அன்புள்ள ஜெ,
விழாவைப்பற்றி எழுத வேண்டும் என எண்ணியிருந்தேன். ஒரு இனிய அயர்ச்சி. கணங்களில் அமிழ்ந்திருக்கவே மனம் விரும்பியது. நான் ஆ.மாதவன் விழாவில் பங்குகொள்ளவில்லை. பிற அனைத்து விழாக்களிலும் பங்கேற்று இருக்கிறேன். சென்ற காலங்களின் நினைவுகள், நண்பர்கள், கொண்டாட்டங்கள் என்னை அலைகழித்தபடி இருந்தன. எல்லோரையும் நினைத்துக்கொண்டேன். விழா பதிவுகள் குவிந்து கிடக்கின்றன. என்னையும் ஒரு நண்பர் ‘அண்ணா’ என்று விளித்து கடிதம் எழுதியபோது தான் துணுக்குற்றேன். பாரதி, சங்கர கிருஷ்ணா மற்றும் இன்னபிறர்களை கண்டபோது எனக்கு பின்னே நீண்ட வரிசை உருவாகிவிட்டிருந்தது உரைத்தது. சென்ற ஆண்டு தேவதச்சன் உரையாடலின் போது ‘மிட்டாய் கரைந்துவிடுவதன்’ பதட்டத்தை பற்றி சொன்னார். சுவைக்கவும் வேண்டும் கரையவும் கூடாது. காலத்துக்கு எதிராக மல்லுக்கு நிற்கத்தான் வேண்டும்.
இவ்வாண்டு நிகழ்ந்த விழா எல்லாவகையிலும் மிக சிறப்பாக அமைந்துவிட்டது. மதிய உணவுக்கு நம் நண்பர்கள் குஜராத்தி சமாஜில் உண்ண முடியாத அளவிற்கு கூட்டம். எதிரே இருந்த ஹோட்டலில் எல்லோரும் சேர்ந்து உணவுண்டு பேசி கொண்டிருந்தோம். விழாவும் உங்கள் அண்மையும், நண்பர்களுடனான உரையாடலும் புதிய உத்வேகத்தை எப்போதும் அளிக்கும். நிறைவையும், நம் வாசிக்க / எழுத இவ்வளவு இருக்கிறதே எனும் மலைப்பையும் ஒரு சேர அளிக்கும்.
சிவப்பிரகாஷும், இரா.முருகனும் இந்தாண்டு நான் கண்டடைந்தவர்கள். அவருடைய மாத்ருகா நாடகமும் தமிழில் வர வேண்டும். அவருடைய கவிதைகள் பற்றியும் கொஞ்சம் பேசியிருக்கலாம் என தோன்றியது. கல்பற்றா நாராயணனின் அரங்கும், ராஜீவனின் அரங்கும் இதேயளவு பரவசத்தை அளித்தது ஆனால் அவை வேறு மாதிரியான அனுபவங்கள். காஷ்மீரி சைவத்தின் தனித்துவத்தை பற்றி அவர் சொன்னவை முக்கியமானவை. உணர்ச்சி பெருக்கில் மார்க்சிய இயக்கத்தில் சேர இருந்தவரை ஈ.எம்.எஸ். தடுத்து நிறுத்தியதை அவர் குரலிலேயே நன்றியுடன்J நினைவு கூர்ந்தார்.
