சென்னை நுங்கம்பாக்க நெடுஞ்சாலையில், லேண்ட்மார்க் என்னும் பெயரில் ஒரு புத்தகக்கடை இருந்தது. உண்மையிலேயே லேண்ட்மார்க்தான். புத்தக ஆர்வலர்கள், புத்தகங்களைப் பார்வையிட்டு, திறந்து, நுகர்ந்து, புத்தகங்கள் வாங்கிச் செல்வார்கள். வார இறுதியில் அங்கே செல்வது, பலருக்குப் பெரும் பொழுதுபோக்கு. பல இயக்குநர்கள், உதவி இயக்குநர்களாக இருக்கும் போது, ஓசியில் புத்தகம் படிக்க என்றே அதில் பணிபுரிந்திருக்கிறார்கள். அந்தக் கடை மரித்து, சில வருடங்களாகின்றன. இன்று சென்னையின் பல புத்தகக்கடைகள், பொழுதுபோக்கு சாதனங்கள், சினிமா சி.டிக்கள், பரிசுப் பொருட்கள் விற்கும் கடைகளாக மாறிவிட்டன. புத்தகங்கள் ஒரு மூலையில் கிடக்கின்றன.
இணையம் என்னும் பெருவழியில், பொருளாதாரப் பரிமாற்றங்கள் துவங்கியதின் பலி, சென்னை மற்றும் மும்பையின் புத்தகச் சில்லறை நிறுவனங்கள். காரணம், இணையவழிப் பரிமாற்றம், சுலபம் மட்டுமல்ல, பொருளாதார ரீதியாகப் பயனுள்ளதும் கூட. கால மற்றும் பொருள் விரயம் தவிர்க்கப்படுவதன் காரணமாக, மிக எளிதாக நுகர்வோர் மாறிவிட்டனர்.
இந்திய வேளாண் பொருளாதாரம், மொத்தப் பொருளாதார மதிப்பில் 14% இருக்கிறது. ஆனால், கிட்டத்தட்ட 50% மக்கள் இப்பொருளாதாரத்தை நம்பி இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 22-30 சத மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள். கிட்டத்தட்ட 25 சத மக்கள் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள். எனில், 25-30 கோடி மக்கள் அதிகம் கல்வியறிவில்லாத, குறைந்த பட்ச வருமானத்துக்கு வழியில்லாதவர்கள். இது அமெரிக்க மக்கள் தொகையில் 75%.
இந்தப் பொருளாதாரம் தான் நமது முதன்மைப் பொருளாதாரம். இது பெரும்பாலும் உணவு உற்பத்தியில் இருக்கிறது. அதற்கடுத்து, சிறு தொழில்கள், கைவினைப் பொருள் பொருளாதாரம் என்னும் அடுக்கு இருக்கிறது. அதற்கடுத்தபடியாகத் தான் உற்பத்தி, கட்டுமானம், சேவை என்னும் பொருளாதாரங்கள் உள்ளன. அதிலும், கட்டுமானம் போன்ற துறைகளில் இருக்கும் தொழிலாளர்கள் பெரும்பாலும் கல்வியறிவற்றவர்களே.
ஊரக மற்றும் சிறு தொழில்களில், பொருள் மற்றும் சேவைகள் பெரும்பாலும் பண மூலமாக பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.
இந்தியப் பொருளாதாரத்தில் மொத்தத்தில் 10% மக்களே, பணமில்லாத ஒரு பரிவர்த்தனையில் ஈடுபடுகின்றனர் என்கின்றன புள்ளிவிவரங்கள். நகரப் பொருளாதாரமும், பெரும்பாலும் பணப்படிமாற்றங்களின் அடிப்படையில் இயங்குகின்றது என்பதே இதன் பொருள்.
எனில், இந்தப் பணமில்லாப் பரிமாற்றத்தின் தேவை என்ன? பொருளாதார நோக்கில், பணம் அல்லது இணயம், ஒரு பரிமாற்றத்துக்கு உபயோகப்படுத்தப் படவேண்டுமெனில், அது மிகக் குறைந்த செலவு பிடிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
எடுத்துக் காட்டாக, சென்னை போன்ற ஒரு மாநகரில், மின் கட்டணம் செலுத்த வேண்டுமெனில், பைக் அல்லது பஸ் பிடித்து, கட்டண அலுவலகம் சென்று பணம் கட்டுதலின் விலை மிக அதிகம். 5000 மதிப்புள்ள மின் கட்டணத்துக்கு, 2 மணி நேரமும், 20 ரூபாயும் பிடிக்கும். இதுவே வங்கி மூலம் செலுத்தும் போது, கட்டணமில்லாச் சேவை இருக்கிறது. ஒரு நகரத்தில் வசிக்கும், மத்தியமருக்கு இது பெரும் வரப்ரசாதம். அடுத்து, சிறு கடைகளில் பொருள் வாங்கும் போது, பணம் உபயோகிக்காமல், மொபைல் வழி வசதிகள் உள்ளன – இவற்றுக்கு 1-2% வரை சேவைக் கட்டணங்கள் இருக்கலாம் என்கிறார்கள். இப்போதைக்கு இலவசம். ஆனால், இவையிரண்டுக்கும் தேவை – தடையில்லா இணையச் சேவையும் அதற்கான அடிப்படைக் கட்டுமானமும்.
