திராவிட இயக்கத்தில் இருந்து நவீனத்துவம் வரை…ஆ.மாதவன் பேட்டி

உங்கள் குடும்பப் பின்புலம் என்ன? அம்மா அப்பாவின் சொந்தஊர், பூர்வீகம்? ஏனென்றால் நீங்கள் திருவனந்தபுரத்தைப்பற்றி மட்டுமே எழுதும் எழுத்தாளர்…

என் அப்பா ஆவுடைநாயகம் பிள்ளை. செங்கோட்டைக்காரர். அவரது அப்பா சோமசுந்தரம் பிள்ளை காலத்திலேயே திருவனந்தபுரம் வந்துவிட்டார்கள். சோமசுந்தரம்பிள்ளை கலால் காண்டிராக்டராக நிறைய சம்பாத்தியமெல்லாம் பண்ணி தோட்டம் துரவுகளோடு இங்கே ஜகதி என்ற இடத்தில் பெருந்தனக்காரராக வாழ்ந்தவராம். அவருக்கும் அந்தக்கால மரபுப் படி இரண்டு மனைவியர். மூத்ததாரத்தின் மூத்தமகன் ஆவுடை நாயகம். இளைய தாரத்திலும், இரண்டோ மூன்றோ சந்ததிகள். அவர்களைப் பற்றி எனக்கொன்றும் அதிகமாகத் தெரியாது.

அப்பாவிற்கு உரிய காலத்தில் கல்யாணமாகியது. முதல்தாரத்துக்கு பெயர் பகவதியம்மாள். பகவதியம்மாளோடு கொஞ்ச வருஷங்கள் மட்டும் குடும்பம் நடத்தியதில் இரண்டு ஆண் குழந்தைகள் விட்டு விட்டு அந்த அம்மா, இறந்து போனாள். இந்தப் பெருந்தனக்காரர் வீட்டிற்கு இங்கேயே வாழ்ந்த கெட்ட குடும்பமொன்றிலிருந்து மருமகள் வந்தாள். அவள்தான் பார்வதியம்மாள் – மாதேவன் பிள்ளை குடும்பத்தின் இரண்டாவது மகளான எனது அம்மா செல்லம்மாள்.

எனது அம்மா வெளேரென்று கட்டியும் கனவுமாக பார்க்க ஐஸ்வரிய வதியாக பெரிய குங்குமப் பொட்டும் நேர்வகிடுமாக, கண்விழிகள் தவிட்டு நிறமோடு, இன்னும் வருடங்களுக்கப்பாலும் மனதிலும் பதிந்து கிடக்கிறாள். ஐம்பது அல்லது ஐம்பத்தி ஐந்து வயதிலேயே என் அம்மா இறந்து போனாள்.

என் அப்பாவின் வீட்டுக்கு பார்வதியம்மாளோடு என் அம்மா அடிக்கடி வந்து போய்க் கொண்டிருந்திருக்கிக்கிறாள். என் அம்மா செல்லம்மாளோடு அப்பாவிற்கு, ‘சிநேகம்’ முற்றிப்போய் முதல் மனைவி இறந்ததும் மனைவியானாள். அப்பாவுக்கு என் அம்மாவில் செல்வமணி, ஆறுமுகம், சண்முகம், மாதவன் என்கிற நான், சோமசுந்தரம், சாந்தி கிராமச் சந்திரன் என்று இந்த கிளையில் ஆறு குழந்தைகள். அப்பா அம்மாவோடு இணைந்ததை விரும்பாத சோமுப் பாட்டா உனக்கு சொத்தும் இல்லை ஒரு மண்ணுமில்லை என்று அப்பாவை துவக்கத்திலேயே விரட்டி அடித்திருந்தார்.

அப்பா ஆங்கில படிப்பு. பெரிய படிப்பெல்லாம் படித்தவரென்று கேட்டிருந்தேன். என்ன படிப்பு என்று எனக்கு வயது வந்த காலத்தில் கூட கேட்டறிந்ததில்லை. வீடுவாசலை விட்டு விற்றவர் பயோனிக் மோட்டார் – கம்பெனி முதலாளியாகிய சகபாடியிடம் வந்து சேர்ந்தார். முதலாளி தெரிந்தவர் என்பதினால் அவரது பஸ் ஒன்றின் கண்டக்டர் வேலையில் பலகாலம் இருந்தார். இங்கே திருவனந்தபுரம் பாளையம் என்ற இடத்திலிருந்து நாகர்கோயில் போய் வரும் பஸ்ஸில் தான் வேலை. சொத்து சுகம் இழந்த கஷ்ட ஜீவனத்திற்கிடையே வருஷம் தவறாமல் குழந்தைகளும் குறைவில்லை.

