அலைவரிசை ஊழல்

அன்புள்ள திரு. ஜெயமோகன்,

நலமறிய ஆவல்.

2 வருடங்கள் இருக்கும். தமிழ்நாட்டில் சேலத்திற்கு அருகில் ஒரு கிராமம் என்று ஞாபகம். ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடப்பட்டவுடன் பச்சிளம் குழந்தைகள் பலர் இறந்தனர்.

எப்பொழுதும் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்படவேண்டிய தடுப்பூசி மருந்துகள் அடிக்கடி நிகழும் மின்வெட்டு காரணமாக விஷமாக மாறி இருக்கலாம் என தெரியவந்தது.

அதற்கும் மேல் அப்படி மின்வெட்டு நடந்து இருந்தால் அம்மருந்துகள், விதிமுறைகளின் படி உடனடியாக சிறு பனிக்கட்டி பெட்டிகளில் மாற்றப்படு இருக்கவேண்டும் எனவும் அப்படி செய்யப்பட்டதா எனவும்
கேள்வி எழுப்பப்பட்டது.

இறந்த குழந்தைகள் இந்தியாவில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் வீச்சளவில் இருக்கும் பகுதிகளில் பிறந்த பாக்கியவான்கள். ஒரு லட்சத்து எழுபதாயிரம் கோடியில் எவ்வளவு பனிக்கட்டிபெட்டிகள்?

எத்தனை தங்குதடையற்ற மின்சாரம் அளிக்கும் பெட்டிகள்? எத்தனை மின்சார உற்பத்தி மையங்கள்? அந்த பாக்கியம் பெறாத பகுதிகளில் எத்தனை சுகாதார மையங்கள்? எத்தனை செவிலியர்கள்? எத்தனை மருத்துவர்கள்?

உலகில் ஊட்டம்இல்லாத உணவினால் வளர்ச்சி குன்றியவர்களில் 40 சதவீதம் பேர் வாழும் ஒரு நாட்டில் ஜனநாயகமும் முதலியமும் சேர்ந்தியங்குவதற்கு அடிப்படையான ஒரு சொல்லப்படாத ஒப்பந்தம் ஒன்று உண்டு.

அரசாங்கம் தங்கு தடையற்ற வகையில் 9%-10% “பொருளாதார வளர்ச்சி”யை எட்ட என்னவேண்டுமானாலும் சமரசம் செய்யலாம். பெரும்செல்வந்தர்கள் வியாபாரம் பெருக முடிந்த வகையிலும் முடியாத வகையிலும் உதவலாம்.

செல்வம் கொழிக்கும் நமது நகரங்களின் பளபளப்பில் வறுமையில் வாடும் கோடிக்கணக்கானோருக்கு இதை வேடிக்கை பார்த்து பெருமூச்சு விடுவதைத்தவிர அச்செல்வத்தை சுண்டுவிரல் தீண்டவும் அதிகாரம் இல்லை.

வேலையோ கல்வியோ சுகாதார வசதியோ கோர எந்த உரிமையும் இல்லை. 3 சதவீதத்தினர் மட்டுமே வரிகட்டும் நாட்டில் வரிப்பணத்தில் அவர்களின் முன்னேற்றத்திற்கு ஒரு பைசா செலவிடவேண்டும் என்று கோரவும் உரிமை இல்லை.

ஆனால் இந்த நாட்டில் வீசும் காற்றில் சரிசமமான பங்கு உண்டு. இயற்கை வளங்களில் சரிசமமான பங்கு உண்டு. நியாயப்படி பார்த்தால் கதியற்றவர்களுக்கே அதில் முன்னுரிமை. ஆனால் இங்கு இழப்பதற்கு எதுவும் இல்லாத இவர்கள் அல்லவா
கொள்ளை அடிக்கப்பட்டு இருக்கிறார்கள் ? இவர்கள் நாளை மாவோயிசப் பிரச்சாரத்தில் விழுந்து போராட்டத்தில் குதித்தால் எந்த தார்மீக உரிமையில் இந்திய அரசு இவர்களை எதிர்கொள்ளும்? இந்நிலையில் காந்தியத்திலும் இந்திய ஜனநாயகத்திலும்
நம்பிக்கை உள்ளவர்கள் என்னதான் செய்வது?

கடும் மன உளைச்சலுக்கு மருந்தாக மல்லிகார்ஜுன் மன்சூர் பாடிய யமன்-கல்யாண் கேட்டுக்கொண்டே தூங்கி விடலாம் என்று நினைக்கிறேன்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? தாற்காலிக சச்சரவுகளில் கருத்துசொல்வதில்லை என்று கொள்கை விளக்கமோ, இல்லை தொலைபேசித்துறை ஊழியர் இதில் கருத்துசொல்வதற்கு இல்லை என விலகாமலோ, ஏதாவது சொல்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

நன்றி,
ஸ்ரீநிவாஸன்

****

அன்புள்ள சீனிவாசன்,

பொதுவாக நான் அரசியல் விஷயங்களில் சுடச்சுட கருத்து சொல்வதில்லை. ஏன் என்று முன்னரே சொல்லியிருக்கிறேன். இந்த உடனடிக்கருத்துக்கள் பெரும்பாலும் ஊடகங்களை நம்பி உருவாக்கப்பட்டு விவாதிக்கப்படுகின்றன. ஊடகங்களுடன் நெருக்கமான தொடர்புள்ளவன் என்ற முறையில் இந்த கருத்துக்கள் எப்படி உருவாக்கப்படுகின்றன, ஏன் உருவாக்கப்படுகின்றன என நான் நன்றாகவே அறிவேன்.

