ஆ.மாதவனை நான் 1985 டிசம்பரில் முதன்முதலாகச் சந்தித்தேன். சுந்தர ராமசாமியைச் சந்தித்து கிட்டத்தட்ட ஏழுமாதங்கள் கழித்து. சுந்தர ராமசாமிதான் எனக்கு மாதவனின் படைப்புகளை அறிமுகம்செய்தார். ‘மாதவனை நீங்க சந்திக்கலாம்… அதுக்கு முன்னாடி அவரோட ரைட்டிங்ஸை படிச்சிடணும். படிக்காம ஒரு ரைட்டரைச் சந்திக்கிறது தப்பு’ என்றார்.
நான் சுந்தர ராமசாமியிடமிருந்து கிருஷ்ணப்பருந்து நாவலையும் ஆ.மாதவன் கதைகள், கடைத்தெருக்கதைகள் என இரு தொகுதிகளையும் வாங்கிச்சென்றேன். ஆ.மாதவன் கதைகளுக்கு சுந்தர ராமசாமி முன்னுரை எழுதியிருந்தார். கதைகள் கலைகள் சிறுகதைகள் என்ற அந்த முன்னுரை எனக்கு அன்று தமிழின் முக்கியமான சிறுகதையாசிரியர்களை அவர்களின் தனித்தன்மைகளுடன் அறிமுகம் செய்வதாக இருந்தது.
ஆ.மாதவன் கதைகளைக் காசர்கோட்டுக்குச் செல்லும் மங்களூர் எக்ஸ்பிரஸில் சன்னலோரமாக அமர்ந்து வாசித்த நாளை இன்றும் நினைவுகூர்கிறேன். மழை பெய்துகொண்டிருந்தது. நனைந்த இலைகளுடன் மரங்களும் பசுமை பரவிய சதுப்புகளும் மழைபடர்ந்த நீர்நிலைகளும் வெளியே கடந்து சென்றன. இளம் வயதில் நம்மை வந்தடையும் பெரும்படைப்பாளிகள் நம்மை உருக்கி வார்க்கிறார்கள். அந்த பயணத்தில் நான் மறுபிறவி எடுத்துக்கொண்டிருந்தேன்.
மாதவனின் உலகம் நான் அதுவரை வாசித்த புனைவுலகில் இருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தது. மென்மையான உணர்வுகளை அது மீட்டவில்லை. உன்னதமான மன எழுச்சிகளை அளிக்கவில்லை. கனவுக்குள் கூட்டிச்செல்லவும் இல்லை. ஒவ்வொரு கதையும் ஓர் அறை போல என் மேல் விழுந்தது. ஒரு கதையின் தலைப்பை வாசிக்கும்போது அடிக்க ஓங்கிய கையைப்பார்க்கும் பதற்றம் எழுந்தது. தவிர்த்துவிடவும் தாண்டிச்செல்லவும் மனம் ஏங்கியது. மறுபக்கம் அந்த அனுபவத்துக்குள் ஆழ்ந்திறங்க இன்னொரு மனம் தவித்தது.
பாச்சி, கோமதி, பதினாலுமுறி, சாளைப்பட்டாணி என விரியும் கதைகள் காட்டும் உலகம் எனக்கு அறிமுகமானதே. ஏன், அதைவிடவும் உக்கிரமான ஏழாம் உலகத்துக்குள் சென்று மீண்டிருந்தேன். ஆனால் ஒரு நீண்ட அலைதலுக்குப் பின்னர் நான் சற்றே நிலைகொண்டிருந்த நாட்கள் அவை. ஆ.மாதவனின் உலகம் அந்த நிலைகொள்ளலை அசைத்தமையினாலேயே என்னுடைய அகம் பதறியது. நான் அமர்ந்திருப்பது பெரும் சதுப்பு உலை மீது மெல்லிய பொருக்கோடிய நிலமே என்று மீண்டும் எனக்குச் சொன்னவை அக்கதைகள். நான் நின்றுகொண்டிருக்கும் இடம் எக்கணமும் என்னை அதன் அடியில்லாத கரிய ஆழத்துக்குள் இழுத்துக்கொள்ளும் என்று எச்சரித்தன. அந்த அச்சம் என்னை உள்ளூர நடுங்கச்செய்தது.