பரீட்சைக்கு படிப்பது போல் விழாவிற்கு வரும் எழுத்தாளர்களை வாசித்து கொண்டிருந்தோம். இது என்னடா கஷ்ட காலம் என சோர்வாகவும் இருந்தது. எதுவுமே பேசவேண்டியதில்லை என்றாலும் கூட, எழுத்தாளனிடம் கைகொடுக்கும் மனதிடத்தை அந்த வாசிப்பே அளிக்கிறது என்பதை புரிந்து கொண்டேன். இரா.முருகன் என் நிலத்தை சார்ந்தவர், சுவைமிக்க செம்மண் ஊரணிகளை எழுதியவர். குலக்கதைகளை இரண்டு விதமாக எழுதலாம். புலி நகக்கொன்றை ஒரு வகை என்றால் அரசூர் வரிசை மற்றோர் வகை. பிராமண வாழ்வியலை தான் இரண்டுமே பேசுகின்றன. கருப்பு நகைச்சுவை, பாலியல் எள்ளல்கள், மாய யதார்த்தவாதம் மட்டுமல்ல அவருடைய படைப்புகள், வேறு எவரும் காட்டியிராத சில வாழ்வுகளையும் அவை தாங்கி வந்திருக்கின்றன. வேதம் கற்றும் வெறும் ‘காரியங்களை’ மட்டும் செய்யும் சுந்தர கனபாடிகளின் பாத்திரமும், நித்ய சுமங்கலி சுப்பமாளின் பாத்திரமும் பிராமண வாழ்வியல் பதிவுகளில் வேறு எவரும் தொடாதவை. நானும், காளியும், சுந்தரவடிவேலனும் மீண்டும் மீண்டும் அரசூர் நாவலின் சில பகுதிகளை பற்றி பேசிக்கொண்டே இருந்தோம். பாரதியின் சின்ன சங்கரனின் தாக்கத்தில் அரசூரின் ஜமீன்தார் ராஜா உருவானதாக முருகன் கூறினார்.
சமகால நிகழ்வுகளை தமிழ் எழுத்தாளர்கள் எழுத தயங்குவதை பற்றிய ஒரு கேள்விக்கு “சைக்கிள் டயர ஏத்தியே தமிழ் எழுத்தாளன கொன்னுறலாம்..அவ்ளோ தான் சார் அவன்” என்றார் நாஞ்சில். உண்மை. சுப்ரபாரதிமணியன் 15 நாவல்கள் உட்பட 52 நூல்கள் எழுதியிருப்பதாக சொன்னார். திருப்பூரை மையமாக கொண்டு எத்தனையோ சமகால விஷயங்களை எழுதிருக்கிறேன் என்றார். மிகவும் சங்கடமாக உணர்ந்தேன். நான் அவரை வாசித்ததில்லை. இத்தனை நூல்கள் எழுதியவர் தான் கவனிக்கப்படவில்லை எனும் அங்கலாய்ப்பை அங்கே கூறியபோது உண்மையிலேயே வெட்கமாக இருந்தது. அடுத்தாண்டு அவருக்கு ஒரு தனி அமர்வு வைக்க வேண்டும். வாசித்து விட்டு வருவோம்.
பவாவின் கதை கூறல், வண்ணதாசனின் உரை, உங்கள் உரை, மருத்துவர். சிவராமனுடனான உரையாடல் (அவரை எனது ஆசிரியருள் ஒருவராகவே எப்போதும் கருதி வருகிறேன்), ஆவணப்படம், வினாடி வினா, உணவு, தங்குமிடம் பற்றியெல்லாம் எல்லோரும் எழுதிவிட்டார்கள். வெகு சிறப்பாக இருந்தது என்பதை தவிர சொல்வதற்கு வேறு ஏதுமில்லை. மற்றுமோர் விழா, மற்றுமோர் ஆண்டு காத்திருக்கிறது.
அன்புடன்
சுனில்
பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,
வணக்கம்.
நாளொரு வண்ணமுமாக விஷ்ணுபுரம் விருது விழா பற்றிய வாசகர்களின் தொகுப்புகள் தங்கள் தளத்தில் வந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொன்றும் படிக்க படிக்கத் திகட்டாததாகவுள்ளது. இன்று உங்கள் கைவண்ணத்தில் மேலும் மெருகூட்டுகிறது! நீங்கள் குறிப்பிட்டது போல் அரசு நடத்தும் இலக்கிய விழாக்களில் ஒரு வழக்கமான சம்பிரதாயத்தன்மை நிறைந்து காணப்படும் இதைப்போன்று ஒரு ‘உயிர்ப்பு’ இருக்காது.