உண்மையில் ஒரு பெரிய நாடகத்தில் ஒரு சிறிய முனை மட்டும் ஊடகவியலாளர்களால் சேர்ந்து சமைக்கப்பட்டு நமக்காக பரிமாறப்படுகிறது. அவற்றை முழ்மூச்சாக நம்பி விவாதிப்பதென்பது பொதுவாக நேரவிரயம், குறிப்பாக எழுத்தாளனுக்கு. இதுசார்ந்து எனக்கு பெரிய ஏமாற்றங்கள் உள்ளன.

மேலும் பல விஷயங்களில் நான் உடனுக்குடன் சொல்லியாகவேண்டிய எவையும் இருப்பதில்லை. நான் ஒரு எழுத்தாளன் மட்டுமே. அரசியல் ஆய்வாளனோ,செயல்பாட்டாளனோ அல்ல. பொதுவாக இந்த விஷயங்கள் சார்ந்து பிறர் சொல்வதற்கு மேலாக நான் சொல்லக்கூடியதென ஏதும் இல்லை.

இந்தவிஷயங்களில் நான் விரிவாக நாளிதழ்களையும் ஆய்வுக்கட்டுரைகளையும் வாசித்து தரவுகளைச் சேகரித்துக்கொண்டு சிந்திப்பதும் இல்லை. காரணம் இந்திய அரசியலில் நான் குற்றம்சாட்டி எதிர்க்கவேண்டிய, ஆதரித்து வாதாட வேண்டிய தரப்பு என ஏதும் இல்லை. என்னுடைய உணர்ச்சிகள் எப்போதுமே சராசரி இந்தியக்குடிமகனின் உணர்ச்சிகளுடன் ஒத்துப்போகக்கூடியவை மட்டுமே. ஒரு நிரந்தரப்பயணியாக நான் எப்போதும் அவர்களுடன் அவர்களில் ஒருவனாகவே இருந்துகொண்டிருக்கிறேன்.

இந்த ஊழல் இதுவரை தொடர்ச்சியாக நாம் அறியவந்த பிற ஊழல்களின் வரிசையில் கடைசியாக வந்தது. பணமதிப்புக்குறைவுக்கு ஏற்ப தொகை ஏறிக்கொண்டே வருகிறது. அதைவிட முக்கியமாக புதிய ஊழல்களைப்பற்றி சொல்லும்போது முந்தைய ஊழல்களின் தொகையைவிட அதிகமாக, கேட்டதுமே அதிர்ச்சியடையச்செய்வதாகச் சொல்லவேண்டிய தேவை ஊடகங்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உள்ளது. இன்னும் பெரிய தொகை ஊழல் சீக்கிரமே வெளிவரலாம்.

இந்த ஊழலை ஒட்டி யோசிக்கும்போது நம்முடைய நடுத்தரவர்க்கப் பொதுச்சிந்தனையில் உள்ள சில பிரமைகளைப்பற்றியே நான் யோசிக்கிறேன். நாம் அடையும் மனச்சோர்வும் கொந்தளிப்பும் எல்லாம் பெரும்பாலும் அந்த பிரமைகளைச் சார்ந்தவை. அந்த பிரமைகள் நம்முடைய கல்விக்காலகட்டத்தில் பாடப்புத்தகங்களால் நமக்கு உருவாக்கி அளிக்கப்பட்டவை. எளிய இலட்சியவாத உருவகங்கள் அவை.

அந்த உருவகங்களை தாண்டி ஓரளவு அரசியல்கோட்பாட்டுப் புரிதலுடன் இவ்விஷயங்களைப் பார்க்க ஆரம்பித்தால் இன்னமும் யதார்த்தமாக நாம் சிந்திக்க முடியும். அப்போது இந்த கொந்தளிப்புகளும் சோர்வுகளும் உருவாகாது என்று நினைக்கிறேன்.

ஓர் அரசாங்கம் என்பது என்ன? ஒரு குறிப்பிட்ட அரசியல்கட்டமைப்புக்குள் செயல்படும் பல்வேறு அதிகாரச் சக்திகள் நடுவே இயல்பாக உருவாகி வரக்கூடிய ஒரு சமரசப்புள்ளி அது . தராசின் முள் போல. அந்த அதிகார சக்திகள் நடுவே தொடர்ச்சியான ஒரு சமரசத்தை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. அந்த சமரசம் வழியாகத்தான் அது நிலையான அரசமைப்புகளை உருவாக்கி நீடிக்கச்செய்கிறது.

