திராவிட இயக்கத்தில் இருந்து நவீனத்துவம் வரை…ஆ.மாதவன் பேட்டி 2


திராவிட இயக்கத்தின் அறிவுப்புலத்தில் உருவானவர் நீங்கள்…அந்த தாக்கம் உங்கள் எழுத்தில் எந்தவகையில் நீடிக்கிறது?

நான் எழுதும் நடை என்பது முதலில் திராவிட இயக்கத்தில் இருந்து ஊக்கம் பெற்றுக்கொண்டதே. அந்த இயக்கத்தின் மொழிநடையின் சிறந்த அம்சங்களை மட்டுமே நான் எடுத்துக்கொண்டேன். திராவிட இயக்க அழகுத் தமிழ் வீச்சும், லா.ச.ராமமிருதம், தி. ஜானகிராமன், புதுமைப்பித்தன் போன்றவர்களது இலக்கிய நடையழகும்சேர்ந்ததொரு தத்துவமயக்க எழுத்து நடை எனது ஆரம்பகாலக் கதைகளில் பாலில் தண்ணீர் கலப்பு போல வந்தமைந்திருந்தது. உதாரணத்திற்கு, ‘பாம்பு உறங்கும் பாற்கடல்’, “நான்” மோகபல்லவி இன்னும் பலகதைகளைச் சொல்லலாம். அந்த சிறப்பே திராவிட பத்திரிகைகள் என்னை முன்வைத்துக் காட்ட காரணமாக இருந்தது. ஆனால் என் எழுத்து சுதந்திரமான ஓட்டம் கொண்டது.முதல் தொகுதி எப்போது வெளிவந்தது?

சென்னை கலைஞன் பதிப்பகம் வெளியிட்ட எனது முதல் புத்தகம், “மோகபல்லவி” 1974ல் வெளிவந்தது. அடுத்த நூல் ‘காமினிமூலம்’ இதை அடுத்தவருடமே அவர்கள் வெளியிட்டார்கள். இத்தொகுப்புகளின் கதைகளில் மேற்கூறிய நடையை காணலாம்.


தமிழிலக்கிய வெளியில் நீங்கள் பரவலாக அறியப்பட்டீர்களா? இலக்கியத்தொடர்புகள் எப்படி?

திராவிட இயக்கத்தில் இருந்து உருவான எழுத்தாளனாக என்னை பலர் அறிந்திருந்தார்கள். எழுபதுகளில் பரவலாக தமிழகத்து எழுத்தாள நண்பர்களின் தொடர்பு வளர்ந்து வந்தது. இதில் முக்கியமாகச் சொல்லவேண்டியவர் இன்று நம்மிடையே இல்லாத ஜி.எம்.எல். பிரகாஷ். பிறகு எம். சிவசுப்ரமணியம் [எம்.எஸ்], தென்றல் பத்திரிகையின் ப.புகழேந்தி, முரசொலி இதழின் கயல் தினகரன், கண்ணதாசன் இதழின் இராம கண்ப்பன், திருவனந்தபுரம் இளஞ்சேரன் [மலையால குங்குமம் இதழின் ஆசிரியராக இருந்தார்] போன்றவர்கள்.

கவிஞர் கண்ணதாசன் தென்றல் ஆரம்பித்தபோது தென்றலின் இரண்டாவது இதழிலேயே, எனது கட்டுரை வடிவகதையான ’உனக்கும் எனக்கும் உறவுகாட்டி’ யை வெளியிட்டு சிறப்பித்தது. பின்னர் நான் சென்னை போயிருந்தபோது கவிஞரை அவரது வீட்டில் சந்தித்தேன். எனது இலக்கிய நண்பர் ஆ.மாதவனுக்கு என்று கையெழுத்திட்டு அவரது; ‘ஆட்டனத்தி ஆதிமந்தி’ ‘வனவாசம்’ போன்ற நூற்களை பெருமையுடன் எனக்கு அளித்தார்.


எப்படி திராவிட இயக்கத்தின் சமூகசீர்திருத்த நோக்குள்ள படைப்புகளில் இருந்து நவீன இலக்கியத்தின் யதார்த்தவாத எழுத்துக்கு வந்தீர்கள்?

