விஷ்ணுபுரம் விருதுவிழா, சுப்ரபாரதிமணியன் பேச்சு

ttt

 

 

 

கலை என்பது பிரச்சனையை சுற்றி எழுப்பப்படும் புனைவே” என்ற  சார்த்தரின் வாசகம் கடந்த சில நாட்களாய் என்னைத் தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறது.

 

இன்றைய மனிதனின் மனசாட்சி குறித்தப் பிரச்சினைகளை எழுத்தாளன் தான் ஊடுருவிப்பார்க்கவேண்டியிருக்கிறது. அறிவியலும் தொழில்நுட்பமும் பணமாற்றங்களும்  மனிதனின் முன்னேற்றத்திற்கானதல்லாமல் சுய சிதைவை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது என்பதை என் சொந்த ஊரின் மக்களின் வாழ்க்கை திரும்பத் திரும்ப உணர்த்திக் கொண்டே இருக்கிறது. . அந்தச் சிதைவு தரும் கண்ணோட்டம் அபத்தம் சூன்யம் என்று வாழ்க்கை பற்றி வழக்கமான சொற்களாலேயே இறுதியில் புரிந்து கொள்ளப்படுகிறது. கடவுள் இருக்கிற உலகு என்று இதை  பெரும்பான்மையான உழைக்கும் மனிதனும் நம்புகிறான்.

நிச்சயமற்றதான வாழ்வில் மனிதனின் இருத்தலுக்கு இருக்கும் ஏதோ அர்த்தத்தை சின்ன வட்டங்களுக்கும் அடைத்துக் கொள்கிறான்.எந்த வித அர்த்தமும் இல்லாத உலகில்  கடவுள் பற்றின கருத்துக்கள் கொஞ்சம் பிடிமானதாய் தற்காலிகமாய் இருக்கிறது கொஞ்ச காலம்.சமூகத்தையும்  ம்னிதனையும் மாற்றி அமைக்க்க் கூடிய தத்துவ விசாரங்களோ  அறிவியல் தேடல்களோ பாடத்திட்டத்தோடு நின்று விடுகின்றன அந்தப்பாடத்திட்டங்களுக்கு கூட கட்டுப்பாடு என்பது போல் குழந்தைகளை குழந்தைத் தொழிலாளி ஆக்கிவிடுகிறோம் எங்கள் ஊரில். .எந்த உலகம் மனிதனின் வாழ்க்கைக்கு ஆதாரமாக உள்ளதோ அது அவனிடமிருந்து உழைப்பிலும் வாழ்வதிலும் அந்நியப்பட்டு நிற்கிறது. அர்த்தமற்ற உலகம். அர்த்தத்தைத் தேடும் மனித மனம் தடுமாறிக்கொண்டே இருக்கிறது.இந்தத் தடுமாற்றம்தான்  ஒரே ஒரு தீவிரமானப் பிரச்சினை தற்கொலையில் சென்று முடிவதுதான் வாழக்கையில் ஏதோ கணத்தில்  நம்புகிறான். அந்த தற்கொலைக்குமுன்பாக கொஞ்சம் வாழ்ந்து பார்க்கிற ஆசையில் நாட்களைக் கடத்துகிறன்.

 

 

மனிதனின் மனதை  நிரப்புவதற்கு   ஏதோ மலை உச்சியை அடைகிற பிரயத்தனத்தில் ஈடுபடுகிறான். அந்த மலை உச்சிக்கு காவடி எடுத்துக் கொண்டு போகிறான். அங்கு போகையில் தீர்த்த செம்புகள், அலங்காரங்கள் அவன் எடுத்துச் செல்லும் காவடியை கனமாக்குகின்றன.கீழே இறங்கும் போது தீர்த்த கலசங்களில் இருந்த தண்ணீர் இல்லாமல் இருக்கிறது. ஆனால் அலங்காரங்கள். , விபூதி, பஞ்சாமிர்தம் என்று எடை குறைவதில்லை.மகிழ்ச்சியுடன் இருப்பதாக தனக்குத்தானே  கற்பனை செய்து கொள்கிறான். குசிப்படுத்திக் கொள்கிறான்.அதற்குத்தான்  கெடாவெட்டுகளும், கிரகப்பிரவேசங்களும், கருமாதி முற்றங்களும் இருக்கவே செய்கின்றன. புலனின்பங்களில்   கிடைக்கும் ஆனந்தம் பெரிய  ஆறுதலாகிறது. யதார்த்த உலகின் மீது காட்டப்படும் அலட்சியம் அவனை உறுத்துவதேயில்லை. ஆனால் உயிர்த்தெழுதுவிடலாம் என்ற நப்பாசை இருந்து கொண்டே இருக்கிறது.  கல் நெஞ்சம் சாதாரணமாகவே உருவாகி விடுகிறது .  சகமனிதர்களைப் பற்றிய  அனுதாபம் கூட இருப்பதில்லை.கடவுள் குறித்த அனுதாபம் இருக்கும் அளவுக்குக் கூட…. யதார்த்தத்தின் உண்மை அவன் தனக்குள்ளாகவே  வாழ்ந்து கொண்டிருப்பதைச் சொல்கிறது. இறந்து போகிறவர்களின் கதையை ஒவ்வொருவரும் எழுதிக் கொண்டேயிருக்கிறார்கள்.  அவனின் வார்த்தைகளை யாரோ இட்டு நிரப்பிக் கொள்கிறார்கள். அந்த வார்த்தைகள் சாதாரண மனிதனின் வார்த்தைகள்.