ஐந்தாறு வயதிலெல்லாம் ஓலை வேய்ந்த வாடகை வீட்டில் வசித்ததாக ஞாபகம். பெரிய அண்ணனும் ஐந்தோ ஆறோ படித்து விட்டு இங்கே சாலைக் கம்போளத்தில் கடை வைத்திருந்த அப்பாவின் கல்லிடைக் குறிச்சிக்கார சிநேகிதர் ஒருவரிடம் வேலைக்கு போகத் துவங்கினார். அவர்தான். ஆனந்தபோதினி – போன்ற தமிழ்ப் பத்திரிகைகள் வாங்கிக் கொண்டுவருவார். அப்போது எனக்கு படிக்கும் வயது வரவில்லை. படம் பார்ப்பேன். அங்கிருந்துதான் நான் ஆரம்பித்தேன்


நடுவே ஒருகேள்வி, உங்கள் குலதெய்வம் என்ன?

குலதெய்வம் என்று இங்கே சொல்வதில்லை. குடும்பக் கோயில் என்பார்கள். தைக்காடு என்ற இடத்தில் இன்றும் இருக்கும் தாளமுத்து அம்மன் கோயிலை இது நம்ம, ‘குடும்ப கோயிலாக்கும் என்று சின்னப் பிள்ளையாக இருந்தபோது அப்பா சொன்ன ஞாபகம். அப்பா கறுப்பு நிறம், நரைத்த முடி – முன் வழுக்கை மொட்டைக்காரர். சந்தனப் பொட்டோடு முகம் இன்னும் மனதில் இருக்கிறது. குலதெய்வத்துக்கு பூஜையெல்லாம் வைபப்தில்லை. போகிற போக்கில் ஒரு கும்பிடு போட்டு போவதோடுசரி.


உங்கள் உடன் பிறந்தவர்கள் எத்தனைபேர். இப்போது எப்படி இருக்கிறாங்கள்?

எனது உடன்பிறந்தவர்கள் பெயர் விபரம் முன்னரே சொன்னேன். பெரிய அண்ணன் செல்லமணியும் கடைதான் வைத்திருக்கிறார். வியாபாரம் என்று பெரிசாக ஒன்றும் இல்லை அவருக்கு. நாகர்கோயில் கள்ளியங்காட்டிலிருந்து திருமணமாகி மூன்று குழந்தைகள். அவரது பிள்ளைகள் கல்யாணம் குடும்பம் என்று அது வேறு வாழ்க்கை. இந்த அண்ணன்தான். தமிழ்ப் பத்திரிகைகள், இன்னும் கோளம்பிகுடை வைத்த கிராமபோன் பெட்டி என்றெல்லாம் வீட்டில் அரைகுறை ஆடம்பர வாழ்வு நடத்தியவர். அண்ணனுக்குத் திருமணம் ஆகி அடுத்த வருஷத்தில் மாதந்தோறும் வந்து அலட்டும் தலைவலி நோய் முற்றி அம்மா – காலமானாள்.
நாலாவது ஆண்டில், அப்பாவும் காலமான பின்பு இந்த மூத்த அண்ணன் ஆதினத்தில்தான் குடும்ப வாகனம் தள்ளாடி நடைபோட்டது.

ஐந்தாவது அல்லது ஆறாவது படிப்பையெல்லாம் முடித்துக் கொண்டு மற்ற இரண்டு அண்ணன்களும் சாலைக் கடைகளுக்குத்தான் ஜோலிக்கு போனார்கள். இரண்டாவது அண்ணனுக்கு கன்னியாகுமரி கொட்டாரம் ஊரிலிருந்து கல்யாணமாயிற்று. அந்த மதனிக்கு. இரண்டு தம்பிகள், இரண்டு தங்கைகள். இளைய தங்கை சாந்தா என்ற சூர்யகுமாரி. மதனியின் தம்பி, சிம்பரதாணு பட்டப் படிப்பு முடித்த பி.எட் தேறி வாத்தியார் ஆனபோது எங்களது ஒரே தங்கை சாந்திக்கும் அவருக்கும் திருமணம் ஆனது. கொட்டாரத்தில் அவர்களது குடும்பமும் வாழ்ந்து கெட்ட குடும்பம்தான்.

இப்பொழுது எங்கள் தங்கை சாந்திக்கு இரண்டு பெண்கள் – இரண்டு பையன்கள். அனைவரும் பட்டப்படிப்பு முடித்தவர்கள். பையன்கள் வளைகுடா நாட்டு சம்பாத்தியம். மைத்துனர் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர். தமிழ் நாட்டில் பல ஊர்களில் வேலை செய்துவிட்டு, கொட்டாரம் ஊருக்கே வந்தார். இப்பொழுது மாளிகை போல சொந்த வீடு, ஊர்த் தலைவர் இப்படியாக நிறைவாழ்வு. ஒரே தங்கை நிறைவாழ்வு வாழ்வதில் எனக்குப் பெருமகிழ்ச்சி.

உங்கள் சொந்தக் குடும்பம், மனைவி பிள்ளைகள் பற்றி கூறுங்கள்…

இரண்டாவது அண்ணன் மணந்த கொட்டாரம் மதனியின் தங்கை சூரியகுமாரிக்கும் – எனக்கும் 1966 ஆம் வருடம் திருமணம் நடந்தது. என் மனவியை வீட்டில் சாந்தா என்று அழைப்பார்கள். எங்களுக்கு மூன்று குழந்தைகள். இருபெண்கள், கலைச்செல்வி மலர்ச்செல்வி. இருவருக்கும் திருமணமாகி திருவனந்தபுரத்திலேயே வசிக்கிறார்கள். ஒரே மகன் கோவிந்தராஜன் தன் முப்பத்தைந்தாம் வயதில் புற்றுநோய் தாக்கி 2004ல் இறந்தார். என் மனைவி 2002ல் இறந்தார். நான் இப்போது இரண்டாவது மகளுடன் வசிக்கிறேன்.


