விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள்- 6

IMG_8351

அன்பிற்கினிய ஜெ சார்

கிட்டத்தட்ட இந்த வருடத்தையே எனக்கு இனிப்பாக்கியுள்ளீர்கள். என்னால் முழுவதுமாக ஈடுபட முடியாவிட்டாலும் இன்று வரை வாசிக்கவும் எழுதவுமே எப்போதும் விரும்பியிருக்கிறேன். இந்த வருடத்தில் நான்கு நாட்களை தங்களுக்கு அருகில் வாழ்ந்திருக்கிறேன். எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் இந்த நான்கு நாட்கள்தான் என் வாழ்வின் திசைகளை, இலக்குகளை தீர்மானிக்கும்.

பெரும்பாலும் ஆளுமைகள் பேசும்போது என்னை நான் ஊமையாக்கி கொள்வேன். படைப்பாளிகளிடம் பேச வாசகர்கள் போட்டி போட்டதை பார்த்து நான் மேலும் ஊமையாகிப்போனேன். இரா.முருகன், ஹெச். எஸ்.சிவப்பிரகாஷ், பாவண்ணன் அவர்களிடமெல்லாம் கேட்க என்னிடம் சில கேள்விகள் இருந்தன. கேட்கவே இல்லை. பதில் கண்டிப்பாக கிடைக்கும் கேட்காமல் போனாலும். அது போல் நிறைய பதில்கள் எனக்கு கிடைத்திருக்கின்றன.

ஒரு நாவலிலோ, சிறுகதையிலோ வரும் கதா பாத்திரங்களை எழுதுகையில், எழுதுவோரின் மனதில் ஒரு உருவம் கண்டிப்பாக இருக்கும். எழுத்தில் நாம் அதை வாசிக்கும் போது அந்த கதா பாத்திரத்திற்கு ஒரு குறியீட்டு தன்மை வந்துவிடும். அந்த குறியீட்டுத்தன்மை வந்துவிடுகையில் அக்கதாபாத்திரம் ஒரு கோட்பாட்டுக்கே பிரதிநிதியாகிவிடும். அதுதான் பெரும்பாலும் படைப்பாளிகளின் நோக்கம் என்பது என் எண்ணம்.

வாசகன், படைப்பாளியின் சித்தரிப்பு கொண்டு தனக்குள் ஒரு சித்திரத்தை வரைகையிலேயே அது சாத்தியம். வாசகன் ஒரு நாவலையோ, சிறுகதையையோ அந்த படைப்பாளியின் அனுபவம் மட்டுமே என்று கருதி அவ்வனுபவம் குறித்த கேள்விகளை கேட்பது அவ்வளவு சரியென்று தோன்றவில்லை. எழுதுபவருக்குத்தான் அது அவசியம். வாசிப்பனுக்கல்ல. நிறைய கேள்விகள் அவ்வாறிருந்தன.

எழுத்து என்பது எழுதுபவரின் அனுபவங்களை கிரகித்து கொண்டு தாளில் எழுதுவதல்ல. தன் கதாபாத்திரங்கள், சித்தரிப்புகள் வாயிலாக வாசிப்பவனின் மனதுள் எழுதுவதுதான் படைப்பாளியின் நோக்கம் என்பது என் கருத்து. தவறெனின் அறிவுறுத்தவும்.

திரு.அரங்கசாமி, ராஜகோபால், விஜயசூரியன், மீனாம்பிகை, செல்வேந்திரன், சுகா மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் யாவருக்கும் என் இதயப்பூர்வ நன்றிகள்.

நாஞ்சில்நாடன்,எஸ்.ஹெச் சிவப்பிரகாஷ், பவா.செல்லத்துரை மற்றும் தங்களின் பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுகிறேன்.

அன்பன்

அ மலைச்சாமி

அன்புள்ள ஜெ

விஷ்ணுபுரம் விழா அற்புதமான ஒரு நிகழ்வாக அமைந்தது. ஒவ்வொரு நிகழ்ச்சியும் நுணுக்கமாக முன்னாடியே பார்த்துப் பார்த்துச் செய்யப்பட்டிருந்தது. உணவு இருப்பிட விஷயங்களில் உள்ளச் சிக்கல் என்னவென்று எனக்குத்தெரியும். நானும் நிகழ்ச்சிகளை அமைப்பவன். எத்தனைபேர் வருவார்கள் என்று தெரியாமல் ஒரு நிகழ்ச்சியை அமைப்பது மிகப்பெரிய சிக்கல். பணம் நிறைய வீணாகும். ஆனால் அனைத்தும் மிகச்சரியாக ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தன.

சில விஷயங்களைச் சுட்டிக்காட்டலாம்.

1 இன்னும் கொஞ்சம் கூடுதலாக டீ ஏற்பாடு செய்யப்பட்டிருக்கலாம். பலருக்கு டீ ரொம்ப முக்கியம்.

