திருவனந்த புரம் தமிழ்ச்சங்கம் இன்று ஒரு முக்கியமான அமைப்பு. அதன் பணிகளில் நீங்கள் முக்கியப்பங்கு ஆற்றியிருக்கிறீர்கள் இல்லையா?
தமிழ் இலக்கிய வாழ்வில், நான் பெற்ற பயன் திருவனந்தபுரம் தமிழ்ச்சங்க தொடர்பு. 1963ஆம் ஆண்டில் ஒரு சிமிண்டு கிட்டங்கியின் மாடியறையில் ஆரம்பித்து இன்றைக்கெல்லாம் நாற்பத்திநான்கு ஆண்டு கடந்து விட்ட நிலையில் மூன்று மாடி உயர்கட்டிடமாக வளர்ந்துநிற்கிறது. பதினாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் நூற்களைக் கொண்டு நகரின் பெரியதோர் நூலகமாகவும் கலாச்சார அரங்கமாகவும் சிறந்து விளங்குகிறது.
சங்கவெளியீடாக 1978ல் “கேரளத்தமிழ்” தொடங்கப்பட்ட எனும் மாத ஏடு என்னை ஆசிரியராகக் கொண்டு இன்றளவும் நடந்து வருகிறது. தமிழ்ச்சங்கம் மூலமாக எனக்குக் கிடைத்த நல்ல இலக்கிய நண்பர் கோ.முருகேசன். மற்றொருவர், இன்றைய விஞ்ஞான அறிவியல் எழுத்தாளராகிய நெல்லை சு.முத்து. இவர்கள் எல்லாம் தமிழ்ச்சங்கம் மூலமாக நான் பெற்ற இலக்கிய சம்பத்துகள்.
‘தாமரை’ சஞ்சிகை தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வரிசையாக இலக்கியமலர் என்றே வெளியிட்டபோது கேரள இலக்கிய மலர் என்று இரண்டு விசேஷ இதழ்கள் எனது முயற்சியில் வெளிவந்தன. அம்மலர்களில் கேரள பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மற்றும் நாவலாசிரியர் நீல.பத்மநாபன் வை. ரங்கநாதன், நகுலன், காசியபன், கவிஞர் சண்முக சுப்பையா போன்றவர்களும் எழுதிச் சிறப்பித்தனர்.
1978ஆம் ஆண்டில் ஆரம்பித்த கேரளத்தமிழ் 1979 முதல் 1985 வரை ஒவ்வொரு ஆண்டும் இலக்கிய ஆண்டு மலர்கள் வெளியிட்டு வந்தது. அவ்வாறு வெளிவந்த மலர்களின் 1983ல் வெளியிட்ட ‘தி.ஜானகிராமன் நினைவு சிறுகதை மலர்’ எனகது இலக்கிய வாழ்வின் சாதனைகளில், மற்றொரு அத்தியாயம், தி.ஜானகிராமன் எனது கிருஷ்ணப் பருந்து நாவல் பற்றி எழுதிய சிறந்த கடிதம் ஒன்றினை இம்மலரில் வெளியிட்டிருந்தேன்.
1992 ஆம் ஆண்டில் வெளியிட்ட மொழிபெயர்ப்பு சிறுகதைமலரில் முக்கியமாக மலையாளக் கதைகளுக்கு இடமளித்திருந்தேன். மலரில் மலையாள தமிழ் இலக்கியம் பற்றி நான் எழுதியிருந்த நல்லதோர் ஆய்வுக் கட்டுரை மலையாள தமிழ் விமர்சகர்களிடையே பரவலான விமர்சனத்திற்கு இடம் வகுத்தது.தொடர்ந்த ஆண்டுகளில், ‘புதினப்பூக்களம்’, ‘தமிழில் சிறு பத்திரிகைகள்’ எனும் மலர்கள் வெளிவந்தன. ‘தமிழில் சிறுபத்திரிகைகள்’ எனும் நூல் தமிழ்ப்புத்தக உலகில் புதிய அறிவுகளைத் தருவது என்று தினமணி நாளிதழ் புகழ்ந்து பாராட்டியது.
திருவனந்தபுரம் மையமாக ஒரு இலக்கிய இயக்கம் எழுபதுகளில் இருந்தது. நகுலன் நீலபத்மநாபன் மா. தட்சிணாமூர்த்தி, ஜேசுதாசன் போன்றவர்கள்… இவர்களுடன் உங்கள் உறவு எத்தகையது?