உங்கள் கல்விக்காலம் பற்றி சொல்லுங்கள்… ஆ.மாதவன் என்ற இலக்கியவாதி அந்த பருவத்தில் உருவானாரா?

இன்றைக்கெல்லாம் எழுபத்தி ஐந்து வயதை எட்டிவிட்ட நான் வணிகத்துறையில் ஈடுபட்டிருந்தாலும் வாழ்க்கையின் முழுக் காலகட்டதையும் இலக்கிய ஆர்வத்திலேயே கடத்தி உள்ளேன் என்பதே உண்மையான காரியம்! நான் பதினைந்து வயது வரையில் பள்ளிப்படிப்பு – பத்தாவது வகுப்பைத் தொட்டுவிடாத கல்வித் தகுதியுடையவன். எனது குடும்பம் நடுத்தரத்திலும் சற்று கீழ்ப்படியில் உள்ளதாக இருந்தது.

ஆயிரத்தி தொள்ளாயிரத்தி நாற்பத்திநாலு, காலகட்டத்தின் யுத்த நாட்களில் எத்தனை பணம் கொடுத்தாலும் கஞ்சிக்கு நாற்றம் பிடித்த அரிசி கிடைக்காது. பஞ்சம் பிடித்த காலகட்டமாக அது இருந்தது. வலியசாலை கோயிலிலிருந்து கிடைக்கும் சூடான கட்டிச்சோறு வாங்கி வந்து வீட்டில் கொடுத்துவிட்டு அவசர அவசரமாக பள்ளிக்கூட வகுப்பறையில் நுழையும்போது. முதல் பீரியடு மணியடித்திருக்கும். வகுப்பாசிரியர் விஸ்வநாத அய்யர் சார், “இன்னு கட்டிச்சோறு எத்தனை கட்டி கிடைத்தது” என்று, பாதி கேலிச்சிரிப்பும் பாவம் என்ற பாவனையும் கலந்து கேட்பார்.

பள்ளிக்கூட வாழ்க்கை, ‘கலாபோதம்’ மிக்கதாக அமையப்பெற்றது பாக்யம்தான். நீங்கள் கேட்டபடி பிற்பாடு நான் ஒரு கலைஞனாக உருவாக அதுவே வழிவகுத்தது என்று சொல்லலாம். குடும்பம், பஞ்சைக் குடும்பமாகவும், சுற்றுவட்ட சிநேக வளையங்கள் பாமர நூலாம்படைகளாகவும் அமையப்பெற்றபோது நைந்து போன பாலகதைகள் பல மனவட்டத்தில் சாய்ந்தாட்டம் கொண்டு உருப்பெறலாயின.

…. பெரிய ஆலமரத்தின் உச்சாணிக்கிளையில் ஏறி அமர்ந்துகொண்டு, காக்கைத் தொள்ளாயிரம் தூரத்து அரண்மனைப் பூங்காவனத்தில் பாங்கியர் சூழ தங்க ஊஞ்சலாடும் அரசிளம் குமாரியை இங்கிருந்தே காணும் அதியற்புத சக்தி படைத்த நோட்டக்கார அதிசய வித்வான்; ஏழுகடலையும் பத்தே வீச்சில் நீச்சலடித்துத் தாண்டிப்போய் சாம்ராஜ்ய கோட்டையைத் தொட்டுவரும் நீச்சம் வித்தகன்; ஆயிரம்தலை சர்ப்பநாகம் பூமி அடிமட்டத்தில் பச்சைக்கிளியின் வயிற்றில் மறைத்து வைத்திருக்கும் ராட்சசனின் உயிரை கொண்டுவர வெள்ளைக்குதிரையேறிப் பாய்ந்துபோகும் ராஜகுமாரன்… இத்தியாதி மாயக்கதைகள் எல்லாம் பால பருவத்தின் சுகமான காலகட்டத்தில் மனமேறி கதை கேட்கும் சுகத்தை ஏற்படுத்தி இருந்தன.

