பாஷோவின் தவளை -ராஜா

IMG_3201

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ,

 

 

 

“To see a World in a Grain of Sand

And a Heaven in a Wild Flower

Hold Infinity in the palm of your hand

And Eternity in an hour”

 

 

 

வண்ணதாசனை பற்றி படிக்கும்பொழுதெல்லாம் இந்த கவிதை வரிகள்

நினைவுக்கு வந்து விடுகிறது. ஒரு கைபிடி மணலில் உலகத்தையே

காண்பித்து விடுகிறார் வண்ணதாசன். திருவிளையாடலில் ஞானப்பழம் வாங்க முருகர் மயிலேறி உலகை சுற்றி வர கிளம்புகிறார். விநாயகரோ அம்மையப்பனை சுற்றி வந்து வணங்கி பழத்தை வெல்கிறார்.

 

 

உங்களின் பயண கட்டுரைகளை படித்து விட்டு ஹம்ப்பி, பேலூர் , ஹலிபேடு ,சிரவண பெலகுளா என்று அலைந்து திரிந்ததுண்டு. திருவண்ணாமலையை இடமும் வலமுமாக பல முறை சுற்றியிருக்கிறேன். அருமையான அனுபவங்கள் அவை. எஸ். ராமகிருஷ்ணனின் தேசாந்திரி படித்து விட்டு சைதாப்பேட்டை சின்னமலை செயின்ட் தாமஸ் ஆலயம் சென்று இமய மலை நோக்கி பல மணி நேரம் நின்றிருக்கிறேன். வடலூர் சென்று பண்டாரங்களுடன் அமர்ந்து சாப்பிட்டேன்.செங்காந்தள் மலரை தேடி ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் என்று அலைந்தேன்.சமீபத்தில் உங்களுடைய ழரைப்பொன்  படித்துவிட்டு ஏற்றமானுர் சென்று சாதனந்த் கையை பிடித்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. அந்த மாதிரி நேரங்களில் தான் வண்ணதாசன் நடுவில் புகுந்து கை குலுக்குகிறார். ஒரு நண்பன் போல தோளில் கை போட்டு புன்னகையுடன் ஒரு சிறு நடைக்கு அழைத்து செல்கிறார்.

 

 

 

வண்ணதாசனின் “அகம் புறம்” படித்ததிலிருந்து அகமும் புறமும் அழகாக இணைந்தது.ஒரு நத்தை போல், எனது அனைத்து பயணங்களிலும் என் முதுகில் வீடு இருப்பதை உணர்ந்தேன். சாலையோரங்களில் பூக்கும் பெயர் தெரியாத பூக்களில் பிரபஞ்சத்தை காண கற்றுக்கொண்டேன்.  “Look Within” என்று புத்தர் சொன்னதும், “The journey itself is my home” என்று பாஷோ சொன்னதும் தெளிவாக புரிய தொடங்கியது .

 

 

வண்ணதாசன் நம் தெருவில் இருக்கும் வேப்ப மரங்களை, அது உதிர்க்கும் வேப்பம்பூக்களை, அதை பெருக்கும் மனிதர்களை, அம்மனிதர்களின் வாழ்வுகளை என்று வரிசையாய் படம் பிடித்து நம்மை நெகிழச்  செய்துவிடுகிறார். சமயலறையில் இருக்கும் ஊறுகாய் ஜாடியின் வழவழப்பில் கோஹினூர் வைரத்தை காண்பித்து விடுகிறார். அதே சமயம் கீறல்கள் நிறைந்த டம்ளர் மூலம் துயரங்களையும் சொல்லி விடுகிறார். மொட்டை மாடியில் சிரித்துக்கொண்டே கூழ்வற்றல் போடும் பெண்களின் உலகத்தை அண்ணாந்து பார்த்து வியக்க செய்கிறார். மார்கழி மாத வண்ணக்கோலங்களை, சாணியில் சிரிக்கும் பூக்களை மிதிக்காமல் ரசித்து செல்ல நமது மனங்களை பக்குவ படுத்திவிடுகிறார்.

 

 

 

நகர இரைச்சலில் கூட்டம் நிறைந்த பேருந்துக்குள் நுழையும் ஒரு வண்ணத்துப்பூச்சி அனைவரையும் தவிர்த்துவிட்டு வண்ணதாசன் தோளில் அமர்ந்து கொள்கிறது . வண்ணதாசன் இருக்கும் வீதியில் நுழையும் யானை, அவருக்காக தான் வாழ்ந்த வனத்தையே அவர் வீட்டின் வாசலுக்கு கொண்டு வந்து நிறுத்தி விடுகிறது. ரயில்கள், தண்டவாளங்கள், தண்டவாளத்தை தாண்டுபவர்கள் என்று வண்ணதாசனின் கவனிப்பும் விவரிப்பும் நுட்பமானவை நுணுக்கமானவை.  மனித மனங்களை தண்டவாளங்கள் இணைக்கவும் செய்கிறது, பிரித்தும் விடுகிறது. இந்த இரண்டையுமே அழகாகவும் ஆழமாகவும் சொல்லிவிடுகிறது வண்ணதாசனின் எழுத்துக்கள்.