விஷ்ணுபுரம் விருது விழா பற்றிய விவரங்களை வண்ணப்படத்துடன் பிரதானமாக வெளியிட்ட “ஹிந்து தமிழ்’ நாளிதழும் போற்றுதலுக்குரியது. அடுத்து வரும் வருடங்களில் அகில இந்திய அளவிலும் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்பது மிகவும் வரவேற்கப்படவேண்டிய கருத்து.விழா சம்பந்தமான புகைப்படங்கள் பலவும் அருமையாக இருந்தது
இனிமேல்தான் காணொளிக் காட்சிகளை பார்க்க வேண்டும். இறுதியாக இந்தமாதிரி விழாக்களில் நேரில் கலந்துகொள்ள ஒரு ‘கொடுப்பினை’ வேண்டும் அது எனக்கு இல்லை! வருங்காலத்தில் வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்.
நன்றி.
அன்புடன்,
அ .சேஷகிரி.
அன்புள்ள சார்,
விழா முடிந்த மறுநாள் நானும் சுந்தரவடிவேலனும் சிமோகா ரவி குடும்பத்தினருடன் மருதமலை சென்றோம். அப்படியே பேரூர். இரண்டுமேகாண்பது இதுவே முதல்முறை. மருதமலையை தெரியும். போனதில்லை. பேரூர் கேள்விப்படுவதே இப்போதுதான். இரண்டில் எது சிறப்பு என்றால், அழகில், எளிமையில் முருகன். அமைதியில், அகங்காரத்தில் சிவன்.
மூன்றாவது நாட்களாக அதே காரில் சுற்றுகிறோம். சனிக்கிழமை இரா. முருகனை அழைத்து வரவேண்டி விமானநிலையம் சென்றபோது சுனிலும் உடனிருந்தார். அனைவரும் அரசூர் வம்சம் படித்திருந்தோம். ஆனால், அவர் ஆளுமை பற்றி தெரியாது. இப்படி கொண்டாட்டமாக எழுதுபவர்களுக்கேயான ஒரு முசுடுத்தன்மை இருக்கலாம். மனிதவளத்துறை தலைவராக இருந்தாராம். ஐயையோ அகம்பாவியா இருப்பார். அஜீத்துக்கும் கமலுக்கும் பஞ்ச் டயலாக் வேற எழுதிருக்கார். நல்லா கோத்து விட்டார் கி்விஸ் செந்தில். இந்த தருணத்தில் பரீக்ஷா ஞாநி அவர்களை நினைக்கிறேன். எழுத்தாளர்களின் படைப்புகளையும் அவர்களின் ஆளுமைகளையும், எளிய வாசகர்களுக்கு டீ, மேரி பிஸ்கெட் கொடுத்து புரியவைத்தவர். இல்லாவிடில் நான் கன்யாகுமரியில் இருந்த உங்களையோ கனடாவில் இருந்த ஷோபாவையோ எப்போது பார்த்திருக்க முடியும்.
விமானமும் ஒருமணி நேரம் தாமதமாம். அரங்கில் பாரதிமணி அவர்கள் விவாதம்.. பட்டையை கிளப்புகிறார் பாட்டா என ரிலையன்ஸ் தகவல். நாம் மட்டும் ஏன் சும்மா நிற்கவேண்டும் என் யோசிக்கிறோம். வெறித்த பார்வையும் தூக்கிப்பிடித்த பெயரட்டைகளுமாய் நிற்கும் மனிதர்களுக்கிடையே ஒரு மணிநேரமாய் விலா நோக சிரித்துக் கொண்டிருக்கும் நால்வரை பொதுமக்கள் கனிவோடும், கடுப்போடும் கடந்து செல்கிறார்கள்.
நாங்கள் இரா.முருகன் அவர்களைப் பார்த்தது இல்லை. ஆகவே ஒரு மானசீகமான விளையாட்டில் இருக்கிறோம். தோராயமாக ஒருவரை பிடித்து நீங்கள் இரா.முருகனா எனக்கேட்டு ஷிமோகர் அழைத்து வர வேண்டும். அவரை போட்டோவை பார்த்து சுந்து உறுதி செய்ய வேண்டும். அவர்களுக்கு தேவையான தரவுகளை நானும் சுனிலும் தருவோம். இது விமானம் வரும் வரைக்குமான விளையாட்டு.
