விஷ்ணுபுரம் விருதுவிழா பதிவுகள் 11 [குறைகள்]

ஜெ

விஷ்ணுபுரம் விருதுவிழா அருமையாக இருந்தது. ஒவ்வொன்றும் பார்த்துப்பார்த்துச் செய்யப்பட்டிருந்தது. நான் ஏற்பாடுகளைச் செய்திருந்தீர்கள். ஒவ்வொரு சிறுவிஷயத்திலும் இருந்த கவனம் ஆச்சரியமூட்டுவதாக இருந்தது. இதைப்போல துல்லியமாகத் திட்டமிடப்பட்ட ஒரு விழாவைச் சமீபத்தில் பார்த்ததில்லை.

எனக்குக் குறையாகத்தெரிந்த சிலவிஷயங்களை மட்டும் சொல்லவேண்டும். அதைச் சொல்வது குறைசொல்வதற்காக அல்ல. பெர்ஃபெக்‌ஷன் உங்கள் எண்ணம் என்றால் அதற்காக. இதெல்லாம் சின்ன விஷயங்கள்.

முதலில் விவாத அரங்கத்திற்கு வெளியே தெரியும்படியாகக் குடிநீர் வைக்கப்பட்டிருக்க வேண்டும். அதைக் கேட்டு பல பேர் அலைந்தார்கள். இரண்டு கழிப்பறை செல்வதற்கான இடம் அம்புக்குறி போட்டு பிரிண்ட் அவுட் எடுத்து ஒட்டிக் காட்டியிருக்கலாம். அதையும் விசாரித்தபோது தெரியவில்லை

அரங்கிலே சிலர் சலசலத்துக்கொண்டிருந்தார்கள். தொடர்ந்து உள்ளே உட்கார்ந்து பேசிக்கொண்டே இருந்தவர்களை மட்டுறுத்துநர்கள் கட்டுப்படுத்தியிருக்கலாம். அவர்கள் சிலர்தான். ஆனால் அந்த நிகழ்ச்சிகள் மிகத்தீவிரமாக இருந்தன. ஆகவே அது மிகவும் தொந்தராவாக இருந்தது.

அதைப்போல அழையாவிருந்தாளிப் பேச்சாளர்கள். வண்ணதாசனின் அற்புதமான உரையின் உணர்ச்சித்தீவிரம் அடங்குவதற்குள் ஒருவர் எழுந்து கண்டபடி பத்துநிமிடம் பேசி அந்த மனநிலையையே சீரழிக்கமுற்பட்டார். நல்லவேளையாக அவரை தொகுப்பாளர் பத்து நிமிடத்தில் கட்டுப்படுத்திவிட்டார்.  .

 

அதேபோல படைப்பாளிகளிடம் கேள்விகள் கேட்கும்போது ஒருவரே நிறையகேள்விகள் கேட்பதை கட்டுப்படுத்தி கேட்காதவர்களுக்கு வாய்ப்பு வழங்கவேண்டும். பேசுபவர்களிடமும் கேள்விகளுக்கான பதில்களைச் சுருக்கமாகச் சொல்லவேண்டும்படி கேட்டுக்கொண்டால் நல்லது. பல எழுத்தாளர்கள் மிகநீண்டபதில்களைச் சொன்னார்கள். அது உரையாடலின் அழகைக் கொஞ்சம் குறைத்தது

விழாவில் பேச்சுக்களை வாசிக்கவே கூடாது. தொழில்முறைக் கருத்தரங்குகளிலே மட்டும்தான் கட்டுரை வாசிக்க வேண்டும்.  இரா முருகனின் உரையாடல் சிறப்பாக இருந்தது. மேடையில் அவர் பேசியிருக்கலாம்

இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் என்னைப் போன்றவர்கள் வெளியூரிலிருந்து வந்து இந்த விழாவிலே கலந்துகொள்கிறோம். இதிலுள்ள ஒவ்வொரு நிமிடமும் எங்களுக்கு முக்கியம். வெற்றுச் சம்பிரதாயங்களுக்கும் வழக்கமான மரியாதைப்பேச்சுகளுக்கும் எங்களுக்கு நேரமில்லை.