இதுவே ஒரு கிராமப் பகுதியில், நடக்கும் பரிமாற்றங்களைப் பார்ப்போம் – தினசரிக் கூலி கொடுத்தல், சிறு அங்காடிகளில் பொருட்களை வாங்குதல் போன்றவை இணையம் மூலம் மாற வேண்டுமெனில், என்னென்ன விஷயங்கள் மாற வேண்டும்?
- அடிப்படைக் கல்வி
- தடையில்லா இணையக் கட்டுமானம்
இரண்டையும் 100% கொண்டு வர எத்தனை காலம் தேவை?
மிக முக்கியமாக, ரூபாய் நோட்டைக் கொண்டு, பரிவர்த்தனைகள் செய்ய இன்று ஒரு ஊரக ஏழை மனிதர்/ஊரகத் தொழில் முனைவோர் இருவரும் செலவு செய்வதில்லை. நூறு ரூபாய் நோட்டு, நூறு ரூபாயின் மதிப்புக்கே மாற்றிக் கொள்ளப்படுகிறது. ரூபாய் நோட்டை அடிக்க மற்றும் மாற்ற செலவு செய்வது அரசு. இணையச் சேவைக் கட்டுமானம் ஊரக மக்களுக்கு இலவசமாகக் கிடைக்கப் போவதில்லை. பரிமாற்றத்துக்கும் பிற்காலத்தில் ஒரு குறைந்த பட்ச சேவைக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இந்தச் செலவை ஊரக மக்கள் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும் – இதனால் அவர்களுக்குக் கிடைக்கும் நன்மை என்ன என்னும் கேள்விக்கு ஒரு பொருளாதார ரீதியான பதில் தேவை.
இந்தப் பரிமாற்றத்தின் அடிப்படை என்னவாக இருக்க வேண்டும்? இந்தப் பரிமாற்றம் மிக அதிக பயனுள்ளதாக இருக்க வேண்டுமெனில், என்ன செய்ய வேண்டும்? 500 ரூபாய் நோட்டை அச்சடிக்க ஆகும் செலவு ரூபாய் 3. அதை நாடெங்கும் கொண்டு சேர்த்தல், மற்றும் பாதுகாத்தல் போன்ற விஷயங்களுக்கு 1 ரூபாய் என வைத்துக் கொண்டாலும், மொத்த செலவு 4 ரூபாய். ஒரு 500 ரூபாய் நோட்டு, கிழிந்து மட்கும் முன்னர், குறைந்த 10 ஆயிரம் முறைகள் உபயோகிக்கப்படுகிறது என்கிறது ஒரு புள்ளி விவரம். குறைந்தது 1000 முறை மாற்றலாம் என்பது எனது ஊகம். எனில், ஒரு மாற்றத்துக்கு ஆகும் செலவு, 0.5 பைசா. அதையும் அரசு செய்கிறது இப்போது.
கட்டணமின்றியோ அல்லது, சேவைக்காகும் செலவு, அந்தச் சேவையை உபயோகிப்பதால் வரும் நன்மையை விடக் குறைவாகவோ இல்லாத பட்சத்தில், எதற்காக ஒரு நுகர்வோர் இணையச் சேவையை உபயோகிக்க வேண்டும் என்பதும் ஒரு கேள்வி.
முதலில், ஏன் பரிமாற்றங்கள் இணையம் மூலமாக நடக்க வேண்டும்?
- பணப் பரிமாற்றத்தில், வரிகள் கட்டாமல் ஏமாற்றப்படுகின்றன. எனவே இணையப் பரிமாற்றத்தில் அவை பதியப்பட்டு, வரிகள் கட்டுவது அதிகமாகும்.