திருவனந்தபுரம் மையமாக ஒரு எழுத்தாளர் வட்டம் இருந்தது உண்மை. 1960ல் நான் இங்கே தமிழ்ச் சங்கத்தோடு தொடர்பு கொண்ட பின்புதான் கொஞ்சம் கொஞ்சமாக அதற்கு அறிமுகமானேன். நானும் இராமகிருஷ்ணன் என்ற இளஞ்சேரனும் தான் இலக்கிய நண்பர்கள். ‘புளிய மரத்தின் கதை’ படித்துவிட்டு சுந்தர ராமசாமியை பெரிய இலக்கிய எழுத்தாளராக மனதில் கொண்டிருந்தேன். அவரைச் சந்தித்ததும் பழகியதும் சிறந்த அனுபவங்கள்.
நான் திராவிடப் பத்திரிகைகளில் எழுதும் எழுத்தாளன் என்று நீலபத்மனாபன் மூலம் அறிந்து. நகுலன் ஒருமுறை கடைக்கு வந்தார். திராவிட எழுத்தாளருக்கான குணங்களையும் மீறி, நான், லா.ச.ராவையும், அழகிரிசாமியையும். தி.ஜானகிராமனையும், ரகுநாதனையும், மௌனியையும் புதுமைப்பித்தனையும் பச்சமூர்த்தியையும் எல்லாம் படிப்பவன் என்றறிந்த போது. நகுலன் அவர் எழுதிய கவிதைகளைப் படிக்கத் தந்தார். அந்தக்கவிதைகள் எனக்கு பிடிக்கவில்லைஅந்த நாள் முதல் இதுவரையில் புதுக் கவிதை என்ற மேலோட்டமான கவிதைக் காரியத்திற்கு நான் முகம் சுளிப்புக்காரன். ஆனால் நகுலனுடன் தொடர்ந்த இலக்கிய உரையாடல் இருந்தது
நீல. பத்மநாபன் பெரிய பெரிய நாவல்கள் எல்லாம் எதுகிறவர். புத்தகங்கள் எனக்கும் தருவார். அவர் எழுதியவற்றில் என் வாசிப்பில் திருப்தியாக முன் நிற்பது, தலைமுறைகள் தான். நீல பத்மநாபன் இன்றும் என்னுடன் உரையாடலில் இருக்கிறார்.
சுந்தரராமசாமி உங்கள் சிறுகதைகளுக்கு முன்னுரை எழுதியிருக்கிறார். அவரைப்பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன?
சுந்தரராமசாமி. நல்ல தேர்ந்த அறிவாளி. இலக்கிய அறிஞர் என்ற என் கணிப்புதான் அவரை என் கதைகளுக்கு முன்னுரை எழுதித் தர கேட்க வைத்தது. முன்னுரை நல்லதொரு இலக்கிய விமர்சனமாகவும் அமைந்திருந்தது.
இந்த இலக்கியவாழ்க்கையில் நீங்கள் பெற்ற கௌரவங்களாக நீங்கள் நினைப்பவை எவை?
1994ஆம் ஆண்டில் திருப்பூர் தமிழ்ச் சங்கம், எனது ‘அரேபிய குதிரை’, எனும் சிறுகதைத் தொகுப்பிற்கு அவ்வாண்டின் சிறந்த சிறுகதை நூலுக்கான பரிசு தந்து சிறப்பித்தது. எனக்கு கிடைத்த முதல் இலக்கிய விருது என்று அதைச் சொல்லலாம்.
2002 ஆண்டில் இங்கே திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம் சார்பில் மலையாள பெருங்கவி உள்ளூர் பரமேஸ்வர அய்யர் நினைவுப் பரிசை எனக்கு வழங்கிப் பெருமைப்படுத்தினார்கள். தமிழ் மலையாள மொழிகளிலிருந்து மொழிபெயர்ப்பு பணிகள் செய்து சிறப்பு செய்பவர்களுக்காக காலம் சென்ற உள்ளூர் பரமேஸ்வர அய்யரின் நினைவிற்காக அவரது பேரன் மதுரை பரமேஸ்வர அய்யர் வழங்கும் பரிசு இது.
1981ஆம் அண்டில் தீபம் நா. பார்த்தசாரதியை தினமணிக்கதிர் ஆசிரியர் ஆன பின்னர் தீபத்தின் ஆசிரியர் குழுவில், வல்லிக்கண்ணன், நாஞ்சில் நாடன் இவர்களுடன் என்னையும் இணைத்தனர். அதை நான் ஓர் இலக்கிய அங்கீகாரமாகவே நினைக்கிறேன்
இரண்டாயிரத்து ஒன்றாம் ஆண்டில், தேர்ந்தெடுத்த 72 கதைகளடங்கிய பெரியதொகுப்பாக எனது கதைகளை ‘தமிழினி’ நண்பர் வசந்தகுமார் வெளியிட்டு பல ஆண்டுகள் தலைமறைவு போன்ற எனது இடைவெளியினை மாற்றி அமைத்தார். இளையதலைமுறை வாசகர்களை எனக்கு உருவாக்கியளித்தது அந்த வெளியீடு
2002 ஆண்டு தொட்டு ஐந்தாண்ட கால அளவிற்கு மத்திய சாகித்ய அகடாமி தமிழ்மொழி தேர்வுக் குழுவில் என்னையும் உறுப்பினராக ஆக்கிக் கொண்டுள்ளது கூட நான் எண்ணிப் பெருமைப்பட்டுக் கொள்ளும் நிகழ்வுதான்.