1966ல் திருவனந்தபுரம் சாலையிலுள்ள எனது வாடகை வீட்டில், கன்னியாகுமரி கொட்டாரத்திலுள்ள கோவிந்தபிள்ளை மகள், சாந்தா என்ற சூரியகுமாரிக்கும் எனக்கும் எனது 32 ஆவது வயதில் திருமணம் நடந்தது. எளிய முறையிலான, புரோகிதன் இல்லாது மங்கல்யம் அணிவித்தது மாலைகள் மாற்றிக்கொண்ட திருமணம். உறவு வழி தாத்தா ஒருவர் திருமந்திரம் பாடினார். நண்பர்கள், திருந்திய திருமணம் என்று வாழ்த்துக் கூறினார்கள்.

மணநாள் அன்று மாலையில், கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்று நடந்ததில், நண்பர்கள் சுந்தரராமசாமி, கிருஷ்ணன் நம்பி, எம்.எஸ் என்ற எம்.சிவசுப்பிரமணியன், இரா இளஞ்சேரன், கே.முருகேசன், ஜி.எம்.எல். பிரகாஷ், வை. நாறும்பூநாதன், நீல. பத்மநாபன், நகுலன், ஹெப்ஸிபா யேசுதாஸன் தம்பதியர், ப.புகழேந்தி இப்படியாக நண்பர்கள் குழுமியிருந்த போது சுந்தரராமசாமிதான் ஆரம்பித்தார். “மாதவன், திராவிட இயக்க பத்திரிகைகளில் எழுதுகிறீர்கள். உங்கள் எழுத்துக்கள் அவர்களது அரசியல் வாதங்களையோ கொள்கைகளையோ தொடுவதாகவும் தெரியவில்லை. அப்படியானால் நீங்கள்ஏன், ‘தாமரை’ ‘தீபம்’ போன்ற பத்திரிகைகளில் இன்றும் கொஞ்சம் யதார்த்த முனைப்புடன் எழுதக்கூடாது? மலையாள இலக்கியப் பரிச்சயம் எல்லாம் கூட உள்ள உங்களுக்கு அப்படி யதார்த்த ரீதியில் எழுத வராதோ”

அவர் அன்று கொஞ்சம் நையாண்டி போல சிரித்தபோது என்னில் அடங்கியிருந்த தன்மானத் தெளிவு சிலிர்த்துக் கொண்டது. “நீங்கள் எல்லாம் எழுதும் யதார்த்தமென்ற இலக்கிய பாணி எனக்கு மிகமிக எளிதான காரியம், இன்று, என் மணநாளில் உங்கள் கேள்வியை ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டு, எழுதிக் காட்டுகிறேன்”, என்று நானும் வெளிப்படையாய் சிரித்தேன்.

1965 தமழ்ப் புத்தாண்டன்று நா. பார்த்தசாரதியின் ஆசிரியர் பொறுப்பில் துவங்கப்பெற்று, புதியதோர் இலக்கியப் பயணமாக வெளிவந்து கொண்டிருந்தது. ‘தீபம்’ இலக்கிய மாத இதழ். ஆனந்த விகடன், கல்வி போன்ற பிரபல சஞ்சிகை, உலகப் போக்கை மீறி, சுதேசமித்ரன் புதிய பாணியில் வந்துக் கொண்டிருந்த காலம். ‘கண்ணதாசன்’ ‘முல்லை’ முத்தாரம்’ பத்திரிகைகள் கூட புதிய யதார்த்த உலகை தொட்டும் தொடாமலும் கதைகள் வெளியிட்டு வந்த நாட்களில்தான் ‘தீபம்’ புதிய ஒளியேற்ற வந்திருந்ததை அறிந்திருந்தேன்.

