’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 69

[ 13 ]

சண்டன் நீராடி எழுந்து சடைத்திரிகளை தன் தோள்மேல் விரித்து கைகளால் ஒவ்வொரு சரடாக எடுத்து ஈரம் போக உதறி பின்னுக்கு எறிந்தபடி நடந்தான். அவனுடைய மரவுரி ஆடையைத் துவைத்து அழுத்திப் பிழிந்து கைகளில் எடுத்தபடி ஜைமினி பின்னால் சென்றான். சுமந்துவும் வைசம்பாயனனும் பைலனும் தங்கள் ஆடைகளைப் பிழிந்தபடி பின்தொடர்ந்தனர். ஒவ்வொருவரும் தங்கள் அகத்தே  அவன் சொற்களையே மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருந்தனர்.

ஏதோ ஒரு கணத்தில் பைலன் இனி அங்கு ஒரு நாளும் தங்கியிருக்க முடியாதென்று உணர்ந்தான். அவ்வுணர்வு எழுந்ததுமே உள்ளம் பொங்கியெழுந்தது. அங்கிருந்து கிளம்பவேண்டுமென உடல் தவித்தது. அங்கு  தங்கும் ஒவ்வொரு நாளும் சென்றடையும் இலக்கு அகன்று போகிறது. பின்னர் தோன்றியது,  அக்கணம் வரை இலக்கென்று ஏதும் இருக்கவே இல்லை என்று. அது  பிறர் அறியாது தனிமையில் வருடி மகிழும் ஓர் இனிய கற்பனையாகவே இருந்தது. எங்கிருந்தோ ஒரு ஆசிரியன் எழுந்து வந்து அவன் தலையைத் தொட்டு வாழ்த்தி தன் சொல்வளையத்திற்குள் எடுத்துக்கொள்கிறான். வான்நிறைந்த நீராவி குளிர்கலத்தில் பனித்து சொட்டாவதுபோல மெய்மை திரண்டு எழும் ஒரு மனிதர்.

ஆனால் அது அவன் வாசித்து அறிந்த நூல்களில் இருந்தும் கேட்டறிந்த கதைகளில் இருந்தும் உருவான உளஓவியம் மட்டுமே. அவன் விழைவதென்ன என்று அவனுக்கு தெரிந்திருக்கவில்லை. இல்லத்திலிருந்து எழுந்து கதைகளுக்குள் சென்றுவிடவேண்டுமெனும் விழைவு. காலந்தோறும் அப்படி கிளம்பிக்கொண்டே இருக்கிறார்கள். அனைத்தையும் கலைத்து கடந்து செல்லும் ஓர் ஆசிரியன் என்றால் அவனுக்கு அனைத்து இலக்கணங்களும் தெரிந்திருக்கவேண்டும். இம்மண்ணை நோக்கி ஒன்றை சொல்லும் தகுதி உடையவனுக்கு பெரும்கனவுகள் இருக்கவேண்டும். கனவில் உலாவும் ஒருவன் வாழ்ந்து அறிந்திருக்கவேண்டும் அனைத்தையும். ஒன்றிலாது பிறிதொன்றிலை.

நான்கு முனைகளிலும் முழுமைகொண்ட ஒருவன் இருக்க முடியுமா என்ன? கவிஞனும் அறிஞனும் பித்தனும் பெருஞ்சூழ்ச்சியாளனுமான ஒருவன்.  எங்கோ அப்படி ஒருவன் இருந்தாகவேண்டும். ஏனெனில் அது சொல்லப்பட்டுவிட்டது. நினைவுக்கு எட்டிவிட்டது. சென்றடையும் தொலைவென்ன என்பதே வினா.  சண்டன் சொன்ன அனைத்தும் மறுசொல் இலாத உண்மை என்று உறுதிகொண்டது உள்ளம். அழைத்துச்செல்பவன் அறியாச்சிறுவனே. ஏனெனில் உக்ரன் ஒவ்வொரு கணத்திலும் முழுவிசையுடன் இருந்தான். எய்யப்பட்டு  இலக்கு நோக்கி செல்லும் அம்பிற்கு மட்டுமே அவ்விரைவு இயல்பு. அவன் வழி பிழைக்க வாய்ப்பே இல்லை.