ஆகவே ஓர் அரசு என்பது இடைவிடாத அதிகாரப்போட்டிகளாலும், பேரம்பேசல்களாலும், பேச்சுவார்த்தைகளாலும், சமரசங்களாலும் ஆனதாகவே இருக்க முடியும். அதிகாரத்தரகர்கள், அதிகாரத்தூதர்கள், அதிகாரப்பிரதிநிதிகள் எப்போதும் அந்த மையத்தில் செயல்பட்டுக்கொண்டே இருப்பார்கள். அதிகாரத்தில் உள்ள ஏற்றதாழ்வு வன்முறைபலத்தாலும் பணபலத்தாலும் ஆனது. ஜனநாயகத்தில் எண்ணிக்கைபலத்தாலும்.

அந்த அதிகாரச்சமநிலை குலையும்போது, சமரசம் மூலம் அதிகாரப்பகிர்வு சாத்தியமில்லாமல் ஆகும்போது, அதிகஅதிகாரம் கொண்ட தரப்புகள் குறைவான அதிகாரம் கொண்ட தரப்புகளை வன்முறை மூலம் அடக்குகின்றன. முன்பெல்லாம் நேரடி ஆயுத வன்முறை. இப்போது பொருளியல் வன்முறை. சமரசத்துக்கான நிபந்தனையாக வன்முறை எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது.

ஓர் அரசாங்கம் என்பது கொள்கையளவில் எப்போதும் வன்முறையை தவிர்க்க முயலக்கூடியதுதான். அதற்காகவே சமரசத்தை அது செய்கிறது. அரசு இல்லையேல் வன்முறை மட்டுமே இருக்கும். அதையே அராஜகம் என்கிறோம். ஆனால் அரசின் பின்னணியில் எப்போதும் வன்முறை இருந்துகொண்டிருக்கிறது.

இதுவே அரசு செயல்படும் முறை. இப்போது மட்டும் அல்ல. அசோகச் சக்ரவர்த்தி காலம்முதல், அக்பர் காலம் முதல், ராஜராஜ சோழன் காலம் முதல் எப்போதும் இப்படித்தான். அரசாங்கத்தின் இயல்பும் செயல்பாடும் முழுக்கமுழுக்க அந்த அதிகாரச்சமநிலையால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது. அதில் இலட்சியவாதங்களுக்கு பெரிய இடம் ஏதும் இல்லை. தனிநபர் ஆளுமைகள் பெரிய விளைவுகளை உருவாக்குவதும் இல்லை.

சமீபகாலமாக மூன்று வரலாற்றுப்புலங்களை கூர்ந்து கவனித்து வருகிறேன். ஒன்று திருவிதாங்கூர் அரசின் நாநூறு வருட ஆட்சி. இன்னொன்று மதுரை நாயக்கர் ஆட்சி. மூன்றாவதாக பிரிட்டிஷ் ஆட்சி. முதலில் சொல்லப்பட்டது சிறிய நிலப்பிரபுத்துவ ஆட்சி. இரண்டாவது, நிலப்பிரபுத்துவ பேரரசு. மூன்றாவது முதலாளித்துவ அரசு.

மூன்றிலுமே நான் காணும் பொது அம்சம் என்பது லஞ்சம் மற்றும் ஊழல் என்று நாம் இன்று சொல்லும் நிதிப்பங்கீடுகள் மூலமே முழுக்க முழுக்க அதிகாரச்சமநிலை பேணப்பட்டிருக்கிறது என்பதுதான். அவை நிதிமுறைகேடுகள் என்ற கோணமே இப்போது உருவானதுதான். மையத்துக்கு கொண்டுசேர்க்கபப்ட்ட நிதி பல்வேறு அதிகாரசக்திகளாலும் அவர்களைச் சேர்ந்தவர்களாலும் பங்குவைக்கப்பட்டிருக்கிறது, அவ்வளவுதான்.

இதில் நிதிவசூலித்தவர்கள் அவர்களால் முடிந்தவரை எடுத்துக்கொள்வது, தலைமை தனக்கு வேண்டியவர்களுக்கு ஒதுக்குவது எல்லாமே அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இடைத்தரகர்கள் , ரகசியபேரங்கள் எல்லாமே இருந்திருக்கின்றன. இன்றுபோலவே அன்றும் ஆயுதக்கொள்முதலில்தான் அதிகபட்சமாக ‘கமிஷன்’ அடிக்கப்பட்டிருக்கிறது. திருவிதாங்கூர் அரசில் ஒல்லாந்துக்காரர்களிடம் துப்பாக்கி வாங்குவதென்பது ஒரு பெரிய அரசியல் கொண்டாட்டமாக இருந்திருக்கிறது.

அன்று அவை எவருக்கும் பிழையெனவே தோன்றியிருக்காது. அவை பிழை என தோன்ற ஆரம்பித்தது பிரிட்டிஷ் ஆட்சியின் கடைசிக்காலத்தில் ஜனநாயகம் உருவாக ஆரம்பித்தபோதுதான். இந்தியாவில் வெளிவந்த ஆங்கிலசெய்தியிதழ்கள் ஆரம்பத்தில் வெளியிட்ட செய்திகள் பெரும்பாலும் ஊழல்கள் மற்றும் உயர்மட்ட பேரங்களைப்பற்றியவையே. பிரிட்டிஷ் இந்திய அரசில் நிதிப்பங்கீடுகளில் அதிருப்தி அடைந்த அதிகாரத் தரப்புகள்தான் அவற்றை செய்தியாக்கியிருக்கின்றன.

