அபத்தப்பகடி எழுதுவது மிக எளிது, நம் அபிப்பிராயங்களைச் சொன்னாலே போதும். இவை அவைதான். சென்ற காலங்களில் ரத்தம் கக்கி பல விஷயங்களைச் சொல்லியிருக்கிறேன். சொல்லி முடித்ததுமே ‘ரெம்ப ஓவராப்போயிடுச்சோ’ என்னும் சந்தேகம் வந்துவிடும். உடனே ஒரு பகடிக்கட்டுரையை எழுதுவேன். அது இந்தப்பக்கமாக ஓவராகப்போய்விடும். அடுத்து அந்தப்பக்கமாக ஓவராகப்போவதற்கான விசையை இது அளிக்கும். இப்படியாக எழுதப்பட்ட கட்டுரைகள் இவை.
நானெல்லாம் எழுத வந்தகாலகட்டத்தில் பெருமூச்சுவாதம் என்னும் இலக்கிய அழகியல் பிரபலமாக இருந்தது.. என்னத்தச்சொல்ல என்னும் பாவனையில்தான் கட்டுரைகள் ஆரம்பிக்கும் ‘மூன்றாமுலகநாடுகளில் வஞ்சனைகளின் வரலாறு தொடர்ந்துகொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் அழகியலும் அரசியலும் …..” என்றிவ்வாறு கட்டுரைகள் நிகழ் அல்லது புதியநம்பிக்கைக்கு எழுதலாம். அல்லது “இவனுக்கு அலுப்பாக இருந்தது, ஏன் உயிர்வாழவேண்டும் என நினைத்துக்கொண்டான்., நினைத்துக்கொண்டானே ஒழிய உயிர்வாழ்ந்துதானே ஆகவேண்டும்’ என்று கதைகள் கணையாழிக்கு.
எனக்கு என்னவோ பெருமூச்சு சரியாக வரவில்லை. ஏற்கனவே கடுமையான மனச்சிக்கல்கள். அதன் விளைவாக மற்றவர்களுக்கு மேலும் சிக்கல்கள். அவர்கள் அதன் விளைவாக நமக்களித்த சிக்கல்கள். ஆகவே கொஞ்சம் மஜாவாக இருப்போமே என்றுதான் நான் இலக்கியத்திற்கே வந்தேன். என் ஆரம்பகாலக் கதைகள் அனைத்திலுமே ஒரு நக்கலும் சிரிப்பும் இருந்துகொண்டிருக்கும். அதன்பின்னர் எழுதிஎழுதித்தான் ஒருமாதிரி சமனப்பட்டு ‘சீரியஸான’ ஆளாக ஆனேன். இன்றைக்கு மாடன் மோட்சம் மாதிரியான கதைகளையெல்லாம் பார்க்கையில் அய்யோப்பாவம் எத்தனை சிக்கலுக்குள்ளாகியிருந்தால் இப்படியெல்லாம் பகடி எழுதியிருப்பான் இந்தாள் என்னும் அனுதாபம் ஏற்படுகிறது.
இந்தக்கட்டுரைகளை கட்டுரைகளா என்று கேட்டால் கதைகள் என்றும் கதைகளா என்று திடுக்கிட்டால் கட்டுரைகள் என்றும் சொல்லும்விதமாக எழுதியிருக்கிறேன். பலவிஷயங்களைப்பற்றிய என்னுடைய ஆழமான கருத்துக்கள் இதில் உள்ளன. மிக ஆழமானவையாதலால்தான் பகடியாகத் தோற்றமளிக்கின்றன. இணையத்தில் வெளிவந்தபோது பலர் இதற்காகச் சிரித்தார்கள்
எழுத்துருமாற்றம், பெருந்தொகை நோட்டு அகற்றம் குறித்தெல்லாம் நான் எழுதிய கட்டுரைகளையும் இதில் கட்டாயம் சேர்க்கவேண்டும் என்று என் செல்லக்குட்டி சைதன்யா அடம்பிடித்தாளென்றாலும் இன்னும் அதேபாணியில் கொஞ்சம் எழுதியபின் ஒன்றாகச்சேர்த்து வெளியிடலாமென்று இப்போது தோன்றுகிறது. வயதாக வயதாக நாம் எந்தமுயற்சியும் செய்யாமலேயே நகைச்சுவை எழுத்தாளராக ஆகிக்கொண்டிருக்கிறோம்.
இந்நூலை என் அன்புக்குரிய நண்பர் கமல்ஹாசன் அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன்.
ஜெயமோகன்
கிழக்கு வெளியீடாக வரவிருக்கும் அபிப்பிராயசிந்தாமணி நூலின் முன்னுரை