கடிதங்கள்

அன்புள்ள ஜெ

எனக்குத் தெரிந்து துவேஷ மனப்பான்மையுடன் செய்யப்படும் பிராமண எதிர்ப்பிற்கு எதிராக பிராமணர்களுக்கு வெளியே இருந்து வரும் உறுதியான குரல் தங்கள் குரல் தான்.(முன்பு ஜெய காந்தன் இருந்தார்).இதனாலேயே இந்துத்வா முத்திரை விழுந்து விடுமோ என்று கவலைப் படாமல் உண்மையென்று பட்டதைக் கூறி வருகிறீர்கள்.

அதே நேரத்தில் பொதுவாக சகிப்புத்தன்மை மிகவும் குறைந்து வருகிறது.பிராமணர்களும் அதற்கு விலக்கல்ல.முன்பு பிராமணர்கள் மற்றவர்களுக்குச் செய்தவற்றை ஒப்பிடும் போது இந்த சிறு சித்தரிப்பு ஒன்றுமேயில்லை.பிராமணர்கள் கொஞ்சமாவது சுய விமர்சனம் செய்து கொள்ள வேண்டும்

உண்மையைச் சொல்பவனுக்கு ஊர் முழுக்க எதிரி என்பது போல் ஒரே நேரத்தில் இரண்டு தரப்பினரும் எதிர்க்கும் நிலையில் தாங்கள் இருப்பது தெரிகிறது.

அன்புடன்
ராமானுஜம்
பி.கு : நானும் பிராமணன் தான் .தாங்கள் தீராநதி யில் எழுதிய இந்தியத் தத்துவ தரிசனம் (காசிரங்கா யானை) தொடரில் வரும் ஸ்ரீ ரங்கம் அய்யங்கார் பகுதியைப் படித்து விழுந்து விழுந்து சிரித்திருக்கிறேன் .

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு

உங்கள் ஒவ்வொரு கடிதமும் எனக்கு உங்கள் மீது மிகுந்த மரியாதையை ஏற்படுத்தி வருகின்றது. நம்முடைய கடந்த கால வரலாற்றை இயல்பாகவும், நேர்மையாகவும் ஆராய்கிறீர்கள்.

நான பானு குமாரின் பதிவுகளில் ‘சற்று’ உண்மை இருப்பதாகக் கூறியதன் காரணம், பக்தி இலக்கியங்கள் தான். சம்பந்தரின் கூரான சொற்கள் சமணரையும் சாக்கியர்களையும் குறி வைத்தே உள்ளன. அவரது ஒவ்வொரு பதிகத்தின் ஒன்பதாவது பாடலையும் கவனியுங்கள். அப்பரும் சளைத்தவர் அல்ல.

இன்னொரு விஷயம் , நான கேள்விப்பட்டது. அதாவது, பெரும்பாலான காப்பியங்களும், கடைச்சங்க இலக்கியங்களும் சமண, பௌத்த சர்புடையவைகளாய் இருந்த காரணத்தால் , பக்தி காலத்தில் , ஆடிப் பேருக்கு தினத்தில் தங்களது பழைய ஓலைச் சுவடிகளை ஆற்றில் விடச் சொல்லி ஆகமங்களில் ஸ்லோகங்கள் சேர்க்கப் பட்டனவாம். உ வே சா அவர்களும் இந்த விஷயம் அறிந்து கொதித்து , ஆகமங்களின் பெயரால் இது நடப்பதைக் கண்டித்தாராம். (நான இது வரை அந்த விஷமமான ஸ்லோகங்களைப் படித்ததில்லை. எந்த ஆகமம் என்றும் தெரியவில்லை.)

ஆயினும் இதற்கு மேலும், நான பானு குமாரின் வாதங்களை மறுத்தே வந்திருக்கிறேன். எனது முதல் வாதம் , சமணம் இன்றைய காலத்தில் வழங்கப் படும் ‘மதம்’ என்ற வரையறையில் வராது என்பது. நரேந்திர மோடி தன் சமீபத்திய வாதத்தில் அவை தர்ம அடிப்படையிலானவை என்று சரியாக பேசினார். (இன்று கிறித்தவமும், இஸ்லாமும் இந்த ‘தர்ம’ வார்த்தையை திருடி விட்டன என்பது இன்னொரு விஷயம்). இன்னொன்று , சமணமும், பௌத்தமும், வைதீகத்தின் அடைபடு விஷயங்கள் ஆகிய தர்ம அர்த்த காம மோக்ஷ விஷயங்களின் அடிப்படையை ஒப்புக் கொள்கின்றன என்பது.