பள்ளிக்கூட வாழ்க்கை ஒன்றாவது வகுப்பில் ஆரம்பமாகும் போதே கதை போல காரியங்கள் தொடங்கியது நினைவு வருகிறது… இன்று திருவனந்தபுர நகரத்தில் மிக உயர்ந்த நிலையில் விளங்கும் மகளிர் பள்ளியில், ஒன்றாவது வகுப்பில் சேர்த்தார்கள். எப்படி அந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது என்றால் அன்று நாங்கள் வசித்து வந்த சிறிய ஓலைக்கூரை வாடகை வீட்டின் பக்கத்து ஓட்டு வீட்டில் வசிக்கும் ஒரு இன்ஜினீயர் சாரின் பெண்மக்கள் இந்தப் பள்ளியில் படித்து வந்தனர். அவர்களது சிபாரிசின் பேரில் ஐந்தாவது வகுப்பு வரை மட்டும் ஆண் குழந்தைகளை அனுமதிக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி என்னையும் சேர்த்து விட்டார்கள். இருந்தும் அந்த அதிர்ஷ்டம் நிலைபெறவில்லை. காலையில் வயிறு முட்ட பழையகஞ்சியும், கிழங்கும் வயிற்றில் நிறைத்து வந்தவன் நித்தியக்கடன் எனும் காரியத்தை மறந்த போனதால் அடக்க முடியாமல் வகுப்பறையிலேயே ’சம்பவம்’ நிகழ்ந்துவிட்டது. பிறகென்னவாயிற்றென்றால், பெருந்தனக்காரர்களும், ராஜகீய சுற்றுவட்டமுமான அந்த மாபெரும் பள்ளிக்கூடத்தை விட்டு. ‘வேண்டாம் போ. உன் மாதிரி அநாகரீகங்களுக்கு உள்ளதல்ல இந்தக் கலாசாலை’ என்று தள்ளிவிட்டபோது கை நீட்டி வரவேற்று ஆட்கொண்டது சாலை பிரைமரி ஸ்கூல்.

சாலை மலையாளம், எம்.எம். ஸ்கூல். அங்கே வந்து ஆஜரான அன்றைய தினமே குடுமி வைத்த வைத்யநாதய்யர் சார் கையால் ஈர்க்கில் சூரல் கம்பால் சுட்ட அடி வாங்கும் பாக்யம் கிடைத்தது! சளசளவென்று சத்தம் போடும் குட்டிகளை நிரத்திப்பிடித்து அடித்துக்கொண்டே வந்தபோது எனக்கும், பூசை கிடைத்தது. “சார், சார், அவன் இந்நு வந்நு சேர்ன்ன புதிய குட்டியாணு. அவன் ஒன்னும் மிண்டியில்ல…” என்று எடுத்துச்சொன்ன சகமாணவனுக்கு அய்யர் சொன்னார். “மிண்டியில்லங்கி எந்தா, சாரமில்ல. இனி மிண்டும்போ இது அச்சாரமாயிட்டு கணக்காகிக்கொள்ளாம்…” இப்படித்தான் ஆரம்பமாயிற்று என் சாலைப் பள்ளிக்கூட சரித்திரம்.

நான் ஆரம்பத்தில் வசித்து வந்த தைக்காடு எனும் இடத்திலிருந்து பள்ளிக்கூடம் மாறியபோது சாலை எனும் தமிழர் அதிகம் வாழும் இடத்திலுள்ள மலையாளம் பள்ளிக்கு அருகே குடிவந்தோம். பள்ளிக்கூடம் இருந்த வட்டகையின் தெற்குப்புறமாக, சாலைக் கம்போளம் எனும் கடைத்தெருவில் நீண்ட நெடும் சிமின்டு பாதை உள்ளது. அது கிழக்கு நோக்கி. கிள்ளியாற்றின் பாலம் தாண்டி, கரமனை ஆற்றுப்பாலம், பாப்பனங்கோடு, பிராவச்சம்பலம், நேமம் என்று ஐம்பது மைல் தொலைவுக்கு நீண்டு கன்னியாகுமரி வரை போய் முடிகிறது.

மலையாளம் நடுநிலைப்பள்ளியில் ஏழெட்டு வருடகாலம் குருகுலவாசம் போல உத்ஸவ, உல்லாச காலமாக இருந்தது. இங்கே கிடைத்த அனுபவ, புத்தகபடிப்புகள்தான் ஆ. மாதவன் எனும் தமிழ் கதாசிரியன் உருவாக அடித்தரைக் கற்களாக அமைந்தன. தாய்மொழி தமிழாகவும் வீட்டில் அண்ணன்மார் வாங்கிவரும் சஞ்சிகைகள் தமிழ் செப்புவதாகவும் இருந்தமையால் மலையாளப் படிப்பும் கலந்தபோது புதுமாதிரியான அனுபவக் கலவையொன்று குருத்திலேயே உருவானதாகச் சொல்லலாம் மலையாள வகுப்புகளில்” கிருஷ்ணகாதா பாடல்கள் படித்த காலங்களில் கிருஷ்ணனும், கோகுலமும் பகவத் புராண கதைகளும் சொல்லித் தந்த வேலாயுதன் நாயர் சாரையும், ‘பாஷாபாரதம்’ கற்பித்த தாடி ராமகிருஷ்ணபிள்ளை சாரையும் மறக்கமுடியாது. மலையாள ஹாஸ்யகவி குஞ்சன் நம்பியார். நாலாவது வகுப்பிலேயே துள்ளல் கதைகள் வழியாக மனமேறிக் கொண்டவர். கவிதிலகங்களாகிய சங்ஙம்புழையும், உள்ளூர் பரமேஸ்வர அய்யரும். வள்ளத்தோளும், குமாரன் ஆசானும், பூ தூவி சொரிந்த பாடல்கள் அன்று இளம் மனதில் புரியாப்புதிரின் வர்ணக் கனவுகளை விரித்தன.