முதலில் ஒருவர் வருகிறார் அவரை மானசீகமாக ரவி அழைத்து வருகிறார்.
”அண்ணா பொட்டிய வைங்கோ..ஆரு தூக்டிட்டு போகப்போறாங்கோ?” லேய் சுந்து.. ..இவரா பாரு…
இவரு இல்லண்ணா கும்பகோணம் அண்டா மாதிரி இருக்காரு..
”நீங்க இல்லீங்கலாம்ணா.. போங்கோ…”
அவர் முனகியபடி செல்கிறார்.. சும்மா போறவன கூட்டிவச்சி அண்டா கிண்டாங்கிறாங்க..
இப்படியாக ஒவ்வொருவராக வந்து புண்பட்டு / மகிழ்ந்து செல்கிறார்கள். இப்படி அடுத்தவரை ஒப்பிட்டு பார்த்து மகிழ்ந்த அந்த ஒருமணிநேர குதூகலத்தை பேலியோக்காரர்கள் கூட தன் வாழ்நாளில் அனுபவித்திருக்க மாட்டார்கள்.
ஒன்று முப்பதுக்கு இரா.முருகன் அவர்கள் வருகிறார். நாங்கள் எண்ணியதற்கு நேர்மாராக இருக்கிறார். அமைதியாக, சொல்லெண்ணிப் பேசுபவராக, முந்தையநாள் கச்சேரியில் கேட்ட ஆலாபனைக்கு இன்னும் உருகி போனில் சொல்லிக்கொண்டுருப்பவராக..
சுப்பம்மா பாட்டி, எழுத்ததிகாரம், ஐயணை என அவர் புனைவுலகம் பற்றி பேசுகிறோம். அன்னபூர்ணாவில் மதிய உணவு முடித்து அரங்கிற்கு வருகிறோம். உரை முடித்து வாசகர்கள் உரையாடலாம் என்ற போது, “நடையிலும், புனைவுலக சாத்தியங்களிலும் சுஜாதாவைத் தாண்டிச் செல்கிறீர்கள். ஆனால், சுஜாதாவைப் பின்பற்றி எழுதுபவராக அறியப்படுகிறீகள். இது பற்றி உங்கள் கருத்து என்ன” என்ற அற்புதமான கேள்வியை முதல்வரி இல்லாமல் கேட்கிறேன். கேட்டவுடனே அந்த அபத்தம் உரைக்கிறது. நீங்கள் அரங்கில் இருக்கிறீர்களா என பதட்டமாக பார்க்கிறேன். இல்லை.. ஜாஜா மட்டும் இரு மிஸ்ஸுகிட்டயே சொல்றேன் என்பது போன்ற பாவனையில் முறைக்கிறார். ஆனால், இரா.முருகன் இந்த கேள்வியை ஷார்ட்பிட்ச் பந்தை எதிர்கொள்வது போல அனயாசமாக தட்டுகிறார். “ அது எனக்கு ஒரு இசையாகவும், வசையாகவும் இருக்கிறது..”
அடுத்து கேள்வி கேட்பதில் என் தம்பியாக இருக்கும் சிலுக்குவார்பட்டி சிங்கம் தன் கேள்வியை கேட்கிறார்..”அதெப்படி சார், சாமிநாதன் முன்னோர்கள் ஆவிகூடல்லாம் பழகறான்?” இதற்கு அவர் சொன்ன பதில் மிகவும் ஆச்சரியமானது. அதை நான் இங்கு எழுதப்போவதில்லை.. கிட்டத்தட்ட நாவலின் மையமாக இருக்கும், அதை தாங்கிப் பிடிக்கும் சாமிநாதன் மரண நிகழ்வு உண்மையில் என்ன அது மாய யதார்த்த வாதத்தில் எப்படி மாறுகிறது என உரைக்கிறார்..அதன்பின் இப்படி முடிக்கிறார்.. “அவ்ளோதாங்க.. மத்தபடி ஆவி சம்போகம்லாம் வாய்ப்பு இல்லீங்க..” தம்பி மிக்க ஏமாற்றத்தோடு அமர்கிறார்..