 

 

வண்ணதாசனின் சிறுகதைகளின் ஆத்மாவை சொல்வது , கதைக்குள் எங்கோ ஒளிந்திருக்கும் ஒற்றை வரியோ, அல்லது ஒரு காட்சியோ, சில சமயம் ஒரே ஒரு வார்த்தையோ என்று தோன்றுகிறது. முதல் வாசிப்பிலோ இரண்டாவது வாசிப்பிலோ அதை கண்டுபிடித்து விட்டால் வாசக மனங்களுக்கு கொண்டாட்டம்தான். கோலாகலம்தான்.

 

 

ஈரம் சிறுகதையில் வேலைக்கு போகும் மதனி, முகம் அலம்பிவிட்டு வந்தால்  எப்போதும் ஈரத்துடனே இருக்கிறார். அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தால் நன்றாக இருக்குமே என்று கதைசொல்லி கதை நெடுக ஆதங்க படுகிறார்.  கதையின் நடுவில் ஒரு காட்சி வருகிறது. இரண்டு வாழை கன்றுகளுக்கு நடுவில் அண்ணாச்சியும்  ஒரு வாழை போல் நிற்கிறார். கதையில் சொன்ன விஷயங்களை விட , சொல்லாத பல விஷயங்களை வாழையிலையில் பட்டு தெறித்து ஓடும் நீர் முத்துக்கள் உணர்த்துகின்றன.

 

 

அப்பாவை கொன்றவன் கதையில், சிறு வயதில் அப்பாவை இழந்த  பெண் பெரியவளாகி ஒரு கலவர நாளில் தாவணியும் புத்தகமுமாய் பள்ளி பரீட்சைக்கு செல்ல பேருந்துக்கு காத்திருக்கிறாள். அப்போது ஒரு பெரியவர் வந்து நலம் விசாரித்து விட்டு , மூக்கை சிந்திவிட்டு  , பிறகு மூக்கையும் கண்ணீரையும்  துடைத்துக்கொண்டு செல்கிறார். “கண்ணீர்”, என்ற  ஒற்றை வார்த்தை  கதையின் மொத்த போக்கையும், ஜீவனையும் தீர்மானிக்கிறது.

 

 

 

சந்தாஷங்கள் கதையில், வயதான ஜோடியொன்று தங்களின் தேனிலவு நாட்களை நினைத்து ரசித்து , கிட்டத்தட்ட அந்த கணங்களை மீண்டும் வாழ்கிறார்கள். எழுத்துலகில் யாரும் அதிகம் சொல்லாத கணங்களும் முதிர்ச்சியும் கனிவும்  வண்ணதாசன் வழியாக வரும்பொழுது, அந்த சந்தோஷம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது.

 

 

அரசமரம் கதையில் காடாறு மாதம் நாடாறு மாதம் என்று மகன் வீட்டுக்கும் மகள் வீட்டுக்கும் அலைந்தபடி அரச மரம் இருக்கும் இடத்தை தேடும் முதியவர், சொந்தமோ பந்தமோ இல்லாத யாரோ ஒருவன் எங்க வீட்லயும் ரெண்டு மாசம் இருங்க பெரியவரே என்று அன்புடன் கை பிடித்து சொல்லும் கணத்தில், அவன் கை சொரசொரப்பில், பெரியவர் அரச மரத்தை ஸ்பரிசிக்கிறார்.

 

 

யாளிகள் கதையில், முதியோர் இல்லத்தில் வயதானவர்களின் வாடையை, அவர்களின்  இருளையும் நிழலையும் சொல்லிவிட்டு, அந்த இருட்டில் இருக்கும் ஒரு தூணில் வரையப்பட்ட யாளியின் மீது டார்ச் லைட் வெளிச்சமடிக்கிறார்.

 

 

இன்னொரு கதையில் விடுமுறைக்கு நகரத்திலிருந்து கிராமத்துக்கு வரும் பேரன் , அவனுடன் கழித்த பொழுதுகளை அவன் சென்ற பிறகு அசைபோடுகிறார்கள் கிழவனும் கிழவியும். பேரனுடன் ஆற்றில் பிடித்த மீன்களை , தாத்தா கிணற்றில் போட முயல, கிழவி தடுத்து நிறுத்தி, அது அது இருக்க வேண்டிய இடத்தில அது அது இருக்கணும் என்று சொல்லும் கணத்தில் ஒரு தத்துவ தரிசனமே கிடைக்கிறது.

 

 

வண்ணதாசன் பாஷோவின் தவளை போல் எகிறி குதித்து விடுகிறார். வாசகர்களாகிய நாங்கள் நீரலைகளாக விரிந்து கொண்டே செல்கிறோம்.

 

 

அன்புடன்,

ராஜா,

சென்னை

 

முந்தைய கட்டுரைவண்ணதாசனைப்பற்றி நாஞ்சில்நாடன்
அடுத்த கட்டுரைதாமிராபரணம்