அவர்கள் குடில்களுக்குச் சென்றபோது தெற்குமூலையில் இருந்த சூதர்குடிலில் இருந்து சுதையின் உரத்த குரல் கேட்டது. “அடித்து கொன்றேவிடுவேன். கொன்றேவிடுவேன்! பொய் சொல்லவில்லை, கொன்றேவிடுவேன். நில்!” மூங்கில் படல் கதவைத் திறந்து உக்ரன் வெளியே ஓடி வந்தான். வந்த விரைவில் வெளியே கால் பிழைக்க முழங்கால் ஊன்றி மண்ணில் விழுந்து புரண்டெழுந்து மீண்டும் ஓடி வந்தான். ஜைமினி ஓடிச்சென்று அவன் இரு கைகளையும் பற்றிக்கொண்டான். “ஓடாதே, நில்! நில், மூடா!” என அன்னையின் குரல் கேட்டது.

குடிலுக்குள்ளிருந்து இடையில் கைவைத்து வெளியே வந்த சுதை “பிடியுங்கள் அவனை! பிடித்து நிறுத்துங்கள்… இதோ வருகிறேன்” என்றாள். பைலன் “என்ன ஆயிற்று?” என்று கேட்டான். “உணவு ஊட்டிவிடவேண்டுமென்றான். வாய் திறந்தால் நூலும் நெறியுமாக பேசித்தள்ளுகிறானே, ஓரிடத்தில் அமர்ந்து சற்று உணவை அள்ளி உண்டாலென்ன கேடு இவனுக்கு? பருப்பும் நெய்யுமிட்டு அன்னத்தைப் பிசைந்து இலைமேல் வைத்துவிட்டு பால் எடுக்க அப்பால் சென்றேன். தரையில் இருந்து மண்ணை அள்ளி அன்னத்தில் கலந்து வைத்துவிட்டு அமர்ந்திருக்கிறான். அறிவுடையோன் செய்யும் செயலா இது? அன்னத்தில் மண் கலந்தால் தெய்வங்கள் எப்படி பொறுக்கும்?”

ஜைமினி குனிந்து “என்ன இது, சூதரே? தாங்கள் இதை செய்யலாகுமா? தாங்கள் அறியாததா?” என்றான். “அந்த அன்னம் எறும்புகளுக்குரியது. அவை என்னை வாழ்த்துவதை நான் முன்னரே கேட்டுவிட்டேன்” என்றான் உக்ரன். முதல் கணம் அவன் உண்மையாகவே ஏதோ சொல்கிறான் என்று ஜைமினி எண்ணினான். கண்களில் வந்து சென்ற சிரிப்பின் சிறு மிளிரைக் கண்டதும் தானும் சிரித்தான்.  இரு புயங்களிலும் அவனை பற்றித்தூக்கி தன் தோள்மேல் அமர்த்திக்கொண்டு  முழங்காலில் மண் இருந்ததை கைகளால் தட்டியபடி “காலையில் நீராடுவதோ தெய்வங்களுக்கு பூசெய்கையோ உங்களுக்கு வழக்கமில்லையா, இளம்சூதரே?” என்றான்.

“நான் புலரிக்கு முன்னரே எழுந்து வெளியே சென்று காகங்களை பார்த்தேன்” என்றான் உக்ரன். “குருவிகளும்கூட இங்கு நிறைய இருக்கின்றன.” “காகங்களிடம் பேசினீரா?” என்றான் ஜைமினி. “இந்த ஊரே காகங்களுக்கு புகழ்பெற்றது” என்று சண்டன் சொன்னான். “ஆம், காகங்கள் அதை அறிந்திருக்கின்றன. பல காகங்கள் அடர்காட்டிலிருந்து இங்கு வருகின்றன. இங்குள்ள பெண்டிர் முதல் நாளிரவே காகங்களுக்கு உணவை அள்ளி வீசிவிட்டு படுக்கிறார்கள். காலையில் காகங்களின் குரல் கேட்டே நான் எழுந்தேன்” என்றான் உக்ரன். கையைத் தூக்கி “காகங்கள் இந்த ஊரை அன்னவயல் என அழைக்கின்றன” என்றான். அவன் நகையாடுகிறானா என பைலன் நோக்கினான். ஆனால் அவன் முகம் விசையுடனிருந்தது. “அவர்கள் இங்கே இந்த மனிதர்களை வரவழைத்திருக்கிறார்கள். இவர்களுக்கு அவர்கள் ஆணையிடுகிறார்கள்” என்றான் உக்ரன்.