ஓர் எழுத்தாளராக உங்கள் பங்களிப்பைப்பற்றி நிறைவு உள்ளதா?
எந்த எழுத்தாளனும் அவனால் முடிந்த அளவுக்கு எழுத நேரவில்லை என்ற எண்ணத்துடன் மட்டும்தான் இருப்பான். நான் இன்னும் நிறைய எழுதியிருக்கவேண்டும் என்று உணர்கிறேன்.
எழுத ஆரம்பித்த நாட்களில் மலையாளக் கதைகளின் மொழிப்பெயர்ப்பில் துவங்கி, பொழுதுபோக்கு காதல் கதைகள், திராவிட இயக்க எழுத்துகளின் சொல் அலங்கார வழிகளினூடே பயணம் செய்து, பின்னர் சாதாரணமக்களின் வாழ்வியல் அவலங்களை யதார்த்தவாத பாணியிலும் எழுதினேன். நான் வாழும் பகுதியின் கலவை மொழியும் கலந்து, புதுமைப்பித்தன் ஆர். ஷண்முகசுந்தரம், தி.ஜானகிராமன், கி.ராநாராயணன் போல வட்டார வழக்கெனும், சொந்த நாட்டு வழக்கங்களையும் முன்வைத்து இலக்கியம் படைத்தேன். நான்கு முழு நாவல்கள், ஆறு சிறுகதைத் தொகுதிகள், மற்றும் விசேஷமலர் கட்டுரைகள் என்றெல்லாம் படைத்தளித்துவிட்டு தமிழ் இலக்கிய உலகில், நானும், ‘உள்ளேன் அய்யா’ என்று எழுந்து நின்று முகம்காட்ட பெருமையாக இருக்கிறது.
என் படைப்புக்கள் பற்றி பழம்பெரும் எழுத்தாளர். ந. பிச்சமூர்த்தி குறிப்பிடும்போது “மாதவன் படைப்புகள் அருமையானவை. கதைகளுக்குரிய விஷயங்களை தேர்ந்துள்ள விதத்திலும் அவற்றைச் சொல்லிச் செல்லும் முறையிலும் நடை நயத்திலும் தனித்தன்மை புலனாகிறது. அங்கங்கே கலந்து வருகிற உவமைகளின் புதுமைச்சுவையை மிகுதியும் ரசித்தேன். கவிக்குரல் போன்ற உவமைகளை, நெஞ்சுக்கு நிறைவுதரும் கலைப் பொறிகளை கண்டுமகிழ்ந்தேன்” என்கிறார்.
நீங்கள் [ஜெயமோகன்] என்னைப்பற்றி ’தமிழ் இலக்கிய முன்னோடிகள் வரிசை’ யில் எழுதியிருக்கிறீர்கள். “தமிழின் முக்கியமான சிறுகதை ஆசிரியர்களின் சிறு வரிசையில் எப்போதும் இடம்பெறும் பெயர் ஆ.மாதவன். அடிப்படையில் அவர் ஒரு சிறுகதை ஆசிரியரே அவரது மிகச்சிறந்த படைப்பான கிருஷ்ணபருந்து என்ற நாவல் சிறுகதை இயல்பு மேலோங்கியமையால் ஒரு குறுநாவலாக நின்று விட்ட ஒன்றே. தமிழில் எழுதப்பட்ட மிகச் சிறந்த குறுநாவல்களில் ஒன்று அது. என் அகக்கணிப்பில் முதலிடம் பெறுவது கூட. ஆ. மாதவன் சிறுதைகள் இயல்புவாதச் சிறுகதையின் உச்சநிலையில் இருந்து முன்னகர்ந்து நவீனத்துவ சிறுகதையின் எல்லைக்குள் நுழைந்தவை என்று கூறுவேன்” என்கிறீர்கள்
இவ்வாறெல்லாம், என் எழுத்துப் பணியை அலசி, நான் தமிழின் சிறந்த சிறுகதை ஆசிரியன் என்று வரையறுக்கும் நீங்கள் என் எழுத்துக்கள் காமம் வக்ரம் என்று சமூக அவலங்களை மறைந்து நின்று காட்டும் நுட்பம் கொண்டவை என்பது போலவும் உங்கள் விமர்சன கட்டுரையில் கூறுகிறீர்கள். அன்றுமுதல் இன்றுவரை நான்கு தலைமுறை விமர்சகர்கள் என்னைப்பற்றி பேசியிருக்கிறார்கள் என்பது முக்கியமானதுதானே
விமர்சகர்கள் எந்த வரையிட்டாலும் நான் எழுதும்போது எந்தவிதமான தத்துவ போதனைகளையும் விளக்குவதற்கோ, இஸங்களை புகுத்துவதற்கோ முயல்வதில்லை என்பதனையும் நீங்களே சொல்கிறீர்கள். படைப்புலகில் நான் ஒரு போதகனல்ல. என் வழி கலையை கலை உணர்வுடன், யதார்த்தப் பரிவுடன், விளம்புவது மட்டுமே என்பது உண்மை!
