத்தாண்டில் சூளுரைகள் எதையும் எடுத்துக்கொள்வதில்லை, ஏனென்றால் வெறுமே ஆசைப்பட்டு செய்யாமல் விடுபவை என ஏதுமில்லை எனக்கு.

2016 கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஏற்பாடு செய்து நான் ஆற்றிய  சங்கரர் உரையுடன் ஆரம்பித்தது. தொடக்கத்திலேயே ஒரு தீவிரமனநிலையை அது உருவாக்கியது. அப்துல் ஷுகூர் கண்ணூர் அருகே பெடயங்கூரில் தன் டீக்கடையில் நடத்திவரும் இலக்கியச் சந்திப்புக்கு நண்பர்களுடன் சென்றது முதற்பயணமாகவும் உற்சாகமான தொடக்கம்

சென்ற ஆண்டில் முக்கியமாக இளையவாசகர் சந்திப்புகள் நிகழ்ந்தன. ஈரோடு, கொல்லிமலை, கோவை, ஊட்டி சந்திப்புகள் மிகமுக்கியமானவை. எனக்கு முற்றிலும் புதிய மிக இளையவயதினரான வாசகர்களை அவை அறிமுகம் செய்துவைத்தன. இந்தவருட விஷ்ணுபுரம் விழா இத்தனை சிறப்பாக நிகழ இந்த இளையவாசகர்களின் வரவு மிக முக்கியமானது. எங்கள் ஓய்வுவிடுதியான ஈரட்டியில் நிகழ்ந்த நண்பர் சந்திப்பு ஓரு சிரிப்புவிழாவாக அமைந்தது.

அதன்பின் பயணங்கள். சென்ற ஆண்டு தொடக்கத்திலேயே ஸ்பிடி சமவெளிப்பயணம். அதன்பின்  பெரிதும் சிறிதுமாக பல பயணங்கள். ஆண்டு முடிவில் கேதார்நாத் பயணம். டிசம்பரிலேயே காகதீய பேரரசின் நிலங்கள் வழியாக ஒரு நீண்டபயணம் ,கிருஷ்னை நதிக்கரை வரை.  இவ்வருடம் மட்டும் இருபத்தைந்துநாட்கள் இமையமலையில் இருந்திருக்கிறேன்

சென்ற ஆண்டில் கணிசமான பொழுதுகள் வெளிநாடுகளில் கழிந்தன. ஜூனில் ஓர் ஐரோப்பியப் பயணம் வாய்த்தது. பிரிட்டன், பிரான்ஸ், ரோம், சுவுஸ், ஜெர்மனி வழியாக வந்த பயணம் என் வாழ்க்கையின் மிகப்பெரிய நிகழ்வு. அதை ஒரு புனைவுக்காக சேமித்திருக்கிறேன். நண்பர்கள் முத்துக்கிருஷ்ணன், சதீஷ், சிவா கிருஷ்ணமூர்த்தி, கிரிதரன் ராஜகோபாலன், சிறில் ,லண்டன் பிரபு போன்றவர்களுடன் சிலநாட்கள். கனவுபோலிருக்கின்றன இன்று அவை.

அதன்பின் இரண்டுமாதம் சிங்கப்பூர். இளமையிலேயே ஓர் ஆசிரியனாக ஆகவேண்டுமென்ற கனவு இருந்தது. அதை நிறைவுசெய்துகொண்டேன். பாகுலேயன்பிள்ளை ஜெயமோகன் என என் அப்பாவின் பெயருடன் இணைந்த என் பெயர் பொறிக்கப்பட்ட அந்த அலுவலக அறை நான் என்றும் நிறைவுடன் நினைவுகூர்வது. சிங்கப்பூரில் வாசகர் சந்திப்பு நிகழ்ந்ததும் மலேசியா சென்றதும் மகிழ்வான நினைவுகள்.

வழக்கம்போல ஒவ்வொருநாளும் வெண்முரசு. சென்ற ஆண்டு வெண்முரசின் உச்சங்கள் என நான் நினைக்கும் நாவல்கள் எழுந்தப்பட்டன.  பன்னிருபடைக்களம், சொல்வளர்காடு, கிராதம் ஆகியவை நான் எழுதியவற்றிலேயே செறிவான ஆக்கங்கள்.  கூடவே சிறுகதைகள். இரு தொடர்களையும் ஊடாக எழுதியிருக்கிறேன். குங்குமத்தில் முகங்களின் தேசம். ஜன்னல் இதழில் பேய்கள் தேவர்கள் தெய்வங்கள் இரண்டுமே இவ்வாண்டில் நிறைவுற்றன. சுட்டிவிகடனில் வெள்ளிநிலம் தொடங்கியிருக்கிறது.