இலட்சியங்களுக்கு கனவுகளுக்கும் உன்னதங்களுக்கும் மெல்லுணர்ச்சிகளுக்கும் அடியில் உள்ள அப்பட்டமான யதார்த்தத்தின் சித்திரங்களால் ஆனவை மாதவனின் கதைகள். மலப்புழுவுக்கும் மனிதனுக்கும் எந்த வேறுபாட்டையும் இயற்கை வைத்திருக்கவில்லை என்று அவை சொல்கின்றன. உயிர்வாழ்தலுக்கான ஒரே நியாயம் பிறந்துவிட்டதுதான். உயிர்வாழ்தலுக்கான ஒரே வழி ஒன்றுடன் ஒன்று முண்டியடித்து உண்பது. ஒன்றையொன்று உண்பது. சாலைத்தெரு புழு மொய்க்கும் ஒரு அழுகல்சதைத்துண்டுபோலிருக்கிறது இக்கதைகளில். அந்த உயிரசைவினால் அது வாழ்கிறதென்ற பிரமை நமக்கேற்படுகிறது.
சாலைத்தெருவில் மரணம் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. மரணத்துக்கு என்ன காரணம், பிறப்புதான். பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவே நிகழும் வாழ்க்கை என்ற நிகழ்வுக்கு எந்த காரணமும் எந்த தர்க்கமும் எந்த முறைமையும் இல்லை. அது நிகழ்வதை ஓர் ஓரமாக செல்வி ஸ்டோருக்குள் அமர்ந்து அமுத்தலான புன்னகையுடன் கண்டு பதிவுசெய்கிறது ஆ.மாதவனின் மொழி. வாழ்க்கையில் இருந்து ‘அப்படியே’ வந்து மொழியில் பதிவான உலகமெனப் பிரமை காட்டுகிறது இந்தப் புனைவுலகம்.
காசர்கோட்டுக்குச் சென்றபின்னர் மீண்டும் இக்கதைகளை வாசித்தேன். சாளைப்பட்டாணியின் மரணம் வாழ்க்கையின் சாரமென்ன என்ற என் வினாவை எனக்கு முன் மீண்டும் விரித்துப்போட்டது. உயிர் பிறக்கிறது, வலிமையை திரட்டிக்கொள்கிறது, வலிமையை எங்கும் காட்டுகிறது, வலிவிழக்கிறது, நொய்ந்து மட்கி மறைகிறது -அவ்வளவுதான். சாளப்பட்டாணியின் வாழ்க்கை காமத்தாலும் வன்முறையாலும் மாற்று இல்லாத தனிமையினாலும் ஆனது. அர்த்தமில்லாத ஒரு வெறும் நிகழ்வு. அர்த்தமின்மையை ஒவ்வொரு நிகழ்விலும் அடைந்துகொண்டே செல்வது.
தன்னந்தனியே என் இலட்சியங்களுடனும் கனவுகளுடனும் கலைகளுடனும் வாழ்ந்த நான் என்னை சாளப்பட்டாணியில் அடையாளம் கண்டுகொண்டேன். அவனுக்கும் எனக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பதுபோல. வாழ்க்கை ஓடி மறைய நான் செத்து பொருளிழந்து கிடப்பதை நானே காண்பதுபோல. இன்றும் ’எட்டாவதுநாள்’ என்னைத் தொந்தரவுசெய்யும் கதையாகவே இருக்கிறது.