இலக்கியத்தில் தொடக்க காலம் முதல் உங்கள் குருநாதர்கள் எவர்?
இலக்கியத்தில் குருநாதர் என்று எவருமில்லை பள்ளிக் கூடத்தில் மலையாளம், வீட்டில் தமிழ். ராமகிருஷ்ணன் என்றொரு இலக்கிய நண்பர். அவரை வேண்டுமானால் குருஸ்தானத்தில் நிறுத்தலாம்தான். இளஞ்சேரன் என்று இவரது புனைபெயர். மலையாள குங்குமம் பத்திரிகையின் ஆசிரியராக இருந்து சமீபத்தில் காலமாகிவிட்டார். அவர் அன்றைக்கெல்லாம் திராவிர் இயக்கத்தில் பற்று கொண்டவராக இருந்தார். அவர் படிக்கும், திராவிடன் திராவிடநாடு போர்வாள்’ பத்திரிகைகளும், இயக்கத் தலைவர்களின் அடுக்குச் சொல்லின் அழகிய பேச்சுக்களும் எல்லாம் என் தமிழ் ஆர்வத்திற்கு வலு ஏற்படுத்தியது.
நீங்கள் திராவிட இயக்கத்தில் இருந்தவர், இன்று உங்கலுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா?
இன்று எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனால் “கடவுள்களிடம்” நம்பிக்கை இல்லை. கடவுள் நிறைவு என ஒன்று இல்லையென்றால் கலைகள் இல்லை. கல்மிஷமற்ற நல்ல நினைவுகளை மெல்ல மெல்லத் தாலாட்ட இறை நம்பிக்கை வேண்டும் கடவுள் எனும் புலப்படாத பிரம்மாண்டத்தின் அரவணைப்பை மனித மனதின் நுண்ணுவர்வால் தான் உணர முடியும். அந்த உணர்வின் சாட்சிக்கூடம் தான் கோயில்கள், சிற்பங்கள்… நாட்டியம், இசை எல்லாம். இசையை மட்டும் ரசித்து உணர்ந்தாலே கடவுளாகக்காண்பது போலத்தான். நான் அந்த ஸ்பரிச சுகத்தை தெய்வீகமென்று உணர்பவன்… அதனால் நான் கலைஞன் என்று தன்னைத்தானே அகந்தை கொள்வதுண்டு. சூழ்நிலைகளை சற்றே மறந்து விகாரமற்று நிற்க கோயில் சன்னதி பலநேரங்களில் உதவுவதுண்டு.
மதம் சார்ந்த ஆர்வம் உங்களுக்கு உண்டா? மத தத்துவங்களை வாசிப்பீர்களா? பிடித்தமான தரப்பு ஏதேனும் உண்டா?
இந்துமதம் எனக்குப் பிடிக்கும். கிறித்துவத்தின் மதச் சான்றுகளில் அதிகம் உள்புகுந்து பாராததினாலோ என்னமோ – அந்த மதம் பற்றி அதிகம் தெரியாது. இஸ்லாம் மதத்தில் நிறைய கட்டுப்பாடுகள்.
வீணாக ஏன் வேறு பாதை பற்றி சிந்திக்க வேண்டும்? இந்து மதம் ஆழமான தத்துவச் சரடும் கொண்டது. வேதம் – வேதாந்தம் என. விருப்பு- வெறுப்பு -சந்தோஷம் – சாயுஜ்யம் எல்லாமே இந்து மதத்தில் உள்ளன. இந்துமதம் அணைப்பிற்கு அன்னையாக சுகப்பிற்கு கன்னியாக, பற்றுக்குப் பிள்ளையாக, வாழ்விற்கு தென்றலாக உள்ளது…வேறென்ன… நிறைய சொல்லலாம்.
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட ஒழுக்கம் பற்றி வற்புறுத்துகிறார்கள். உதாரணம், பெரியார். நீங்களும் முன்னாளில் திராவிட இயக்கவாதிதான். உங்களுடைய ஒழுக்கம் பற்றிய புரிதல், நம்பிக்கை என்ன?