அழுக்கடைந்த சிறு நதிகளின் பரப்புகளுக்கு இடையே கொலைகளாலும் துக்கங்களாலும் தன்னை நிறுத்திக் கொள்கிறான.  தேவதூதர்களும் கடவுள்களும் சாத்தான்களும் மதுப்போத்தல்களும் கொஞ்சம் அபூர்வமாய் புத்தகங்களும் கடைசிப்புழுக்கள் தின்ன யாரின் பின்னாலோ அணிவகுத்து நிற்கிறான். விசாரணை என்பதெல்லாம் இல்லை. அதற்கான நிதானமான மொழி என்று எதுவும் இல்லை என்பதும் தெளிவாகிறது.மொழி இழந்த்து போல் இயந்திரங்களுடன் உரையாடிக் கொண்டே இருக்கிறான். வார இறுதியில் சம்பளப் பணத்துடன்  அதிகமாகவே உரையாடுகிறான். நேசம் கொள்கிறான். வருடம் ஒருதரம் போனஸ்.( அதுவும் பீஸ் ரேட், தினசரி கூலி என்றாகி விட்ட99 சதம் தொழிலாளிக்கு வெறும்  பிஸ்கட்) என்பதெல்லாம் அவனின் கனவுக்குள்தான் இருக்கிறது.

 

ஆன்மீக ஆறுதல் தர நிரம்பப்பேர் தென்படுகிறார்கள் ஒரு சூரியனைப்போல் சுற்றிதிரிகிறார்கள். கடவுளின் இருப்பு பற்றி கேள்வி எழுப்புகிறவர்களின் குரல் உரக்க இல்லாமல் போகிறபடியாகிறது . ஒழுங்கமைக்கப்பட்ட பயணத்திற்கு கூட கடவுள் வருவார் என்றே சில சமயங்களில் நம்பி நடக்கிறான்.சுதந்திரத்தின் பொருளை அற்ப போதைக்குள்ளும் தள்ளாடல்களுக்குள்ளும் மலை ஏறுவதிலும் மலைப்பிரசங்கத்திலும் கண்டடைகிறான். .   ஒப்புதல் வாக்குமூலம் என்ற் ஒன்று நிரந்தரமாக்க் கல்லில் பொதிக்கப்பட்டே இருக்கிறது,

 

மனிதர்கள் தங்களுக்குள் புதைத்து வைத்திருப்பதை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் பணியை மேற்கொண்டபோது, அது மிகவும் கடின மானது என்று நினைத்தேன்; மனிதர் யாரும் தங்களுடைய ரகசியத்தைக் காப்பாற்றும் திறனற்றவர்கள். ஒருவனுடைய உதடுகள் பேசாவிட்டாலும், தன் விரல் நுனிகளைக் கொண்டு வாயடிக்கிறான்; அவனுடைய ஒவ்வொரு சிறு துளையிலிருந்தும் ஏமாற்றுதல் கசிகிறதுஎன்று யாரோ சொன்னது ஞாபகம் வருகிறது..அந்தக்கசிவை கொஞ்சம் கதைகளாய் நான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.15 நாவல்களும் 200 கதைகளும் 52 புத்தகங்களும் என்று அவை என் முன் நின்று எனக்கே ஆச்சர்யம் தந்தாலும் என் நகரத்தில்  சாதாரண தொழிலாளி வார சம்பளத்தை மனதில் கொண்டு செயல்படுவதைப் போல கூட இல்லாமல்  எந்த நப்பாசையுமின்றி   தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.

 விஷ்ணுபுரம் வாசகர் வட்டம்  சுப்ரபாரதிமணியன் கருத்தரங்கில் பேசியது.

 

சுப்ரபாரதிமணியன் வலைத்தளம்

முந்தைய கட்டுரை’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 70
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள்- 6