விஷ்ணுபுரம் விருது, விழா

மதிப்பிற்குரிய திரு. ஜெயமோகன் அவர்களுக்கு ! விஷ்ணு புரம் இலக்கிய விருது விழா பற்றிய விபரங்களையும் அழைப்பிதழையும் கண்ணுற்றேன். போற்றத்தக்கதொரு விஷயத்தை முன்கைஎடுத்து நடத்திச் செல்கிறீர்கள்.

நல்லதொரு முயற்சி என்று சாதாரணமாக பாராட்டிவிட்டு போவது மிக அபத்தமான செயலென்று அறிவேன். இதன் பின்னணியில் உள்ள உங்களின் தீவிரமான உழைப்பை என்னால் ஊகிக்க முடிகின்றது.இந்த சந்தர்ப்பத்தில் என்னால் என்ன ஆகக்கூடும் என்ற எண்ணம் எழுகின்றது. உங்கள் ஒவ்வொரு முயற்சியும் வெற்றி பெற பிரார்த்திப்பது அல்லாது வேறு என்ன செய்ய? இந்த விழா சிறப்பாக நடைபெற சளையாத உங்கள் உழைப்பு தொடர மனதார வாழ்த்துகின்றேன்.

வாழ்த்த எனக்கு என்ன தகுதி என்று கேட்பீர்களேயானால் பெருமுயற்சியின் பின் விஷ்ணுபுரம் நூலை விலை கொடுத்து வாங்கியதும், இரண்டு முறை வாசித்துவிட்டு மூன்றாம் வாசிப்பு கருதி என் படுக்கைக்கு அருகில் வைத்திருப்பதும், அதைப்பற்றி நண்பர்களிடம் சிலாகிப்பதும், உங்கள் எழுத்துகளை தேடித் தேடி (இணையத்தில்) வாசிப்பதுவும் குறைந்த பட்ச தகுதியாக கருதிக்கொண்டு இந்த விழா இனிதே நடந்தேற வாழ்த்துகின்றேன்.

மேலும் நிகழ்ச்சிக்கு மலையாள எழுத்தாளர் புனத்தில் குஞ்ஞப்துல்லா தலைமை ஏற்பதாகவும் கூறி அவரைப்பற்றியும் அவரது நாவலான ஸ்மாரக சிலகள் பற்றியும் இரு சுட்டிகள் கொடுத்திருந்தீர்கள். அதில் ஒன்றை சுட்டியபோது மீசான் கற்கள் பற்றி 03 -02 -2007 ல் நீங்கள் எழுதியிருந்த ஆக்கத்தை வாசிக்கக் கூடியதாய் இருந்தது. அதில் பூக்கோயா தங்ஙள், ஆற்றபீவி,குஞ்சாலி, எரமுள்ளான் என்ற பெயர்களை வாசிக்கும் போது இவையெல்லாம் ஏற்கனவே அறிமுகமுள்ள பெயர்களாய் உள்ளனவே என்று யோசிக்கலானேன். பிறகு தான் நினைவிற்கு வந்தது நான் பார்த்த ஒரு மலையாளப்படத்தில் இப்பெயர்கள் வருகின்றன என்று. மீசான் கற்கள் பற்றி நீங்கள் எழுதியிருந்ததை முழுவதுமாக வாசித்துவிட்டு பின் திரும்பவும் அப்படத்தைப் பார்த்தேன். ஆமாம், அம்மலையாள திரைப்படத்தின் பெயர் ராமானம். எம்.பி சுகுமாரன் நாயர் என்பவர் இயக்கியிருந்தார். திரைப்படத்தின் எழுத்தோட்டத்தில் “പുനത്തില്‍ കുഞ്ഞബ്തുള്ളയുടെ “സ്മാരക ശിലകള്‍ ” എന്ന നോവലിന്റെ ചലച്ചിത്രാവിഷ് കാരം ” என்று முதலிலேயே போட்டுவிடுகின்றார்கள். என்னுடைய பிரியத்துக்குரிய ஜகதி ஸ்ரீகுமார் தங்ஙளாக வருகிறார். வாங்கு விளிக்கும் எரமுள்ளானாக இந்திரன்ஸ்.மாமுகோயா டீக்கடைக்காரராக .மற்ற நீலி ,கனாரன் ,குஞ்சாலி,ஆற்ற பீவி குதிரைக்காரன் அத்ராமான் பாத்திரங்களுக்கு புதிய நடிகர் நடிகையர். நாவலின் நுணுக்கங்களை இரண்டரை மணி நேரம் ஓடும் ஒரு படத்தில் கொண்டுவருவது சிரமமான காரியமே. எனினும் அனுபவித்து பார்க்க முடிகின்றது. இப்போது எப்பாடுபட்டேனும் மூல நாவலை வாசிக்க மனம் ஆவல் கொள்ளுகின்றது.

