’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 70

[ 14 ]

உக்ரனின் குரல் மிக மெல்லிய ஊழ்க நுண்சொல்போல் முதலில் எழுந்தது. “அடிமுடி.” அவன் அதையே சொல்லிக்கொண்டிருக்க பைலனின் உள்ளத்தில் அச்சொல் குழம்பிப்பரவியது. அடிதல், முடிதல். அடித்து அடித்து அடிமையெனப் பணிந்து அடிதொழுது முடிந்தமைந்த முடி. முடிந்த முடி, முதலென முடியென எழுதல். அடியென அமைவென விழுதல். சொல் எங்கெல்லாம் சென்று தொடுகிறது! நச்சுக்கொடுக்கு இல்லாத சொல்லென ஏதுமில்லை. அத்தனை சொற்களும் ஊழ்க நுண்சொற்களே. மொழி என்பது ஓர் ஊழ்கவெளி. மொழிப்படலம். அடிமுடி காணாத அனல்வெளி. மொழியாகி நின்றிருக்கும் இதில் எல்லா சொற்களும் அடிமுடியற்றவை.

உக்ரனின் சொற்கள் நஞ்சுண்டு மயங்கி காலிடறி நடக்கும்  வெள்ளாட்டுநிரைகளென ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொண்டு ஒன்றை ஒன்று சார்ந்தும் சரித்தும் நிரைகொண்டன. நிரைகலைந்து மீண்டும் கண்டுகொண்டன. என்ன சொல்கின்றான்? அவன் விரல்கள் தவிப்பதை பைலன் கண்டான். வைசம்பாயனன் அவன் கையில் அரணிக்கட்டையை எடுத்து அளித்தான். அச்செயல் பைலனை மெல்லிய அதிர்வுக்குள்ளாக்கியது. அறியாப்பொருள்கொண்ட ஒரு செயல். மானுடர் கைகளை தெய்வங்கள் எடுத்துக்கொள்ளும் தருணம். எப்போதும் முள்முனைமேல் நிலைபிறழாதிருக்கிறான் இவ்விளையசூதன். சொல்லே அருளென்றாகுமா? சொல்லிலே விசும்பு வெளித்தெழலாகுமா?

அரணிக்கட்டையின் மென்மரப்பரப்பில் உக்ரனின் விரல்கள் ஓடலாயின. தொட்டுத்தொட்டு அவை தாவ மென்மரம் தோற்பரப்பென ஒலிகொண்டது. அறிதல்களுக்குரிய அடி. அடிதாளம். அறிந்தறிந்து செல்லும் முடி. முடிதாளம். “அவ்வண்ணம் எழுந்தான் அனலுருக்கொண்ட முதலோன்!” என்றான் உக்ரன். “அது அறியவொண்ணா அப்பழங்காலத்தில் நிகழ்ந்தது. ஒவ்வொரு நாளும் அவனை அழகுருவனாக தன் அருகே கண்டுகொண்டிருந்தாள் அன்னை. அருள்புரிக் கைகளுடன் அவனை தங்கள் தவத்திற்குப் பின்  எழுப்பினார்கள் முனிவர்கள். ஆட்டன் என அவனை அறிந்துரைத்தனர் கவிஞர்.”

ஆனால் அனைவரும் அறிந்திருந்தனர், அனலென்பது என்னவென்று. தங்கள் காதலை, தவத்தை, சொற்களைக் கடந்து அரைக்கணத்தின் ஆயிரத்தில் ஒரு மாத்திரையில் அடிமுடி அறியவொண்ணா அப்பெருங்கனலைக் கண்டு அஞ்சிப்பின்னடைந்து அறிந்தவற்றுள்  மீண்டமைந்தனர். அறியவொண்ணாமையும் அறிதலுமாக நின்றிருந்தது அது. அதன் நிழலில் வாழ்ந்தது விசும்பு.

