விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 14

 

அன்புள்ள ஜெ

இந்தமுறை விழாவுக்கு வந்தவர்களில் நானும் ஒருவன். நன்கொடை அளிப்பதுபற்றி எந்த அறிவிப்பும் செய்யப்படவில்லை. ஆகவே நன்கொடை அளிக்காமல் வந்துவிட்டேன். நன்கொடைகளை எங்கே அளிப்பது என்றும் சொல்லப்படவில்லை. இதைப்பற்றி உங்களிடம் கேட்கலாமென நினைத்தோம். முடியவில்லை.

ரவீந்திரன்

அன்புள்ள ரவீந்திரன்,

இம்முறை நிறைய இளைஞர்கள். நன்கொடை பற்றி வெளிப்படையாக அறிவிப்பது அவர்களிடம் கோருவதுபோல ஆகி சங்கடத்தை அளிக்குமோ என்பதனால் அறிவிக்கவில்லை

இம்முறை நோட்டுப் பற்றாக்குறை இருந்தமையால் பெரும்பாலும் எவரும் நன்கொடை அளிக்கவுமில்லை. அதைப் புரிந்து கொள்ள முடிகிறது

ஜெ

 

அன்புள்ள ஜெ

நீங்களே விஷ்ணுபுரம் விழாவில் பேசிக்கொண்டே இருப்பதாக இணையக்குசும்பன் எழுதிய பகடி வாசித்தேன். பகடி எல்லாம் சரி. ஆனால் இந்தவகையான ஒரு விஷமப் பிரச்சாரத்தை தொடர்ந்து சிலர் இணையத்தில் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். அதை சீரியஸாக எடுத்துக்கொண்டு நீங்களும் பெரும்பாலும் விஷ்ணுபுரம் நிகழ்வுகளில் பேசுவதே இல்லை. இந்த விழாவில் கடைசியாக மேடையில் அதுவும் சரியாக 9 நிமிடம் மட்டும் பேசினீர்கள். சந்திப்பு மேடையில் யாரோ வரும் இடைவெளியில் 10 நிமிடம் பேசினீர்கள். அதோடு சரி. அரங்குகளிலும் மற்றவர்கள் பேச கேட்டுக்கொண்டிருந்திர்கள்

நான் உங்கள் வாசகன். திருச்சியிலிருந்து நான் வந்ததே உங்களை பார்க்கவும் பேச்சைக் கேட்கவும்தான். நான் ஒரே ஒருமுறை திருச்சியில் உங்கள் பேச்சைக் கேட்டிருக்கிறேன். ஆனால் நீங்கள் பேசவே இல்லை என்பது ஏமாற்றம். பலரும் அதை அங்கேயே சொல்லிக் கொண்டிருந்தனர். நிகழ்ச்சிகள் அதிகாரபூர்வமாக முடிந்தபின் நீங்கள் பேசுவீர்கள் என்றார்கள் உங்கள் நண்பர்கள். அப்போதும் பேசவில்லை. இந்த பகடிகளைக் கண்டுதான் நீங்கள் அஞ்சுகிறீர்கள் என நினைக்கிறேன். அப்படியென்றால் வெற்றிகரமாக அவர்கள் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிவிட்டார்கள் என்றுதான் அர்த்தம்

குமார் முருகேசன்

 

 

அன்புள்ள குமார்

இந்த விழா வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் உரியது. எழுத்தாளர்களை வாசகர்களுடன் விவாதிக்கச்செய்வதே இதன் இலக்கு. 2010 முதலே இப்படித்தான் நிகழ்ந்துவருகிறது

ஜெ

 

u

அன்புள்ள ஜெ

மிகச்சிறப்பான விழா. ஆவணப்படம் நூல் இரண்டுமே சிரத்தையான படைப்புக்களாக இருந்தான. விவாதங்களில் பவா செல்லத்துரை அசத்திவிட்டார். ஒரு அற்புதமான இலக்கிய நிகழ்வாக இதை அவரால் மாற்ற முடிந்தது. அவருக்குச் சமானமாகவே நாஞ்சிலும் நகைச்சுவையுடன் பேசினார்

வரும் காலங்களில் ஏதேனும் சிறிய கலைநிகழ்ச்சிகள், பாட்டு போன்றவற்றைச் சேர்க்கலாம்

நாகராஜ்

 

 

அன்புள்ள நாகராஜ்

கலைநிகழ்ச்சிகள் போன்றவை இத்தகைய நிகழ்ச்சிகளின் ஒருமையைச் சிதைத்துவிடும் என நினைக்கிறேன். ஆனாலும் பாடல்கள் ஒரு நல்ல மனநிலையை உருவாக்கலாம். பார்ப்போம்

ஜெ

 

 

ஜெ

இந்தமுறை விஷ்ணுபுரம் விருதுவிழாவின் ஹைலைட் இரண்டு. ஒன்று இலக்கிய வினாடிவிடை. இன்னொன்று பவா சொன்ன தேன் என்னும் கதை

இதை இரண்டையும் இரண்டு நிகழ்ச்சிகளாக ஆக்கலாமே. நல்ல சிறுகதைகளை நிகழ்த்திக்காட்ட சிலரைப் பயிற்சிகொடுக்கலாம். கேரளத்தில் கதைகளை சொல்பவர்கள் இருக்கிறார்கள். நல்ல நடிகர்களைக்கூட அழைத்து கதை நிகழ்வைச் செய்யலாம்

வினாடிவினா இனிமேல் எல்லா நிகழ்ச்சிகளிலும் இருக்கலாம் என நினைக்கிறேன். சும்மா மாடல்களை நிப்பாட்டி உளறச்செய்வதற்கு இதெல்லாம் அருமையான மாற்றுக்கள்

ஜெகதீசன்

 

 

 

அன்புள்ள ஜெகதீசன்

செய்யலாம். கதை நிகழ்வு நல்ல ஐடியா. கதையை நிகழ்வடிவமாக எழுதி கொஞ்சம் பயிற்சி செய்து சொல்லும் நடிகர்களைப் பயன்படுத்தலாம். ஜானகிராமன் எழுதிய பரதேசி வந்தான் போன்ற கதைகள் அற்புதமாக மேடையை நிறைப்பவை

சுவாரசியமாக நிகழ்ச்சிகளை நடத்தி அதிகமான பேரை உள்ளே கொண்டுவந்தாகவேண்டும்

ஜெ

 

 

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 13 ,ராஜீவ்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 15