இத்தனை நெருக்கம் இருந்தும், அவை காலப் போக்கில் தங்களுக்கு அடையாளம் தேடி தனித்தன்மையை நாடும் போதே உயிரிழந்தன என்று எண்ணுகிறேன். அரசியல் செல்வாக்கு ஒரு விஷயம். களப்பிரர் சமணர். பக்தி இயக்கத்தின் வீறு களப்பிர காலத்தின் பின்பு தான் தொடங்குகிறது என்பதால் அந்தக் கால கட்டத்தில் வெள்ளாளரும், அந்தணரும் சீண்டி விடப்பட்டனர் என்பதாகத் தான் தெரிகிறது. நா பார்த்தசாரதியும் , தன் போக்கில் தன் நாவலான ‘நித்திலவல்லி’ இல் இந்த பிளவை உறுதி செய்கிறார்.

இப்போது தீபாவளிக்கு வருவோம்.தமிழர்களின் கார்த்திகை சற்று வேறாகத் தெரிகிறது. கார்த்திகை இருட்டு மாதம். பகல் பொழுது குறைவு. அதனால் மாதம் முழுதும் விளக்கு வைக்கிறோம். ஆனால் தீபாவளி ஐப்பசி அமாவாசையில் அல்லவா வருகிறது ? கார்த்திகையின் உச்சமான தீபம் முருகனின் பிறந்த தினம். ஆக , பல வேறுபாடுகள். புராணம் சாராத ஒரே விஷயம் மகாவீரரின் நிர்வாணம். மேலும், சமணர் நன்றாக வேரூன்றி இருந்த நாடு தமிழகம். சமணம் தானாகவே அழியவில்லை . பக்தி இயக்கம் என்ற உணர்ச்சிப் பிரவாகம் அதனை பெயர்த்தெறிந்தது. அப்படி இருக்கையில் , அதன் அடையாளங்களை அழிப்பது/ மறப்பது தவிர்க்க முடியாதது. இந்தக் கோணத்தில் பார்த்தால் சமண அடையாளங்கள் வெகு காலம் நிலைத்தன என்பதும் , புராண கதைகள் அவற்றை மறைக்க புகுத்தப் பட்டிருக்கலாம் எனவும் கொள்ளலாம்.

வரலாற்று ரீதியில் சமணர்கள் வெறுக்கப் படவில்லை என்பதும் என் வாதம். தமிழ் நாட்டில் இன்று ஏறக்குறைய ஒரு லட்சம் பேருக்கு மேல் தமிழ் இன சமணர்கள் இருக்கிறார்கள். நானே பல சமண (தமிழ்/குஜராத்தி ) ஆலயங்களுக்குப் போயிருக்கிறேன். சமணர் இன்றும் திருப்பதிக்கு தவறாமல் வருகின்றனர். வெறுப்பு ஏதோ ஒரு காலத்தில் இருந்தாலும் கூட அது தொடர்ந்திருக்கும். நானோ பானு குமாரின் தமிழுக்கு , அவரின் சமண விவரிப்புகளுக்கு ரசிகன். இன்னும் சமணர் இந்து இல்லங்களில் உயர்ந்த இடத்திலேயே வைக்கப் படுகின்றனர்.

மனோவியலில், ஒரு விதி உள்ளதாகப் படித்திருக்கிறேன். அது Jost’s law.

” If any two learned impulses are equal today, the older one will be stronger tomorrow”. என்பது தான் அது. இதன் படி காலம் என்ற மகத்தான துடைப்பம் புதிய சிந்தனைகள் வலுவிழந்ததும், பழைய சம்ஸ்காரங்களை எழச் செய்து விட்டது போலும்.

வெள்ளையர்களது வரலாற்றுப் போக்கில் நான இதனை ஆராயவில்லை. வெள்ளையரது வராற்றுக் கோட்பாடு முற்றிலும் இனவாதம் மற்றும் அரசியல் சிந்தனையைப் பின்னணியாகக் கொண்ட அலசல் . நம் நாட்டின் வரலாற்றுக் கோட்பாடுகள் தார்மீக, மோக்ஷ அடிப்படியில் எழுந்த பிரிவுகளை அதன் போக்கிலேயே ஆராய்வது. ‘sense of hisrory’ என்பது ஒரு இனவாதச் சுவடே என்று என் நண்பர் கூறுவார். நல்ல வேளை அது நம்மிடம் இல்லை. அதனாலேயே நாம் நம் முழுமையான வரலாற்றை எழுதி வைக்கவில்லை.

வேங்கடசுப்ரமணியன்

முந்தைய கட்டுரைநாட்டாரியல் ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைஅலைவரிசை ஊழல்