சினிமாவுக்காக எழுதியது, பயணம்செய்தது வேறு. அதுவும் இவ்வாண்டு நிறைவுதருவதாகவே இருந்தது. எந்திரன்2 வருமாண்டின் உற்சாகமான அனுபவமாக அமையும் என நினைக்கிறேன்.மேலும் மூன்று சினிமாக்களில் பணியாற்றிக்கொண்டிருக்கிறேன். சினிமாப்பயணங்களாக மட்டும் பத்துமுறை வெளியூர். இறுதியாக மும்பையில் எந்திரன் முதற்தோற்ற வெளியீடு.

இறுதியாக விஷ்ணுபுரம் விருதுவிழாவில் நிறைந்தது 2016. இதுவரை நிகழ்ந்தாவற்றிலேயே சிறந்த விஷ்ணுபுரம் விருதுவிழா இதுவே. சென்ற ஆண்டு முழுக்க வழக்கம்போல நண்பர்களுடனேயே இருந்திருக்கிறேன். நண்பர்கள் சூழ இருப்பதைப்போல நான் கொண்டாடும் தருணங்கள் வேறில்லை

சென்ற ஆண்டின் துயரம் குமரகுருபரனின் மறைவு. இக்கசப்பையும் அளிக்காமல் வாழ்க்கையை நிறைவுசெய்வதில்லை காலம்.தவிர்க்கத்தவிர்க்கத் ஏக்கம் நிறைக்கும் நினைவாக குமரகுருபரன் நின்றிருக்கிறார் என்னுள்

வருமாண்டும் உற்சாகமாகவே தொடங்கவிருக்கிறது. ஜனவரி14 முதல் மூன்றுநாள்  கோவையில் திருக்க்குறள் குறித்து ஓரு தொடர்உரை ஆற்றுகிறேன். ஜனவரி இறுதியில் சிலநாள் துபாயில். பிப்ரவரியில் இளையவாசகர் சந்திப்பு நிகழ்த்தலாமென எண்ணம். மார்ச்சில் மலேசியா செல்வதாக உள்ளேன். ஒரு இலக்கியச் சந்திப்பு. இங்கிருந்தும் நண்பர்கள் வருகிறார்கள். ஏப்ரலில் ஊட்டி இலக்கிய முகாம். இவ்வருடம் ஜூனில் சிரபுஞ்சியில் மழைபார்க்கச் செல்லவேண்டுமென திட்டம். கண்டிப்பாக மேலும் ஓர் இமையப்பயணம்

இப்பிறப்பை நிறைவுறச்செய்ய ஒரு வாழ்க்கை போதாது என்னும் உணர்வே இருபத்தைந்தாண்டுக்காலமாக என்னை இயக்கும் விசை.என்னையே பலவாகப்பிரித்துக்கொள்கிறேன். படைப்பாளி, பயணி, சினிமாக்காரன், குடும்பத்தவன்,தனியன் என. எல்லா வகையிலும் இந்த ஆண்டை பெருகிநிறைத்திருக்கிறேன். நன்று தொடர்க

ஜெ

பிகு

எழுதி முடித்ததும் எனக்கே சந்தோஷமாக ஆகி  என்னை நானே பாராட்டிக்கொள்ளும்பொருட்டு கீழே போய்  பாசிப்பருப்புப் பாயசம் செய்து மொத்தத்தையும் நானே குடித்துமுடித்தேன். வீட்டில் யாருமில்லை

பழைய கட்டுரைகள்

அதுநீயே 2010

வியாசனின் பாதங்களில் 2014

புத்தாண்டுச் சூளுரை 2015

வரும் ஆண்டும் 2016

புத்தாண்டும் உறுதிமொழியும்

முந்தைய கட்டுரைஊட்டி நாராயணகுருகுலம்- ஓரு விண்ணப்பம்
அடுத்த கட்டுரை’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 75