இசை, கடிதங்கள்

ஆபிரகாம் பண்டிதர்

து.ஆ.தனபாண்டியன்

அன்புள்ள ஜெ,

தொடர்ந்து உங்கள் இசை குறித்த கட்டுரைகளையும் பதில்களையும் படித்து வந்திருக்கிறேன். அண்மையில் பாலா எழுதிய கடிதமும் அதற்கு உங்கள் பதிலும் கூட. கடந்த 4-5 வருடங்களாகத்தான் கர்நாடக இசையை கேட்டு வருகிறேன். பிராமணக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் ஈரோட்டில் நான் வளர்ந்த சூழ்நிலையினால், இம்சை அரசினில் வடிவேலு சொல்வது போல, ‘என்ன கிழவி இழுத்துக்கொண்டிருக்கிறாய்!’ என்பது போன்ற எண்ணம்தான் எனக்கு 25 வயதுவரை இருந்து வந்தது. உங்கள் நண்பருக்கு செவ்விசையை அறிமுகப்படுத்த சில குறுந்தகடுகளை கொடுத்ததை குறிப்பிடும் போது, ‘முதன் முதலில் கேட்பவர்களுக்கு நல்ல குரல் வளம் உள்ளவர்களின் பாடல்களையே கொடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அப்படி ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பாம்பே ஜெயஸ்ரீ அவர்களின் தெய்வீகக் குரலில் அமைந்த ‘அனுபவம்’ என்ற தொகுப்புதான் முதலில் உள்ளிழுத்தது என்று நினைவு. தொடர்ந்து சிலருருடைய பாடல்களை கேட்டுவந்திருந்தேன். இரண்டு வருடங்கள் முன்பு ‘மார்கழி ராகம்’ (www.margazhiraagam.com) என்ற திரைப்பட வடிவிலான கச்சேரியை சென்னை சத்யம் திரையரங்கில் பார்த்ததுதான் நான் பார்த்த/கேட்ட முதல் கச்சேரி. திரு. ஜெயேந்திரா என்பவரின் முயற்சியில் உருவாக்கப்பட்ட அதில் பாம்பே ஜெயஸ்ரீயும் டி.எம்.கிருஷ்ணாவும் பாடி இருந்தார்கள். பி.சி.ஸ்ரீராம் போன்ற தேர்ந்த கலைஞர்கள் பங்காற்றி உருவாக்கிய அப்படம் அற்புதமானது. அதில் கிடைத்த பரவச அனுபவம்தான் என்னை கச்சேரிகளுக்குச் செல்லும் அடுத்தகட்ட ரசிகனாக்கியது (சிதம்பரம் நாட்டியாஞ்சலியில் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் போல!). ஒருவருடத்துக்கும் மேலாக காத்திருந்து அப்படத்தின் DVD-யை வாங்கி வைத்திருக்கிறேன்!

பாலா சொல்வது போல எனக்கு மொழி ஒரு பிரச்சனை அல்ல. பலுகே பங்காரமாயனா என உண்ணிகிருஷ்ணன் பாடும்போது அதை முழுமையாக அனுபவிக்க முடிகிறது. அந்த ராகம் மனதில் பதிந்து அந்த ராகத்தில் அமைந்த திரைப்பாடல்களை கணிக்கும் அளவிற்கு! எனது தாய்மொழி தெலுங்காக இருப்பதும் சிறுவயதில் சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் பழகியதினாலும் தொலைக்காட்சியினால் ஓரளவு இந்தி பரிட்சயமாகி இருப்பதும் கூட எனக்கு மொழி ஒரு பிரச்ச்னை இல்லாமல் இருப்பதற்கு காரணமாக இருக்கலாம். எனினும் இசைக்கு மொழி தேவையில்லை என்பதையும் நான் உணர்ந்திருக்கிறேன். சில சமயங்களில் மொழியை இசையை முழுமையாக ரசிக்கவிடாமல் தடுப்பதாயும் நினைக்கிறேன். ஆம், நமக்கு தெரியாத மொழியில் பாடலைக் கேட்கும் போது மனம் முழுவதும் இசை நுணுக்கங்களிலேயே ஆழ்வதை சிலமுறை கவனித்திருக்கிறேன். நமக்கு தெரிந்த மொழியாக இருக்கும்போது பாட்டு வரிகள் சரியாக அமையாமல் போனால் அந்த மெட்டையும் நம்மால் ரசிக்க முடியாது போகிறது. இருந்தாலும்…… இருந்தாலும் கச்சேரிகளுக்கு செல்லும்போது தமிழ்பாடல் பாடமாட்டார்களா என்ற ஏக்கம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. ஏனெனில் நமக்கு பிடித்த வரிகளை செவ்வியல் இசையில் தேர்ந்த பாடகரின் குரலில் கேட்பது என்பது ஒரு திவ்விய அனுபவம். ’துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ’ என்ற பாரதிதாசனின் வரிகளை தவிலும் நாதஸ்வரமும் இணைய நித்யஸ்ரீ பாடுவதைக் கேட்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.(இணைப்பு 1). அதை இசை அனுபவங்களில் ஒரு குறிப்பிட்ட வகை என்று கொள்ளலாம் என நினைக்கிறேன். தமிழ் நாட்டிலாவது ஓரிரண்டு பாடல்கள் தமிழில் இருக்கும். இங்கே பெங்களூரில் அதற்கு வாய்ப்பே இல்லை; தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் இவற்றில்தான் எல்லாப் பாடல்களும்! இத்தனைக்கும் பெங்களூரில் கச்சேரிக்கு வருபவர்களில் கணிசமானோர் தமிழர்கள்!

