விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் -2

அன்பு ஜெயமோகன் அவர்களுக்கு ,

வணக்கம்

முதன் முதலாக விஷ்ணுபுரம் விருது விழாவில் கலந்து கொண்டேன். வளரும் தரமான வாசகர் வட்டத்தை வளர்த்து வருகிறீர்கள். பாராட்டுக்குரிய விஷயம்’. தமிழ் சமூகம் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறது !

இரண்டு நாளும் இந்த இலக்கிய சந்திப்பு படைப்பாளி வாசகர் இருவரையுமே வளப்படுத்தும் வாய்ப்பாக அமைந்துள்ளது விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அன்பர்களின் ஏற்பாடுகள், இன்முக சேவை பசுமையாக நெஞ்சில் பதிந்துள்ளது

நெஞ்சார்ந்த நன்றி !

அன்பினில்

விசிறி சங்கர்

அன்புள்ள ஜெ

இரண்டு மகிழ்ச்சிகரமான நாட்கள்.

உதவிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. (செந்தில், ரங்கா, காளி பிரசாத், மீனாம்பிகை, கடலூர் சீனு மற்றும் பெயர் தெரியாத நண்பர்கள் பலர் ).

நான் எந்த வகையில் பங்கேற்க முடியுமென்றாலும், பளுவை பகிர முடியும் என்றாலும் தயவு செய்து தெரியப்படுத்துங்கள். வெறுமே வந்து விருந்தோம்பலை மட்டும் நுகர்ந்து சென்றதில் ஒரு guilty உணர்வு.

கேட்க நினைத்ததில், பகிர நினைத்ததில் சில மட்டுமே கேட்க முடிந்தது. பகிர முடிந்தது. இதையே ஆரம்ப படிக்கல்லாக கொண்டு, தொடர எண்ணம் இருக்கிறது. இரா.முருகன் சிறந்த நண்பராகிவிட்டார். நாஞ்சிலுடன் சற்று கூடுதலாகவே பேச முடிந்தது.

பாரதி மணி, பவா செல்லத்துரை, சிவப்ரகாஷ், வேணுகோபால், டாக்டர் சிவராம் முதலியோருக்கு வணக்கங்கள்.

தேவதேவனுடன் ஒரு நீண்ட உரையாடல். பாதி உறக்கத்திலும் பேசிக் கொண்டே இருப்பது போல உணர்வு.

நன்றி

அன்புடன்

முரளி

 

அன்புள்ள ஜெ

விஷ்ணுபுரம் விருதுவிழா நிகழ்வுகளுக்கு எல்லா வருடமும் வந்துகொண்டிருப்பவன் நான். தமிழகத்தில் மிகச்சிறந்த இலக்கியவிழா என்று இதைச் சந்தேகமில்லாமல் சொல்வேன். விழா மட்டும் அல்ல ஒரு கல்யாண வீடு போல இரண்டுநாட்கள் சேர்ந்து அமர்ந்து பேசி சிரித்து சாப்பிட்டு கடைசியில் ஒரு பெரிய நிகழ்ச்சி. இந்த வருடம் இருமடங்கு பெரியதாகவும் இருமடங்கு சிறப்பாகவும் அமைந்துவிட்டது. அரங்குகளில் ஒன்றுகூட சோடை போகவில்லை. நாஞ்சில்நாடன் நிகழ்ச்சி ஆரம்பத்திலேயே களைகட்டிவிட்டது. இந்த முறை நிகழ்ச்சிகள் உச்சநிலையில் இருந்ததற்குக் காரணம் பங்கெடுத்தவர்களின் நகைச்சுவை உணர்ச்சிதான். பாரதிமணி நாஞ்சில் பவா செல்லத்துரை இரா.முருகன் சு.வேணுகோபால் அத்தனைபேரின் நிகழ்ச்சிகளும் உச்சகட்ட நகைச்சுவையுடன் கொண்டாட்டமான அனுபவங்களாக இருந்தன. மறக்கமுடியாத நிகழ்ச்சி. மறக்கமுடியாத நாட்கள்