*
காசர்கோட்டில் இருந்து ஆ.மாதவனை நான் தொலைபேசியில் அழைத்தேன். சுந்தர ராமசாமியிடம் எண் வாங்கியதாகச் சொன்னேன். அவரது கதைகளைப்பற்றி விரிவாகப்பேச எண்ணியிருந்தாலும் என்னால் அப்போது அதிகம் பேசமுடியவில்லை. இது பொதுவாக எல்லா வாசகர்களும் எழுத்தாளர்களிடம் உணரும் நிலைதான். எனக்கு எட்டாவதுநாளும், கிருஷ்ணப்பருந்தும் அபாரமான அனுபவத்தை அளித்தன என்று மட்டும் சொன்னேன். மாதவன் ‘திருவனந்தபுரம் வரும்போ வாங்கோ பாக்கலாம்’ என்றார்.
நான் மறுநாள் அமர்ந்து ஒரு நீண்ட கடிதம் எழுதினேன். அந்தக்கடிதத்தின் பல வரிகளை பலவருடங்கள் கழித்து ஆ.மாதவனைப்பற்றி எழுதிய கட்டுரையில் அப்படியே பயன்படுத்தியிருந்தேன். ஆ.மாதவனின் உலகம் மானுடனின் இருண்ட ஆழங்களுக்குள் கைவிளக்குடன் செல்லக்கூடிய ஒன்றாக தோன்றியது எனக்கு. காமத்தாலும் சுயநலத்தாலும் வன்முறையாலும் ஆன ஆதிமானுட அகம் அது. அங்கே எந்த தன்னொளியும் மின்னி நம்பிக்கையூட்டவில்லை. அந்த சித்திரத்தின் ஒவ்வொரு அணுவும் அப்பட்டமான உண்மை என நான் உணர்ந்தேன். ஆனாலும் நான் கனவுகாண விரும்பினேன். மனித இலட்சியங்களைப் பற்றிக்கொள்ள விழைந்தேன். ஆன்மீகமான ஒன்றை தேடிக்கண்டடைய ஆசைப்பட்டேன்.
1986 ஏப்ரலில் மீண்டும் நாகர்கோயிலுக்கு வந்துவிட்டு திரும்பும்போது ஆ.மாதவனைச் சென்று சந்தித்தேன். திருவனந்தபுரம் சாலைக்குச் செல்ல கரமனை தாண்டியதும் இறங்கிக் கொண்டேன். ஆ.மாதவனின் கடையான செல்வி ஸ்டோர் இருப்பது சாலையின் மறு எல்லையில். அது எனக்கு தெரியாததனால் அங்கிருந்த சிறிய டீக்கடையில் வாழைப்பழ பஜ்ஜியும் டீயும் சாப்பிட்டுவிட்டு இருபக்கமும் கடைபோர்டுகளைப் பார்த்துக்கொண்டு நடந்தேன்.
அப்படியே நடந்து பத்மநாபா திரையரங்கை அடைந்துவிட்டேன். சாலை முடிந்துவிட்டது. திரும்பி நடந்தேன். இம்முறையும் கடையை கண்டுபிடிக்கமுடியவில்லை. சாலை போன்ற இடத்தின் சிக்கல் என்னவென்றால் அங்கே நடமாடும் பெரும்பாலானவர்கள் வெளியே இருந்து வந்தவர்கள் என்பதே. சாலை முழுக்க லாரிகளில் இருந்து உளுந்து பயறு வெந்தயம் மஞ்சள் என பலசரக்குகளை இறக்கிக் கொண்டிருந்தார்கள். நடுவே ஆட்டோக்கள் காதைக்கிழித்து ஒலியெழுப்பிச் சென்றன. பலவகையான பாதசாரிகள் கைகளில் பைகளுடன் முட்டி மோதினார்கள். அந்தக்காட்சிகளில் என் கண்கள் தவறுவதை என்னால் தடுக்க முடியவில்லை. அந்த சிறுகணத்தில் சில போர்டுகள் கண் தவறிவிடுகின்றன
மீண்டும் நடந்தபோது சட்டென்று செல்வி ஸ்டோர் பெயரை கண்டுகொண்டேன். பெரிய பலகை. எப்படி தவறவிட்டேன் என்றே ஆச்சரியமாக இருந்தது. கடைக்கு முன் சென்று நின்று பார்த்தேன். கல்லாவில் மேஜைக்குப் பின்னால் நல்ல சிவந்த வழுக்கைத்தலையும் கோடு மீசையும் கண்ணாடியுமாக அமர்ந்திருந்தவர் ஆ.மாதவன் என கண்டுகொண்டேன். ஆ.மாதவன் கதைகள் நூலுக்குப்பின்னால் படம் இருந்தது.
