மாதவம் 2

மாதவம் – 1

‘முன்னாடி ஒரு ராஜா டாக்ஸ் போடுறதுக்கு நேரா அவரே கடைத்தெருவுக்கு போனாராம். ஒவ்வொரு கடையா ஏறி என்ன லாபம் வருதுன்னு கேட்டிருக்கார். ஒருத்தன் பத்து பர்செண்டுன்னு சொன்னான். அவனுக்கு இருபத்தஞ்சு பர்செண்ட் டாக்ஸ். இன்னொருத்தன் அஞ்சு பர்செண்டுன்னான். அவனுக்கு இருபது பர்செண்ட் டாக்ஸ்… கடைசியா ஒரு வியாபாரி சொன்னான். ’து என்ன ராஜா செத்த வியாபாரம். ஏதோ தம்பிடிக்குத் தம்பிடி லாபம் வந்திட்டிருக்கு, பொழைப்பு ஓடுது’ ராஜா ‘சேச்சே பிச்சைக்காசு வியாபாரம்’னு விட்டுட்டு போய்ட்டாராம்’ சுந்தர ராமசாமி சிரித்தார். ‘எனக்கு தெரிஞ்சு ஆ.மாதவன் நல்லாத்தான் வியாபாரம் பன்றார். அந்த ஸ்டவ் ஊசியிலேதான் அவருக்கு அதிக லாபம் வருதுன்னு தோணுது.’

’இருந்தாலும் ஒரு கலைஞன் இப்டி ஊசி விக்கிறதிலே ஏதோ தப்பா இருக்கு சார்… ரொம்ப லௌகீகமா இருக்கு…’ என்றேன். ‘புதுமைப்பித்தன் பத்திரிகை ஆபீஸிலே நாள்முழுக்க புரூஃப் பாத்தானே. அதுக்கும் இதுக்கும் என்ன வித்தியாசம்? நான் கூடத்தான் துணி வியாபாரம் பண்றேன்’ ‘அதில்லை’ ராமசாமி ’நீங்ககூடத்தான் டெலிஃபோனிலே வேலைபாக்கிறீங்க’ என்றார். நான் என்ன சொல்வதென்றறியாமல் பேச்சை தவிர்த்தேன். உண்மையில் ஊசி என்ற பொருள் குறியீடாக ஆகித்தான் என்னை தொந்தரவு செய்தது.

ஆனால் ஆ.மாதவன் அந்த தெருவில் உலகத்தை பார்த்துக்கொண்டிருந்தார். சம்ஸ்கிருதத்தில் வியாபாரம் என்ற சொல்லுக்கு உலகச்செயல்களில் உழல்தல் என்றுதான் பொருள். ஆ.மாதவனின் கதைகளில் வணிகம் என்பது கொடுக்கல் வாங்கல்தான். வாழ்க்கை என்பது நுட்பமானதோர் கொடுக்கல்வாங்கல் மட்டுமே. சாளைப்பட்டாணியின் வாழ்க்கையை ஏன் ஒரு வியாபராம் என்று சொல்லக்கூடாது? அவன் கொடுத்தவை அவன் பெற்றுக்கொண்டவை அவற்றுக்கான வட்டிகள். கணக்கு சமமாகும்போதுதான் அவன் சாகிறான். அந்த கடைசி எட்டுநாளும் ஒரு பெரும் கணக்கை முடிக்கும் அவஸ்தைகளை தானே காட்டுகின்றன?

மீண்டும் திருவனந்தபுரம் வரும்போது ஆ.மாதவனைச்சென்று பார்ப்பேன். கடையில் முக்காலியில் அமர்ந்துகொண்டு அவரிடம் பேசிக்கொண்டிருப்பேன். நகுலனைப்பற்றியும் நீல பத்மநாபனைப்பற்றியும் வம்புகள். கடைத்தெருவின் வேடிக்கைகள். ’எழுத்தே ஒரு பெரிய வெளையாட்டா ஆயிட்டுது… கடைத்தெருக் கதைகள் இன்னும் பாதி புக்கு அப்டியே இருக்கு… இப்ப ஆ.மாதவன் கதைகள் வந்திட்டுது. யார் படிக்கிறாங்கன்னே தெரியலை. எல்லாருக்கும் சுஜாதா பாலகுமாரன் ராஜேஷ்குமார் கதைகள்தான் வேணும். லவ்வுதான் படிக்க ஆசை. தமிழ்நாட்டிலே இவ்ளவு லவ்வு எங்க இருக்குன்னுதான் தெரியல்லை. கொஞ்சம் கிரைமும் நுள்ளி போட்டா சுபம் மங்களம்.’