சுவாரசியமான ஒரு தகவல். மலையாளத்தில் ஊழலுக்கு ‘கும்பகோணம்’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. ’ஸ்பெக்ட்ரம் கும்பகோணம்’ என மலையாள நாளிதழ்களில் வாசிக்கலாம். எப்படி அந்த பெயர் வந்தது தெரியுமா?

இந்தியாவில் பிரிட்டிஷார் மூலம் முதலாளித்துவ ஆட்சி உருவான ஆரம்பகாலத்திலேயே அதன் ஆகப்பெரிய ஊழல் அரங்கேறிவிட்டது. 1906 ல் சென்னையை மையமாக்கி அர்பத்நாட் வங்கி [Arbuthnot & Co] என்ற ஒன்று இருந்தது. இந்தவங்கியின் பணம் சிலரால் வேறுபல திசைகளில் திருப்பிவிடப்பட்டு எதிர்பாராதபடி வங்கி சரிந்தது. இன்றைய மதிப்பில் ஸ்பெக்ட்ரத்தை விட பெரிய இழப்பு ஏற்பட்டது. பல்லாயிரம்பேர் நடுத்தெருவுக்கு வந்தனர்.

அந்த ஊழலில் மையக்குற்றவாளியான அர்பத்நாட்பிரபு 18 மாத தண்டனையுடன் தப்பினார். பணத்தை இழந்தவர்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. அந்த பணம் எங்கே எவருக்குச் சென்றது என்பது இன்றும் முழுக்க அறியப்படாத ரகசியம். ஒன்றுக்கு மேல் ஒன்றாகச்செல்லும் சிக்கலான பல விளக்கங்கள் கொண்ட ஒரு சூதாட்டம் அது.

அக்காலத்தில் கும்பகோணத்தை சேர்ந்த சிலர் அப்பகுதி நிலக்கிழார்களிடமிருந்து பெரும்தொகையை வாங்கி அர்பத்நாட் வங்கியில் முதலீடு செய்திருந்தார்கள். அந்தப்பணம் இல்லாமலாயிற்று. அதைப்பயன்படுத்திக்கொண்டு மேலும் பலர் வாங்கிய பணத்தை ஏமாற்றினார்கள். இது அக்காலத்தில் கும்பகோணம் ஜாப் என்று சொல்லப்பட்டது. சென்னை ராஜதானியின் பகுதியாக இருந்த மலபார் நாளிதழ்கள் அச்சொல்லாட்சியை கையாண்டன. இன்றும் மலையாளத்தில் அச்சொல் நீடிக்கிறது.

திருவிதாங்கூரில் 1910 முதல் ’தேசாபிமானி’ என்ற செய்தியிதழ்மூலம் ராமகிருஷ்ணபிள்ளை என்பவர் மன்னரின் ‘ஊழல்களை’ செய்தியாக்கி கண்டித்தபோது மன்னருக்கும் அவரது சுற்றத்துக்கும் உண்மையிலேயே அவர்கள் செய்யும் பிழை என்ன என்று புரியவில்லை. மக்களுக்கும்தான். அரசாங்கப்பணத்தை மன்னர் பிடித்தமானவர்களுக்கு கொடுப்பது என்றும் உள்ள நடைமுறைதானே?

மெல்ல மெல்ல ஜனநாயகம் உருவாகி வந்தபோதுதான் மன்னர் கையாள்வது மக்களின் வரிப்பணம் என்றும், அது மக்களுக்கு நலப்பணிகள் ஆற்றுவதற்குரியது என்றும், அதை பிறர் அனுபவிப்பது பிழை என்றும் எண்ணம் உருவாகியது. அதன்பின்னரே அந்த ’பொருளாதார நடவடிக்கை’களுக்கு ரகசியத்தன்மை தேவைப்பட்டது. அதன்பின்னரே ஊழல் என்ற சொல்லாட்சி உருவானது.

ஆம் ’மக்கள்பணம்’ என்ற எண்ணம்தான் ஊழல் என்ற கருத்தை உருவாக்குகிறது. நாம் ஊழல் என்று நினைப்பதை கோடானுகோடி மக்கள் அப்படி நினைப்பதில்லை என்று கவனித்திருக்கிறேன். காரணம் அவர்கள் இன்னமும் ஜனநாயக அமைப்புக்குள் மன அளவில் வந்து சேரவில்லை. அவர்களுக்கு அது சர்க்கார் பணம்தான். அதை சர்க்காருடன் சம்பந்தப்பட்ட சக்திகள் பங்கிடுவதை அவர்கள் தவறாக எண்ணுவதில்லை. ஆகவேதான் ஊழல்வாதிகளை அவர்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கிறார்கள்.