“வருகிறேன்” என்று சொல்லி சண்டன் முன்னே சென்றான். “அவனை இறக்கிவிடுங்கள். அவன் ஏதாவது உண்ணவேண்டுமல்லவா? இந்த வயிற்றை வைத்துக்கொண்டு அவனை நான் எப்படி துரத்திப் பிடிப்பது?” என்றாள் சுதை. “நன்று விறலியே, நாங்களே இவனுக்கு ஏதாவது வேள்வி  அன்னத்தை ஊட்டிவிடுகிறோம்” என்று வைசம்பாயனன் சொன்னான். “நீங்கள் ஓய்வெடுங்கள்” என்றான் சுமந்து. “இத்தனை சிறிய உடலை வைத்துக்கொண்டு இவ்வளவு சொற்களை எங்கிருந்து எடுக்கிறான் என்றே எனக்குப் புரியவில்லை. சொல்லெடுத்து சொல்லெடுத்தே உள் ஒழிந்து ஒரு நாள் சருகாக உதிர்வான் மூடன்” என்று முணுமுணுத்தபடி உள்ளே சென்றாள் சுதை.

“தாங்கள் உண்பதற்கென்ன, சூதரே?” என்று ஜைமினி கேட்டான். “உண்ணும்போது என் உள்ளோடும் சொற்பெருக்கு முறிவடைகிறது. ஐந்து கவளம் உணவென்றால் ஐந்து முறை இடைவெளி வருகிறது.” அவனை தோளில் வைத்து ஆட்டியபடி “கங்கையை கோடரியால் பிளக்க முடியுமா என்ன?” என்றான் ஜைமினி சிரித்தபடி. “முடியாது. ஆனால் அலை கிளப்ப முடியும்” என்றான் உக்ரன். “எதற்கும் மறுமொழி சொல்கிறான்” என்றான் சுமந்து. “ஆம், வாயிலேயே நான்கு அடிபோட்டால் ஒழுங்குக்கு வருவான். அதை அவன் தந்தை செய்வதில்லை” என்று குடிலுக்குள் சுதை சொன்னாள்.

அவர்கள் அந்தணர்களுக்குரிய  குடில்களுக்குள் சென்றனர். ஜைமினி உக்ரனை இறக்கிவிட்டுவிட்டு “இது சூதஆசிரியரின் மரவுரி. நான் கொடியில் காயப்போட்டுவிட்டு வருகிறேன்” என்று வெளியே சென்றான். இடுப்பில் கைவைத்து குடிலில் நின்ற உக்ரன் “அழகிய குடில், அந்தணர்களுக்கு மட்டும் சிறந்த குடில்களை  அளித்திருக்கிறார்கள்” என்றான். “ஆம், அவர்கள் வேள்வி செய்து வேதம் புரப்பவர் அல்லவா?” என்றான் பைலன். “நன்று. வேதமும் அவர்களை நன்கு புரக்கிறது” என்றபடி உக்ரன் சுற்றுமுற்றும் பார்த்தான். அங்கிருந்த அரணிக்கட்டை அவன் நோக்கை கவர ஓடிச்சென்று அதை எடுத்து “அரணிக்கட்டை, நான் இதை உரசி அனல் எழுப்பப் போகிறேன்” என்றான்.

“அதை உரசுவதற்கு தோளில் ஆற்றல் தேவை” என்றான் வைசம்பாயனன் தன் மரவுரியை உதறி நீண்ட கழியில் மாட்டி மேலேயிருந்த மூங்கிலில் காயப்போட்டபடி. “சிறிய தோள்களுக்கு சிறிய அனல் வரும்” என்றான் உக்ரன். வைசம்பாயனன் “அனல் அந்த மரக்கட்டையின் ஆழத்தில் அமர்ந்திருக்கிறது. அதுவரைக்கும் உங்கள் விசை சென்றாலொழிய அது வெளியே வரவிரும்பாது” என்றான். விழிகள் சுருக்கி ஏறிட்டு “ஏன்?” என்றான் உக்ரன். “ஏனெனில் தன்னை எரித்தபடியேதான் அந்த அனல் வெளிவர முடியும்” என்றான் வைசம்பாயனன். சிறுவனின் கண்கள் மாறுபட்டன. “ஆம், பிறிதொரு அனல் வந்து அவ்வனலை எழுப்பவேண்டியிருக்கிறது” என்றான். அவன் சொல்வதென்ன என்று புரியாமல் அனைவரும் திரும்பிப்பார்த்தனர். அவன் அரணிக்கட்டையை ஒன்றோடொன்று தட்டிப்பார்த்தான்.

