[ 11 ]
காகவனத்தின் ஊர்மன்றில் தன் கையிலிருந்த முழவை மீட்டியபடி உக்ரன் பாடினான். அவன் முன் கம்பளியும் மரவுரியும் போர்த்தி அமர்ந்திருந்தவர்களின் கண்களில் மன்றெரி அனல்முனைகொண்டிருந்தது. காற்று குடில்கூரைகளை சீறவைக்க தழல் எழுந்து ஆடி குவிந்து பரந்து மீண்டும் எழுந்தது. அப்பால் அவர்களின் தொழுவங்களில் கன்றுகள் காதடித்து குளம்புவைத்து இடம்மாறி நிற்கும் ஒலி கேட்டது. காட்டின் சீவிடு ஒலி சூழ்ந்து நின்றிருக்க அவன் குரல் அதன் ஒரு பகுதியே என ஒலித்தது.
“கல்பத்தின் தொடக்கத்தில் பிரம்மம் தன்னுள் பிறிதொன்று இருப்பதை உணர்ந்தது. அது விஷ்ணு என்றாகியது. விஷ்ணு தன்னுள் இருந்து பிரம்மனை கண்டெடுத்தார். பிரம்மன் தனக்குள் புடவிகள் இருப்பதை கண்டடைந்தார். அவற்றை அவர் விரித்துப்பரப்பி விசும்பை நிறைத்தபோது அவை தங்களுக்குள் அனலிருப்பதை அறிந்தன. அனல் தன்னை ருத்ரம் என்று அறிந்தது. ருத்ரம் தன்னை மகாருத்ரம் என்று கண்டடைந்தது. மகாருத்ரமே பிரம்மம் என அறிந்தது. அதில் ஒருதுளியென்று விஷ்ணு தன்னை அறிந்தார்” என்றான் உக்ரன். முழவை மீட்டியபடி அவன் பாடலானான்.
பிரம்மனிலிருந்து எழுந்த ருத்ரம் ஒரு நீலநிறமான உடல்கொண்ட சிறுவனாக இருந்தது. சீறிஎழுந்து நின்றாடி அவன் தன் தந்தையிடம் கேட்டான். “தந்தையே, என் பெயர் என்ன?” பிரம்மன் குனிந்து அச்சிறுவனை நோக்கி ஒருகணம் எண்ணி “எரிதலென்றே ஆன நீ ருத்ரன்” என்றார். “உனக்குரிய உறைவிடம் சூரியன்.” அவன் கோடி கைகளை விரித்து வெளியெங்கும் பரவினான். விண்பரவிய நீரில் விழுந்து செந்நிற உடல்கொண்ட சிறுவன் எழுந்து “சொல்க தந்தையே, என் பெயர் என்ன?” என்றான். “நீ பவன்” என்றார் பிரம்மன். “நீர் உன் இருப்பிடமாகுக!”
பவன் தொட்ட அனைத்தும் வெம்மை உண்டு கனல்கொண்டன. உலோகங்கள் உருகின. பாறைகள் கனித்துண்டுகளாயின. செங்கனல் வடிவிலெழுந்த மூன்றாவது மைந்தன் கேட்டான் “தந்தையே, என் பெயரென்ன என்று சொல்க!” பிரம்மன் “நீ சர்வன்” என்றார். “நீ வாழுமிடம் மண். அன்னத்திலெழுந்து அன்னத்தை உண்டு அன்னத்தை வென்று வாழ்க!” காற்றை புரவியெனக்கொண்டு எழுந்து திசைதோறும் பரவிய புகைவண்ண மைந்தன் கேட்டான் “நான் யார்?” பிரம்மன் சொன்னார் “வடகிழக்கு மூலையில் என்றுமிருந்து மண்புரத்தல் உன் தொழில். உனக்குரியது காற்று. நீ மண்ணின் மூச்சில் வாழ்க! உன் பெயர் ஈசானன் என்றமைக!”
விண்ணளாவ எழுந்த அனல்வடிவாக நின்று இளமைந்தன் ஒருவன் கேட்டான் “எனக்கு பெயரிடுக, தந்தையே!” பிரம்மன் அவனை நோக்கி “பொன்னிறமான நீ பசுபதி. நீ மண்பொருட்டு விண்ணைச் சூடியவன். எரியென்று அடுமனைகளில் வாழ்க! வேள்விகளில் அவிகொள்ளும் நாவாகுக! அகல்களில் சுடர்மணியென்று ஒளிர்க!” கரியநிறமாக விண்ணில் பரந்து நிறைந்த இளமைந்தன் “தந்தையே, என்னை அறிக!” என்றான். “விண்ணில் வாழும் நீ பீமன். மின்னலென காணப்படுக! இடியென கேட்கப்படுக! உன்னை முனிவர் பர்ஜன்யன் என வணங்குக!” என்றார்.