நான் சென்று வணங்கினேன். அவர் என்னை ஒரு வாடிக்கையாளராக எண்ணி ‘நான் ஜெயமோகன்… காசர்கோட்டில்இருந்து வர்ரேன்’ என்றேன். கண்களுக்குள் பட்டென்று எதிர்பார்ப்பு அணைந்ததைக் கண்டேன். வாடிக்கையாளரை இழந்த வணிகரின் மனதின் துளி அது. இன்றுவரை ஆ.மாதவன் அதை இழக்கவில்லை. ஒவ்வொருமுறை சந்திக்கையிலும் முதலில் என்னை வாடிக்கையாளரின் அசைவாகவே எண்ணிக்கொள்கிறார். அல்ல என்று அறிந்ததும் அந்த கடைக்காரர் ஏமாற்றம் கொள்ள அவரை விலக்கி எழுத்தாளர் வந்து நம்மை புன்னகையுடன் வரவேற்பதற்கு அரைக்கால் நொடி ஆகிறது.
‘உக்காருங்கள்’ என்றார். நான் முக்காலியில் அமர்ந்துகொண்டேன். கடை முழுக்க பலவகையான ஸ்டவ்கள். நூதன் திரியடுப்புகளும் பம்பு அடுப்புகளும்தான் அதிகம். அலுமினியப்பாத்திரங்கள். கொஞ்சம் பிளாஸ்டிக் சாமான்கள். அதிகமும் வாளிகளும் குடங்களும். ‘எங்கேருந்து வாறியோ?’ என்றார். ‘நாகர்கோயிலிலெ இருந்து…’ ‘சுந்தர ராமசாமியைப் பாத்தேளா? நல்லா இருக்காரா?’ ‘ஆமா… என்றேன்.
‘ஜே ஜே சில குறிப்புகள் வாசித்தீங்களா?’ என்றார். ’ஆமாம்’ என்றேன். ‘தோப்பிலே சில மரம் தனியா வெலகி நிக்கும் பாத்தேளா அந்தமாதிரிப்பட்ட நாவலாக்கும் அது… பல முறைவாசிக்கவேண்டிய நாவல்’ என்றார். ‘உங்க கதைகளிலே சிலகதைகள நான் பலமுறை வாசிச்சிருக்கேன்…எட்டாவது நாள் அதிலே ஒண்ணு..’ என்றேன். ‘எல்லாம் நமக்குதெரிஞ்ச ஆளுதான்…தெரிஞ்ச ஆளுன்னா அவன் கெடையாது. கொஞ்சம் அவன் கொஞ்சம் நான் கொஞ்சம் யாருண்ணே தெரியாத ஆளுக… ஆனா எல்லாரும் ஜீவனுள்ள ஆளுகள்தான். கற்பனைண்ணு ஒண்ணு கெடையாது…’
நான் என்ன வாசிப்பேன் என்று என்னிடம் கேட்டார். என் வாசிப்புகளைச் சொன்னேன். அப்போது தஸ்தயேவ்ஸ்கியிலும் தல்ஸ்தோயிலும் ஆழ்ந்திருந்தேன். ‘அவங்க ரெண்டுபேரும் பெரிய எழுத்தாளர்கள்தான். ஆனா ரியலிசம்னு பாத்தா பல விஷயங்கள விட்டுடறாங்க. மனுஷனை நம்பினவங்க அவங்க. அவங்களுக்கு சில விஷயங்களப் பாக்க முடியாமப் போச்சு. நீங்க மிகயீல் ஷோலக்கோவ் வாசிக்கணும்… அவன் பெரிய ஆளு… அவன் உருவாக்கிற ரியாலிட்டி ஒண்ணொண்ணும் அப்டியே குருதியோட நம்ம முன்னால கெடக்கும்…’