பிறகு, சிறப்பு விருந்தினரிடம் கேள்வி கேட்பதில் என் அண்ணனாக ஏற்கனவே நிரூபித்து இருக்கும் கடலூர் சீனு ஒரு கேள்வி கேட்கிறார். ஆனால் அது நோபாலாக அதுவும் பவுண்டரிக்கு செல்கிறது. மகன் லெக் ஸ்பின்னர் என்றால் இவர் சச்சின் போல் இருக்கிறார். அடுத்த நாள் நாஞ்சில் அவர்கள், என் அருகில் இருப்பவன் நல்லவனா இல்லை அயோக்கியனா என தெரியும் என்ற போது, ஒரு திடுக்கிடு உடல்மொழியைக் காட்டி தொண்ணூற்று ஒன்பது வரை அடித்த சச்சின், விழா உரையில் சதமடிப்பார் என் எண்ணிக்காத்திருந்தேன்…
ஞாயிறு காலை கல்யாண்ஜி பேசுகையில் அரங்கிற்கு வந்தார் சிவபிரகாஷ் அவர்கள். தமிழ் கவிதை பற்றி அவருக்கு என்ன தெரியும்?. ஆனால், தேநீர் இடைவேளை போது “இந்தப்பக்கம் போகணூமா“ என என்னிடம் கேட்டபோதுதான் அவருக்கு தமிழ் ஒரளவு பேசவும் தெரியும் என உணர்ந்தேன். காரைக்கால் அம்மையார் முதல் கவிஞர் சுகுமாரன் வரை தமிழின் அத்துணை முக்கியமான ஆளூமைகளைப்பற்றியும் அறிந்து வைத்திருக்கிறார் என்பது தனிப்பேச்சிலும் அரங்கிலும் உணரமுடிந்தது. கிராதம் எழுதும்போது இயல்பாக அவர் ஞாபகம் வந்தது என நீங்கள் சொன்னீர்கள். அதன்பின் அவர் பேச்சுக்களை செய்கைகளை சார்வகன், பைராகி யாகவே கண்டுவந்தேன். :-) விழா அரங்கில் “ மன்னிக்கவும், நான் உங்கள் தாய்மொழியில் பேசப்போவதில்லை.. என் தாய்மொழியிலும்” எனத்துவங்கி ஆங்கிலத்தில் அவர் ஆற்றிய உரை மிகச்சிறப்பானது. அவன் ஆணையிடுவதில் குழந்தை போல என்ற கண்ணன் குறித்த வெண்முரசு வரி ஞாபகம் வருகிறது. இனி ஒரு இந்திய எழுத்தாளருக்கும் விருது வழங்கவேண்டும் என சொல்லி உடனே நீங்கள் ஏற்றுக்கொண்டீர்கள்.
முந்தைய விழாவில் கவிஞர் தேவதச்சன் படைப்புகளை அறிமுகம் செய்து கொண்டேன். கல்யாண்ஜி படைப்புகளை ஏற்கனவே படித்திருந்தாலும், அவரை இன்னும் நெருக்கமாக உங்களின் மற்றும் பவா அவர்களின் உரை மூலமாக அறிந்தேன். இரா.முருகன் மற்றும் ஹெச்.எஸ்.எஸ் ஆகியோரின் படைப்புகள் இந்த விழா மூலமாக நான் கண்டறிந்தவை. அதற்கு(ம்) உங்களுக்கு நன்றிகள்
அன்புடன்,
R.காளி ப்ரஸாத்
இனிய ஜெயன்,
வணக்கம்.
விஷ்ணுபுரம் விருது விழாவில் இரண்டு நாட்களும் கலந்து கொண்டவர்களில் நானும் ஒருவன். தங்களைச் சந்தித்ததும், இவ்விழாவில் கலந்து கொண்டதும் இதுவே முதல் முறை. நிரம்பி வழியும் ஒரு குளத்தினைப் போன்று தளும்பிக் கொண்டிருந்த மனநிலையிலிருந்து இன்றுதான் வெளிவர முடிந்தது.