ஒழுக்கம். ஆறாவது அறிவின் படைப்பு என்று நான் கருதுகிறேன். மிருகங்களுக்கு இல்லாத ஒன்று இந்த ஆறாவது அறிவு… பெரியார் அதையே பகுத்தறிவு என்று சொன்னார். பெரியார் போன்றவர்கள் ஒழுக்கத்தை கடவுள்சக்தியின் பாற்பட்டதாக முன்வைத்திடவில்லை. கடவுள் இல்லாவிட்டாலும் பகுத்தறிவு ஒழுக்கத்தை உருவாக்கும், அதுவே மேலான ஒழுக்கம் என்றார் அவர். கடவுள்பெயரை சொல்லிக்கொண்டு ஒழுக்கமீறல்களைச் செய்வதையே பெரியார் கண்டித்தார். அடாத தன்மைகளைச் செய்வதற்கு கடவுளைத் தவறாகப் பயன்படுத்தாதே என்றுதான் பெரியார் சொன்னதாக நினைவு.
உங்கள் படைப்புகளில் நீங்கள் பாலியல் ஒழுக்கத்தை பெரிதாகப் பொருட்படுத்தவில்லை என்று ஒரு அபிப்ராயம் உள்ளதே? அதைப்பற்றி என்ன கூறுகிறீர்கள்? பாலியல் மீறல்களை நீங்கள் நியாயப்படுத்துகிறிர்களா என்ன?
பாலியல் ஒழுக்கம் என்பது முதலில் குறிப்பிட்டது போல ஒரு தடுப்புக்கல் மட்டுமே. உணர்ச்சிச் சக்கரம் உருண்டு செல்லும் மானிட உலகில் அதற்கு ஒரு தேவை உள்ளது. ஆனால் அந்த தடுப்புக்கல்லைக் கெல்லி எறிபவர்களை, அதாவது சந்தை வெளி மாந்தர்களை, எட்ட நின்று பார்த்து நயமாக எழுதிக் கட்டுவதை நான் இலக்கியத்தில் ஒரு பகுதியாகக் கொண்டிருக்கிறேன். அவர்களின் உலகம் அப்படிப்பட்டதுதான். அங்கே அந்தக் கல் இல்லை
உண்மையில் பாலியல் காரியங்கள் அனைத்துமே ‘ஒழுக்கம்’ என்ற வரைமுறைக்கு அப்பாற்பட்டவை தானே. ஒழுக்கம் கூட நாமே சுயநலமாக வகுத்துக் கொண்ட நியாயங்கள் ஆயிற்றே. ஆடை அணிந்தால் ஒழுக்கம். ‘நிர்வாணம்’ என்பது ஒழுக்கமின்மை. ஆனால் ஆடை அளியாத நிர்வாணம் மனிதனுக்கு மானசீகமாக வேண்டும்தான்… அந்த அவலம் சமூக ஆட்டங்களாக நடத்தப்படுவதை ‘இப்பிடி இருக்கிறது’ என்று, கொஞ்சம் மெல்லிய கலைப்பால் சேர்த்து குவளையில் ஊற்றிவைக்கிறேன். அவ்வளவே குற்றம் காண்பவர்கள் உண்மையில் தாகம் கொண்டவர்கள். மறைவாக அருந்திக் கொள்பவர்கள். ஆக நான் சித்திரம் வரைகிறேன் தவிர தத்தவம் உபதேசிக்க வரவில்லை.
உங்கள் கதைகளில் உங்களுக்கு மனிதர்களில் இலட்சியவாதம் (ஐடியலிசம்) மேல் அதிக நம்பிக்கை இல்லை என்று தெரியவருகிறதே?
என்ன ஐடியலிஸம்? எந்த ஒரு கோட்பாட்டையும் எந்த ஒரு மனிதனிடமும் அவனை மீறி நாம் திணிக்க முடியாது. மனிதனைப்பற்றி அப்படி உன்னதமாக ஒன்றும் சொல்லிவிடமுடியாது. சுவாரஸ்யத்திற்கு வேண்டுமானால் கதை பண்ணலாம். ’இங்கே, இப்பிடியாக’ என்பது மட்டுமே என் இலட்சியவேதம்!
ஓர் எழுத்தாளராக நீங்கள் இந்த சமூகத்திடம் எதையாவது முன்வைக்க விரும்புகிறீர்களா? அதற்காகக் கதைகளில் முயற்சி செய்வீர்களா?
கண்ட காட்சிகளை கலை நயத்தோடு சுட்டிக்காட்டிச் சொல்ல வேண்டும். அப்படியெல்லாம் செய்யாதே இப்படிச் செய், இது தான் நேர் வகிடு என்று சொல்வது ஒருவகைச் சுயநலம். கலைஞன் உபதேசியாக இருக்கவேண்டாம் என்பது என் கருத்து.