அந்நாளில் ஒருமுறை விண்ணுலாவியாகிய நாரதர் பிரம்மனின் அவைக்கு சென்றார். அங்கு தன் தேவியுடன் அமர்ந்து படைப்பிறைவன் தாயம்  விளையாடிக்கொண்டிருப்பதைக் கண்டார். ஒரு முகம் சிரிக்க இன்னொன்று கணிக்க மற்றொன்று வியந்து நோக்கியிருக்க பிறிதொன்று ஊழ்கத்திலமைந்திருக்க ஒரு கையில் தாமரையும் மறுகையில் மின்படையும் கொண்டு கீழிருகைகளால் எண்களத்தில் பகடை உருட்டிய பிரம்மன் திரும்பி “வருக நாரதரே, இங்கு விசைமுற்றிய ஓர் ஆடல் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. வெற்றியும் தோல்வியும் வாள்முனை கொண்டுள்ளன” என்றார்.

“ஆம், இருவர் முகத்திலும் அதன் உவகை உள்ளது” என்றபடி அருகணைந்தார் நாரதர். பகடையை உருட்டிவிட்டு புன்னகையுடன் பின்சாய்ந்து “ஆம், ஆடுக!” என்றார் பிரம்மன். திரும்பி நாரதரிடம் கண்சிமிட்டி “ஒவ்வொரு பகடையும் ஒரு புதுப் படைப்பு. பகடை நின்றபின்னரே படைக்கப்பட்டது என்ன என நான் அறிவேன். காலம், இடம், பரு, பொருள் என நான்கு பக்கங்களின் ஆடல் மட்டுமே இப்பகடை” என்றார். உதடுகோட்டி பகடையின் எண்களை நோக்கிய கலைமகளைச் சுட்டி “என் படைப்புக்கு இவள் சொல்நிகர் வைக்கவேண்டும். அவள் சொல்லுக்கு நான் படைத்தளிக்கவேண்டும் என்பதே ஆடல்நெறி” என்றார்.

தேவி அக்களங்களை சுட்டுவிரலால் தொட்டு எண்ணி காய்களை கருதிக்கருதி நகர்த்திவைத்தாள். பின்னர் “ஆம்” என தலையசைத்து காய்நிரைத்து நிமிர்ந்து புன்னகைத்தாள். “நன்று” என்றார் நாரதர். குனிந்து நோக்கிய  பிரம்மன் “ஆம், அது தன் பெயரைப் பெற்றுவிட்டது” என்றார். “சொல்சூடுவதுவரை பொருள் நின்று பதைக்கிறது. சொல் அதன் அடையாளம் ஆனதும் பிற அனைத்து அடையாளங்களையும் அதற்கேற்ப ஒடுக்கி அதற்குள் நுழைந்து ஒடுங்கிக்கொள்கிறது. விந்தைதான்!” என்றார் நாரதர். “சொல்லெனும் சரடால் பொருள்வெளியுடன் இணைந்து தானில்லாதாகிறது” என்றாள் கலைமகள்.

“இனி உன் ஆடல்” என்றார் பிரம்மன். பகடையை கையில் எடுத்து மெல்லிய சீண்டலுடன் நகைத்து கலைமகள் அதை உருட்டினாள். புரண்டு விழுந்த எண்களை நோக்கி பிரம்மன் குனிய நாரதரிடம் “ஒலி, வரி, பொருள், குறிப்பு என நான்கு பட்டைகளால் ஆன புதிய ஒரு சொல், அதற்குரிய பொருளைப் படைத்தமைப்பது அவர் ஆட்டம்” என்றாள். தலையில் மெல்ல சுட்டுவிரலால் தட்டியபடி இடக்கையால் காயொன்றை நகர்த்தி தயங்கி பின்னெடுத்து மீண்டும் தயங்கி மீண்டும் வைத்தார் நான்முகன். மீண்டும் நகர்த்தியபோது முகம் தெளிந்தது. “இதோ” என்றார்.