பைலன் “இளம்சூதரே, தாங்கள் ஏதேனும் ஆசிரியரை தேடிப்போவதைப்பற்றி எண்ணியிருக்கிறீர்களா?” என்றான். “ஆசிரியரா…?” என்று அவன் விழிதூக்கிப் பார்த்தான். “எனக்கா?” என்றான். “ஆம், தங்களுக்கு சொல் முழுமையையும் வேத மெய்மையையும் கற்பிக்கும் ஒருவர்.” குனிந்து அரணிக்கட்டையை நோக்கி “எனக்குத்தான் எந்தை கற்பித்துக்கொண்டிருக்கிறாரே?” என்றான் உக்ரன். “தாங்கள் கற்றதற்கு அப்பால் உள்ளவற்றை  கற்பிப்பவர்” என்றான் சுமந்து. அவன் அதை தட்டியபடி மூக்கை உறிஞ்சினான். “ஆம், அப்படி ஒருவர் இருக்கலாம். ஆனால் நான் இதுவரை அவரைப்பற்றி எண்ணியதில்லை” என்றபின் “நான் சூதனல்லவா? எனக்கு சூதர்கள் பாடல்களை கற்பிப்பார்கள். ஆனால் அவர்கள் கற்பிக்கத் தொடங்கும்போதே அந்தப் பாடல் எனக்கு முன்னரே முழுமையாகத் தெரியும் என்பதை ஒவ்வொருமுறையும் உணர்கிறேன்” என்றான்.

“பாடலுக்கு அப்பால் செல்லும் ஒரு உள்ளம் கொண்டவர் நீங்கள். மெய்மையறிந்த நா கொண்டவர். நேற்று இவ்வூரே அதை உணர்ந்து நிற்கிறது” என்றான் சுமந்து. அவன் சொல்வதென்ன என்று புரியாதவன்போல உக்ரன் விழிதூக்கிப் பார்த்தான். பின்னர் “அரணிக்கட்டையில் காத்திருக்கும் அனலின் பெயரென்ன?” என்றான்.  உள்ளே வந்த ஜைமினி “சூதரே, எங்களிடம் இன்று சண்டர் ஒன்று சொன்னார். இவர்கள் கேட்பது அதைப்பற்றியே” என்றான். என்ன என்று வினவுவதுபோல அவர்களை நோக்கினான் உக்ரன்.

வைசம்பாயனன் “நாங்கள் நால்வரும் எங்கள் இயல்புக்கிசைந்த மெய்யாசிரியர் ஒருவரைத் தேடி இல்லம்விட்டிறங்கி வந்தோம். அந்நால்வரும் ஒருவராகவே எங்களை அணுகக்கூடும் என்றார் சண்டர். அவ்வொருவரை தேடிச்செல்லும் தகைமை கொண்டவர் தாங்களே என்றார்”  என்றான். “எங்கள் நால்வரையும் நீங்களே வழிகாட்டி அழைத்துச் செல்லவேண்டும் என்றார் சண்டன்” என்றான் பைலன்.

“நானா…?” என்றபின் அவன் அரணிக்கட்டையை மேலே தூக்கி “இதை நான் பெரியவனான பிறகு கடைந்து நிறைய தீயை எடுப்பேன். இந்தக் காடுகள் அனைத்தையுமே எரியூட்டுவேன்” என்றான். அவன் உள்ளம் முழுமையாக அதில் திரும்பவே அதை தரையில் வைத்து பிள்ளைக்கட்டையால் தாய்க்கட்டையின் புழைக்குள் செருகி கைகளால் உருட்டத் தொடங்கினான். ஜைமினி அருகே வந்து அவன் முகத்தைப்பற்றி மேலே தூக்கி “சூதரே, ஆசிரியர் என்று எவரையாவது தாங்கள் தேடிச் செல்கிறீர்களா? தங்கள் உள்ளத்தில் ஏதேனும் முகம் எழுகிறதா? கனவிலேனும் வழி தென்படுகிறதா? இன்று உங்களை நம்பியே நாங்களும் திசைதேர வேண்டியவர்களாயிருக்கிறோம்” என்றான்.