ஜெயமோகன் அவர்களே ! மீண்டும் , உங்கள் விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா இனிதே நடைபெறவும் -அதை முன்னின்று நடத்தும் உங்கள் முயற்சி வெற்றி பெறவும் -உங்களுக்கு தோள் கொடுக்கும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தினருக்கும் – விருது பெறவிருக்கும் எழுத்தாளர் ஆ. மாதவன் அவர்களுக்கும் என் உளம் நிறைந்த நல்வாழ்த்துகளைத தெரிவித்துக்கொள்கின்றேன் நன்றி.

அன்புடன், லிங்கம் ( கானடா )

அன்புள்ள லிங்கம்

உங்கள் வாழ்த்துக்கு நன்றி. விழா மாதவனுக்கு நாங்கள் செய்யும் கௌரவமாக அமையும் என நினைக்கிறேன்

ஜெ

அன்புள்ள ஜெ

விஷ்ணுபுரம் விருது பற்றிய அறிவிப்பை வாசித்தேன். அளவிலா ஆனந்தம் அடைந்தேன். ஓர் எழுத்தாளார் என்ற நிலையில் இருந்து நீங்கள் இலக்கிய சக்திகளை ஒருங்கிணைக்கக்கூடியவராக ஆகியிருப்பதை காண்கிறேன். ஏனென்றால் நீங்கள் இலக்கியப்படைப்புகளை மட்டும் முன்வைக்கவில்லை. இலக்கியக்கருத்துக்களை உருவாக்குகிறீர்கள். ரசனையை வடிவமைத்துக்கொண்டிருக்கிறீர்கள். ஆகவேதான் வாசகர்கள் உங்களைச்சுற்றி அமைகிறார்கள்

சொல்லப்போனால் இலக்கியமுன்னோடிகளை கௌரவிப்பது முதலிய எதையாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் எல்லாருக்கும் உண்டு. எப்படிச் செய்வது என்றுதான் தெரிவதில்லை. அதற்கு நீங்கள் வழிகாட்டியாக இருக்கிறீர்கள். உங்கள் மேல் அன்பு கொண்ட உங்கள் வாசகர்களை இந்த வகையில் திருப்பி விட்டிருக்கிறீர்கள். இது ஒரு முக்கியமான நல்ல விஷயம்

என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

அன்புள்ள

கண்ணன்
சென்னை

அன்புள்ள கண்ணன்,

என் எழுத்தில் ஆர்வம் கொண்ட, அதன்வழியாக தனிப்பட்ட முறையில் என் நண்பர்களாக அமைந்த ஒர் இலக்கியவாசகர் வட்டம் அமைந்தபோது அந்த நண்பர்களை பொதுவாக இலக்கியத்துக்கு பங்களிப்பாற்றும் ஓர் அமைப்பாக ஆக்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. நாம் நம் இலக்கிய முன்னோடிகளை கௌரவிப்பதென்பது நம் முன் உள்ள இலக்கியம் என்ற அமைப்பை , இலக்கிய ரசனை என்ற மதிப்பீடை கௌரவிப்பது மட்டுமே

ஜெ

அன்புள்ள ஜெ

என்னுடன் பணிஆற்றும் ஒரு நண்பர் இருக்கிறார். திமுக ஆதரவாளர். அதனால்தானோ என்னவோ உங்களை பிடிக்காது. உங்கள் இலக்கிய எழுத்துக்கள் எதையும் வாசித்ததில்லை. ஆனால் உங்களைப்பற்றிய செய்திகளை மட்டும் இணையத்திலே தேடித்தேடி வாசிப்பார். அதைப்பற்றி கோபமாக பேசிக்கொண்டிருப்பார். அவரது பேச்சை நான் பொதுவாக பொருட்படுத்துவதில்லை. படித்துப்பார் என்று மட்டும் சொல்லிவிட்டு விட்டுவிடுவேன்.