இந்திய சுதந்திரப்போராட்ட காலகட்டத்திலும் சுதந்திரத்துக்குப் பின் சிறிதுகாலமும் இங்கே ஒரு இலட்சியவாதம் ஓங்கி நின்றிருந்தது. அப்போது ஊழல் எனப்படும் நிதிப்பங்கீடுகள் சம்பந்தமான சில மனத்தடைகள் தலைவர்கள் மட்டத்தில் இருந்தது. நேரு, படேல், ராஜாஜி, காமராஜ் போன்ற தலைவர்கள் தங்கள் அளவில் அந்த நிதியில் பங்குபெறாதவர்களாக இருந்தார்கள் என்றுவேண்டுமானால் சொல்லலாம்.

ஆனால் தேசம் என்ற அமைப்பின் பல்வேறு அதிகார சக்திகள் நடுவே சமரசம் செய்துகொண்டுதான் ஆட்சியை நிகழ்த்த முடியும். சுதந்திரம் கிடைத்த கொஞ்சநாட்களிலேயே இந்த யதார்த்தம் தலைவர்களுக்கு தெரிந்தது. எம்.ஓ.மத்தாய் போன்றவர்களின் சுயசரிதையில் இந்த யதார்த்தம் நோக்கி நேருவும் பட்டேலும் வந்து சேர்ந்த சித்திரம் உள்ளது. மும்பை தொழிலதிபர்களும் பெருநிலக்கிழார்களும் கடல்வணிகர்களும் அரசை பலதிசைகளுக்கு இழுக்கும் சித்திரத்தை நாம் அவற்றில் காண்கிறோம்.

ஆக, எப்போதும் நிகழ்ந்துவருவது போல இப்போதும் அரசு என்ற மையத்தில் சேர்க்கப்படும் செல்வத்தை அந்த அரசின் பங்காளிகளாகச் செயல்படும் அதிகார அமைப்புகள் தங்கள் சக்திக்கு ஏற்ப பல்வேறு வகையில் பங்கிட்டுக்கொள்கின்றன. இந்த அதிகார மையங்களில் டாட்டா, அம்பானி போன்ற பெருமுதலாளிகள் முக்கியமானவர்கள். அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் இன்னொரு தரப்பு. பெருந்திரளாகச் சேர்ந்த சிறுவணிகர்களும் ஒரு தரப்பே. அப்படி பற்பல தரப்புகள், பல கைகள்

இவர்கள் நடுவே சமசரங்களைச் செய்து அமைப்பை நிலைநிறுத்துவது அரசு. அரசை நடத்துபவர்கள் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும். அவர்கள் அந்த பணிக்காக தங்களுக்கு என ஒரு பங்கை எடுத்துக்கொள்கிறார்கள். பல்வேறு தரகர்கள், சமரசக்காரர்கள் பங்குபெற்றுக்கொள்கிறார்கள்.

ஏதேனும் ஒருவகையில் அரசுநிர்வாகத்தின் ஏதேனும் ஒரு கிளையுடன் தொடர்புள்ள அனைவருமே அறிந்த ஒன்று உண்டு. இந்த பங்கிடல் என்பது இந்த ஒரு விஷயத்தில் மட்டும் அல்ல, அரசு செய்யும் அத்தனை செயல்களிலும் ஒவ்வொருநாளும் நிகழ்ந்துகொண்டே இருக்கக்கூடிய ஒன்றுதான். இதற்கு விதிவிலக்காக இருக்கக்கூடிய எந்த அதிகார சக்தியும் இல்லை. எந்த அரசியல்வாதியும் எந்த அரசியல்அமைப்பும் இல்லை.

தொலைதொடர்பு மட்டும் அல்ல, ஆயுதங்கள் வாங்குவது, அணு உலைகள் அமைப்பது, சாலைகள் போடுவது, ஏற்றுமதி இறக்குமதி என எல்லாவற்றிலும் இதேபோன்ற பங்கீட்டு நடைமுறைகள்தான் இயல்பாக நிகழ்ந்து வருகின்றன. என் இருபத்தாறு வயதில் ஒருநாள் மட்டும் டெல்லியின் இந்தியா இண்டர்நேஷனல் அமைப்பின் புல்வெளியில் அமர்ந்து உரையாடல்களைக் கேட்டபோது நான் அப்பட்டமாக உணர்ந்து அதிர்ந்த உண்மை இது. ஆகவே வெளிவந்த ஒரு ஊழலை வைத்து அதிர்ச்சியும் கொந்தளிப்பும் அடைவதற்கு ஏதுமில்லை.

ஜனநாயகத்தில் அரசின் அதிகாரம் மக்களின் அதிகாரம் என ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆகவே அரசின் பணம் மக்களின் பணம். ஆகவே அரசு செய்யும் செலவுகள் மக்களுக்காக மட்டுமே இருக்கவேண்டும். இது அரசு முன்வைக்கும் அதிகாரபூர்வ நிலைபாடு. அத்தனை அரசியல் கட்சிகளும் இதை ஏற்றுக்கொண்டிருக்கின்றன. அதை நடுத்தரவர்க்க மனிதர்களாகிய நாம் பள்ளிக்கூடத்தில் படித்து அப்படியே நம்புகிறோம்.