சுந்தரராமசாமியின் சவாலை ஏற்று தீபத்தில் நான் எழுதியமுதல் கதை ‘பாச்சி’. தெருவில் குற்றுயிராய் கிடந்த நாய்க்குட்டி ஒன்றினை எடுத்து வந்து செல்லக்குட்டியாக அதனை வளர்த்துப் பராமரித்த சுமட்டுத் தொழிலாளி, ஒருவனின் பங்கப்பாடுகொண்ட மனநிலையைக் காட்டும் கதை. இங்குள்ள சாலைக்கடைத் தெருவின் சூழல், மலையாளம் கலந்த வட்டார தமிழ் உரையாடல்கள் சுற்றுச்சார்பு பரிமாற்றங்களுடன் நுணுக்கமாக எழுதப்பட்ட கதை அது.

“தீபத்தில், ‘பாச்சி’ படித்தேன் ஓடோடிவந்து உங்கள் முதுகில் தட்டித்தரவேண்டுமென்பது போல் இருக்கிறது, பேஷ் நல்ல படப்பிடிப்பு” என்று சுந்தரராமசாமியுடன் கிருஷ்ணன் நம்பியும் சேர்ந்து கடிதம் எழுதியிருந்தார்கள். ஆசிரியர் நா.பா. கதையைப் பாராட்டியதுடன் இருபது ரூபாய் சன்மானத் தொகையையும் அனுப்பியிருந்தார் (தமிழ் இலக்கியப் பத்திரிகை நடத்துபவர்கள் சன்மானம் தருவது என்பது அபூர்வமான காரியம்)


ஆம், இப்போதும் தமிழின் மிகச்சிறந்த இயல்புவாதக் கதைகளில் ஒன்றாக இருக்கிறது பாச்சி… வணிக எழுத்து ஓங்கி இருந்த காலகட்டத்தில் எழுத ஆரம்பித்தவர் நீங்கள். உங்களுக்கு தீவிர எழுத்துமேல் எப்படி அபிமானம் ஏற்பட்டது? வணிக எழுத்தாளராக வெற்றிபெறவேண்டும் என்ற ஆசை இருக்கவில்லையா?

யதார்த்த வாதம் என்ற உண்மைத் தேட்டம் எனக்குப் பிடிக்கும் காரணம். மலையாள இலக்கிய சிருஷ்டிகள் ஆரம்பத்தில் என்னைக் கவர்ந்தன. ‘தகழி உறுபு’ ‘பொற்றைக்காடு’ போன்றவர்களிடமிருந்து தத்திதத்தி தமிழுக்கு வந்தபோது – புதுமைப்பித்தன், ரகுநாதன், அழகிரிசாமி இவர்கள்தான் மகோன்னதர்களாக மனமேறி நின்றனர். லஷ்மி, தேவன் போன்ற ஆனந்தவிகடக்காரர்கள் நேரம் போக்கிற்கான எழுத்தாளர்களாக அன்றைக்கே வழிமாறித் தோன்றினர். அன்றைய திராவிட இயக்கம் என்ற முற்போக்கு அரசியல் வீச்சின் தாக்கம் கூட எனது படைப்பின் பாதை கேளிக்கை சார்ந்து செல்லாமல் யதார்த்தமானதாக இருக்க உதவியது. இலட்சியத்துக்காகவும்ச் அமூக சீர்திருத்த நோக்கத்துக்காகவும் எழுத வேண்டும் என்ற உந்துதலை திராவிட இயக்கம் அளித்தது. ஆகவேதான் நான் வணிக எழுத்துக்குச் செல்லவில்லை. அந்த தருணத்தில்தான் சுந்தர ராமசாமியின் அறைகூவல்..

 

வணிக எழுத்தில் நட்சத்திரங்களாக இருந்த கல்வி, அகிலன், நா.பார்த்தசாரதி பற்றி உங்கள் கருத்து என்ன?

கல்கி, நா.பா. அகிலன் போன்றவர்கள் ஒரு காலகட்டத்து தமிழ் எழுத்துலகின், நேரம் போக்கின், வெறும் குடும்பக் கதைகளின் அல்லது சரித்திர கற்பனைகளின் ஆசான்களாக இருந்தனர். அவ்வளவுதான். அவர்கள் இலக்கியம் படைக்கவில்லை. நா.பா என் நண்பர்.என் படைப்புகளை வெளியிட்டவர். ஆனாலும் இதுவே என் கருத்து.

 

தமிழக முற்போக்கு முகாம் உங்களை கவனிக்கவில்லையா? இயல்புவாதம் அவர்களுக்கு உகந்த அழகியலாயிற்றே?