“நான் ஆசிரியர் என்று எவரையும் உணரவில்லையே” என்றான் உக்ரன். “ஆனால் இந்த அரணிக்கட்டையில் அனல் எடுக்க எனக்கு யாரோ கற்பிக்கப்போகிறார்கள் என்று இப்போது தோன்றுகிறது” என்றவன் எழுந்து நின்று “நான் சென்று குலத்தலைவரிடம் கேட்கிறேன், ஒருவேளை அவர் எனக்கு இதை கற்பிக்கக்கூடும்” என்றான். சற்று எரிச்சலுடன் அரணிக்கட்டையை வாங்கி அப்பால் வைத்துவிட்டு ஜைமினி சொன்னான் “இளம்சூதரே, தங்கள் உள்ளம் தாங்கள் எண்ணுவதைவிட பலநூறு மடங்கு ஆழம் கொண்டது. பாதாள கங்கை பெருகி மேலெழும் சிறு துளை போன்றவர் தாங்கள். சொல்க, உங்கள் உள்ளத்தில் ஒரு பெயரேனும் எழுகிறதா?”

உக்ரன் அவனை உதறி “ஆ, அது என்னுடைய அரணிக்கட்டை. இனி அதை நான்தான் வைத்திருப்பேன்” என்றான். கடுமையாக “சொல்லுங்கள்!” என்றான் ஜைமினி. “அது என்னுடையது… என்னுடையது…” என்று அவன் கூச்சலிட்டன். “அவனை விடுங்கள், ஜைமின்யரே” என்றான் பைலன். “ஒரு கணம் முதிராக்குழவியாகவும் மறுகணம்  மெய்யுணர்ந்த ஆசிரியனாகவும் மாறி  ஏதோ ஒன்று இச்சிற்றுடலில் இருந்து நம்முடன் விளையாடுகிறது. அதை ஒருபோதும் நம்மால் முழுக்க புரிந்துகொள்ள முடியாது.” உக்ரன் “என்னுடைய அரணிக்கட்டை… என்னுடைய அரணிக்கட்டை… என்னுடைய அரணிக்கட்டை…” என்று  கால்களை மாறி மாறி உதைத்தபடி வெறியுடன் வீறிட்டான். அவன் கழுத்தில் நரம்புகள்  புடைத்தன.

“என்ன குரல்… காதுக்குள் கொண்டுவந்து கொம்பை ஊதியதுபோல் இருக்கிறது. அவனை வெளியே விடுங்கள்” என்றான் வைசம்பாயனன். ஜைமினி பிடியை விட்டதும் பாய்ந்து சென்று அரணிக்கட்டையை எடுத்து அதன் பிள்ளைக்குழவியையும் அப்பாலிருந்து தேடி எடுத்து அவற்றை இருகைகளிலும் வைத்தபடி உதடுகளைப் பிதுக்கி பகையுடன் கூர்ந்து பார்த்து “போடா” என்றான்.  பின்னர் பாய்ந்து வந்து ஜைமினியை அடிக்கத் தொடங்கினான். வேடிக்கையாக சிரித்தபடி அதைத் தடுத்த ஜைமினி சிறுவன் மேலும் மேலும் வெறிகொண்டு பற்களை கிட்டித்தபடி அடிப்பதை அறிந்து எப்படி தடுப்பது என்று தெரியாமல் பின்னடைந்தான். அவன் முழங்கையிலும் மணிக்கட்டிலும் பட்ட அடி நன்றாகவே வலித்தது.

பைலன் வந்து உக்ரனைப் பிடித்து இழுத்து அப்பால் தள்ளினான். நிலத்தில் விழுந்த அவன் மூச்சிரைக்க எழுந்து பற்கள் தெரிய சிறுநெஞ்சு உலைய கண்களில் நீர் நிறைந்திருக்க “கொல்வேன்… கொல்வேன்… உங்கள் அனைவரையும் கொல்வேன்” என்று கூச்சலிட்டான். “சரி” என்றான் பைலன். “நான் அரணிக்கட்டையை கொளுத்தக் கற்றுக்கொள்ளும்போது உங்கள் மரவுரியைத்தான் முதலில் கொளுத்துவேன்” என்றான். கைகளை உதறிக்கொண்டிருந்த ஜைமினி அறியாமல் புன்னகைத்து “அதுவரைக்கும் நன்று” என்றான். “நீங்கள் நால்வருமே அறிவிலிகள்” என்றான் உக்ரன். “நான் உங்கள் தலைமயிரை கொளுத்துவேன்.”