ஆகவே இந்தப்பங்குவைத்தல் ஒரு குற்றமாக நமக்குப் படுகிறது. அதை திருட்டு என்று எண்ணுகிறோம். அதைக்கொண்டு மக்கள்நலப்பணிகளை செய்திருக்கலமே என்று நினைக்கிறோம். இந்த ஊழல்களுக்கு அப்பாற்பட்ட தலைவர்களுக்காக ஏங்குகிறோம். இந்த அமைப்பில் எந்த தலைவர் வந்தாலும் செய்யக்கூடுவது ஒன்றையே என அரச நிர்வாகத்தை அறிந்த எவரும் சொல்லிவிட முடியும். காங்கிரஸும் பாரதியஜனதாவும் இதில் ஒன்றே. மன்மோகனும் அத்வானியும் புத்ததேவ்பட்டாச்சாரியாவும் ஒன்றே.

இந்தச்சித்திரத்தை முதலாளித்துவ அரசைப்பற்றியது மட்டும் என்று சிலர் சொல்லக்கூடும். நான் மேலே சொன்னபடி அரசாங்கத்தை சமரசப்புள்ளியாக காணும் கோணம் அந்தோனியோ கிராம்ஷியால் முன்வைக்கப்பட்டது. ஆனால் உலகம் முழுக்க இன்றுவரை உருவான எல்லா ‘புரட்சிகர’ அரசுகளும் இப்படித்தான் செயல்பட்டிருக்கின்றன. விதிவிலக்கே இல்லை.

சோவியத் ருஷ்ய அரசு என்பது முழுக்கமுழுக்க உயர்மட்ட ஊழலின் விசையால் முன்னகர்ந்த ஒன்று. இன்றைய சீன அரசு என்பது ஊழலையே அடிப்படை விதியாக கொண்டு செயல்படுவது. மக்கள் என்று ஒரு தரப்பே இல்லாதபோது அரசு செய்வது எல்லாமே சரிதானே? இந்திய ஊழல் எனபது சீன ஊழல்களுடன் ஒப்பிட்டால் சிறு துளிதான். ஒரு சர்வாதிகார அரசில் ராணுவத்தின் பங்கு பலமடங்கு அதிகரிக்கிறதென்பதே வேறுபாடு.

இந்தியாவில் ஊழல் நம் அன்றாட வாழ்க்கையை மறிக்கிறது. மக்கள் நலத்திட்டங்களில் ஊடே புகுகிறது. ஆகவே அதை நாம் உணர்ந்துகொண்டிருக்கிறோம். அமெரிக்கா, ஜப்பான் போன்ற முதலாளித்துவ நாடுகளின் நிர்வாக அமைப்பில் உயர்மட்ட ஊழல் என்பது நம்மைவிட பற்பல மடங்கு பிரம்மாண்டமானது. நிறுவனங்களுக்கான ஏகபோக அனுமதிகள், தனிச்சலுகைகள், கையூட்டுகள் போன்றவற்றை சட்டபூர்வமாக ஆக்கி அவற்றை ஊழல் என்ற தளத்தில் இருந்தே விலக்குகிறார்கள்.

சென்ற பத்து வருடங்களில் ஜப்பானிலும் அமெரிக்காவிலும் தேசத்தின் பொருளியல் கட்டுமானத்தையே அசைத்த மாபெரும் நிதிமுறைகேடுகள் வெளிவந்தன. கோடானுகோடிரூபாய் பலர் கைகளுக்குச் சென்று சேர்ந்தது நாம் அறிந்த செய்திதான். அவற்றைச் செய்தவர்கள் எவரும் தண்டிக்கப்படவில்லை. சிலர் சில தற்காலிக பின்னடைவுகளை அடைந்திருக்கலாம். அவ்வளவே.

காரணம் அரசின் நிதியை பங்கிட்டுக்கொள்ளும் சக்திகள் அரசை உண்மையில் நடத்தும் அதிகார மையங்கள் என்பதே. அவர்கள் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் நிதியை பங்கிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள்நடுவே நிகழும் மோதலின் விளைவாக ஏதோ ஒன்று மட்டும் மக்களை வந்தடைகிறது, விவாதமாகிறது.

எந்த ஒரு அரசாவது அதுசேர்க்கும் செல்வத்தை முழுக்க மக்கள் நலனுக்காக அதுவே உகந்துசெலவிடக்கூடியதாக இருக்குமா என்று எனக்கு ஐயமாகவே இருக்கிறது. யதார்த்த உணர்வு அப்படி ஒரு விஷயமே சாத்தியமில்லை என்றுதான் சொல்லவைக்கிறது.

அப்படியானால் ஊழல் ஒரு விஷயமே இல்லையா? அதைப்பற்றி பேசவே கூடாதா? அப்படி இல்லை. ஊழலைப்பற்றிய எல்லா வெளிப்படுத்தல்களும் விவாதங்களும் அதற்கு எதிரான கோபங்களும் ஜனநாயகத்தில் மிகமிக முக்கியமானவையே.