தோழர் ப. ஜீவானந்தத்தை ஆசிரியராகக் கொண்டு நடந்து வந்த ஜனசக்தி நாளிதழின் மாத ஏடு தாமரைக்கு அப்பொழுது தி.க.சிவசங்கரன் பொறுப்பாசிரியராக இருந்தார். பாச்சி கதையைப் பாராட்டி அவருக்கே உரித்தான அஞ்சலட்டைக் கடிதம் ஒன்றினை அனுப்பியிருந்தததுடன் தாமரை வருடமலருக்கு கதையொன்று அனுப்ப வேண்டுமென்றும் கேட்டிருந்தார்.

தாமரை வருட நிறைவு சிறுகதை மலரில் எனது கதை, ‘பதினாலு முறி’ சிறப்புக் குறிப்புரையுடன் வெளிவந்தது. பிறகு தாமரையின் ஒவ்வொரு மலரிலும் எனது கதை தவறாது இடம்பெற்றது. மலையாளமும் தமிழுமான சாலை வட்டார மொழியும் கலாச்சார பழக்கங்களும் கொண்ட தமிழ் மக்களின் அகண்ட வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டு தொடர்ந்து எழுத ‘தீபம்’ ‘தாமரை’ இலக்கிய இதழ்கள் எனக்கு மிகமிக உதவின.

ஒருமுறை தீபம் இலக்கிய விசார அரங்கில் இலக்கிய ஆசான் கு.அழகிரிசாமி எனது கதைகளை தரமிக்கவை, சிறந்தவை என சுட்டிக்காட்டினார். தமிழ் இலக்கிய விமர்சக வித்தகர் க.நா. சுப்ரமணியம் அடிக்கடி கூறிக்கொண்டே இருக்கும் தனியான நால்வர் பட்டியல் என்பது ஒரு குறுகிய மதிப்பீடென்றும், சமீபத்திய தமிழின் சிறுகதை வளர்ச்சியையும் பார்க்க வேண்டுமென்றும் அவர் கூறி அன்றைய திரைகிழித்த காலகட்டம் அது.


மலையாள இலக்கிய உலகுடன் உங்கள் உறவு என்ன? எப்படி அது ஆரம்பித்தது?

மலையாளம் படித்ததினால் மலையாள இலக்கிய நூற்களை கற்க முடிந்திருந்தது. படிக்க ஆரம்பித்த காலத்திலேயே தகழி போன்றவர்களிலிருந்துதான் தொடங்கினேன். பிறகு மலையாள இதழ் குங்குமம் அலுவலகம் இங்கே திருவனந்தபுரத்தில் இருந்ததினால் உறுபு எம்.படி, வைக்கம் சந்திர சேகரன் நாயர் போன்றோரை நேரில் கண்டு பேசவும் கருத்துகள் பரிமாறவும் முடிந்திருந்தது. காரூர் நீலகண்டபிள்ளை போன்றவர்களை நேரில் அறியவும் அவர்களது ஒரு சில படைப்புகளை தமிழில் மொழிபெயர்க்கவும் வாய்ப்பு கிடைத்தது. .

 

உங்களுக்குப் பிடித்தமான மலையாள எழுத்தாளர்கள் யார் யார்?

தகழியில் தொடங்கினேன் ஆயினும், உறுபு என்ற குட்டிக்கிஷ்ணனை மனமார விரும்பிப் படித்தேன். பிறகு எம்.டி. வாசுதேவன் நாயர்
மலையாற்றுர் இராமகிருஷ்ணன். பி.கேசவதேவ் இரண்டாம் நிலையினர் என்றே எனது கணிப்பு.