இது ஒரு முக்கியமான காரணமாகச் சொல்லப்படுகிறது. ஆனால், வருடம் 10 லட்சம் வரை தொழில் செய்யும் குறு நிறுவனங்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான பொருளியல் காரணங்கள் எளிது. பத்து லட்சம் வரை தொழில் செய்யும் ஒரு குறுந்தொழில் அதிபர் அதிகபட்சமாக 25% லாபம் பார்க்கிறார் என வைத்துக் கொண்டாலும், அது 2.5 லட்சம் – மாதம் இருபதாயிரம் ரூபாய். இதை வைத்துக் கொண்டு, விற்பனை வரி கட்டுவதோ/சேவை வரி கட்டுவதோ/கணக்கு வைத்துக் கொள்வதோ பொருளாதார ரீதியாகச் சாத்தியம் இல்லை என்பதே. இங்கே, இதைக் கட்டாயப்படுத்தினால், குறுந்தொழில்கள் மரித்தே போகும். குறும் பொருளாதாரச் செயல்பாடுகளை நிறுவனப்படுத்துதல், சாத்தியமில்லை என்பதால் இந்த விலக்கு.
இங்கேதான், கிழக்கு ஆஃப்ரிக்க நாடுகளான தான்ஸானியா மற்றும் கென்யாவிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பெரும் பாடம் உள்ளது. இங்கே நிறுவனங்களின் பில்லிங் மெஷின்கள், அரசின் வருவாய்த் துறையோடு இணைத்திருப்பது கட்டாயம். 10 லட்சத்துக்கும் அதிகமாகத் தொழில் செய்யும் நிறுவனங்கள் அனைத்தும், தனது பில்லிங் மெஷினை, அரசின் வருவாய்த்துறையோடு இணைத்திருக்க வேண்டுவது கட்டாயம் எனச் சட்டம் கொண்டு வரலாம். அந்த மெஷினை, இவ்விரு நாடுகளின் அரசுகளும் இலவசமாக வழங்குகின்றன. முதல் கட்டமாக, இதைச் செயல்படுத்தலாம். இதன் மூலம் அரசுக்குச் சேர வேண்டிய வரிகளை வசூலிப்பது மிகச் சுலபமாகும். விற்பனை வரித்துறை இதை நேரடியாகச் செய்வதை விட, பாஸ்போர்ட் துறை போல, நல்ல தனியார் துறையிடம், இச்சேவை வழங்குதலை விட்டுவிடலாம் (அதாவது பில்லிங் மிஷினை, தொழில் நிறுவனங்களோடு இணைப்பது மற்றும் செயல்படுத்துவதை மட்டும்). 10 லட்சத்துக்கும் அதிகமாகத் தோழில் செய்பவரின் கல்வித் தகுதியும், தொழில்நுட்பத்தை உள்வாங்கும் மனநிலையும் இருக்குமாதலின், இதை நிறைவேற்றுவது எளிது.
- நேர மற்றும் பரிமாற்றுச் செலவு சேமிப்பு:
- வங்கிகள் மூலமும், நிறுவனங்கள் தனது சேவைத் தளங்களின் மூலமும், பணப்பரிமாற்றங்கள் நிகழ்த்துவது, நகர மற்றும் ஊரக குடிமகன்களுக்கு மிக நன்மையளிப்பதாகும். தடையற்ற இணையச் சேவை இதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், மளிகைக் கடைகளில் / மருந்துக் கடைகளில் மொபைல் மூலமாக பண மாற்றம் செய்வது, எந்த அளவு குடிமகன்களுக்குப் பயனளிக்கும் எனத் தெரியவில்லை.
50000 ஆயிரத்துக்கு மேல் பணப் பரிமாற்றம் வங்கிகளில் செய்ய வேண்டுமெனில், வருமான வரி எண் கட்டாயமாக்கப் பட்டிருக்கிறது. 3 லட்சத்துக்கு மேல் பரிமாறப்படும் எல்லாப் பரிமாற்றங்களும் ஏற்கனவே வங்கிகளால், வருமான வரித்துறையுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. இது போன்ற பரிமாற்றங்கள் பற்றிய தகவல் களஞ்சியம் அரசின் கைகளில் உள்ளது. தேவையெல்லாம், கோடிக்கணக்கான அந்தத் தகவல்களைச் சலித்து, அதில் வரி ஏய்ப்புப் பரிமாற்றங்களை அடையாளம் காணுவதும், அவற்றை நூல் பிடித்து, வரி ஏய்ப்பவர்களைப் பிடிப்பதும் தான்.