ராஜேஷ்குமாரை ஒரு பத்திரிகை ஆபீஸில் பார்த்தாராம் மாதவன் ‘பாக்க ஹீரோ மாதிரி கூலிங் கிளாஸும் பம்பைத்தலையுமா இருக்கார். அந்த பத்திரிகை ஆபீஸிலே அவருக்கு ராஜ மரியாதை. ஒருகணக்கிலே நல்லதுதான். எழுத்தாளன்னா நாலுபேர் மதிக்கிறாங்களே’ சுஜாதா கதைகளைப்பற்றி நான் கேட்டேன். ‘சமல்காரம் இருக்கு. ரொம்ப சமல்காரமா சொல்ல ஆரம்பிச்சா அப்றம் கதைகளிலே ஜீவன் இருக்காது. அது பாட்டுக்கு தன்னாலே வரணும். தப்பா வந்தாக்கூட பரவாயில்லை’ சமல்காரம் என்ற மலையாள-சம்ஸ்கிருத சொல்லை செயற்கையாக உருவாக்குதல் என்ற பொருளில்தான் அவர் சொன்னார். நான் சுஜாதாவின் சில நல்ல கதைகளை சொன்னேன். அவை அவருக்கு உகந்தவை அல்ல.

‘யதார்த்தம் இல்லை. செஞ்சு வச்ச கதைகள். இங்க நகுலன் போட்ட குருஷேத்ரம் தொகுப்பிலே ஒரு கதை இருக்கு. ரொம்ப நல்ல கதைன்னு எல்லாரும் சொல்வாங்க. சுந்தர ராமசாமிகூட அப்டி சொல்லியிருக்கார். எனக்கு வேற மாதிரி அபிப்பிராயம்..’ கறாரான கருத்துக்கள் இருந்தாலும் அவற்றை கூடுமானவரை வெளியே சொல்லக்கூடாது என்பது அவரது கொள்கை. ’விமர்சனங்கள் சஹ்ருதயர்கள் நடுவிலே மட்டும் போரும். அவங்களுக்குத்தான் புரியும். மத்தவங்க கிட்ட சொல்லி சும்மா சண்டை போடுறதிலே அர்த்தம் இல்லை.’

ஆ.மாதவனின் கடையில் வியாபாரம் மெல்ல மாறியிருப்பதை கவனிக்க ஆரம்பித்தேன். அவரது மகன் கோவிந்தராஜனும் அவ்வப்போது வந்து வியாபாரத்தில் கலந்துகொண்டார். கொஞ்சம் மொத்த வியாபாரம். பேரேடுகள், பில் புத்தகங்கள். கோவிந்தராஜன் ஆடிட்டராகவும் இருந்தார். ஸ்டவ் பொருட்கள் இல்லாமல் ஆகிவிட்டிருந்தன. ஸ்டவ்வே வழக்கொழிந்து வந்தது போலும்.

‘வியாபாரத்திலே இருக்கிறவனுக்கு ஒருமாதிரி ரியலிசத்தை கண்டு எழுதிக்கிட முடியும்’ என்றார் ஆ.மாதவன் ’இங்க இப்ப ஒருத்தர் வாறாரு. தேங்காப்பட்டினம் காரரு ஒரு முஸ்லீம். மிளகா வத்தல் யாவாரம் செய்றார். தமிழிலே பெரிசா ஒண்ணும் வாசிச்சதில்லை. ஆனா மலையாளத்திலே பல வருஷங்களா நல்ல நாவல்களை வாசிச்சிருக்கார். புனத்தில் குஞ்ஞப்துல்லா, பஷீர் எல்லாம் நல்லா உள்வாங்கியிருக்கார். சில கதைகள முன்னாடி முஸ்லீம் பத்திரிகைகளிலே எழுதியிருக்கார். இப்ப ஒரு நாவல் எழுதியிருக்கார். கடலோரகிராமம்னு. நல்ல கதை. நல்ல ஓட்டம் இருக்கு. இப்பதான் வாசிக்க கொண்டுவந்து குடுத்தார்…’ என்று கைப்பிரதியை கொண்டுவந்து காட்டினார். ‘பாஷையிலே கொஞ்சம் சிக்கல் இருக்கு. ஆனா நல்ல நாவல்…’ தோப்பில் முகமது மீரானை அப்போதுதான் நான் கேள்விப்பட்டேன்.