“ஆம், பொருள் பிறந்து சொல்லென்றாகிவிட்டது” என்றார் நாரதர். “விந்தை, பொருள் தனக்கு முன்னரே இருந்த சொல்லை நடிக்கிறது.” மீண்டுமொரு ஆடலுக்கென அன்னை பகடையை எடுத்தபோது “மொழி தொடாத பொருளொன்று புடவியில் இல்லை என்பார்கள். மொழியிலிருந்து பொருளுக்கோ பொருளிலிருந்து மொழிக்கோ சென்றுகொண்டிருக்கிறது நில்லாப்பெருநெசவு” என்று தனக்குத்தானே என சொன்னார். “சொற்பொருள் என விரியும் இதை தன் ஆடையென்றாக்கி அணிந்து நின்றாடுகிறான் ஒருவன். அவனுக்கு சிவம் என்று சொல். அச்சொல்லுக்கு ஆடல் என்று பொருள். அச்சொல்லுக்கும் பொருளுக்கும் அப்பால் அவனொரு அடிமுடியிலி மட்டுமே” என்றார்.

பிரம்மன் திரும்பி நோக்கி “அடிமுடி காணவொண்ணா ஒன்று என்றால் அது பிரம்மம் மட்டுமே. அதுவன்றி பிறிதேதும் ஆக்கப்பட்டதும் அழிவுடையதுமேயாகும்” என்றார். நாரதர் “ஆம், அதையே நானும் எண்ணினேன். தங்கள் படைப்பிலிருந்து எழுந்தது புடவி. புடவியிலிருந்து எழுந்தது சிவம் என்பது தொல்கூற்று. அவ்வண்ணமெனில் அடியிலிருப்பது தங்கள் படைப்பே. அதன் சுழியத்தில் எழுந்த அனல் எப்படி அடியிலியாகும்?” என்றார். பிரம்மன் நகைத்து “ஆம், அதை நீர் சென்று கேளும்” என்றார். “சென்று கேட்கலாம், ஆனால் நான் விழைந்த வடிவில் அவன் வரும்போது அவ்வினாவுக்கு பொருளே இல்லை. அனைத்து உசாவல்களுக்கும் அப்பால் எழுந்து நிற்கும் அந்த அனற்பெருந்தூணிடமல்லவா அதை நாம் கேட்க வேண்டும்?” என்றார்.

கையில் பகடையுடன் புன்னகைத்து நின்ற தேவி “இவர் அறியாத ஒன்றுள்ளது, முனிவரே. படைப்பின் முன் படைத்தவன் மிகச்சிறியவன். தன்னை நிகழ்த்தி வளர்ந்தெழும் படைப்புக்கு வேரும் கிளையும் முடிவடைவதே இல்லை. எனவே அதற்கு மண்ணும் வானும் இல்லை” என்றாள். “அது நீ படைக்கும் சொல்லுக்கு. அது உளமயக்கு. நான் படைப்பவை காலமும் இடமும் கொண்ட இருப்புக்கள். அவை என் கைக்கு அடங்குபவை” என்றார். “நீங்கள் அதை அறியமுயல்கையிலேயே அது அறிபடுபொருள் என்றாகிவிடுகிறது. அறிவை மட்டுமே அறியமுடியும் என்பதனால் அனைத்து அறிபடுபொருட்களும் அறிவை அளித்து அறிவுக்கு அப்பால் நின்றிருப்பவை மட்டுமே” என்றாள் கலைமகள்.

அவள் சிரிப்பால் சீண்டப்பட்டு சினம்கொண்டு “அறிந்து வந்து உனக்கு அறிவென்பது பொருள் அளிக்கும் தோற்றம் மட்டுமே என்று காட்டுகிறேன்” என்றபடி பிரம்மன் எழுந்துகொண்டார். அவருடைய களிமுகம் சினத்தில் வெறித்தது. கணித்த முகம் தன்னுள் ஆழ்ந்தது. வியந்த முகம் பதைக்க ஊழ்கமுகம் விழித்தெழாதிருந்தது. “அளிகூர்ந்து அமருங்கள், படைப்பவரே!  ஒரு சொல்லாடலின்பொருட்டு நான் சொன்னது இது. சென்று அம்முடிவிலியை அடி தேடுவதென்பது வீண் வேலை. அத்துடன்…” என்றார் நாரதர்.