இன்று வரி ஏய்ப்பவர்களைப் பிடிக்காமல் இருப்பதன் முக்கியக் காரணம் – அவர்கள் பற்றிய தகவல்கள் இல்லாமல் அல்ல. அத்தகவல்களை முன்னெடுத்து, குற்றவாளிகளைப் பிடிக்க வேண்டிய நிறுவனத்தில் உள்ள குறைபாடுகள். விற்பனை வரி மற்றும் வருமான வரி அலுவலகங்கள் மிகப் பெரும் ஊழல் நிறுவனங்கள். இவற்றுக்கான சரியான தலைமை, தொழில் நுட்பம், தகவல் தொடர்பு – இம்மூன்றையும் இணைத்து, ஒரு நேர்மையான நிர்வாகத்தைத் தந்தாலே இந்தியாவின் வரி ஏய்ப்பு பெருமளவில் குறைந்து விடும். இதுதான், ஊழலை ஒழிக்கும் கொள்கையை முன்வைத்திருக்கும் மோதி அரசு செய்ய வேண்டியது. இதில் விற்பனை வரி, மாநிலங்களின் அதிகாரத்தில் வருவதெனினும், ஜி.எஸ்.டிக்குப் பின், இது மத்திய அரசின் கீழும் வரும்.
இப்பரிமாற்றங்களில், இறுதி மைல் தொடர்பு என்னும் ஒரு பதம் உண்டு. நாட்டின் கஜானாவில் இருந்து, அலுவலகம் மூலமாகவோ / தொழில் மூலமாகவோ, பணம், மின் அணுப்பரிமாற்றம் மூலம் தனி நபரை அடையலாம். அங்கிருந்து, அவரும், சில பரிமாற்றங்களை, மின் அணுப்பரிமாற்றம் மூலம் செய்யலாம். ஆனாலும், தன் சொந்தச் செலவுகளுக்காக, அத்தனி நபர் இன்றும், பணத்தைத் தான் பெரும்பாலும் உபயோகிக்கிறார். தொழில்நுட்ப உலகின் தலையாய நாடான அமெரிக்காவில், இன்றும் 45% பரிமாற்றங்கள் பணம் மூலமாக நடக்கின்றன என ப்ளூம்பெர்க் என்னும் நிறுவனத்தின் புள்ளி விவரங்களை ப.சிதம்பரம் மேற்கோள் காட்டிச் சொல்கிறார்.
எனவே செய்ய வேண்டியது பணமில்லாப் பொருளாதார நடவடிக்கைகள் அல்ல. அவை ஊழலை ஒழிக்க அதிகம் உதவாது. வலுக்கட்டாயமாக அது திணிக்கப்பட்டால், அது மேலும், பொருளாதாரத் தட்டின் கீழ் நிலையில் உள்ள, நோட்டுப் பொருளாதார மக்களையே அதிகம் பாதிக்கும். ஏற்கனவே நிகழ்ந்துள்ள பணப்பரிமாற்றம் கொணர்ந்த எதிர்மறை விளைவுகளை இது அதிகரிக்கவே செய்யும்.
இன்று தொழில்களை அதிகம் பாதிப்பவை, வருமான வரி, உள்ளூர் நுழைவு வரி, விற்பனை வரி போன்றவைகளை வசூலிப்பதில் உள்ள ஊழல். இவற்றைத் தொழில்நுட்பம் கொண்டும், மேம்பட்ட நிர்வாக முறைகள் கொண்டும் நிர்வகிக்க முற்பட வேண்டும்.
இன்று, வேளாண்மை மற்றும் தொழில் செய்பவர்களுக்கு, வேளாண் வருமானத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இதனால் தான், சில ஏக்கர் திராட்சை விவசாயிகள் (ஜெயலலிதா / சுப்ரியா சூலே) போன்றவர்கள் ஏக்கருக்கு கோடிக்கணக்கில் வருமானம் ஈட்ட முடிகிறது. இத்திட்டம் பெரும் ஓட்டை. இவ்வாறு இரு தொழில் செய்பவர்களின் வேளாண்மை வருமானமும் வரிக்குட்படுத்தப் பட வேண்டும். நிதி மோசடி செய்பவர்களின் தண்டனைக்காலம் ஏழாண்டுகள் மட்டுமே. அவை 14 ஆண்டுகளாக மாற்றப்பட வேண்டும். லஞ்ச ஊழல் ஒழிப்புச் சட்டம் மீண்டும் சீர்திருத்தப்பட்டு, ஊழல் குற்றச் சாட்டில் மாட்டும் அதிகாரிகள் மீது, சர்ஜிகல் ஸ்டரைக் நடத்த, சி.பி.ஐ / விஜிலன்ஸ் நிறுவனங்களுக்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும். இன்று நாடெங்கும் நடத்தப்படும் ரெய்டுகள், அரசியல் பாரபட்சமின்றி அனைத்து மாநிலங்களிலும் நடத்தப்பட வேண்டும். இன்னும் 2 ஆண்டுகள் உள்ளன. அனைத்து சாத்தியங்களும், மெஜாரிட்டி அரசின் தலைவரான மோதியின் கைகளில் உள்ளன என்பதுதான் நிஜம். செய்வாரா என்பது கோடிப்பொன் பெரும் கேள்வி!
பாலா
***