ஆ.மாதவன் எழுந்து அவரது கடைக்குள் சென்று ஒரு பரணில் இருந்து ஷோலக்கோவின் ‘And quiet Flows The Don’ நாவலின் மூன்று பகுதிகளை எடுத்துவந்து எனக்குத் தந்தார். கலாகௌமுதியின் வண்ண அட்டைத்தாளால் அட்டை போடப்பட்ட நூல்கள். தடிமனானவை. மாஸ்கோவின் ராதுகா பதிப்பக வெளியீடுகள். உள்ளே ஒரு ரசீது இருந்தது, மிகப்பழையது. நான் அதை புரட்டிப்பார்த்தேன். ‘ஜனங்கள் எப்டிப்பட்டவங்கன்னு இவருக்கு நல்லா தெரியும்…’ என்றார் மாதவன். ‘கொண்டுட்டுப்போய் படிச்சிட்டு குடுங்கோ’
‘லா.ச.ரா படிச்சிருக்கேளா?’ என்றார். நான் புத்ர, அபிதா மற்றும் சில சிறுகதைகளை வாசித்திருப்பதைச் சொன்னேன். ‘லா.ச.ரால்லாம் தமிழுக்குச் சொத்து… அவரரோட மொழி இருக்கே அதான் தமிழிலே நுட்பமான நடை. அப்றம் ஜானகிராமன் மௌனி… மலையாளத்துக்கு இந்தமாதிரி சொத்து இல்லை பாத்துக்கிடுங்கோ. தமிழை விட மலையாளத்திலே நிறைய படிக்கிறாங்க. நல்ல புரக்ரஸிவா நெறைய எழுதறாங்க. ஆனா அவன்கிட்ட நம்மள மாதிரி சொத்து கெடையாது. அதை அவன்மார்கிட்ட சொன்னாலும் புரிஞ்சுகிடமாட்டாங்க.’
அவருக்கு பி.கெ.பாலகிருஷ்ணன், எம்.டி.வாசுதேவன்நாயர் இருவர் மீதும் பெரும் பிரியம் இருந்தது. ’எம்டி இப்ப உடம்புசரியில்லாம இருக்கிறதனால அதிகமாட்டு எழுதுறதில்லை… பிகெபாலகிருஷ்ணன் எப்பவும் அதிகம் எழுதுற ஆள் இல்லை. தண்ணியும் அவருமா இருப்பார். இவங்க ரெண்டுபேருக்கும் பாஷைக்க நுட்பம் நல்லா தெரியும்…’ ஆ.மாதவன் நுட்பம் என்ற சொல்லை அடிக்கடி உபயோகித்தார்.
நான் ஜே ஜே சிலகுறிப்புகளைப்பற்றி கேட்டேன். அப்போது தமிழில் அதிகம் பேசப்பட்ட, அதிகம் வையப்பட்ட நாவல் அதுதான். ‘என்ன ஒரு நாவல் இல்லையா? தோப்பிலே ஒரு மரம் மட்டும் தனியா தளதளன்னு நிக்கும்ல, அதுமாதிரி இருக்கு நாவல். இல்லியா?’ என்றார். நான் ’ஆமாம்’ என்றேன். ‘ஆனா அதோட அமைப்புதான் புதிசு. மத்தபடி எல்லா விஷயங்களும் தமிழிலே மாடர்னிஸ்டுகள் எல்லாரும் சொல்றதுதானே?’ மாதவன் கோட்பாடுகளை கவனிப்பதேயில்லை.