“அத்துடன் எனில்? சொல்க!” என்றார் பிரம்மன். “ஒருவேளை அடி சென்று தொடமுடியாவிடில்…” என நாரதர் தயங்க “வீண்சொல்!” என்று பிரம்மன் சீறினார். “அடியென அமைந்திருக்கிறது என் படைப்பு. சொல் எத்தனை வளர்ந்தாலும் ஆணிவேரிலிருக்கிறது விதையின் முதல் துளி. சென்று அதைத் தொடுவதொன்றும் எனக்கு அரிதல்ல. வருக, சென்று தொட்டுக்காட்டுகிறேன்” என்றார். நாரதர் உடனெழுந்து “நான் இதை எண்ணவில்லை, தேவி” என்றார். கலைமகள் சிரித்து “நன்று, சிலவற்றை அவர் கற்கலுமாகும்” என்றாள். “வந்து நான் என்ன கற்றேன் என்று சொல்கிறேன். இங்கு படைத்தவன் நானே, எனவே மூவரில் முதல்வனும் நானே” என்றபின் நாரதரிடம் “வருக!” என்று சொல்லி பிரம்மன் நடந்தார்.

விண்வெளியில் பிரம்மனுடன் நடக்கையில் நாரதர் “தாங்கள் அடிதேடலாகும். அடிதொடுவதும் உறுதி. ஆனால் அதற்கு முடியுமில என்று சில நூல்கள்  உரைக்கின்றன. விண்வடிவோன் அறியாத முடியென்று இருக்கலாகுமா என்ன?” என்றார். ”ஆம், முடியென்று ஒன்றெழுந்தால் அவர் விண்வடிவப் பேருடலிலேயே அது சென்றமையலாகும்” என்றார் பிரம்மன். “அவரிடம் முடி சென்று தொடமுடியுமா என்று கேட்போம்” என்ற நாரதர் “ஒருவேளை தொடமுடியாமலானால் அதையும் தாங்களே தொட்டுக்காட்டலாம்” என்றார். நகைத்து “ஆம், அடியும் முடியும் அறிந்தபின் அவன் எல்லையை நான் வகுப்பேன்” என்றார் பிரம்மன்.

அவர்கள் சென்றபோது நாரணனும் நங்கையும் பாற்கடலின் கரையில் கரந்தறிதலை விளையாடிக்கொண்டிருந்தனர். அவரை கண்மூடச்செய்துவிட்டு மணல்கூட்டி வைத்து தன் கையிலிருந்த அணி ஒன்றை திருமகள் ஒளித்துவைத்தாள். அவர் அவள் விழிநோக்கி சிரித்தபடி கைவைத்து அதை எடுத்தார். “எப்படி எடுத்தீர்கள்? கண்களை நீங்கள் மூடவில்லை” என்று அவள் சினந்தாள். “மூடிக்கொண்டுதான் இருந்தேன்…” என்றார் நாரணன். “மீண்டும்… இம்முறை நீங்கள் அறியவே இயலாது” என்றபடி அவள் தன் கணையாழியின் சிறிய அருமணி  ஒன்றை மண்ணில் புதைத்தாள். “சரி, விழிதிறவுங்கள்… தேடுங்கள்” என்றாள்.

அவர் அவளை நோக்கி நகைத்தபின் அந்த மணல்மேல் கையை வைத்தார். “இல்லை” என அவள் கைகொட்டி நகைத்தாள். மீண்டும் ஓர் இடத்தில் கை வைத்தார். “இல்லை… இன்னும் ஒரே முறைதான்… ஒரேமுறை… தவறினால் நான் வென்றேன்” என்றாள். அவர் கையை வைத்ததும் முகம் கூம்பி “ஆம்” என்றாள். அவர் எடுப்பதற்கு முன் தானே மணலைக் கலைத்து அருமணியை எடுத்தபடி “ஏதோ பொய்யாடல் உள்ளது. எப்படி உடனே கண்டுபிடிக்கிறீர்கள்?” என்றாள். நாரணன் சிரித்தார். அவர்களை நோக்கி பிரம்மனும் நாரதரும் வருவதைக் கண்டு தேவி முகம் திருப்பிக்கொண்டாள்.