மகாதேவன்

ஜெ

இந்தவருடம் விஷ்ணுபுரம் விருதுவிழா நிகழ்ச்சிதான் சென்ற பத்தாண்டுகளில் நான்கலந்து கொண்ட மிகமிகச்சிறந்த இலக்கிய நிகழ்ச்சி மட்டும் அல்ல பொது நிகழ்ச்சி என்றே சொல்வேன். இரண்டு நாட்கள். முதல்நாள் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 11 மணிவரை 13 மணிநேரம். மறுநாள் 9 மணிக்குத்தொடங்கி மாலை 430 வரை ஏழரை மணிநேரம். அத்தனை நேரம் நிகழ்ச்சிகள் ஒரு கணம்கூடத் தொய்வடையவில்லை. ஒரு நிமிடம் கூட வீணாகச் செல்லவில்லை. இப்படி ஒரு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்ததை ஒரு பெரிய சாதனை என்றுதான் சொல்வேன். உங்கள் நண்பர்கள் ஒவ்வொருவரும் முழு ஈடுபாட்டுடன் நிகழ்ச்சியை அமைத்ததை நினைக்கையில் இப்படி ஒரு குழு வேறு உண்டா என்ற எண்ணம்தான் ஏற்படுகிறது

எஸ்.சிவக்குமார்

 

அன்புள்ள ஜெயமோகன்

விஷ்ணுபுரம் விழா இம்முறை ஒரு உச்சகட்ட வெற்றி சார். ஒவ்வொரு ஆண்டும் இதற்காகக் காத்திருந்து வந்து கொண்டாடி கண்கலங்கி நெகிழ்ச்சியுடன் திரும்பிச் செல்வதே வழக்கமாக ஆகிவிட்டது. ஆனால் இந்தமுறை கூட்டம் பலமடங்கு. அரங்கு போதாமல் இடம்மாற்றிக் கொண்டே இருந்தீர்கள். அதன்பின்னரும் அரங்குகள் போதாமல் நின்றுகொண்டே இருந்தார்கள். விவாத அரங்கிலேயே முந்நூறுபேர். விழாவில் ஆயிரம்பேர் அரங்கில். கீழே காணொளி இணைக்கப்பட்ட இடத்தில் முந்நூறு பேர். இத்தனைபேர் நின்றுகொண்டும் தரையில் அமர்ந்தும் ஒரு இலக்கிய விழாவை கொண்டாடுவதென்பது இதுவரை காணமுடியாத அனுபவம். அதுவும் வெற்றுப்பேச்சு சம்பிரதாயங்கள் ஆடம்பரங்கள் என்று ஒன்றுமே இல்லை. எந்தவகையான நாடகத்தனமும் இல்லை. அறிவுத்தீவிரம் மட்டும்தான். இதைப்போல ஒரு நிகழ்வு மனதிலிருந்து இறங்க இன்னும் பலவாரங்களாகும்

செல்வராஜன் சாம்

அன்புள்ள ஜெ சார்

விஷ்ணுபுரம் விருதுவிழா நிகழ்ச்சிகள் அனைத்துமே மிகச்சிறப்பாக இருந்தன. அத்தனை அரங்குகளும் கிளாஸிக் என்று சொல்லும்படி இருந்தன. ஒரு நிகழ்ச்சியை எப்படி நடத்தவேண்டும் என்று உங்கள் அமைப்பினரிடம்தான் பாடம் கேட்கவேண்டும். இப்படி ஒரு இலக்கியத் திருவிழாவை இனிமேல் வேறு எவராவது அமைக்கமுடியுமா என்பது ஒரு சவால்தான். அற்புதம்.

ஆனால் உச்சம் என்பது அந்த இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சி. இனி அதைப்போல எல்லா இடத்திலும் நிகழ்ச்சி செய்வார்கள் என நினைக்கிறேன். இலக்கியத்தை துளித்துளியாக அங்கே இங்கே என்று தொட்டுச்செல்லும் ஒரு பெரிய பரவசம் எனக்கு ஏற்பட்டது

முரளிதரன்

1

அன்புள்ள ஜெ

இந்த வருடம் விஷ்ணுபுரம் விருதுவிழாதான் இதுவரை நடந்ததிலேயே மிகச் சிறந்தது. கூட்டம் பலமடங்கு. பலரும் வெளியூரிலிருந்து வந்தவர்கள். ஆனால் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து ஒரு துளிகூட வீணாகாமல் கொண்டு சென்ற விதத்தால்தான் இந்த விழா சிறப்பாக அமைந்தது என நினைக்கிறேன். இது போல ஒரு நிகழ்ச்சி நூறு புத்தகங்களை வாசித்ததற்குச் சமானமானது

நிகழ்ச்சியின் உச்சகட்டம் என்றால் பாவண்ணனின் பேச்சுதான். நான் நெகிழ்ந்துபோய்விட்டேன்

பரவசத்துடன்

குமாரசாமி அருண்

 

படங்கள்

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் -1, விஷ்ணு
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் -3 ,ராகேஷ்