எனினும் நீங்கள் சொல்வது போல் தமிழ்பாடல்களை மேடையில் ஏற்றுவதும் இவர்கள்தான். இப்போது தான் சஞ்சய் சுப்ரமணியத்தின் கச்சேரியிலிருந்து வருகிறேன். முழுதும் தமிழ்பாடல்களே அடங்கிய ‘சந்திரன் ஒளியில்’ என்ற குறுந்தகடை வெளியிட்டிருக்கிறார். அதை வாங்கி வந்துள்ளேன். மற்றுமொரு குறுந்தகடு பாபநாசம் சிவன் அவர்களின் பாடல்கள் அடங்கியதும் இருந்தது. அருணா சாய்ராம் பல தமிழ் பாடல்களை பாடிவருகிறார். டி.எம்.கிருஷ்ணாவோ ஒரு படி மேலே சென்று சங்ககால/பக்தி இலக்கிய காலப் பாடல்களையும் பாடுகிறார். அவர் பாடிய பாசுரம் ஒன்றையும் (சேத்திர திருப்பதி என்ற தொகுப்பிலிருந்து) அவர் மனைவில் சங்கீதா சிவக்குமாருடன் இணைந்து பாடிய கம்பராமாயணப் பாடல் ஒன்றையும் (ராமாயணா என்ற தொகுப்பிலிருந்து) முன்னரே உங்களுடன் பகிர நினைத்திருந்தேன். (இணைப்பு 2, 3). கிருஷ்ணா குறித்து நான் எழுதிய சிறிய கட்டுரை அற்புதக் கலைஞன் டி.எம்.கிருஷ்ணா

பெரும்பாலும் இன்று இசை என்பதை இணையத்தில் தரவிறக்கிதான் கேட்கிறோம், காணொளிகள் உட்பட. எனவே முடிந்த வரை போகும் இடங்களில் எல்லாம் இசைத்தகடுகள் வாங்கிவிடுவேன். இளையராஜாவின் ஆயிரக்கணக்கான பாடல்களை இலவசமாக கேட்டு மகிழ்கிறோம். அவருக்கு நாம் என்ன கைம்மாறு செய்ய முடியும்? அவரது சில இசைத்தகடுகளையாவது காசு கொடுத்து வாங்குவதைத் தவிர! நானும் திருவாசகம் குறுந்தகடை ஒரு சிலருக்கு பரிசளித்திருக்கிறேன். அதே போல்தான் இப்போது கர்நாடக இசைத்தகடுகளும் வாங்கி வருகிறேன். கச்சேரியே செய்யும் எனது நண்பன் ஒருவன் கூட இப்படி செலவு செய்வதை விசித்திரமாகப் பார்க்கிறான். முன்பாவது, எத்தனையோ செலவு செய்கிறோம் இதற்குச் செய்தாலென்ன என்றும் 250 ரூ கொடுத்து திரைப்படம் பார்க்கிறோம் (ஆம் பெங்களுரில் வார இறுதியில் நுழைவுச்சீட்டின் விலை அதுதான்) அது அன்றோடு முடிந்துவிடுகிறது… இசையையோ எவ்வளவு முறை திரும்ப திரும்ப கேட்டு மகிழ்கிறோம் என்றும்தான் நினைத்துக்கொள்வேன். மக்களாட்சியில் மக்கள்தான் கலைகளை பேண வேண்டும் என பாரதி கூறியதை நீங்கள் எழுதியிருந்ததை படித்ததும், ‘ஆஹா, நான் இசைப் புரவலன்’ என்று பெருமையும் கொள்கிறேன்! :)

இணைப்பு 1,2,3 ஆகியவைகளை தனி மின்மடல்களில் அனுப்புகிறேன் :-)

அன்புடன்,
சாணக்கியன்,

  • குறிச்சொற்கள்
  • இசை
முந்தைய கட்டுரைதிராவிட இயக்கத்தில் இருந்து நவீனத்துவம் வரை…ஆ.மாதவன் பேட்டி
அடுத்த கட்டுரைஅழுக்குநீக்கிகள், கடிதங்கள்