மிகவும் தேர்ந்த இசைக்கலஞரின் இசைநிகழ்வு போல் மிகக் கச்சிதமாய் அனைத்து நிகழ்வுகளும் நடந்தன. இத்தனை படைப்பாளிகளை, இத்தனை வாசகர்களை ஓரிடத்தில் பார்த்தது புது அனுபவம்.
வண்ணதாசனைக் கேட்டபோதும், பார்த்தபோதும் மனசுக்குள் நாகலிங்கப்பூவின் வாசம் திரண்டெழுந்தது. அதேமாதிரி உங்களைக் கண்டதும், பேசியதும் கன்னியாக்குமரிக் கடல் பார்த்த அனுபவம் போன்றது. நாஞ்சில் நாடனின் ஒவ்வொரு சொல்லும் அம்பறாத் தூணியிலிருந்து புறப்பட்டு வந்து மனதைத் தைத்தது. சிவப்பிரகாஷ் தன் உரையில் சிந்தனையின் தடத்தை நீட்டிக் கொண்டே சென்றது கொஞ்சம் புதிதாக இருந்தது.
சூத்ரதாரி, லக்ஷ்மிமணிவண்ணன், சுகா பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
விவேகானந்தருக்குக் கிடைக்காத நூறு இளைஞர்கள் உங்களுக்குக் கிடைத்திருக்கிறார்கள் ஜெயன். வாழ்த்துக்கள்.
நன்றி.
தஞ்சையிலிருந்து,
சந்தானகிருஷ்ணன்.
மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
விழா பதிவுகள் அனைத்தையும் வாசித்தேன். மிக பெரிய மன எழுச்சி அடைந்ததை போல் உணர்கிறேன். இலக்கியம் அதன் வாசகர்களை பெருக்கி கொண்டே இருக்கிறது, இந்த ஆண்டு பெரும் இளைஞர் கூட்டம் கலந்து கொண்டிருப்பதாக அனைத்து பதிவுகளிலும் தெரிகிறது. கலந்து கொள்ள இயலாமல் எங்கோ இருந்து கொண்டு மானசீகமாக அந்த 2 நாட்களையும் நினைத்து கொண்டு, நம் விழாவின் பதிவுகளையும் ,காணொளிகளையும் பார்த்து கொண்டு இருக்கும் மிக பெரிய வாசகர் உலகம் இந்த விஷ்ணுபுர இலக்கிய வட்டத்தின் விருதுக்கு பின்னால் நின்று கொண்டிருக்கிறது.
வர முடியாமல் போன வருத்தங்கள் இருந்தாலும், விருது விழா நிகழ்ச்சியை சிறந்த காணொளி வடிவத்தில் காண முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சி. விழாவில் கலந்து கொண்டதை போன்ற உணர்வு தந்தது. ஸ்ருதி டிவி க்கு என் மனமார்ந்த நன்றிகள். இனி வரும் காலங்களில் முந்தைய நாள் விவாத அரங்கையும் காணொளி மூலம் காண முடியும் எனில் என்னை போன்ற வாசகர்கள் முழுவதுமாக அந்த விழாவில் பங்குபெற்றதை போல் உணர்வார்கள். நம் விழா இனி வரும் காலங்களில் இன்னும் பிராம்மாண்டமாய், அதன் வீச்சை நாடு முழுவதும் செலுத்தும் என்பதை இப்போதே உணர முடிகிறது.
டிசம்பர் மாதம் இலக்கிய வாசகர்களுக்கு மிக பெரிய கொண்டாட்டமான நாட்களாக ஆகி இருப்பதில் பெரும் மகிழ்ச்சி.
என்றும் வாசிப்புடன்
சரவணன்
வணக்கம் ஜெ
நல்லா இருக்கீங்களா? மின்மினிப் பூச்சிகள் ஒன்று சேர்ந்து பறந்து தீயாக மாறினால், கண் கலங்கத்தானே செய்யும்? இத்தனை இயல்பான ஒரு படைப்பாளி கரடியின் ஏக்கத்தின் தேனைப் பரவச நிலையில் சொல்லும் போது கண் கலங்கத்தானே செய்யும்? உங்களோடு இரயிலில் பயணிக்கும் நாடாச்சி நான் தானே என்று தளுதளுத்து அன்பின் கவிஞன் கேட்கின்றபோது கண் கலங்கத்தானே செய்யும்? முழுக்க முழுக்க அன்பு செய்தலையே இயல்பாகக் கொண்டவர்கள் இன்னும் இருக்கிறார்கள், அதனால்தான் இந்த உலகம் மழையோடு இருக்கிறது என்று இன்னொரு பாணன் ஆணித்தரமாக சொல்லும்போதும் கண் கலங்கத்தானே செய்யும்?