“சரி, அதற்கென்ன?” என்றான் ஜைமினி. மேற்கொண்டு என்ன சொல்வது என்று தெரியாமல் தலையை சற்று சாய்த்தபடி “நான் மேலும் பெரியவனாகும்போது உங்கள் நால்வரையுமே கொளுத்துவேன்” என்றான். ஜைமினி “நன்று, அவ்வாறே ஆகுக!” என்று சிரிக்க பைலன் சேர்ந்துகொண்டான். உக்ரன் “இதை நான் கொண்டுசென்று குலத்தலைவரிடம் கொடுக்கிறேன். அவர் எனக்கு பால் தருவார். அதைக் குடித்ததும் எனக்கு தோளில் ஆற்றல் வரும். அதன் பிறகு நான் இதைக் கடைந்து அனலை எடுப்பேன். உங்களுக்கு தரமாட்டேன்” என்றபின் அதை மார்போடணைத்தபடி வெளியே சென்றான்.

சுமந்து “அவனிடம் எந்த நேர்வினாவும் எழுப்புவதில் பொருளில்லை” என்றான். அவர்கள் திரும்பிப் பார்த்தனர். “இதற்குள் நீங்கள் இதை உணராதது விந்தையே. கதை சொல்லும்போது மட்டுமே அவன் மெய்யறிவர் போலிருக்கிறான். பிற தருணங்களில் எல்லாம் சின்னஞ்சிறுவனாகவே தோன்றுகிறான்” என்றான். “உண்மை” என்றான் வைசம்பாயனன். “அவனை அழைத்து ஒரு கதை சொல்லும்படி கேளுங்கள், சொல்லமுடியாது. எதுவுமே நினைவுக்கு வராது. ஒரு வினா எழுப்புங்கள், விடை அவனுக்கு தெரிந்திருக்காது. அவனே தானாகவே சொல்லத் தொடங்கினால் விண்முனிவர் வந்து நாவிலமர்கிறார்கள். சூதமூதாதையர் வந்து விரல்களை எடுத்துக்கொள்கிறார்கள்” என்றான் சுமந்து.

“ஆம்” என்றான் பைலன்.  “அவனை பேசவைக்கலாம். இத்தருணத்தில் அவன் நாவில் தானாக எழும் கதை எதுவோ அதைக்கொண்டு நாம் புரிந்துகொள்ளவேண்டும்” என்று சுமந்து சொன்னான். “அவனை எப்படி சொல்ல வைப்பது?” என்றான் வைசம்பாயனன். “அவன் தன்னியல்பாக கதை சொல்ல வைக்க நம்மால் முடியும்” என்று சுமந்து சொன்னான் “அவனை மீட்டி சொல்பெருக வைப்பது ஒரு முதற்சொல்லே.” பைலன் “ஆம், நேற்று அவன் கதை சொன்னதைப் பார்த்தபோது நானும் அதையே எண்ணினேன்” என்றான்.

ஜைமினி “ஆம், அவன் உள்ளத்தில் ஒரு சொல் சென்று விழுகிறது. தேனுண்ட எடையால் நிலத்துதிர்ந்த தேனீபோல ரீங்கரித்தபடி தன்னைத் தானே அது சுற்றி வருகிறது. எங்கோ ஒரு புள்ளியில் தன் கொடுக்கை எடுத்து அது கொட்டுகிறது. அக்கணத்தில் அவனிடம் இருந்து அவன் கொண்டிருக்கும் அச்சிறுவனின் உடலும் உள்ளமும் மறைகின்றன. சொல்லென அவனுக்குள் குடியிருக்கும் தெய்வம் எழுகிறது. பிறகு அவன் சொல்வதெல்லாம் பிறிதொரு மொழி” என்றான். “அதைத்தான் நானும் உணர்கிறேன். அவனை ஊழ்கத்திலாழ்த்துவது நாம் பேசிக்கொண்டிருப்பதில் இருந்து எழும் ஒரு சொல். தற்செயலாகவே அது நிகழ்கிறது” என்று சுமந்து சொன்னான்.