நடுநடுவே சில்லறை பொருட்களுக்காக வாடிக்கையாளர்கள் வந்துகொண்டே இருந்தார்கள். பெண்கள் வந்து அலுமினியப்பானைகளை எடுத்து திருப்பித்திருப்பிப் பார்த்தார்கள், மண்பானை போல தட்டித்தட்டி சோதனை செய்தார்கள். உள்ளே கண்விட்டு ஆராய்ந்தார்கள். பேரம் பேசினார்கள். மாதவன் ‘இல்லம்மா. இதெல்லாம் நயம் சரக்கு. பாம்பேயிலே இருந்து வாறதாக்கும்…ஒரே வெலை’ என்றாலும் விலையை குறைத்துக்கொடுக்கத்தான் செய்தார். அதிகம் பேரும் பம்ப்ஸ்டவ்வின் ஓட்டையை குத்தும் ஊசி வாங்கத்தான் வந்திருந்தார்கள். முக்கியமான பேச்சுகள் நடுவே இம்மாதிரி காலணா வியாபாரம் எனக்கு எரிச்சலை தந்தது. நான் அன்று எழுத்தாளன், கலைஞன் என்றால் ஆசீர்வதிக்கப்பட்ட ஜீவன் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அவனைப்போய் ஸ்டவ் ஊசி எடுத்து தரச்சொல்வதா? அதிலும் பேரம் வேறு.
சிலசமயம் நூதன் ஸ்டவ்வின் திரி வாங்க வந்திருந்தார்கள். ’ஒரே திரிதான் வேண்டும், குட்டையாக ஆகிவிட்டது’ என்றாள் ஓர் அம்மை. ‘ஒரே திரியா குடுக்கிறதில்லை. செட்டாத்தான் வரும்’ என்றார் மாதவன். ‘செட்டிலே ஒண்ணு மட்டும் எடுத்து தரணும்’ என்றாள் அம்மை. ‘ஒண்ணு மட்டும் எடுத்துக்கிடுங்க… ஆனா செட்டுக்கான வெலை ஆயிடும்’ என்று மாதவன் கொஞ்சமும் சிரிக்காமல் சொன்னார். அந்த அம்மாளின் மூளைத்திரி சிக்கி நின்றுவிட்டது. கண்கள் மங்கலாயின. கொஞ்ச நேரம் யோசித்தபின் ‘மொத்த செட்டும் குடுங்கோ’ என்றார்.
ஆ.மாதவன் தி.ஜானகிராமனைப்பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். ‘இங்க தகழியெல்லாம் துணிஞ்சு எழுதினதா சொல்றாங்க… நாம எழுதின அளவுக்கு இவங்க எழுதல்லை. ஜானகிராமனோட அம்மா வந்தாள் மாதிரி ஒரு நாவல் இங்க வந்தா எல்லாரும் எரிஞ்சுபோயிடுவாங்க…எவ்ளவு துணிச்சலா எழுதியிருக்கார். என்ன ஒரு நுட்பம்..’ நுட்பம் என்ற சொல்லை அவர் செயல்திறன், நடையழகு, ஆழம் என எல்லாவற்றுக்கும் பயன்படுத்தினார் என்று பட்டது.