 

கடைத்தெருக்கதைகள் என்ற பேரில் வந்த தொகுதிதான் ஒருவகையில் உங்களுடைய தனித்தன்மையை திட்டவட்டமாக அறிவித்தது….உங்கள் எழுத்தின் சிறப்பு எதுவோ அதுவே தலைப்பாகவும் அமைந்திருந்தது. தமிழில் அப்பட்டமான இயல்புவாதம்- எந்தவிதமான இலட்சியவாதமும் கொள்கைப்பிரகடனமும் இல்லாத நேரடியான சித்தரிப்பு- உள்ள கதைகளை மட்டுமே கொண்டிருந்த தொகுதி அது….கடைத்தெருவை மையமாக்கி நிறைய எழுதியிருக்கிறீர்கள். இந்த ஆர்வத்திற்கு என்ன காரணம்? இதற்கு ஏதேனும் முன்னுதாரணங்கள் உண்டா?

1974ல் சாலைத்தெருவை மையமாக வைத்து என் 16 கதைகளை ஒரு தொகுதியாக கொண்டுவந்தேன். தமிழில் பெரிதும் பேசப்பட்ட தொகுதி அது. கடைத்தெரு நான் வாழும் உலகம், இங்கே வாழும் மனிதர்கள் பல்வேறு குணநலன்கள் கொண்டவர்கள். தமிழும் மலையாளமுமாக பண்பாட்டு கலப்பு உள்ளவர்கள். பொதுவாக இரு பண்பாடுகள் கலக்கும் இடம் பண்பாடுகளை மதிப்பிடுவதற்கு ஏற்றது.

உலகின் எல்லா அவலங்களுக்கும், அனர்த்தங்களுக்கும், ஏன் அர்த்தங்களுக்கும் எடுத்துக்காட்டு வடிவங்கள் இந்த தெருவிலே உள்ளன. எனது வரையறுக்கப்பட்ட வாழ்வின் வட்டத்திற்குள் இவர்களது இயக்கமே குவிந்திருக்கிறது. இன்னும் இன்னும் எதை யெல்லாமோ உணர்த்துபவர்களாக இருப்பதினால் இவர்கள் என் கதைப் பாட்டிற்குள் கருகள். எழுதினால் தீராத வர்ணக் குலைவுகள் நிறைய உள்ளன. இவர்களை இன்னும் எழுதுவேன்.

பின்னர் வாசகர் வட்டம் வெளியிட எண்ணிய அறுசுவை எனும் ஆறு சிறுநாவல்களின் தொகுப்பிற்காக அதன் ஸ்தாபன தலைமையாளர் எனது மதிப்பிற்குரிய, லக்ஷ்மிகிருஷ்ணமூர்த்தி அம்மையார், குறுநாவல் ஒன்றினை விரும்பி கேட்டதின் வண்ணம் நான் எழுதியது, ‘காளை’ என்ற குறுநாவல்.


அதன்பின்னர்தான் நாவல்கள் எழுதினீர்கள் இல்லையா?

1974ல் கடைத்தெருக்கதைகள் வந்த அதேவருடம் எனது முதல் முயற்சி, ‘புனலும் மணலும்’ நாவலை அன்றைய நாளின் சிறந்த இலக்கிய பதிப்பாளர்களாகிய வாசகர் வட்டம் வெளியிட்டப் பெருமைப்படுத்தியது. அன்று பரவலாக விவாதிக்கப்பட்ட நாவல் அது. இப்போது சுகுமாரன் முன்னுரையுடன் காலச்சுவடு கிளாசிக்ஸ் வரிசையில் வெளிவந்திருக்கிறது.

பாலியல் வேட்கையின் நுட்பமான சித்திரம் கொண்ட குறுநாவல் அது…அப்போது எப்படி அது வரவேற்கப்பட்டது?

தி. ஜானகிராமனின் ‘அம்மாவந்தாள். நாவல் வாசகர் வட்ட வெளியீடாக வந்து அதுபற்றிய விமர்சனங்கள் இலக்கிய சர்ச்சையாக விரவு கொண்டிருந்த நேரமது. அப்போது வாசகர்வட்ட வெளியீட்டுக்குப் போனபோது காளை குறுநாவலும் சிறப்பான படைப்பே ஆயினும் சற்றே பச்சை நிறம் கொண்டது போலிருக்கிறது. என்ற அபிப்பிராயம் வாசகர் வட்டதேர்வாளர் மத்தியில் முணுமுணுப்பானது. ஆகவே அறுசுவை தொகுப்பில் ‘காளை’ இடம்பெறாமல் போயிற்று.