அருகணைந்த நாரதர் “தேவி சினந்திருக்கிறார்” என்றார். “ஆம், அவள் மறைத்துவைத்தவற்றை நான் எளிதில் கண்டுபிடிக்கிறேன் என வருந்துகிறாள்” என்றார் நாரணன். நாரதர் “தேவி, செல்வங்களை மண்ணிலன்றி எங்கும் ஒளித்து வைக்கமுடியாது. அவரோ மண்மகளின் தலைவர்” என்றார். தேவி சினத்துடன் திரும்ப “அறிவிழிகொண்டவர் முன் எதை மறைக்கமுடியும் என சொல்லவந்தேன்” என்றார். பிரம்மன் “நாம் வந்ததை சொல்லும், முனிவரே” என்றார்.

“முழுமுதன்மைக்கு ஒரு அணு குறைவென்றே மும்மூர்த்திகளும் அமையமுடியுமென தாங்களும் அறிந்திருப்பீர்கள்” என்றார் நாரதர். “ஆனால் சிவப்படிவர் தங்கள் இறைவன் அடியும்முடியுமற்ற பெருநீட்சி என எழுந்தவர் என்கிறார்கள். அது ஆணவம் என அனைத்தையும் படைத்தவர் எண்ணுகிறார். அடி தேடிக் கண்டடைந்து இவ்வளவுதான் என அவரை வகுத்துரைக்க சென்றுகொண்டிருக்கிறார்.” நாரணன் “முடி தேடி நான் செல்லவேண்டியதில்லை. அது என் அடிவரை வந்து நின்றிருக்கும் என அறிவேன்” என்றார். “ஆம், அதை அறியாதோர் எவர்?” என்றார் நாரதர். “ஆனால் ஆற்றப்படாதவை அனைத்தும் விழைவுகளும் கூற்றுகளுமென்றே பொருள்படும் என்று நான் சொல்லவில்லை என்றாலும் நூலோர் பின்னர் சொல்லக்கூடும்.”

“அதை ஆற்றிவிடுகிறேன். அவன் முடிதொட்டு மீள்கிறேன்” என்று விஷ்ணு எழுந்தார். “நன்று, ஆனால் முன்னரே நீங்கள் மூன்றடியால் அளந்த விண் அது. அதை மீண்டும் அளப்பதில் விந்தை என்ன இருக்கிறது? அன்று அளக்காது எஞ்சியது அவுணன் சென்றமைந்த ஆழம். அதை அளந்து மீள்கையில்தான் உங்கள் மூன்றாம் அடியும் முழுதமைகிறது” என்றார் நாரதர். பிரம்மன் ஏதோ சொல்ல முயல அதை முந்தி “பருவுருக்கொண்டவை அனைத்தும் நான்முகன் படைப்பென்று அனைவரும் அறிவர். பரு அனைத்திலும் உறையும் விண்ணையும் படைத்தவர் முழுதளந்துவிட்டால் அதன்பின் அவரை முனிவர்கள் முழுமுதலுக்கு நிகர் என்றே போற்றுவர்” என்றார் நாரதர்.

தேவி புன்னகையுடன் “இங்கு கைப்பிடி மண்ணை அகழ்ந்து மணி தேர்வதுபோல் அல்ல அது. அடியிலா ஆழம். அங்கே அனலென அகழ்ந்து ஆழ்ந்துசெல்கிறது அவர் அடி என்கிறார்கள்” என்றாள். சினத்துடன் திரும்பி “அளந்து மீள்கிறேன். அது நான் என்னையும் அறிந்துகொள்ளுதலே” என்றார் விஷ்ணு. “நன்று, இதோ நூலோர் நவின்று மகிழும் ஒரு நூலுக்கான கதை” என்று நாரதர் சொன்னார்.