இது மலையாளம் சார்ந்த கல்வி…அன்று மலையால இலக்கியத்தின் பொற்காலம். பெருங்கவிஞர்களும் கதையாசிரியர்களும் வீடுதோறும் கல்விச்சாலைதோறும் பேசப்பட்ட காலம்…தமிழ் ஆர்வமும் பயிற்சியும் எப்படி உருவானது?

இடையே நானே கற்றுக்கொண்டு தமிழை எழுதக்கூட்டி வாசிப்பேன். படித்துப் படித்து பதினாலு வயதிலேயே கல்கியின் அலை ஓசையையும், தேவனின் துப்பறியும் சாம்புவையும் லட்சுமியின் மிதிலாவிலாஸையும் எல்லாம் புரிந்தும் புரியாமலும் படிக்க முடிந்தது. இடையே, தகழியும், கேசவதேவும் பொற்றைக்காடும் ஆர்வமூட்டிக் கொண்டிருந்தார்கள். பஷீரின், ‘பாத்துமாவின் ஆடு’ சுகமான அனுபவம். சங்ஙம்புழையின் ரமணன், காதல் பாடமேற்றிய முதல் சொப்பன அனுபவம்… “பயல் என்னவெல்லாமோ, தமிழிலும் மலையாளத்திலும் நிறைய படிக்கான் உருப்பட்டால் சரி” என்று அப்பா நெற்றியில் திருநீறு பூசிவிட்டார்.

பள்ளிக்கூடத்தில் முதன்முதலில் தகழியின் ‘வெள்ளப் பொக்கத்தில்’ கதை படித்தபோது தான் சாகித்யம் என்ற வேறுவழி பற்றி இனிய நினைவுகள் முகிழலாயிற்று. சங்ஙம்புழையின் நாயகன் ரமணனின், காதல் மின்னல் இழைபோல மனதை வெட்டியது. வீட்டில் அண்ணன் வாங்கி வந்து போட்டிருக்கும் ’கவிக்குயில்’ என்ற கவிதை இதழ் திருவனந்தபுரம் காசுக்கடை சிதம்பரம் என்ற சின்ன முதலாளியின் சிருஷ்டி என்று சொல்லப்பட்டது கவிக்குயிலின் பிரசுரமான வல்லிக்கண்ணனின் நாட்டியக்காரி புத்தகத்தை அர்த்தம் தெரியாமல் அத்தனை பக்கத்தையும் படித்து வைத்தேன். ஆனந்த விகடன், கல்கி, எப்பொழுதாவது கலைமகள், எல்லாம் அண்ணன்மார் தயவில் வீட்டில் கிடைத்தது. விகடனில், மாலி, ராஜூ, போலு இவர்களின் கதைப்படங்களும் ஹாஸ்ய சித்திரங்களும் மலையாள சஞ்சிகைகளில் அன்றைய நாளில் இல்லாத புதுமையாக இருந்தது. கலைமகள், ஆனந்தவிகடன், சுதேசமித்திரன், அமுதசுரபி போன்ற சஞ்சிகைகளின் அழகு அழகான மணக்கும் ஆர்ட்பேப்பர் தீபாவளி மலர்கள் எல்லாம் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டின….

நான் வாசிபபியே என் சின்னவயதில் பேரானந்தமாகக் கொண்டிருந்தேன். வார இதழ்கள்தான் எனக்கு உண்மையில் தமிழ் கற்றுத்தந்தன. அங்கிருந்துதான் நான் ஆரம்பித்தேன்


எப்படி சாலையில் வணிகராக ஆனீர்கள்? படிப்பை முறையாக முடிக்கவில்லையா?

படிப்பே கொண்டாட்டமாக இருந்த பரவசமான பதினைந்து பதினாறு வயது காலகட்டத்தில், “பீஸ் கொடுக்க கஷ்டமாக இருக்கிறது. படித்தது போதும், காசுக்கடை செட்டியார் கடைக்கு ஒரு சின்னப்பய்யன் வேணும்ணு கேட்டிருக்கிறார். விடிஞ்சா ஆவணி பிறக்குது. போய்ச்சேரு, கண்டகண்ட கதைப்புஸ்தகங்களையெல்லாம் தூக்கி வீசிட்டு பொழைக்கிற வழியைப் பாரு” என்று அண்ணன்மாரிடமிருந்து ஆர்டர் வந்து தலைமேல் விழுந்தது. ஆனால் காசுக்கடை செட்டியாரிடம் போகவில்லை. ஆயிரத்தி தொள்ளயிரத்தி நாற்பத்தி ஒன்பது வாக்கில் மூத்த அண்ணன் ஒரு ஷாப்புக்கடை துவங்கினார். அங்கேதான் ஆரம்பமாகிறது. சாலைக்கடை ’உத்யோக பர்வம்’!