ஆனால் மிக அற்புதமான இருநாட்களாக இருந்தது. ஒவ்வொரு அரங்கும் ஒரு மின்னலடித்துபோல. சிவப்பிரகாஷின் அரங்குதான் உச்சகட்டம்

வாழ்த்துக்கள்

ரவீந்திரன் பி.எஸ்.என்.எல்

***

lllllll

ஜெ

செல்வேந்திரன் எடுத்த ஆவணப்படம் அழகாக வண்ணதாசனைக் காட்டியது. அவருடைய கைகளை இன்னும் கொஞ்சம் காட்டியிருக்கலாம் என நினைத்தேன்

வண்ணதாசனிடம் போட்டோ எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டேன். நிறையக்கூட்டம். ஆகவே தவிர்த்துவிட்டேன். அவரை நேரில் சந்திக்கவும் போட்டோ எடுத்துக்கொள்ளவும் முன்னாடியே ஒரு மணிநேரம் ஒதுக்கியிருக்கலாம்

முருகேஷ்,

 

அன்புள்ள ஜெ,

விஷ்ணுபுரம் விருதுவிழா மிகச்சிறப்பாக அமைந்தது. நேரக்கட்டுப்பாடும் வீண்சொற்கள் இல்லாத நிகழ்ச்சிகளும் பேச்சாளர்கள் அனைவரும் சுருக்கமாகவும் உணர்வுபூர்வமாகவும் பேசியதும் மிகச்சிறப்பான அனுபவங்களாக அமைந்தன

ஆனால் ஒரு சின்னக்குறை. இப்படிப்பட்ட ஒரு விருதுக்கு விருதுச்சின்னம் கம்பீரமாக இருக்கவேண்டும். அவசரமாக உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக் பொம்மை போல இருந்தது பரிசு. வெண்கலச்சிலைதான் இலக்கியத்திற்கு உருவாக்கப்படும் நல்ல விருது. ஒரு நல்ல சிற்பியைக்கொண்டு வடிவமைக்கவேண்டும். அதில் பெரிய சிம்பல்கள் எல்லாம் தேவையில்லை. எளிமையாக வாக்தேவி சிலை போல ஒரு சிலைபோதும். இதை விமர்சனமாகச் சொல்லவில்லை

மகேஷ்

ஜெ

விஷ்ணுபுரம் விருதுவிழா மிகச்சிறப்பாக அமைந்தது. குறை என்று சொல்ல வேண்டும் என்றால் இடைவேளைகள் மிகக்குறைவாக இருந்ததனால் ஒருவருக்கொருவர் நிறையப் பேச முடியாதபடி இருந்தது. அதோடு  நின்று பேசவும் அமர்ந்திருக்கவும் வராந்தா மாதிரி இல்லாமலிருந்தது. கிவிஸ் நிகழ்ச்சிதான் டாப். அதில் நான் பங்கெடுக்க ஆசைப்பட்டேன். அனைவரையும் அழைப்பார்கள் என நினைத்தேன். ஆனால் கேள்விகளை பார்த்ததும் பங்கெடுத்திருந்தால் மானம் போயிருக்கும் என்று தோன்றியது. செந்தில் இந்த நிகழ்ச்சியை டிவியில் நிகழ்த்தலாம். கல்லூரிகளில் நடத்தலாம். பொதுவாக நடத்துவதைவிட இப்படி குறிப்பாக நடத்துவது நல்லது

அடுத்த முறை கோவைக்கு வெளியே உள்ள புதிய எழுத்தாளர்களுடன் சந்திப்புகள் ஏற்பாடு செய்தால் சிறப்பாக இருக்கும். இந்த முறை வந்தவர்கள் சிறப்பாகப் பேசினார்கள். ஆனால் அவர்களே மறுபடி பேசும்படி ஆகக்கூடாது

அருண்

 

 

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழா பதிவுகள்-10
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 12 ,சசிகுமார்