இந்த பலவீனத்தை சகிக்காத தேர்வாளர் குழுவில் ஒருவராகிய தி.ஜானகிராமன் அவர்கள் அந்த நாவலை, அன்று டில்லியிலிருந்து வெளிவந்துக் கொண்டிருந்த ‘கணையாழி’ மாத ஏட்டில் மூன்று இதழ்களிலாக சிறப்புக் குறிப்புரையுடன் வெளியிட்டு சன்மானமும் பெறச்செய்தார். அந்தக்கதை அப்போது மிக முக்கியமாக பேசப்பட்டது. என்னுடைய நல்ல கதைகலில் ஒன்றாக இன்றும் சொல்கிறார்கள். கணையாழிக்கு அன்று ஆசிரியராக இருந்த கஸ்தூரி ரங்கன், அவர்கள் கணையாழி வருடமலரில் எனது ’தண்ணீர்’ கதையை வெளியிட்டு மேலும் சிறப்பு சேர்த்தார்.


காளை பற்றி சொன்னீர்கள்…உங்களுடைய மிகச்சிறந்த குறுநாவல்களில் ஒன்று எட்டாவது நாள். சாளைப்பட்டாணியின் வாழ்க்கையும் மரணமும் தமிழிலக்கியத்தில் பதிவான உக்கிரமான இருத்தலியல் சித்தரிப்பு என்று நான் நினைக்கிறேன்.

திருவனந்தபுரத்து சாலை, கரமனை, கிழக்கே கோட்டை, மேற்கு கோட்டை, மணக்காடு, தைக்காடு, கைதமுக்கு, இன்னும் தமிழர்கள். மலையாளமக்களுடன் கலந்து வாழும் வட்டகைகளின் சுற்றுப்புற வாழ்வு நிலைக்களன்கள், பல்வேறு பட்ட மக்கள் முக்கியமாக வணிக வட்டாரமான சாலை, அதன் சாதாரண மக்களது மொழி பரிமாற்றங்கள் இவைகளையெல்லாம் உட்படுத்தி நான் எழுதிய குறுநாவல் ‘எட்டாவது நாள்’. இதனை தாமரையில் 45 பக்கங்களுக்கு மேல் ஒரே இதழில் வெளியிட்டு என்னையும் அறிமுகப்படுத்தி வட்டார இலக்கிய உலகின் மற்றொரு வாசலையும் திறந்து வைத்தார் தாமரையின் தி.க.சிவசங்கரன்.


அதன்பின்னர்தான் கிருஷ்ணப்பருந்து இல்லையா? என் கணிப்பில் அதுதான் உங்களுடைய மிகச்சிறந்த படைப்பு….

1972 தொடங்கி ஏகதேசமாக 1985 வரையிலான காலவெளியை எனது இலக்கிய சஞ்சாரத்தின் வெண்மணல் பாதையாகக் காண்கிறேன். முதலில் ’புனலும் மணலும்’ நாவல் வந்தது. பிறகு, மோகபல்லவி, காமினி மூலம் கதைத் தொகுதிகளைத் தொடர்ந்து 1982ல் ‘கிருஷ்ணப்பருந்து’ நாவல். கிருஷ்ணப்பருந்து வடிவ அமைதி கொண்டது. நுட்பமானது.

சுந்தர ராமசாமி ஒரு கலைஞனின் உச்சம் வெளிப்படும் படைப்பு என்று அதைப்பற்றி சொல்வதுண்டு…

ஆம், என்னுடைய ஆக்கங்களில் அதிகமும் பேசப்பட்டது அதுவே. கிருஷ்ணப்பருதுக்கு பின்னர் ‘மாதவன் கதைகள்’, ’அரேபிய குதிரை’ கதைத் தொகுதி, ‘தூவானம்’ நாவல் எல்லாம் வெளிவந்தன.

 

தமிழ் இலக்கியமுன்னோடிகளுடன் உங்களுக்கு நல்லுறவு இருந்திருக்கிறது இல்லையா?