அவர்கள் கயிலாய மலைக்குச் சென்றபோது அங்கே தன் இரு இளமைந்தருடன் ஆடிக்கொண்டிருந்தாள் அன்னை. “தேவி, உங்கள் கொழுநன் எங்கே?” என்று நாரதர் கேட்டார். “இங்கு இவர்களின் தந்தையென இருப்பவர் நினைத்தபோது எழுந்தருள்வார். அயனும் அரியும் சேர்ந்து தேடுபவர் எவரென நான் அறியேன். அவரை நீங்களே கண்டடைக!” என்றாள் தேவி. “திசையிலியின் மையத்தில் அடியிலியில் தொடங்கி முடியிலியில் ஓங்கி நின்றிருக்கும் அனலே அவர் என்றனர் நூலோர். அடிமுடி காண சென்றுகொண்டிருக்கிறார்கள் இவர்கள். அவர்கள் காண்பதைக் காண சென்றுகொண்டிருக்கிறேன் நான்” என்றார் நாரதர்.

“நானும் உடன்வருகிறேன்” என தன் வேலுடன் எழுந்தான் இளைய மைந்தன். “அது முறையல்ல, மைந்தா” என்றாள் அன்னை. “எந்தையென வந்தவரை நான் இன்றுவரை முழுதாகக் கண்டதில்லை.” தேவி அவனைத் தடுத்து “தனயர் தந்தையரை முழுதுறக் காணலாகாது, மைந்தா. அவர் அளிக்கும் முகமே உனக்குரியது” என்றாள். உணவுண்டுகொண்டிருந்த மூத்த மைந்தன் “ஆம், அன்னை சொல்லியே தந்தைமுகம் வந்தமையவேண்டும்” என்றான்.

அவர்கள் செல்லும் வழியில் விண்கடல் கரையோரம் அமர்ந்து தன் சிறு கமண்டலத்தில் மணலை அள்ளி அப்பாலிட்ட அகத்தியரைக் கண்டனர். “என்ன செய்கிறீர்கள், குறுமுனியே?” என்றார் நாரதர். தலைதூக்கி நோக்கியபின் அதே கூருள்ளத்துடன் மணல் அள்ளிக் கொட்டியபடி “அளந்துகொண்டிருக்கிறேன்” என்றார் அகத்தியர். “கடல்மணலையா? நன்று” என நகைத்தார் பிரம்மன். “அதை அளந்து முடித்துவிட்டு கடலை அளப்பீர் அல்லவா?” என்றார் விஷ்ணு. “இல்லை, நான் அளந்துகொண்டிருப்பது என்னை. எனக்கு எப்போது சலிக்கிறதென்று பார்க்கிறேன்” என்றார் அகத்தியர். “சலிக்காத ஒன்றை அளக்கச் செல்கிறோம். உங்கள் கமண்டலத்துடன் வருக!” என்றார் நாரதர். அவர்  ஆவலுடன் எழுந்து “செல்வோம்… நான் திரும்பிவந்து இதை அளக்கிறேன்” என்றார்.

[ 15 ]

ஆசிரியனை அளக்க நான்கு மாணவர்கள் கிளம்பிச்சென்றனர். ஒருவர் தன் ஆணவத்தால், பிறிதொருவர் தன் அறிவால், மூன்றாமவர் தன் ஆர்வத்தால் சென்றனர். நான்காமவர் சென்றது அளந்து விளையாடும்பொருட்டு. பதினான்கு வெளிகளை, இறத்தல், நிகழ்தல், வருதல், நுண்மை, இன்மை எனும் ஐந்து காலங்களை,  காலம், நியதி, கலை, வித்தை, இராகம், புருஷன், மாயை, துரியம் என்னும் எட்டு தன்னிலைகளை அவர்கள் கடந்துசென்றனர். நால்வரும் அப்பால் அப்பாலெனச் சென்று அவர்கள் உற்றதெல்லாம் அகன்றபின் கடுவெளியின் மையப்பெரும்பாழில் முழுமுதன்மை என எழுந்த அனல்பேருருவைக் கண்டு நின்றனர்.