மாதவனுடனான என் உறவு எப்போதும் பெரிய வேகத்துடன் இருந்ததில்லை. பல காரணங்கள். முக்கியமானது நான் திருவனந்தபுரத்தில் இறங்குவதேயில்லை என்பதுதான். அன்றும் இன்றும் திருவனந்தபுரத்தை தவிர்ப்பதே என் வழியாக இருந்து வருகிறது. கல்லூரிநாட்கள் வரை திருவனந்தபுரம் எனக்கு மிகமிக உத்வேகமளிக்கும் நகரமாக இருந்திருக்கிறது. நகரின் திரையரங்குகளில் படம்பார்ப்பதையும் அதன்பின் சாலைக்கடைகளில் பரோட்டா தின்பதையும் பெரிய சாகசங்களாக நான் நினைத்திருந்தேன். அதற்காகவே கல்லூரிநாட்களில் வார இதழ்களில் வெவ்வேறு பெயர்களில் கதைகளை எழுதி தள்ளினேன்.

ஆனால் ராதாகிருஷ்ணனின் தற்கொலை எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. என் உயிர்த்தோழன். திருவனந்தபுரம் பயணங்களில் என்னுடைய சகா. அதன்பின் அந்நகரின் மீது ஒரு நிம்மதியின்மை பரவியது போல உணர்ந்தேன். வெளியேறிவிடவேண்டும் என்ற பதற்றம் இன்றும் அந்நகரில் இருக்கும்போது என்னைச் சூழ்கிறது. என் தங்கை திருவனந்தபுரத்தில்தான் இருக்கிறாள். அவளையும் நான் அதிகம் சென்று சந்திப்பதில்லை.

ஆ.மாதவனை எப்போதாவது சென்று சந்திப்பேன். அது ஒரு வகை மரியாதை செலுத்துதல் மட்டுமே. விஷ்ணுபுரம் வெளியானபோது அவருக்கு பிரதி ஒன்று கொண்டு கொடுக்கச் சென்றேன். ஏற்கனவே வாங்கிவிட்டேன் வாசித்துக்கொண்டிருக்கிறேன் என்றார். அவரது மைந்தன் இறந்தபின் ஒருமுறை வேதசகாயகுமாருடன் சென்று சம்பிரதாயமாக சந்தித்தேன். அதன்பின்னர் தமிழினி வெளியீடாக அவரது மொத்தக் கதைகளும் வெளியானபோது அந்நூல் பற்றி பேசுவதற்காக. ஒவ்வொருமுறையும் அதே கடையின் அதே முக்காலியில் அதே சில்லறை வியாபாரங்கள் நடுவே அதே பேச்சு.

இந்த நவம்பரில் விஷ்ணுபுரம் இலக்கிய விருதை அவருக்கு அளிப்பதைப்பற்றிய தகவலை அவரிடம் நேரில் சொல்ல வேண்டும் என்று திருவனந்தபுரம் சென்றேன். வழக்கம்போல சாலைத்தெருவுக்கு இப்பால் இறங்கி விட்டேன். வழக்கம்போல அதே டீக்கடையில் டீயும் வாழைப்பழ பஜ்ஜியும் சாப்பிட்டேன். வழக்கம்போல கடைகளைப்பார்த்துக்கொண்டே நடந்து செல்வி ஸ்டோரை விட்டுவிட்டு பத்மநாபா திரையரங்கு வரைச் சென்றேன். திரும்பி வரும்போது ஆ.மாதவனை கடையில் சட்டென்று கண்டுகொண்டேன்.

ஆ.மாதவன் நல்ல தொந்தியுடன் இருப்பார். கழுத்தில் தாடை நன்றாக தொங்கும். சற்றே குறும்பு தெரியும் சின்னக் கண்கள் கண்ணாடிக்குள் மின்னும். இப்போது கொஞ்சம் தளர்ந்து மெலிந்திருந்தார் என்று தோன்றியது. உடற்பயிற்சி செய்யும் வழக்கமெல்லாம் முன்னர் இல்லை. இப்போது இன்னமும் இல்லை. நடந்தால் தலைசுற்றல் இருக்கிறது என்றார். கடையில் நெய்யாற்றின்கரையைச்சேர்ந்த பையன் உதவிக்கு இருந்தான். கல்லாவில் சில சிற்றிதழ்கள் புத்தகங்களுடன் அமர்ந்திருந்தார். ‘உக்காருங்கோ’ என்று மென்மையான குரலில் சொன்னார்.