விஷ்ணுபுரம் விருது பற்றிய அறிவிப்பு வந்தபோது அவர் கொதித்துப்போனார். நீங்கள் ஒரு ‘சிறிய’ எழுத்தாளர் என்றும் ஆ.மாதவன் என்ற ‘பெரிய’ எழுத்தாளருக்கு விருதுகொடுத்து உங்களை பிரபலமாக்கிக் கொள்ள முயல்கிறீர்கள் என்றும் சொன்னார்

அப்போது கூட இருந்த இன்னொரு மூத்த நண்பர் நீங்கள் அசோகமித்திரனையும் ஆ.மாதவனையும் இப்போது ஏதோ காரணத்துக்காக தூக்குகிறீர்கள் என்றும் முன்பு சுந்தர ராமசாமியை தூக்கினீர்கள் இப்போது தாக்குகிறீர்கள் என்றும் சொன்னார். இதைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாதாகையால் நான் பதில் சொல்லவில்லை. இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

சிவராம்
சென்னை

அன்புள்ள சிவராம்,

உங்கள் கடிதம் போல சில கடிதங்கள் வந்தன. தமிழ்ச்சூழலை நன்கறிந்த எனக்கு இதைப்போல சில எரிச்சல்கள் உருவாகாமல் இருந்தால்தான் ஆச்சரியமும் ஏமாற்றமும் ஏற்படும்.

பொதுவாக இந்தக்குரல்களுக்கு பதிலளித்து இவற்றுக்கு தகுதியில்லாத கவனத்தை உருவாக்கி அளிக்க வேண்டாமென நினைக்கிறேன். ஆகவே பொருட்படுத்துவதில்லை. அறிமுகமில்லாத இளம் எழுத்தாளர்கள் புகழ்பெறுவதற்கு இப்படி ஒரு வழி இருக்கிறதென்றால் எல்லாரும் இதைச் செய்யலாமே. இலக்கியமுன்னோடிகள் இருட்டில் இருப்பது குறையும்

ஆ.மாதவனைப்பற்றியும் அசோகமித்திரனைப்பற்றியும் நான் இருபத்தைந்தாண்டுகளாக எழுதி கவனப்படுத்தி வருகிறேன். அசோகமித்திரனுக்கு நான் அறுபதாண்டுமலர் வெளியிட்ட காலம் முதல் இன்று வரை எழுதிவருகிறேன். சுந்தர ராமசாமியைப்பற்றியும் அப்போது முதல் இப்போது வரை எழுதி வருகிறேன். ஆ.மாதவன் அசோகமித்திரன் பற்றி பாராட்டுக்களை எழுதும்போது விமர்சனங்களையும் சொல்லியிருக்கிறேன். சுந்தர ராமசாமி பற்றியும் தான்

இவை அனைத்துமே இப்போது அச்சில் கிடைக்கின்றன. வாசியுங்கள்.பொதுவாக இம்மாதிரியான வம்புகளை பேசுபவர்கள் தங்கள் மீதான அடிபப்டை நம்பிக்கை தகர்வதைக்கூட கவனிக்காமல் பேசுகிறார்கள் என்பது எனக்கு எப்போதும் ஆச்சரியமளிக்கிறது. வெறுப்பு அவர்கள் கண்களை மறைக்கிறது. பொய்யர்களாகவும் கோமாளிகளாகவும் ஆகவைக்கிறது

ஜெ

முந்தைய கட்டுரைசோழன், கடிதங்கள்
அடுத்த கட்டுரைவாசிப்பு கடிதங்கள்