“நான் சென்று அடியளந்து மீள்கிறேன்” என்றார் பெருமாள். தன் உருப் பெருக்கி கொடுந்தேற்றையும் மதவிழியும் கொண்டு பன்றி வடிவெடுத்தார். அவ்வுருக் கண்டதும் நீரென புகையென நெகிழ்ந்து அவரை தன்னுள் அணைத்துக்கொண்டாள் புவிமகள். “நான் விண்சென்று முடிதொட்டு மீள்கிறேன்” என்று எழுந்தார் பிரம்மன். “எங்கு செல்கிறார்கள்?” என்றார் அகத்தியர். “அளந்துவர” என்றார் நாரதர். “விளையாடும்பொருளை ஏன் அளக்கவேண்டும்? அளந்தால் ஆட்டம் முடிந்துவிடுமே?” என்றார் குறுமுனி.

 KIRATHAM_EPI_70 (1)

காலமிலியில் இரு தெய்வங்களும்  பறந்தும் அகழ்ந்தும் சென்றனர். மண்ணைக் கடந்து ஏழு ஆழுலகுகளைக் கடந்து மொழியின்மை, வடிவின்மை, ஒளியின்மை, விழியின்மை, அகமின்மை, நுண்மையின்மை, இன்மையின்மை எனும் ஏழு இருளுலகுகளையும் கடந்து சென்றுகொண்டே இருந்தார் விஷ்ணு. அங்கும் முடிவிலாது சென்றது அனலுருவின் அடி. மேலும் மேலுமென செல்லச்செல்ல அவர் உள்ளம் ஒடுங்கிக் கூம்பி குறுகி ஊசியென்றாகி நீண்டு மேலும் மேலும் கூர்ந்து இன்மையென்றாகியது. இன்மையென இருந்தது. அந்த முழு விடுதலையை அடைந்து மீண்டதும் அது என்ன என திகைத்தார்.  அப்பெருநிலை கலைய எழுந்த முதல் அதிர்வின் ஓசையையே அந்நிலைக்கான பெயரெனச் சூட்டினார். “தம!”

மேலெழுந்து சென்றுகொண்டே இருந்த பிரம்மன் செல்லுந்தோறும் விரிந்தார். ஒளியால் ஒலியால் திசையால் மையத்தால் இருப்பால் இன்மையால் நுண்மையால் ஆன வான்களைக் கடந்தார். வானென  விரிந்து அகன்று பரவி மெலிந்து இலாதானார். பின் மீண்டபோது தான் கண்டடைந்தது என்ன என திகைத்தார். தன் படைப்புக்கற்பனை அனைத்தும் பெருக நான்கு கைகளாலும் வெளிதுழாவினார். “எழுதழலென எழுக ஒரு மலர்!” என்றார். அவர் முன் செம்மஞ்சள் ஒளியுடன் வந்து நின்றது செந்தாழை. அதன் ஒரு மடலை எடுத்துக்கொண்டு கீழிறங்கி வந்தார்.

அவர்களை நோக்கி ஓடிவந்த நாரதர் “திருமகள் தலைவனே, நீங்கள் அறிந்ததென்ன?” என்றார். “அறியவொண்ணாமையை அறிந்து ஓர் ஊழ்கநுண்சொல் என்றாக்கி கொண்டுவந்தேன்” என்றார் நாரணன். “அது தம என்னும் பொருள்பெருகும் ஒலி.” நாரதர் வணங்கி “ஆம், முடிவிலிக்கு ஒரு மந்திரம் நிகர். நீங்கள் அறிந்து மீண்டீர் என ஒப்புகிறேன்” என்றார்.

பிரம்மனிடம் திரும்பி “தாங்கள் அறிந்ததென்ன, கலைமகள் கொழுநரே?” என்றார் நாரதர். “கூறமுடியாமை கவிஞனிடம் அணியென்று மலர்கிறது. இது பெருந்தழலின் ஒரு கொழுந்து” என்று தாழைமலர் மடலைக் காட்டினார். “இது வெம்மையும் வீறும் இல்லாத தழல். அதன் அழகு மட்டுமே ஆகி என் கையில் அடங்குவது.” நாரதர் கைகூப்பி “ஆம், பொருந்தியெழும் ஒப்புமை ஒன்று பொருளுக்கு நிகர். முடியிலாதெழும் அனலே இம்மலர். நீங்களும் அறிந்துமீண்டீர்” என்றார்.