ஏனென்றால் இங்கே மக்கள் என்று ஒரு தரப்பு உள்ளது. அதை குடிமைச்சமூகம் எனலாம். அதுவும் ஒரு முக்கியமான அதிகாரத்தரப்பே. எந்த அளவுக்கு அது தன்னுணர்வுகொண்டு, எந்த அளவுக்கு ஒன்றுபட்டு போராடுகிறதோ அந்த அளவுக்கு அது வலிமையானதாக ஆகிறது. தனக்கான பங்கை அது அது அவ்வாறுதான் பெற்றுக்கொள்ளமுடியும். அவ்வாறு அது தன் உரிமையை உணர்வதற்கும், போராட்ட உனர்வு கொள்வதற்கும் இந்த வெளிப்படுத்தல்களும் விவாதங்களும் உதவியானவை.

ஐரோப்பிய நாடுகளில் குடிமைச்சமூகம் தன்னை முக்கியமான அதிகாரத்தரப்பாக ஆக்கிக்கொண்டிருக்கிறது. ஆகவே அது அரச அதிகாரத்தில் பெரும்பங்கு பெறுகிறது. அரசின் நிதியில் பெரும்பங்கை அதுவே எடுத்துக்கொள்கிறது. ஆம், அதுவும் ஒரு பங்கிடல்தான். அங்கும் முதலாளித்துவ சக்திகள், தரகர்கள் எல்லாம் உண்டு. ஆனாலும் மக்களுக்கான பங்கு பெரியது.

ஒப்புநோக்க ஐரோப்பிய சமூகத்தில்தான் மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டிருக்கின்றன. மக்கள்நலத்திட்டங்களுக்கு அரசு முதலுரிமை அளிக்கிறது. அதில் ஊழல்கள் இல்லாமல் பார்த்துக்கொள்கிறது. மக்களிடமிருந்து சேர்க்கப்படும் செல்வத்தில் பெரும்பகுதி மக்களுக்கு வந்து சேர்கிறது. இப்போதைக்கு இதுவரை உலகம் கண்ட அரச அமைப்புகளில் ஐரோப்பவே மேலானது. இன்று அதிகபட்சம் இவ்வளவுதான் சாத்தியம் என்று எனக்கு தோன்றுகிறது.

நீங்கள் சொல்லும் இந்திய யதார்த்தத்தை நான் அன்றாடம் கண்டுகொண்டிருக்கிறேன். சுகாதாரத்துக்கு நிதி இல்லாமல் இந்திய கிராமங்கள் எல்லாம் குப்பைமேடுகளாக ஆகிக்கொண்டிருக்கின்றன. நீர்நிலைகள் தூர்வாராமல் அழிகின்றன. வேளாண்மை நஷ்டமாக ஆகிறது. இந்தியாவின் பெரும்பகுதி இருட்டுக்குள் அழுந்திக்கிடக்கிறது. அதன் தலைமேல் மாபெரும் நாற்கரச்சாலைகளில் இன்னொரு இந்தியா வண்ணக்கார்களில் பறந்துகொண்டிருக்கிறது.

ஏனென்றால் இந்தியாவின் குடிமைச்சமூகம் அரசு திரட்டும் தன் செல்வத்தைப்பற்றிய பிரக்ஞை இல்லாமல் இருக்கிறது. ஒன்று திரண்டு வலுவான அதிகார சக்தியாக ஆகி தன் பங்கை கோர திராணியற்றிருக்கிறது. ஆகவேதான் அதன் செல்வம் அதிகார சக்திகளால் பங்கிட்டுக்கொள்ளப்படுகையில் அது சும்மா இருக்கிறது. சுரண்டுபவர்களையே தங்கள் பிரதிநிதிகளாக தேர்வுசெய்கிறது. நம் இதழாளர்களும் அரசியல் சிந்தனையாளர்களும் இந்த ஊழலை முன்வைத்து உருவாக்கும் விழிப்புணர்ச்சி அதற்கு வழிவகுக்கலாம். அப்படிபபர்த்தால் இவ்வாறு ஊழல்கள்வெளிப்படுவது இந்திய ஜனநாயகத்துக்கு நல்லதுதான்.

மக்கள் தங்கள் அதிகாரத்தை திரள்களாக, அமைப்புகளாக ஆவதன் மூலமே பெற்றுக்கொள்ளமுடியும். அரசியல் இயக்கங்கள், தொழிற்சங்கங்கள், நுகர்வோர் சங்கங்கள் என பல வகைகளில் அதற்கு ஜனநாயகம் வழியமைக்கிறது. அரசை தீர்மானிக்கும், மாற்றியமைக்கும் வாய்ப்பு ஜனநாயகத்தில் உள்ளது. ஆகவே ஜனநாயகத்தில் மட்டுமே மக்கள் தங்கள் பங்கை கோரிப்பெறுவதற்கான வழி இருக்கிறது.