தமிழில் உங்கள் சமகால எழுத்தாளர்களில் உங்களுக்கு பிடித்த எழுத்தாளர்கள் யார் யார்? ஏன்?
எனது சமகால எழுத்தாளர்களில், நாஞ்சில் நாடன், வண்ணதாசன், வண்ணநிலவன், கி.ராஜாநாராயணன் இன்னும் சிலர் – பெயர் சட்டென்று சொல்ல வரவில்லை. மன்னிக்கவும்
இவர்களை ஏன் பிடிக்கிறதென்று எழுதிக் காட்ட சிரமம்.நான் விமர்சகன் அல்ல. எனது இலக்கிய ரசனைக்கு இவர்கள் இதமாக ஆறுதல் தருபவர்கள் என்று மட்டுமே சொல்வேன்.
கேரள அரசியலை கவனிப்பீர்களா? அதில் ஈடுபாடு உண்டா?
அரசியல்! கேரளமானாலும், தமிழகமானாலும் இந்தியர் ஆயினும் எனக்கு ஈடுபாடில்லை. எனக்கு அரசியல் பிடிக்காது.
கவிதைகளில் ஈடுபாடு உண்டா? பிடித்த கவிஞர் யார்?
புதுக்கவிதை எனக்கு உவக்கவில்லை நவீன தமிழில் பாரதி மட்டுமே கவிதை பாடியவன். மலையாளத்தில் எனக்கு குஞ்சன் நம்பியாரின் துள்ளல்பாட்டுகள் பிடிக்கும்.
இசைகேட்பீர்களா? பிடித்த இசைக் கலைஞர்கள் யார் யார்? ஏன் பிடிக்கிறது?
இசை, மென்மையாக மொழிச் சிதைவில்லாமல் கனமில்லாத இழைவில், நளினஒழுங்கில், காற்றில் தவழ்வது போல இருந்தால் பிடிக்கும். புல்லாங்குழலில் இந்த குழைவு உள்ளது. விணையின் அமர்ந்த கம்பீரம் நெஞ்சில் கனிந்து கண் நிறையும். எம்.எல்.வி. வசந்தகோகிலம், பெரிய நாயகி, எம்.எஸ், லதா மங்கேஷ்கர்- பானுமதி – வரலெட்சுமி – இசை கேட்டுக் கொண்டே இருந்துவிடமுடியும். இதையெல்லாம் மீறி, அடுக்கிக் காட்டவேண்டுமென்றால் என்னிடம் மௌன ஞானமென்னும் பதில் மட்டும்தான் – அதாவது வெறும் பாமரன்.
பிற கலைகள் எதிலாவது ஆர்வம் உண்டா?
பிற கலைகளா? – ஊஹும்…
நீங்கள் பொதுவாக எப்படிப்பட்டவர்? முன்கோபம் உண்டா? எல்லாம் சரியாக இருக்கவேண்டும் என்று அடம்பிடிக்கும் தன்மை உண்டா?
நான் எல்லாம் சரியாக இருக்கவேண்டும் என்று நினைப்பவந்தான். கோபம் உண்டு, கோபம் வெளியே வராது. வரும் கோபத்தை மறைத்து அழுத்தக்காரனாக பாசாங்காக பேசி மழுப்புவேன். மற்றவர்களை வீணாகப் பழிப்பானேன்! என்ற கையாலாகத்தனம்தான்.
உணவு ஈடுபாடு எப்படி? சைவமா அசைவமா? சமைப்பீர்களா?
அசைவமும் உண்பேன். ஆனால் சைவமே பிடித்தமானது. சமைப்பது பெரிய காரியமே அல்ல. சமைப்பதுண்டு. சரியாக செய்யாவிட்டால் ருசி பேதம் வரும். அதுவும் ஒரு ருசியென்று தின்ன முயல்வேன், அவ்வளவுதான்.
எந்த நிறம் பிடிக்கும்? உடைகளை நீங்களே தேர்வு செய்வீர்களா?
வெள்ளைநிறம். இளம் சந்தன நிற உடைகளை நான் தேர்வுசெய்வேன்..
பொருட்கள் மீது ஆர்வம். உண்டா? அதாவது ஏதாவது பொருட்களை பிரியமாக சேர்ப்பீர்களா? எந்த பொருட்கள்? என் நோக்கில் ஒரு எழுத்தாளனின் அகத்துக்குள் செல்வதற்கான வாசல்கள் இதுபோன்ற சில தகவல்கள்…
பேனாக்கள். விதவிதமாக பேனாக்களைச் சேர்க்க வேண்டுமென்ற ஆசைஉண்டு. ஆனால் சேர்த்து வைக்கக் கிடைத்ததில்லை.
கதைகளை திருப்பி எழுதுவீர்களா?