நாரதர் தலைநிமிர்ந்து நோக்கி “அலகிலியே, அறியமுடியாமை அறிந்து மீண்டுளார்கள் இருவரும். இவை மெய்யென்றால் அவ்வாறே ஆணையிடுக!” என்றார். இடியோசை எழுந்து “ஆம் ஆம் ஆம்” என முழங்கியது. “நாங்கள் அறியுமொரு  உருக்கொண்டெழுந்து அருள்புரிக!” என்றார் நாரதர். இடியோசை நகைப்பென்று ஆகி மறைந்தது. அகத்தியரிடம் திரும்பி “நீங்கள் சென்று முயல்க!” என்றார் நாரதர். தன் கமண்டலத்துடன் சென்று எதிரே நின்றிருந்த எரியெழுகையை கமண்டலத்தில் அள்ளி வந்து அவர்களிடம் காட்டினார் குறுமுனி. ஓங்கி நிறைந்திருந்த அனல் அங்கே குளிர்ந்த சிற்றலைகளுடன் ஒளிகொண்டிருந்ததை அவர்கள் நால்வரும் கண்டனர்.

“காலநாகக் குழவி சுருண்டமைந்த தாழைமடலுக்கு வணக்கம். தன் வாலை தான் கவ்வி ஒலிக்கும் ஊழ்கநுண்சொல்லுக்கு வணக்கம். ஆம், அவ்வாறே ஆகுக!” என்று உக்ரன் சொல்லி முடித்தான். அவனைத் தாங்கி நின்றிருந்த உள்ளங்கை ஒன்று விலகியதுபோல மண்ணில் விழுந்து உடல்வளைத்து கைத்தாளமென ஒலித்த அரணிக்கட்டைமேல் முகம் பதித்து அவன் கிடந்தான். மெல்லிய கரிய உடல் அப்போதுதான் முட்டையை உடைத்து வெளிவந்த குஞ்சுபோல ஈரத்துடன் மெல்ல விதிர்த்து உதறிக்கொண்டிருந்தது. ஜைமினி எழுந்துசென்று அவனைத் தொட்டபோதும் எம்பி விழுந்தது. அவன் உக்ரனை மெல்லத்தூக்கி எடுத்தான். அவன் கைகளும் கால்களும் விரைத்து இழுபட்டிருக்க வாயோரம் மென்னுரை வழிந்தது.

உக்ரனை தோளில் சாய்த்தபடி ஜைமினி வெளியே செல்வதை அவர்கள் நோக்கி அமர்ந்திருந்தனர். ஜைமினியின் தோளில் எச்சில் வழிந்தது. மெல்லிய குரலில் உக்ரன் ஏதோ சொன்னான். இருமுறை அவன் குழறிய பின்னரே அவன் சொல்வதென்ன என அவனுக்குப் புரிந்தது. உக்ரன் “தரமாட்டேன்” என்றான். மெல்ல நெளிந்தபடி மீண்டும் “யாருக்கும் தரமாட்டேன்” என்றான். “அது என் அரணிக்கட்டை”

ஜைமினி “ஆம், எவருக்கும் அதை அளிக்கவேண்டியதில்லை” என்றான். உக்ரன் விழித்துக்கொண்டு எழுந்து தலைதிருப்பி அவனை பார்த்தான். சிறிய சுட்டுவிரலைக் காட்டி “நான் அதில் தாளமிடுவேன்” என்றான். ஜைமினி “ஆம், நீங்கள் நெருப்பில் தாளமிடுபவர், மகாசூதரே” என்றான்.

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழா – இரா .முருகன் உரை
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழா, சுப்ரபாரதிமணியன் பேச்சு