“அச்சொல்லை எப்படி கண்டடைவது? எப்படி அவனிடம் அதை சேர்ப்பது?” என்றான் வைசம்பாயனன். “நாம் பேசுவது எதையும் அவன் விழிசெவி கொடுத்து கேட்பதில்லை. வேறு ஏதோ ஒன்றில் ஈடுபட்டு விளையாடிக்கொண்டல்லவா இருக்கிறான்?” என்றான் பைலன். “ஆம், அவனிடமென ஒரு சொல்லும் நாம் சொல்லலாகாது. ஆனால் அவன் காதில் அச்சொல் இயல்பாக விழவேண்டும். எச்சொல் அவனை மீட்டுகிறதெனக் கண்டுகொண்டால் அதையே மீளமீளச் சொல்லவேண்டும். இது ஒரு முயற்சிதான், பார்ப்போம்” என்றபின் சுமந்து எழுந்து வாயிலை நோக்கினான். மார்போடு அரணிக்கட்டைகளை அணைத்தபடி உக்ரன் வருவது தெரிந்தது.

“இங்குதான் வருகிறான்” என்றான் சுமந்து. ஜைமினி “குலத்தலைவர் அரணிக்கட்டை பற்றவைக்க கற்றுக்கொடுக்கவில்லை போலும்” என்றான்.  முகம் தளர்ந்திருக்க குடில் வாயிலுக்குள் வந்த உக்ரன் “நான் இந்த சிற்றூரை தீச்சொல்லிட்டு எரிக்கப் போகிறேன்” என்றான். ஜைமினி சிரித்தபடி “ஏன்?” என்றான். அவன் சினத்துடன் புருவம் நெரிபட “நான் மிகச்சிறியவனென்று அவர் சொல்கிறார். அவர் கிழவர். நீர் நாளைக்கே செத்துப்போய்விடும் என்று அவரிடம் சொன்னேன். நான் தீச்சொல்லிட்டபோதுகூட அவரும் அவரது துணைவியும் மூன்று மகள்களும் சிரித்தனர்” என்றான்.

ஜைமினி சிரித்துவிட்டான். அதைக் கண்டு உக்ரனும் முகம் மலர்ந்து “அவர்களில் ஒருத்தி எனக்கு பால் கொண்டுவந்து தந்தாள். அவள் அழகி. அவளுக்கு ஏழு மைந்தர் பிறப்பார்கள்” என்றான். பைலன் “நீங்கள் அதை அருந்தினீர்களா?” என்றான். “ஆம், அது சூடான பாலாகையால் அதை அருந்தினேன். அதன் பிறகு அவர்கள் என் எதிரிகள் என்றாலும் நான் அரணிக்கட்டையை கடைந்தபின் அவர்களுக்கு தீச்சொல்லிடப்போவதில்லை என்றேன். ஏனென்றால் அவர்கள் குலத்தில் ஒன்பது வீரர்கள் பிறப்பார்கள்” என்றான். “அப்படியென்றால் எங்களை எரிக்க வந்தீர்களா?” என்றான் ஜைமினி.

உக்ரன் மிக இயல்பாக அரணிக்கட்டையை கீழே வைத்து அரைநழுவிய மரவுரியை ஏற்றி அணிந்தபடி “உங்களை காலமும் எரிக்கமுடியாது. நீங்கள் நால்வரும் அழியாச்சொல் கொண்டவர்கள். ஒற்றைச்சொல்லின் நான்கு முகங்கள் நீங்கள்” என்றான். மீண்டும் அரணிக்கட்டையை கையில் எடுத்துக்கொண்டு மூக்கை உறிஞ்சியபடி “நான் உள்ளே வந்தால் இந்த அரணிக்கட்டையை நீங்கள் பிடுங்கிக்கொள்வீர்கள்” என்றான்.  ஜைமினி “ஆம், சில சமயம்” என்றான். உரத்த குரலில் “பிடுங்கிக்கொண்டால் நான் தீச்சொல்லிடுவேன்” என்று கூவினான்.