‘நீங்க தகழியாலே பாதிப்படைஞ்சிருக்கீங்களா?’ என்றேன். ‘தகழியோட கதைகளிலேதான அடித்தட்டு மக்களோட வாழ்க்கை வரும்’ மாதவன் யோசித்து ‘தகழிய எனக்கு பிடிக்கும். சிலது நான் மொழிபெயர்த்திருக்கேன். ஆனா தகழி என்னை பாதிக்கலை. தகழி மாதிரி எழுதினவர்னா ஜெயகாந்தனைத்தான் சொல்லணும். அதெல்லாம் அரசியல் கொள்கை அடிப்படையிலே எழுதப்பட்ட கதைகள். நமக்கு அதெல்லாம் சரிப்படாது. நாம கண்ணுக்குப்பட்டதை அப்டியே எழுத நினைக்கிற ஆளு. நாம நினைக்கப்பட்டதுக்கு யதார்த்தத்திலே எடமில்லை. வாழ்க்கை கண்ணு முன்னாலே ஓடிட்டிருக்கு…’ என்றார்.
‘அதோ பாத்தீங்களா’ என்று ஒருவரை காட்டினார். ஒரு ஆசாமி சபரிமலை பக்தர் கோலத்தில் சென்றுகொண்டிருந்தார். ‘அய்யப்பனாக்கும். விஷுவுக்கு மலைக்குப்போக மாலை போட்டிருக்கான். இந்த சாலைத்தெருவிலே பேருகெட்ட கேடி. மூணுசீட்டும் முடிச்சவுப்பும் ஜோலி. குடி கூத்தி எல்லாம் உண்டு. மாசத்திலே எட்டுநாள் லாக்கப்பிலே உறக்கம். எடைக்கிடைக்கு ஜெயிலுக்கும்போவான். நாலஞ்சாளை குத்தியிருக்கான். ஆனா இப்பம் பாத்தேளா இந்த கோலம் சத்யமாக்கும். உண்மையிலேயே மனசலிஞ்சுதான் மலைக்குப்போறான். பெரிய பக்திமான். இதை நாம எப்டி புரிஞ்சுகிட முடியும்? நாம இதைப் பதிவுபண்ணி வைக்கலாம். வாசகர்கள் அவங்க வாழ்க்கைய வச்சு புரிஞ்சுகிட்டா போரும். அல்லாம நாமறிஞ்ச அரசியலை எல்லாம் அவன்மேலே கேற்றி வச்சா அது அசிங்கமா இருக்கும்.’
மாதவனின் இலக்கியக் கொள்கைகள் பலவகையானவை. காமத்தை நுட்பமாக எழுதவேண்டும், கவித்துவமாக எழுதவேண்டும். பசியையும் நுட்பமாகவே எழுத வேண்டும். இரண்டும் கிட்டத்தட்ட ஒன்றே. ஆனால் வன்முறையையும் வாழ்க்கையின் வேடங்களையும் முடிந்தவரை அப்பட்டமாகவே எழுத வேண்டும். டீ வரவழைத்தார். குடித்துவிட்டு நான் எழுந்தேன். ‘உங்களுக்கு வேலை இருக்கும்’ என்றேன்.
‘வேலை எப்பமும் உண்டு… இது ஒழியாத வேலையாக்கும். நீங்க திருவனந்தபுரம் வர்ரப்ப வாங்க…’ என்றார். ‘எங்க சாப்பிடுவீங்க? நான்வெஜ்ஜா?’ நான் ‘ஆமாம்’ என்றேன். ‘இஙக சாலைத்தெருவிலே முபாரக் ஓட்டல்னு ஒண்ணு உண்டு. மீன்சாப்பிடுறவங்க விரும்பி அங்க போவாங்க. கொஞ்சு நல்லா இருக்கும்னு பேச்சு’ ‘நீங்க சாப்பிட மாட்டீங்களா?’ ‘நான் எப்பமும் வீட்டுச்சாப்பாடுதான். ஓட்டல்சாப்பாடு ரொம்ப குறைவு.’
விடைபெற்றுக் கிளம்பினேன். கடைக்குள் இரு பெண்கள் ஏறினார்கள். ஒயர்கூடைகளைக் கேட்டார்கள் போல. ஆ.மாதவன் எழுந்து கூடைகளை எடுத்துக் காட்ட ஆரம்பித்தார்.