கதைகளை பலமுறைத் திருப்பி எழுதுவேன். எழுதியதையே கிழித்து எறிந்து விட்டு புதிதாகக் கதையை எழுதுவேன்.
உங்கள் கதைகளை யாராவது படித்து செம்மைப்படுத்துவது உண்டா?
அச்சாகும் முன்பு கதைகளை தேர்ந்த கரங்கள் என்று அறுதியிட்ட ஒரு சில நபர்களிடம் படிக்கத் தருவதுண்டு. அவர்களது கருத்திற்கு மரமேறாமல் சறுக்கி விடுவேன். கடைசியில் என் இடத்திற்கே வந்து நிற்பேன். இப்போ பரவாயில்லை தானே என்று கேட்பேன். அவர்களும் எப்பிடியோ போகட்டுமென்று விட்டுவிட ஆசைப்படுவேன்.
ஆரம்ப காலகட்டத்தில் புத்தகங்களைப் பதிப்பிக்க சிரமப்பட்டீர்களா? தமிழில் சிற்றிதழ்சார்ந்து எழுதுபவர்களுக்கு அந்தச் சிக்கல் அப்போதெல்லாம் பெரிதாக இருந்தது இல்லையா?
புத்தகங்களை வெளியிடவேண்டுமென நானே போய்க் கெஞ்சுவதில்லை. நானாக அச்சிட்டு பார்க்க விரும்பியதுமில்லை. ஆகவே அதிக நூல்களும் வெளிவரவில்லை. சில பதிப்பகங்கள் புத்தகங்களை அச்சிட வேண்டுமென கேட்பார்கள், கொடுப்பேன்.
விருதுகள் ஏதும் கிடைக்கவில்லை என்ற மனக்குறை உண்டா?
விருது தருவார்கள் என்றால் வாங்கிக் கொள்வதில் பேராசையே உண்டு. அதேசமயம் கிடைக்கவில்லை என்பதில் கவலையே இல்லை.
பயணங்களில் ஆர்வம் உண்டா, பிடித்தமான ஊர் எது?
பயணங்களிலும் ஊர் சுற்றுவதிலும் ஆசை அதிகமாகவே உள்ளது. ஆனால் என் வேலை வணிகம் என்பதனால் அதைவிட்டுவிட்டு அதிகம் பயணம்செய்ததில்லை. இப்போது வயோதிகம் அணுகும் தோறும் சோர்வு காரணமாக பயணங்களைத் தவிர்க்கிறேன்.
பொதுவாக ஒரு கேள்வி உடல்நலத்தைப் பேணக் கூடியவரா நீங்கள்? எழுத்தாளர்களின் இயல்பை அறிய முக்கியமான இன்னொரு ஆதாரம் இந்த விஷயம்…
உடல்நலம் சரியாக இருக்கவேண்டுமென நினைப்பதுண்டு. அதற்காக தனியாக உறவு உத்வேக மருந்து போன்றவற்றை நாடுவதில்லை. பசி வரும்போது திருப்தியாக உண்பதுதான் நான் செய்யும் உடல்நலம் பேணல்…
மொழியாக்கங்கள் பற்றி உங்கள் எண்ணம் என்ன? மொழியாகக் அனுபவங்கள் என்ன?
மொழியாக்கம் என்பது கட்டாந்தரையைப் பெயர்த்தெடுத்து விட்டு அதைவிட அழுத்தமாக செம்மையாக அடிப்படை பெயராமல் தளம் அமைப்பது போல… சும்மா மண் குவியலாக குவித்து விட்டு அந்த மாளிகை தான் இதுவென்று வர்ணப் படத்திரையிட்டுக் காட்டுவதில் பயன் இல்லை. எனது அனுபவத்தில் பி.கெ.பாலகிருஷ்ணன் எழுதிய ‘இனி நான் உறங்கட்டே’ என்ற மலையாள இதிகாச நாவலை தமிழில் அதேபோல் வடித்தெடுக்க பிரயத்தனப் பட்டதுண்டு. வெற்றிகரமாக மூலமொழியின் சுவை குறையாமல் வந்துள்ளது என்று இருமொழி அறிஞர்களும் சொன்னபோது திருப்தியாக இருந்தது. அதுபோல் மலையாளத்தில் மலையாற்றூர் ராமகிருஷ்ணன் எழுதிய ‘யட்சி’ யையும் சிரமமின்றி செய்து இருக்கிறேன். செய்யும் இருமொழிகளிலும் அழுத்தமான பிடிப்பு இருந்துவிட்டால் பெயர்ப்பில் பழுது வருவதில்லை.
நீங்கள் எழுதத் திட்டமிட்டு இன்னமும் முடியாது போன பெரும் படைப்பு ஏதேனும் உண்டா?