பைலன் “அந்த அரணிக்கட்டை தங்களுடையது, சூதரே, அதை தாங்களே வைத்துக்கொள்ளலாம்” என்றான். “அப்படியென்றால் இதை கொண்டுபோய் என் முழவின் பக்கம் வைத்துவிட்டு வருகிறேன். அது என் முழவு, அதை எவரும் எடுக்கக்கூடாது என்று அன்னையிடமும் தந்தையிடமும் மூன்று முறை சொன்னேன்” என்றான். “தந்தை உங்கள் ஆசிரியரா? அவரை நீங்கள் நன்கு அறிவீர்களா?” என்றான் வைசம்பாயனன். அவன் அதை கேட்டதாகத் தெரியவில்லை. “ஆசிரியரென்றால் அவரை அடிமுடி காணவேண்டுமல்லவா? அவ்வாறு நீங்கள் அவரை கடந்துவிட்டீர்களா?” என்று சுமந்து கேட்டான்.

ஆசிரியர் என்ற சொல் அவன் காதில் விழுந்ததா என ஒருவரை ஒருவர் விழிகளால் கேட்டுக்கொண்டனர். அவன் உள்ளே வந்து அரணிக்கட்டையை தரையில் வைத்து “எனக்கு இதைவிட பெரிய அரணிக்கட்டை வேண்டும். நான் அதன் மேல் ஏறி நின்று கடைவேன்” என்றான். மீண்டும் இடையில் மரவுரி நழுவியது. ஜைமினி முழந்தாளிட்டு அமர்ந்து அதை சரியாகக் கட்டினான். “ஆசிரியனை நல்ல மாணவன்தான் முற்றறிய முடியும்” என்றான் பைலன். “அவ்வளவு பெரிய அரணிக்கட்டை எனக்குத் தேவை. அதன் அடிமுடி நான் காண்பேன்” என்றான் உக்ரன். “ஆனால் அரணிக்கட்டைகளை சிறுவர்களிடம் கொடுக்கக்கூடாது. நெருப்பு சிறுவர்களை நண்பர்களாக நினைத்துவிடும்” என்றான்.

ஜைமினி உடனே அவன் நெஞ்சில் விழுந்த சொல்லை அடையாளம் கண்டு கொண்டான். விழிகளால் பிறருக்கு குறிப்பு காட்டியபின் “அடிமுடி காண்பதற்குப் பெயர்தான் கற்றல். அடியிலிருந்து முடி வரை ஒன்றை அறிந்தபின்னர் நாம் அதன் பகுதியாகிறோம்” என்றான். “ஆசிரியனை அடிமுடி காண்பது மாணவருக்கு இயலுமா?” என்றான் பைலன். “இவ்வளவு பெரிய அரணிக்கட்டை… இதன் அடிமுடியை யார் காணமுடியும்?” என்று வைசம்பாயனன் சொன்னான். “ஏன்?” என்று உக்ரன் கேட்டான். “இதற்குள் அனலிருக்கிறதே. அனலின் அடிமுடி காண்பது எளிதா என்ன?” என்றான் பைலன்.

உக்ரனின் விழிகள் மாறுவதை நால்வரும் நோக்கினர். கண்கள் விரிந்து இதழ் ஒரு சொல்லை திரும்பத் திரும்ப சொல்லலாயிற்று. விழிகூர்ந்தபோது அடிமுடி என்னும் சொல் அவன் நாவில் திகழ்வதை காணமுடிந்தது. பைலனை நோக்கிவிட்டு “ஆசிரியனை அடிமுடி காணுதல்தான் கல்வி” என்றான் வைசம்பாயனன். “ஆனால் எவரேனும் மெய்யாசிரியனை அடிமுடி காணமுடியுமா?” என்றான் பைலன். “காணமுடியும், நாமும் அடிமுடி அறியா பேருருவர் ஆகி அருகே நின்றால்” என்றான் சுமந்து.

“அனற்பெருந்தூண்” என்று உக்ரன் சொன்னான். கைகளைத் தூக்கி விழிகள் தெறித்து நிற்க “அனலின் அடிமுடியின்மை” என்றான். “அனற்பெருந்தூண். இருபுறமும் விசும்பு சூடி நின்றிருந்தது அது” என்றான். அவனுக்குப் பின்னால் எவரோ வந்து நிற்பதுபோல தோன்றி ஜைமினிக்கு மெய்சிலிர்த்தது. “அனல்நெடுந்தோற்றம். மகாருத்ரம்” என்றான் உக்ரன்.

முந்தைய கட்டுரைவிருது விழா 2016 புகைப்படங்கள் நாள் 2
அடுத்த கட்டுரைபின் தொடரும் நிழலின் குரல் -கடிதம்