நடைதிறப்பு

unnamed

இந்தியாவைப்பார்க்கும்பொருட்டு நாங்கள் கிளம்பியது 2008 செப்டெம்பரில். நண்பர் கிருஷ்ணன் பின்னர் சொன்னார், அந்தப்பயணத்தின் மிகப்புத்திசாலித்தனமான அம்சம் என்னவென்றால் அதற்கு இந்தியப்பயணம் என்று பெயரிட்டதுதான் என. நாங்கள் சென்றது ஈரோட்டிலிருந்து ஆந்திரம் வழியாக மத்யப்பிரதேசத்தைக் கடந்து காசிவரை. அப்படியே கயா வழியாக ஒரிசாவுக்குள் நுழைந்து விசாகப்பட்டினம் வந்து சென்னை வந்தோம். அதை இந்தியா என நம்பிக்கொண்டமை எங்களுக்கு மிகப்பெரிய மன எழுச்சியை அளித்தது. அந்த உத்வேகமே அப்பயணத்தை இன்றைக்கும் மறக்கமுடியாத அனுபவமாக ஆக்குகிறது.

பின்னர் பலபயணங்கள். அதைவிடப்பெரிய பயணமாக சமணப்பயணம். குகைகளின் வழியே ஒருபயணம். வடகிழக்கு, லடாக், பூடான், காஷ்மீர் என சென்றுகொண்டே இருக்கிறோம். ஆனால் இந்தியா இன்னமும் பார்க்கப்படாத ஒன்றாகவே எஞ்சுகிறது. ஆதிசங்கரர் முதல் நாராயணகுருவரை அத்தனை ஞானியரும், வியாசர் முதல் வைக்கம் முகமதுபஷீர் வரை அத்தனை கலைஞர்களும் அலைந்து கண்ட இந்த நிலத்தை அப்படிப் பார்த்து முடித்துவிடமுடியுமா என்ன? பின்னர் பல பயணங்கள் மேலும் உத்வேகமானவையாக அமைந்தன என்றாலும் எங்களுக்கு இப்பயணம் கருவறை நடைதிறந்து தெய்வத்தை முதலில் பார்த்த அனுபவம்.\

இப்போதெல்லாம் ஓர் ஆறுதல். நல்லவேளை, இன்னும் இந்தியா தீர்ந்துவிடவில்லை. இன்னும் நிறையவே எஞ்சியிருக்கிறது. இன்னும் நான் உயிருடன் இருக்கவாய்ப்புள்ள பத்துப்பதினைந்தாண்டுக்காலத்தில் இது எப்படியும் தீர்ந்துபோகாது. குளிர்ப்பெட்டி நிறைய இனிப்பு இருக்கிறது என நினைக்கும் சிறுவனின் நிறைவு.

இந்தியா ஒரு பெரிய கனவு. இப்பெருநிலத்தில் அலைவது ஒரு தவம். அதை சென்றுகாணாது எவரும் உணரமுடியாது. ஒவ்வொரு இடமாகச் சென்றுபார்க்கலாம், ஆனால் ஒட்டுமொத்தமாக இந்தியாவிற்குக்குறுக்கே ஒரு பயணத்தை மேற்கொள்வதென்பது அளிக்கும் இந்தியதரிசனமே வேறு. நூறு கிலோமீட்டர்களுக்குள் உணவு உடை பேச்சு எல்லாமே மாறிவிடும் அற்புதம். மாடுகளின் கொம்புகளே கூட மாறிக்கொண்டிருக்கும்.

ஆனால் மாறாத ஒன்று உண்டு. அதை உணர்ந்துகொண்டே இருப்போம். எப்போதோ ஒருபுள்ளியில் அதிர்ச்சியுடன் தூலமாகக் கண்டடைவோம். அதுதான் இந்தியதரிசனம். இங்குள்ள அரசியல் வாயாடிகளால் காணமுடியாதது. வைக்கம் முகமது பஷீரும், சிவராமக் காரந்தும் பிபூதிபூஷண் பந்த்யோபாத்யாயவும் கண்டடைந்தது

அன்று எங்கள் பயணத்தில் உடனிருந்தவர்கள் வசந்தகுமார், கல்பற்றா நாராயணன், செந்தில்குமார், கிருஷ்ணன் , சிவா ஆகியோர் இன்றும் ஒரு பரவசத்துடன் நினைத்துக்கொள்ளும் பயணம் இது. இதேவழியில் என் வாசகர்களில் பலர் பலமுறை பயணம்செய்யவைத்தது இப்பயணப் பதிவு. இன்னும் இளையவர்களுக்கு தோளில் ஒருபையுடன் கிளம்ப இந்நூல் ஊக்கமளிக்கவேண்டும் என விரும்புகிறேன்

என் நண்பர் திருமலைராஜன் முதன்முறையாக அமெரிக்கப்பயணத்திற்கு ஏற்பாடுசெய்தவர். அமெரிக்கா என்றாலே எனக்கு சாஸ்தாமலையும் கிரேட்டர் ஏரியும்தான். அவை பலவகையான கனவுகளாக வெண்முரசு நாவல்தொடரில் வெளிவந்துகொண்டே இருப்பதைக் காண்கிறேன். தனிப்பட்டமுறையில் நான் மிகவும் கடன்பட்டிருப்பவர்களில் ஒருவர் அவர். இந்நூலை அவருக்கு சமர்ப்பணம் செய்கிறேன்

ஜெயமோகன்

[கிழக்கு வெளியீடாக வரவிருக்கும் இந்தியப்பயணம் நூலின் முன்னுரை ]

முந்தைய கட்டுரைஏழாம் உலகின் இருள்
அடுத்த கட்டுரை’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 83