கடைத் தெருவின் கலைஞன், முன்னுரை

ஆ.மாதவன் நவீனத் தமிழிலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர். நம்முடைய இயல்புவாத எழுத்தின் சாதனைகளில் ஒன்று அவரது புனைவுலகம். கண்முன் நிகழும் அன்றாட யதார்த்தத்தை ‘அப்பட்டமாக’ சொல்லும் பாவனை கொண்ட இவ்வெழுத்து நம் சமூகப்பிரக்ஞைகளை ஓங்கி அறைந்து அதிரச்செய்திருக்கிறது. அடிப்படை வினாக்களை நோக்கி நம்மை செலுத்தியிருக்கிறது.

ஆ.மாதவன் திருவனந்தபுரம் சாலைத்தெருவை களமாகக் கொண்டு எழுதியவர். சாலைத்தெரு அவரது எழுத்தில் காமகுரோதமோகங்களின் கொந்தளிப்பு நிகழும் வாழ்க்கைவெளியாகவே ஆகிவிட்டிருக்கிறது.

ஆ.மாதவன் தமிழின் தேர்ந்த இலக்கியவாசகர் நடுவே எப்போதும் முக்கியமான படைப்பாளியாகவே கருதப்பட்டிருக்கிறார். ந.பிச்சமூர்த்தி முதல் எ.வேதசகாயகுமார் வரை நான்கு தலைமுறை எழுத்தாளர்களும் விமர்சகர்களும் அவரை கொண்டாடியிருக்கிறார்கள்.ஆனால் அவருக்குப் பொதுவான அமைப்புகளின் அங்கீகாரங்கள் ஏதும் அமையவில்லை. ஒதுங்கி வாழும் அவரது இயல்பும் அதற்குக் காரணம்.

முன்னோடிகளைக் கௌரவிப்பதற்காக உருவாக்கப்பட்ட விஷ்ணுபுரம் இலக்கிய விருது 2010 அவருக்கு வழங்கப்படுகிறது. 19-12-2010ல் கோவையில் விருது வழங்கும் நிகழ்ச்சி. அவ்விருதின் ஒரு பகுதியாக ஆ.மாதவனை அறிமுகம் செய்யும் பொருட்டும் விமர்சித்து அறியும் பொருட்டும் ”கடைத் தெருவின் கலைஞன்” என்னும் இந்நூல் உருவாக்கப்பட்டது.

இந்நூலை என் நண்பரும் இலக்கிய விமர்சகருமான க.மோகனரங்கன் அவர்களுக்குப் பிரியத்துடன் சமர்ப்பணம் செய்கிறேன்

ஜெயமோகன்

முந்தைய கட்டுரைமாவோயிச வன்முறை 4
அடுத்த கட்டுரைகடிதங்கள்