2. கழிப்பறை அருகே இல்லை எழுந்துசென்று திரும்பிவந்தால் நாற்காலி பறிபோய்விட்டது

3. கேள்விகளை கேட்க கொஞ்சம் தயங்குபவர்களையும் கேட்டு கேள்விகேட்க வைத்திருக்கலாம். ஒருவரே அதிகமும் கேள்விகேட்க விட்டிருக்கவேண்டம்

மற்றபடி நினைத்து நினைத்து ஏங்கவைக்கும் அனுபவம்

அமர்நாத்

அன்புள்ள ஜெ,

விழா மிகச் சிறப்பாக நடந்தேறியதை புகைபடங்கள் மூலமும் நண்பர்கள் வழியாகவும் அறிய முடிகிறது.  பலமுறை திட்டமிட்டும் இந்த வருடம் கடைசிகட்ட வேலைபளுவினால், கலந்துகொள்ளமுடியாமல் போய்விட்டது. எனது இனிய ஆசிரியர்களில் ஒருவரான வண்ணதாசனுக்கு விருது வழங்கபடும்போது கலந்துகொள்ளமுடியாமல் போனது குறையாகவே உள்ளது.

இருப்பினும் நேற்றிரவே ஸ்ருதி தொலைகாட்சியின் வழியாக வண்ணதாசனின் உரை, மற்றும் உங்களது உரை என தொடர்ந்து பார்த்தேன். பத்து நிமிடத்தில் மிகச்சரியான உவமை மூலம் மையத்தை தொட்டுகாட்டி விடைபெறும் உங்களது விஷ்ணுபுரம் விழா உரைகள் ஒரு அற்புதம் ஜெ. மூங்கிலிருந்து கிளம்பும் மின்மினிபூச்சிகள், கொலைசோறு என தொடர்ந்து இது ஒவ்வொரு வருடமும் இது நிகழ்வதை கண்டு வியக்கிறேன்.

வண்ணதாசன் நெகிழ்ந்திருந்ததை காண முடிந்தது. விழா ஏற்பாடு துல்லியம் என நண்பர்கள் பலரும் வியப்பதை கண்டு மகிழ்கிறேன். மிகப்பெரிய இலக்கிய நிகழ்வாக, பெருமைபடும் வண்ணம் இது ஒவ்வொரு வருடமும் வளர்வதும், மேலும் மேலும் புதிய நண்பர்கள் ஆர்வத்துடன் கலந்துகொள்வதும், இந்த நிகழ்ச்சிக்கான மிகப்பெரிய தேவை இங்கிருந்ததையே காட்டுகிறது.

நண்பர்கள் அனைவருக்கும் இனிய நன்றி.

அன்புடன்

டோக்கியோ செந்தில்குமார்

அன்புள்ள ஜெ

விழா மிகச்சிறப்பு. பலருடைய பங்களிப்புடன் மிகச்சிறப்பான ஒத்திசைவுடன் நடந்து முடிந்தது. 13  மணிநேரம் உற்சாகமாக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதெல்லாம் என் வயதினருக்கு இப்படியெல்லாம் சாத்தியமா என்றே நினைக்கவைத்தது

அதிலும் இலக்கியவினாடிவினா ஒரு பெரியநிகழ்ச்சி. எனக்கு திகிலாக இருந்தது. என் ஆதர்சமான லா.ச.ரா, ஜானகிராமன் பற்றியெல்லாம் இன்றுள்ள பையன்கள் சட் சட் என கேள்விக்குப்பதில் சொல்லி அசத்தியபோது வாயடைந்துபோனேன். இலக்கியம் வாழும் என நினைத்தேன்

ராஜசேகரன்

அன்புள்ள ஜெமோ

வாழ்த்துக்கள்.

மகத்தான விழா. மிகச்சிறப்பான ஒருங்கிணைப்பு. உறுதியகாச் சொல்கிறேன். எச்.எஸ்.சிவப்பிரகாஷ் சொன்னதுபோல இதுபோல ஒரு வாசகர் திருவிழா இந்தியாவில் எங்கும் இல்லை. உலகளவில் வாசகர்களே எடுக்கும் விழா எங்கே உள்ளது என்று கேட்டுத்தான் அறியவேண்டும்

அடுத்தாண்டு முதல் ஓர் இந்தியமொழி எழுத்தாளருக்கும் விருது என்று சொன்னார்கள். அது நிகழ்ந்தால் மேலும் சிறப்பு

எஸ்.செந்தில்

 

புகைப்படங்கள் இரண்டாம் நாள்

புகைப்படங்கள் இரண்டாம்நாள்

புகைப்படங்கள் முதல் நாள்

புகைப்படங்கள் முதல்நாள்

 

=======================================

 

 

 

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழா, சுப்ரபாரதிமணியன் பேச்சு
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் -7