ஆமாம், அன்று துவங்கியது இந்த பாலைவனப் பாய்ச்சல்! கானல் நீர் தேட்டம்! திருவனந்தபுரத்தின் தைக்காடு எனும் இடம், அங்குள்ள போலீஸ் டியிரயினிங் கல்லூரி என்ற ‘கவாத்து’ பயிற்சி மைதானம், அணையால் தடுத்து நிறுத்தப்பட்ட பாறைச்சிறை ஆற்றுப்புறம், அங்குள்ள சலவையாளர் சுற்றுப்புறம், பிரிட்டிஷ் கொடி பறக்கும் ரசிடன்ஸி பங்களா, பெண்கள் குழந்தைகளுக்கான ஆஸ்பத்திரி, சுவாதி திருநாள் சங்கீத காலேஜ், மாடல் ஸ்கூல், தாணாமுக்கிலுள்ள சாஸ்தா கோவில்… இதையெல்லாம் விட்டுவிட்டு அண்ணன்கடை என்று வந்தபோது சாலை வட்டாரம் என் வாசஸ்தலமாகவும் ஆகப்போயிற்று.

அம்மா காலமாகி ஒரு நாலு வருஷ இடைவெளிவிட்டு அப்பாவும் போய்ச் சேர்ந்தார். கடைவேலையில் மூழ்கி அதுவே வெலை என்றாகியது. ஆனாலும் படிக்கும் ஆர்வம் போகவில்லை. நல்ல நட்புகள் கிடைத்தன. இலக்கியம் அரசியல் அரட்டை என்று ஒரு பொன்னான காலம் சாலைத்தெரு வாழ்க்கையிலும் இருந்தது


இந்த வயதில்தான் திராவிட இயக்க ஆதரவாளராக ஆனீர்களா? தேர்ந்த வாசிப்புக்கு வர திராவிட இயக்க இதழ்கள் காரணமாக அமைந்தனவா?

ஆமாம். நான் நிறையவாசிக்கவும் நல்ல நூல்களை வாசிக்கவும் திராவிட அறிவியக்கமே காரணம். தமிழகத்தில், திராவிட கழகத்திலிருந்து பிரிந்து 1949ல் திராவிட முன்னேற்றக் கழகம் புதிய எழுச்சியோடு தோன்றிய போது அதன் தலைவர்கள் அண்ணா, மு.க.நெடுஞ்செழியன், ஆசைத்தம்பி, என்.வி.என், தில்லை வில்லாளன், ஒவ்வொருவரும் ஒவ்வொரு சஞ்சிகை தொடங்கி நடத்தி வந்தனர். திராவிட நாடு ‘திராவிடன்’ ‘போர்வாள்’ போன்றவை. இதற்கெல்லாம் புறம்பாக கட்டுரை கதை மட்டுமாக நிரப்பிக் கொண்டு, தனி இலக்கியப் பத்தரிகையாக முருக சுந்தரத்தின் “பொன்னி” வெளிவந்தது. கடை பையன்களிடையே வாசிப்பு நண்பர்களாகக் கிடைத்த ஏ. நடராஜன் ஏ. கிருஷ்ணன் போன்றோர் பொன்னியையும் திராவிடன் வார ஏட்டையும் தவறாமல் படிக்கத் தந்து உதவினர். அங்கிருந்துதான் என் நல்லவாசிப்புக்கான தொடக்கம்.

ஏறத்தாழ இந்த கால கட்டங்களில்தான் மணிக்கொடி, சக்தி, சரஸ்வதி, சாந்தி, சந்திரோதயம், ஜனசக்தி நாளிதழின் ‘தாமரை’ மாத ஏடு என்றெல்லாம் இலக்கிய உலகப் புதுமைப் புரட்சியின் சஞ்சிகைகள் வெளிவந்தன. ஏராளமாக தமிழ்ப் புத்தகங்களும் இதழ்களும் கிடைத்தன. உண்மையில் ஐம்பதுகள் தமிழில் பதிப்பிலக்கியத்தின் பொற்காலம். இன்றுகூட ஐம்பதுகளிலே உள்ள நல்ல நூல்கள்தான் அதிகமும் மறுபதிப்பாக வந்துகொண்டிருக்கிறன

நெல்லை வட்டாரத்து நடுத்தர மக்களின் மொழி பேசிக்கொண்டு வந்த புதுமைப்பித்தனின் கதைகள். கலைமகளிலும் தினமணியிலும் படிக்க கிடைத்தபோது புதிய அனுபவமாக இருந்தது. மண்ணின் மணம், பாவ-புண்ணியம், பட்டினி-சுரண்டல் என்றெல்லாம் பகுத்துக் கண்டுகொள்ள இலக்கிய ஞானம் அரும்பாத காலம். தினமணி, தினமணிகதிர், சுதேசமித்ரன், தினசரி, பத்திரிகைகளுக்கு மேலாக ‘இமயம்’ ‘பேரிகை’ என்றெல்லாம் கூட கதைகள் தாங்கி வந்த பத்திரிகைகள் படிக்கக் கிடைத்தன. கடையின் வேலைகளுக்கிடையே தமிழ் இலக்கிய லலித சஞ்சாரமாக வருஷங்கள் பல போய்க் கொண்டிருந்தன.