எழுத திட்டமிட்டு, ஏராளமான பொறிகளை மனவட்டத்தில் நிறைத்து காகிதங்களைப் பரப்பியவாறு இன்னும் காத்திருக்கும் நாவல். “இப்படியெல்லாம் இருக்கிறது.” பார்ப்போம்
இந்த நீண்ட இலக்கிய் வாழ்க்கையில் நீங்காது தித்திக்கும் நினைவு என ஏதும் உள்ளதா?
எனக்கு எப்போதுமே பிடித்த எழுத்தாளர் , பிடித்த மனிதர் தி.ஜானகிராமன் தான். எனது நாவல் கிருஷ்ணப்பருந்து பற்றி மறைந்த இலக்கிய ஆசிரியர் தி.ஜானகிராமன் அவர்கள் எழுதிய கடிதம் என் மனதில் குளிர்ந்த நினைவாக எப்போதும் இருந்துகொண்டிருக்கிறது
அந்தகடிதத்தை கொடுங்கள்…ஒரு வரலாற்று ஆவணமல்லவா?
இதுதான்:
அன்புமிக்க திரு மாதவன்,
11.3.1982
கிருஷ்ணப்பருந்தை நாலு நாட்களுக்கு முன் படித்து முடித்தேன். நான் அந்த ஒரே தடவை பார்த்த உங்களோடு குறுகிய நேரமே அலைந்து திரிந்த சாலை பஜாரையும் அதன் சுற்று வட்டாரத்தையும் ஒரு ஆவலோடு நினைவுகூரத்தூண்டிற்று. இருமரபுகள் இரு மொழிகளின் கலப்பில் பிறந்த மனிதர்கள், வாழ்க்கை, சிந்தனை முறைகள், இவற்றை அப்படியே சித்தரித்திருக்கிறீர்கள். என் போன்றவர்களுக்கு இது புதிய அனுபவம். வெறும் புறத்தை மட்டுமின்றி இந்த சங்கமத்தின் ஆழங்களை, சிரத்தையோடும் உண்மையில் ஆர்வத்தோடும் நீங்கள் எடுத்துக்காட்டியிருப்பது சும்மா புகைப்படம் போல் இல்லாமல் ஒரு கலைஞரின் தேர்வோடும் அர்த்தப்படுத்தும் திறமையோடும் பிரகாசமாக வந்திருக்கிறது. படித்து முடித்து நினைக்கும்போது, அங்கெல்லாம் மீண்டும் ஒருமுறை வந்து தங்க ஆசை எழுகிறது.
குருஸ்வாமியும் அவர் இதயமும் தான் இந்த நாவலின் கதாநாயகர்கள் என்றாலும் ஒரு நாவலின் சுற்றுப்புறம், உபநாயகர்கள், எல்லோருமே கதாநாயகர்களாகத்தான் இருக்கமுடியும். இவை இல்லாவிட்டால், ஒரு கதாநாயகன் ஓங்கி உருவாக முடியாது. அதில் உங்கள் நாவல் வெற்றி பெறுகிறது.
நீங்கள் கையாள்கிற சொல்லாக்கம், இந்தத் தமிழர்களுக்கு பிடிக்கிறதோ என்னவோ, நான் கையாண்டால் அம்மாமித்தமிழ்- பாப்பாரத்தமிழ் என்கிறார்கள். நீங்கள் கையாளும் போது திருவனந்தைத் தமிழ் என்று கட்டாயம் ஒரு தாராளமனதோடு பார்ப்பார்கள். பார்க்க வேண்டும் என்று நம்புகிறேன். இதைச் சொல்லக்காரணம் சைவ சித்தாந்த கழகத்தார். பிரதாபமுதலியார் சரித்திரத்தை தமிழாக்கம் செய்து ஒரு பதிப்பு வெளியிட்டிருப்பது தான். இது சரியா இல்லையா என்று எனக்குக் கூற திறமையில்லை. எல்லோரும் புரிந்துக் கொள்ள வேண்டுமென்று சிரத்தை இருந்தால் சரி, சொல்லலாம். ஆனால் தனித்தமிழ்தான் அழகு என்று சாதிக்கும் நோக்கமிருந்தால் அது இலக்கிய சித்ரவதை. வருங்காலத்தில் உங்கள் கிருஷ்ணப்பருந்தை இந்த மாதிரி சிறகொடித்து யாரும் தனித்தமிழ்ச் சிறகு ஒட்ட வைக்கமாட்டார்கள் என்று நம்புவோமாக, நமஸ்காரம்.
– தி. ஜானகிராமன்
இன்றளவும் ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கியப் பணி ஆற்றி வந்த எனக்கு தமிழ் இலக்கிய உலகில் இரண்டாவது அல்லாத ஒரு இடம் அமைந்துள்ளது எனும் பெருமை என் சாதனையின் சம்பளமாக எண்ணி நிறைவு பெறுகிறேன்.