கு.அழகிரிசாமி, கி.ராஜராயாணன் லா.ச.ராமாமிருதம், தி.ஜானகிராமன், நா.பார்த்தசாரதி, வல்லிக்கண்ணன், கவிஞர் கண்ணதாசன், கணையாழி கஸ்தூரிரங்கன் போன்ற எழுத்துலக நண்பர்கள் எல்லாம் இங்கே திருவனந்தபுரத்தில் எனது எளிய வீட்டிலும், சிறிய கடையிலும் வருகை தந்து சிறப்பித்தனர். அசோகமித்திரன், சா.கந்தசாமி போன்றவர்கள் 1977ல் ‘ஆதர்ஸ் கில்டு’ மகாநாட்டிற்காக இங்கே வந்தவர்கள் ’மகாநாட்டை விட திருவனந்தபுரம் வருவதற்கு முதல் காரணம்; உங்களை சந்திக்கலாம் என்பதுதான்’’ என்றார்கள்.

இலங்கையிலிருந்து அடிக்கடி இந்தியா வரும் இலங்கை தமிழ் எழுத்தாளர்கள் முக்கியமாக ‘மல்லிகை’ ஆசிரியர் டொமினிக் ஜீவா, இரண்டு முறை இங்கே என்னை வந்து சந்தித்து இலக்கிய உரையாடல்கள் நடத்தி மகிழ்ந்தா. கே. சுப்ரமணிய அய்யர் என்ற இலக்கியரசிகர், இலங்கை வெளியிடுகளான பல்வேறு புதினங்கள் சிறுகதைகள் அடங்கிய புத்தம் புது புத்தகங்களாக நூறிலும் அதிக எண்ணிக்கையில் கொண்டு வந்தளித்து இலக்கிய ரசனையை பரிமாறிக் கொண்டது, மறக்க முடியாத அனுபவம்!

ஒரு சமயம் ஆலுவாய் உத்யோகமண்டலில் நடந்தேறிய அகிலஇந்திய எழுத்தாளர் மகாநாட்டில் கலந்துக்கொண்டபோது மௌனியுடன் ஒரே அறையில் தங்கி இருக்கவும் அந்த சிறுகதை மூலவரின் உரையாடல்களைக் கேட்டுப் பயன்பெறவும் வாய்ப்பு அமைந்தது. அதே மாநாட்டில் மலையாள எழுத்தாளர் காரூர் நீலகண்டப் பிள்ளையுடனும் மற்றொரு அறையில் தங்கி இருந்து, இலக்கிய பரிமாற்றங்கள் செய்துகொண்டதை பாக்யமாக கருதுகிறேன்.

பம்பாயிலிருந்து கடித்தொடர்பில் ஆரம்பித்து. இன்று இவரது கோவை வாழ்வின்போதும் சீரிய, நட்புடன் பழகுபவர் தம்பி நாஞ்சில் நாடன். இலக்கியம் எனக்குத் தந்த நட்புறவின் உச்சாணி. இலக்கியம் என்ன அளித்தது என்று திரும்பிப்பார்க்கும்போது நல்ல இலக்கிய நட்புகள் பிரகாசமாக மனதில் எழுந்து வருகின்றன


ஜி.நாகராஜன்? அவரைப்பற்றிச் சொல்லவில்லையே?

ஜி.நாகராஜனுடனான உறவை வழக்கமான இலக்கிய நட்பாகச் சொல்ல முடியாது. அவருக்கு தோன்றும்போது வருவார். காலையில் கடை திறக்கும்போது எதிர்கடையின் வராந்தாவில் படுத்திருப்பார். அழுக்கு சட்டையும் பரட்டைத்தலையுமாக இருபபர். ஐந்து ரூபாய் கொடு என்று கேட்டு வாங்கிக்கொண்டு குடிப்பதற்காகச் செல்வார். ஆனால் இலக்கியம் மீது அவருக்கு ஆழமான பிடிப்பு இருந்தது. நிறைய படித்தவர். கதைகளைப்பற்றி நிறைய பேசுவார்..

[மேலும்]

முந்தைய கட்டுரைஅழுக்குநீக்கிகள், கடிதங்கள்
அடுத்த கட்டுரைதிராவிட இயக்கத்தில் இருந்து நவீனத்துவம் வரை…ஆ.மாதவன் பேட்டி 3