மலையாள இலக்கிய உலகின், வைக்கம் முகமது பஷீர், சுந்தரிகளும் சுந்தரன்மாரும் எழுதிய உறுபு இவர்களைப் படித்தறிந்த சூட்டோடு ஏ.பாலகிருஷ்ணபிள்ளை போன்ற பிரபலஸ்தர்கள் அறிமுகப்படுத்திய மேல்நாட்டு வித்தகர்களையெல்லாம் படித்தறிந்தேன். தமிழில் க.நா.சு. போன்றவர்கள் மொழிப்பெயர்த்தளித்த ருஷ்ய, பிரெஞ்சு, ஸ்பானிஷ் மொழி நவீனங்கள் கிடைத்தன. மாக்ஸிம் கார்க்கி, ஷோலக்கோவ், டால்ஸ்டாய், டாஸ்டயவஸ்கி, புஷ்கின் பிரஞ்சு மொழியின் பாஸ்ஸாக், பிளாபர், மாப்பஸான் இவர்களையெல்லாம் ஒரு போர்க்கால வேகவெறியுடன் படித்தறிந்தேன். .

தமிழில், வே. சாமிநாத சர்மா தந்த வரப்பிரசாதமாகிய ‘கிரீஸ் வாழ்ந்த வரலாறு’, ’ருஷ்ய வரலாறு’, ‘குடியரசு சீன வரலாறு’ எல்லாம் படிக்கப் படிக்க புதியதோர் ஞானப் பிரபஞ்சத்தை கண்டடைந்த, எட்டி அறிந்த அனுபவங்களாக அமைந்தன. கார்க்கி தமது கடைநிலை வாழ்க்கையை “நான் பயின்ற பல்கலைக்கழகங்கள்” என நூலாக படைத்தளித்தது போல எனது வியாபார உலகப் பணிகளும் அதன் மனித சகவாசமும் எனக்கு மாபெரும் கல்வி அறிவின் சம்பத்துக்களாக அமைந்தன. அவற்றின் வழியாக நான் வயதால் வளர்ந்து வெகுதூரம் பயணம் கொண்டிருந்தேன். இந்த பயணத்தின் படிமங்கள் எழுதவேண்டும் என்ற என ஆசையின் வழித்துணையாக அமைந்தவை.

 

இந்த வாசிப்புதான் எழுத தூண்டுதலாக அமைந்தது இல்லையா?

எனக்கு இந்தக்காலகட்டத்தில் இருபத்திரெண்டு வயதிற்கு மேலாகிவிட்டது. சென்னையிலிருந்து, இன்றைய சிறு பத்திரிகைபோல, ‘சிறுகதை’ என்றொரு மாதசஞ்சிகை, பந்தி போஜனத்திடையே சோளப்பொரி போல வெளிவந்து கொண்டிருந்தது. மேலும் ‘இமயம்’ ‘பேரிகை’ போன்ற சஞ்சிகைகள். அன்றைய அரசியல் களத்தில் வில்லம்பு போராட்டம் போல மோதிக்கொண்டு வெளிவந்த தேசிய சஞ்சிகைகள். நான் இவற்றில் எழுத ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் மொழியாக்கங்கள்தான்.

பொற்றைக்காட்டின் இரண்டொரு கதைகள் மொழிப்பெயர்த்தேன். இமயத்தில் வெளிவந்தது. இடையே, ‘நான்காவது காதல்’ என்றொரு கதை நானும் எழுதி இமயத்தில் வெளிவந்தது. அந்தப் பயிற்சிக்கால கதைகள் எதுவும் இன்று என் வசம் இல்லை. டெகாமரண் கதைகளைப் படித்து, அதன் சோரம் போகும் சீமாட்டிகளின் கூத்துக்கள் அடங்கிய, எட்டு பத்து கதைகளை மொழிபெயர்த்தேன். அவற்றை ‘பகுத்தறிவு’ எனும் மாத ஏடு பிரசுரம் செய்தது

‘விக்டர் ஹியுகோ பிரபல பிரஞ்சு நாவலாசிரியர். இவரது, ‘கழுமரம்’ என்ற குறுநாவல் மலையாளத்தில் கிடைத்தது. இதை, இரவெல்லாம் மண்ணெண்ணை விளக்கொளியில் அமர்ந்திருந்து தமிழாக்கினேன். இதனை இருகாரமும் நீட்டி வரவேற்று தொடரோவியமாக பன்னிரெண்டு இதழ்களில், பிளாக்செய்த தலைப்பு சிறப்புடன் வெளியிட்டது. சிறுகதை என்ற பத்திரிகை. இது 1955 வாக்கில் என்று நினைவு.

“இப்படி அப்படியாக தம்பி காப்பியடித்து எழுதிய கதை வெளிவந்து விட்டது. இனி அவனைப் பிடிச்சுக் கட்ட முடியாது. தமிழ் எழுத்தாளன் ஆயிட்டான்” என்று கேலியாக சிரித்தார்கள் அண்ணன்மார்கள். சுற்று வட்ட நண்பர்கள் கூட அப்படித்தான் கிண்டல் பண்ணினார்கள்.