பக்கத்து இருக்கைப் பையன் பாதி வடையைப் பங்கிட்டுக் கொடுக்கும் காலத்தில்தான் நாம் இன்னும் இருக்கிறோம் என்று என்னூர் எழுத்துக்காரன் சொல்லும்போது கண் கலங்கத்தானே செய்யும்? இன்னும் போய், தங்கள் உணவைப் பொருட்படுத்தாது, நிகழ்வுகளைத் தியாகம் செய்து உழைத்து சிவந்துபோய் சுற்றித்திரிந்த ரசிகர்களையும் புதியவர்களையும் பார்க்கும்போது கண் கலங்கத்தானே செய்யும்?
பாத்துமாவின் ஆட்டோடும் சிறைச்சாலை மதில்களோடும் அரசூர் வம்சத்துக்காரர்கள் ஏறி மிதித்து சப்தித்து வெண்முரசு முழக்கித் தணியவில்லை தாகம், தூக்கம் தாண்டி எத்தனை நாட்கள் நீடிக்கும் இந்த நினைவுகள்? எட்டுத்திக்கும் மத யானை ஏறி சமவெளி தாண்டி ஒரு சிறு இசை தேடிச் சென்று மணல் உள்ள ஆற்றில் இறங்கிக் குளித்து இறுதியாக நட்சத்திரங்கள் ஒளிந்திருந்த கருவறையில் சாந்தமடையட்டும் வாசகனின் தவிப்பு.
இந்த இரண்டு நாள் நிகழ்வு ஒவ்வொரு வாசகனையும் தன் வாழ்க்கையில் ஒரு சிறு படி மேலே ஏற்றி விட்டிருக்கிறது. அவன் தூக்கம் இனி தொலைந்து வாசித்து வாசித்து தினசரி பிறப்பானாக.
கல்யாண்ஜியின் கையைப் பிடித்துக் கொள்ளவா என்று கேட்டேன் ஜெ. உங்கள் எல்லோர் கையையும் பிடிக்கத்தானே நான் இன்னும் இருக்கிறேன் என்று அரவணைத்துக் கொண்டார்.
உங்களருகில் எப்போது வந்தாலும் தோள் மேல் கை போட்டுத்தான் பேசுகிறீர்கள் ஜெ. எதற்காக எங்களுக்கு இந்தவொரு வாய்ப்பு? பவாவும் கூட பேசுகின்ற போதெல்லாம் தழுவிக் கொண்டு கண் பார்த்து விசாரிக்கிறார். வந்திருந்த ஒவ்வொரு படைப்பாளியும் நெஞ்சில் பதிந்து சென்றிருக்கிறார்கள் ஜெ.
வலைப்பக்கத்தில் வந்திருக்கும் நிகழ்ச்சி குறித்த பதிவுகளைப் பாருங்கள். ஒவ்வொரு வாசகனுக்குள்ளும் ஒரு வித எழுத்து நடை. எப்படிச் சாத்தியம் இது? சம காலத்தில் எழுதிப் படைத்து எப்படி வாசிக்கவென்றும் சொல்லி, கூடவேயிருந்து சிந்தனைகளை மாற்றிச் செல்லும் படைப்பாளிகளால் தான் இது சாத்தியம். சிரம் தாழ்ந்த பாராட்டுக்கள் ஜெ. விஷ்ணுபுரம் அமைப்பு நண்பர்களுக்கு பாராட்டுக்கள் ஜெ. இன்னும் இருக்கிறது உலகம், அதில் நாம் இருப்போம் வாசித்து, படைத்து, கண் கலங்கி….
சுஷில்