இத்தகைய ஊழல்கள் வெளிப்படும்போது அதை ஜனநாயகம் மீதான அவநம்பிக்கையை உருவாக்குவதற்கு சிலர் பயன்படுத்திக்கொள்வதுண்டு. அவர்கள் முன்வைப்பது நல்லெண்ணம் கொண்ட சர்வாதிகாரத்தை மட்டுமே. ஒருபோதும் ஒரு அரசும் சில மனிதர்களின் இலட்சியவாதத்தையோ நல்லெண்ணத்தையோ நம்பி செயல்பட முடியாது. அரசு என்பது அதிகாரப்பகிர்வு அமைப்பு மட்டுமே. சர்வாதிகாரத்தில் மக்கள் என்ற அதிகாரத் தரப்பு முழுமையாகவே ஒடுக்கப்படுகிறது என்பதே உண்மை.

இந்த யதார்த்ததில் இருந்து மேலே செல்ல இரு இலட்சியவாத வழிகள் முன்வைக்கப்படுகின்றன. ஒன்று புரட்சிகர அரசு என்ற இலட்சியவாதம். அது பத்தொன்பதாம் நூற்றாண்டுக்குரிய காலாவதியான ஒரு கற்பனை. உருவான இடங்களில் எல்லாம் அபத்தமாக தோற்றுப்போய் கொடூரமான எதிர்விளைவுகளை உருவாக்கிய ஒன்று.

காரணம், அது மக்களை நம்புவதில்லை. இலட்சியவாதநோக்கு கொண்ட சிறுபான்மையினரை, புரட்சிக்காரர்களை, மக்களின் முழுமையான பிரதிநிதிகளாக எண்ணி அவர்களிடம் அனைத்து அதிகாரங்களையும் ஒப்படைக்கிறது. விரைவிலேயே அந்த சிற்பான்மையினருன் அதிகாரம் பல தரப்புகளாக சிதைந்து ஒன்றுடன் ஒன்று மோதி அழிவுகளை உருவாக்குகிறது.

அத்தகைய அரசு சமூகத்தில் இயல்பாக உருவாகி வரும் அதிகார மையங்களை வன்முறையால்அழித்துவிடும். மக்ளின் தரப்புகள் அழிக்கப்பட்டு வன்முறைத்திறன் மூலம் மட்டுமே நிலைநாட்டப்பட்ட ஒற்றை அதிகாரத்தை மட்டும்அவ்வரசு விட்டுவைக்கும். அதன் அழிவுகள் எல்லையற்றவை என்பதற்கு ருஷ்யாவும் சீனாவும் கம்போடியாவும் எல்லாம் சான்றுகள்.

இன்னொரு இலட்சியவாத வழி காந்தி முன்வைப்பது. அது மையம் நோக்கி மக்களின் செல்வத்தை குவிப்பதை முழுமையாக நிறுத்திவிடும் ஒரு சமூக அமைப்பு. சிறிய கிராமசமூகத்தை அடிப்படைப் பொருளியல் அலகாக கொண்டது. அந்த பொருளியல் அலகு அதில் இருந்து உபரியை மேலே அனுப்பாமல் அதுவே தனக்காகச் செலவழிக்கிறது. அது மேலிருந்து எதையும் எதிர்பார்ப்பதுமில்லை.

இந்நிலையில் அந்த கிராமசமூகத்துக்குள் உள்ள அதிகார சக்திகளே அந்த செல்வத்தை பகிர்வதை தீர்மானிக்கின்றன. அந்த பங்கீடு அந்த மக்களின் நேரடிக் கண்காணிப்பில் உள்ளது. செல்வம் அவர்களை விட்டு சென்று அவர்களுக்குச் சம்பந்தமில்லாத புள்ளியில் குவிவதில்லை. ஆகவே அவர்கள் தங்களை அதிகார சக்தியாக திரட்டிக்கொண்டு அதில் பங்குக்காகப் போராடவேண்டியதில்லை

இந்தக் கனவுக்கு முக்கியமான தடையாக உள்ளது உலகமெங்கும் உள்ள ராணுவமயமாக்கம். ராணுவங்கள் தேசங்களை தீர்மானிக்கையில் மைய ராணுவத்தை உருவாக்க தேவையான நிதியை மையத்தில் குவிக்கும் அரசு தவிர்க்கமுடியாதது ஆகிறது.

ஆனாலும் அந்தக்கனவே ஒரே வழியாக படுகிறது. எதிர்காலத்தில் உலக அளவில் ராணுவங்கள் அரசை தீர்மானிக்காத நிலை உருவாகலாம். முழுமையான தன்னிறைவு கொண்ட உயர்தொழில்நுட்ப கிராமசமூகங்கள் உருவாகி வரலாம். காந்தியின் கனவு அவர் கற்பனைகூட செய்யமுடியாத தளத்தில் நனவாகலாம். இப்போது எனக்கே அபத்தமான கனவாகத்தான் தோன்றுகிறது. வேறுவழியும் தெரியவில்லை.

ஜெ

அரசியல்சரிநிலைகள்

ஊடகங்கள், அரசியல், விவாதங்கள்

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைலங்காதகனம், வாசிப்பனுபவம்.