தொடர்ந்து, மாப்பசானின் “கொழுப்பு உருண்டை” எனும் குறுநாவலை “விலைமகள்” என்ற தலைப்பிட்டு மொழிபெயர்த்தேன். பத்து இதழ்களில் ‘சிறுகதை’ தொடராக அதை வெளியிட்டது. பிறகு, சிறுகதை இதழில் தொடர்ச்சியாக, “மேல் நாட்டுச் சிறுகதைகள்’ என்ற தலைப்பில் ஒரு சிறு புத்தகம் வெளியிடும் அளவிற்கு கதைகள் எழுதி அருமை பெருமையாக வெளிவந்தன. ஒரு சில சொந்த கற்பனைகளை மேல்நாட்டு கதைகள் என்ற மேல்விலாசத்தில் நானும் எழுதிச் சேர்த்துக் கொண்டேன்.

யேசுகிறிஸ்துவின் முறை தவறிய ஜனனம் பற்றி மலையாளத்தில் வெளியாகி அன்றைய நாளில் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்த ஒரு கதையை நான் மொழிப்பெயர்த்தேன். ‘திராவிடன்’ வார ஏடு வெளியிட்டது. புரட்சிக்கருத்துகள் கொண்ட அன்றைய திராவிட இளைஞர்களிடமிருந்து பாராட்டுக் கடிதங்கள் நிறைய வந்தன. (ஹோ! நான் எவ்வளவு பெரிய ஆளாகிவிட்டேன் என்று சந்தோஷம் தாங்க முடியவில்லை).

பிறகு, மேல்நாட்டுப் புதினங்கள் பற்றி அரையும் குறையுமான மலையாளக் குறிப்புகளையும் மேற்கோளாக வைத்துக்கொண்டு கட்டுரைகள் எழுதினேன். அப்டன் சிங்களையர்,ஹெமிங்வே, எமிலி, ஜோலா, தாமஸ் மான் போன்ற எழுத்தாளர்கள் பற்றி தொடராக எழுதினேன். பஷீரின் மூன்று நவீனங்கள் என்ற தலைப்பில் வைக்கம் முகமது பஷீரின், “பிரேம லேகனம்,’ ‘விசப்பு’, மதிலுகள்’ என்ற பிரபலமான நாவல்கள் பற்றி எழுதிய விமர்சன கட்டுரைகள் திராவிடனின் ஐந்தோ ஆறோ இதழ்களில் தொடராக வந்தன.

திராவிட இயக்க சஞ்சிகைகள் ஆண்டுதோறும், ஆர்ட் பேப்பரில் கே.மாதவனின் மூவர்ண அட்டைப்பட அலங்காரத்துடன் வெளியிடும் பொங்கல் மலர்களிலெல்லாம் என் கதைகள் சிறப்பிடம் பெற்று வெளிவந்தன. அன்று முரசொலி பொங்கல்மலரில் இடம்பெறுபவர் அண்ணா, கலைஞர், கண்ணதாசன், நெடுஞ்செழியன் போன்ற பெருந்தலைவர்களே. அந்த முத்திரை எழுத்தாளர் வரிசையில் ஆ.மாதவன் என்ற பெயர் தவறாமல் இடம்பெற்றது.

ஐயபேரிகை என்ற கட்சிப்பத்திரிகை, 1958ல் நடத்திய சிறுகதைப் போட்டியில் எனது சிறுகதை முதல் பரிசுபெற்று ரூ 100/ அனுப்பி வைத்தது. புலவர் அறிவுடை நம்பி, கடலூரிலிருந்து நடத்திவந்த ‘செண்பகம்’ சஞ்சிகை, பொங்கல் மலரில் எனது கதையொன்றை வெளியிட்டு, “சிறுகதைச் செல்வர்” என்று பட்டமும் சூட்டி என்னைப் பெருமிதப் படுத்தியது.


முழுக்கவே திராவிட இயக்க எழுத்தாளராக ஆகிவிட்டீர்களா என்ன?

இல்லை. நான் அரசியலில் கவனம் குவிக்கவில்லை. என் பார்வையில் திராவிட இயக்கம் என்பது சமூக சீர்திருத்த இயக்கம் மட்டுமே. அந்த பார்வையிலேயே எழுதினேன். ஆகவே வேறு இதழ்களிலும் எழுதினேன் .திராவிட இயக்க பத்திரிகைகளுக்கு புறம்பாக அன்றைய இளைஞர் வட்டத்தின் கனவுப்பாலமாக இருந்த பத்திரிகை அரு.ராமநாதனின் “காதல்”. இந்தமாத ஏடு எனது ‘அர்ச்சனை’ சிறுகதைக்கு, முகப்போவியச் சிறப்பு செய்து வெளியிட்டது. காதலில் கதை வருவதென்றால் அன்றைக்கெல்லாம் பிரம்மசாதனையாக இளையோர் வட்டாரம் கருதுவதுண்டு.

[மேலும்]

முந்தைய கட்டுரைமிஷ்கினின் நந்தலாலா
அடுத்த கட்டுரைஇசை, கடிதங்கள்