முக்காலியில் அமர்ந்துகொண்டேன். கடை இப்போது மேலும் மாறியிருந்தது. தொண்ணூறு சதவீதம் பிளாஸ்டிக் பொருட்கள் மட்டுமே. அலுமினியப்பாத்திரங்கள் இல்லை. ‘மொத்த வியாபாரத்தை நிப்பாட்டிட்டேன். என்னாலே பாத்துக்கிட முடியாது. அன்றாட வியாபாரம் மட்டும் போரும்னு இருக்கேன். வந்து உக்காந்துக்கிட ஒரு எடமிருக்கு… அதுபோரும்’ ஒரு விழாக்குழு வந்து டிரேக்களை பார்வையிட்டு ஐம்பது டிரேக்கள் வேண்டும் என்று கேட்டு ஒன்றை சாம்பிள் வாங்கிச் சென்றார்கள். ஒரு பெண் வலையுள்ள குப்பைக்கூடை வேண்டும் என்று கேட்டு பரிசோதனைகள் செய்த பின்னர் செல்பெசியில் எவரிடமோ ஆலோசனை செய்தாள்.

மாதவன் கொஞ்சம் மனம் தேறியிருந்தார். மனைவியும் மகனும் இறந்த நாட்களில் மிகவும் உடைந்துபோனவராக இருந்தார். கடவுள்நம்பிக்கை உள்ளூர உறுதியாக ஆகிவிட்டிருந்தது. வாழ்க்கையின் அர்த்தமின்மையை எப்போதும் உணர்ந்து வந்த கலைஞன் அந்த அர்த்தத்தை வாழ்க்கைக்கு அப்பால் மட்டுமே கண்டுகொள்ள முடியும் என்று உணர்ந்துகொண்டதுபோல.

சமீபத்தில் கேரளத்தில் கவி என்ற ஊருக்கு மலைப்பயணம் சென்றிருந்தேன். பஷீர் என்ற நண்பர் காட்டு அட்டைகளை பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். மழைக்காலத்தில் கோடிக்கணக்கான முட்டைகளில் இருந்து கோடிக்கணக்கான அட்டைப்பூச்சிகள் பிறந்து வருகின்றன. புல்நுனிகளில் பற்றி ஏறி காத்திருக்கின்றன. அவற்றில் பல்லாயிரத்தில் ஒன்றுக்குக் கூட உணவு உண்ணும் வாய்ப்பு அமைவதில்லை. உடலே நாசியாக குருதிமணத்துக்குக் காத்திருந்து காத்திருந்து நெளிந்து நெளிந்து நாட்கள் செல்ல அந்த மழைக்காலம் முடிந்ததும் அவை வெயிலில் காய்ந்து சக்கையாகி புழுதியாகின்றன.

ஏதோ ஒன்று ஓர் உடல் மேல் தொற்றி ஏறுகிறது. அதன் பல்லாயிரம் சகாக்களுக்கும் அதற்கும் அளிக்கப்பட்டுள்ள அத்தனை உடல்நுட்பங்களும் அந்த ஒருசெயலுக்காகவே உருவானவை. அது குருதியை நீர்க்கச்செய்து வலியில்லாமல் உறிஞ்சுகிறது. பின்பு உதிர்ந்துவிடுகிறது. உணவு உண்ண நேர்ந்தமையாலேயே அதன் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. அந்தக்குருதியில் அது முட்டைகளை நிரப்பிக்கொள்கிறது. ஆழ்ந்த மரணத்துயில். முட்டைகள் அதைப்பிளந்து வெளிவந்து மண்ணில்பரவி அடுத்த மழைக்காலத்துக்காக காத்திருக்கின்றன.

‘இந்த அட்டைகளைப் பார்க்கையில் கடவுள் காட்டும் ஒரு வேடிக்கை போல தோன்றுகிறது’ என்றேன். பஷீர் சிரித்துக்கொண்டு ‘மனித வாழ்க்கை மட்டும் என்னவாம்?’ என்றார். ஓர் அதிர்ச்சியுடன் எண்ணிக்கொண்டேன். ஆம், மனிதன் மட்டும் என்ன? அவன் படைத்த இந்த நாகரீகம் இந்த இலக்கியம் இந்தச்சிந்தனைகள் கலைகளுடன் அவன் மட்டும் என்ன பெரிய சாதனையை நிகழ்த்திவிட்டான்? எந்த அர்த்தத்தை அடைந்துவிட்டான்? உடனே சாளைப்பட்டாணி என் நினைவுக்கு வந்தான். அந்தக்கதையை வாசித்து இருபத்தைந்து வருடங்களுக்குப் பின்னரும் அந்த அதிர்ச்சி மீண்டும் ஏற்பட்டது.

முந்தைய கட்டுரைமாதவம்
அடுத்த கட்டுரைகல்யாணப்பாறை