தவழ்ந்து வந்து எழுந்து நின்ற மைந்தன் கேட்டான் “தந்தையே, நான்?” அவன் இளம்பச்சை நிறம்கொண்டிருந்தான். குனிந்து அவன் தலையை வருடி உளம்கனிந்து பிரம்மன் சொன்னார் “நீ உக்ரன். மெய்யமைந்த சொல்லில் வாழ்க! இளந்தளிரில் மின்மினியில் உன் ஒளி திகழ்க!” வெம்மையின்றி ஒளிமட்டுமேயாகி வெண்ணிறத்தில் எழுந்த எட்டாவது மைந்தனை நோக்கி பிரம்மன் அருளினார் “நீ மகாதேவன். சந்திரனில் வாழ்வாய். உலகனைத்துக்கும் குளிராவாய், காதலில் பிரிந்தோரை மட்டும் காய்வாய். சுனைகளை கனவிலாழ்த்துவாய், கடல்களை கொந்தளிக்கச் செய்வாய். நீ வாழ்க!”
எட்டு ருத்ரர்களுக்கு அவர்களின் இடப்பக்கத்திலிருந்தே தேவியரை உருவாக்கினார் பிரம்மன். சூரியனில் அமர்ந்த ருத்ரன் சுவர்ச்சலையை மணந்தான். முதற்புலரியில் நீரில் எழும் பொன்னலையாகிய உஷையை பவன் மணந்தான். காற்றில் புழுதியென எழுந்த விகேசியை சர்வன் துணைகொண்டான். ஈசானன் தன்னுடலில் சிவையை சூடினான். அவிகொள்கையில் நாவெனக் கொழுந்தாடும் ஸ்வாகை பசுபதிக்கு மனைவியானாள். விண்வடிவனாகிய பீமன் திசைதேவிக்கு துணைவனானான். சொல்வடிவனாகிய உக்ரன் பற்றுறுதியாகிய தீக்ஷையை மணந்தான். குளிர்நிலவு வடிவம்கொண்ட மகாதேவனில் நிழலுருவாக ரோகிணி அமைந்தாள்.
தவத்திலமர்ந்து மெய்ச்சொல் அறிந்து முழுமைகொண்ட யோகி ஒருவன் தன் நாவை தழலாக்கினான். அதிலெழுந்தான் உக்ரன். உக்ரன் படர்ந்தேறிய அவன் மொழி அனல்கொண்டது. அவன் அகம் சுடராகியது. அவனறிந்த அனைத்தும் எரிந்தன. தழலுரு என எழுந்து வெளிவந்த அவன் கிழக்கே ருத்ரனையும் மேற்கே மகாதேவனையும் ஒருங்கே கண்டான். அவன் நின்ற மண்ணில் சர்வனும் அவன் மேல் கவிந்த வானில் பீமனும் அவன் உள்ளங்கை அனலில் பசுபதியும் மூச்சு சூழ்ந்த காற்றில் ஈசானனும் அவன் குருதி நீரில் பவனும் எழுந்தனர்.
“எண்மரும் ஒன்றென்றாகி அவனில் நிறைந்தபோது அவன் தலை எழுந்து விண்முட்டி ஏழு மேலுலகுகளையும் கடந்து அலகிலா வெளியில் பரவிச்சென்றது. அவன் கால்கள் மண்ணிலிறங்கி இருளில் ஆழ்ந்து சென்றன. முடிவிலியென தன்னை உணர்ந்து அவன் சொன்னான், சிவமேயாம். அச்சொல் விசும்பெங்கும் பல்லாயிரம்கோடி இடிகளாக ஒலித்தபடியே சென்றது. ஆதித்யகோடிகள் எதிரொலித்தன, சிவமேயாம். காலம்படர்ந்த கடுவெளி முழங்கியது, சிவமேயாம். சிவம் சிவம் சிவம் என இன்மை ஒலியணிந்தது. இருநுனி முடிவிலி என சிவம் பிறந்து நின்றது.”
“ஆம், அவ்வாறே ஆகுக!” என்று உக்ரன் கைகூப்பி சொன்னான். “ஆம் ஆம் ஆம்” என கூட்டம் உடன் முழங்கியது. குலத்தலைவர் கைகூப்பி “இங்கு இவ்வண்ணம் நீங்கள் எழுந்தருளவேண்டுமென்பது முழுமுதலின் நெறிபோலும், நல்லாசிரியரே. எங்கள் சிற்றறிவால் அதை அறிய முடியவில்லை. சிறுமதியை பொறுத்தருளவேண்டும்” என்றார். “உங்கள் சொல் எங்கள் மைந்தர் நாவிலும் வளரவேண்டுமென்று அருள்க!” என்றார் குடிமூத்தார் ஒருவர். உக்ரன் அச்சொற்களை கேட்டதாகவே தெரியவில்லை. அவன் அனலை நோக்கியபடி அமர்ந்திருந்தான்.
[ 12 ]
காலை நீராட்டின்போது ஜைமினி “நான் அக்கதைகளை பயின்றிருக்கிறேன். சற்று மாறுபட்ட வடிவில் மகாருத்ரபுராணத்திலும் சூரியபுராணத்திலும் உள்ளது. ஆனால் இவன் சொல்வது முற்றிலும் பிறிதொன்று” என்றான். சுமந்து “விஷ்ணுவை முதன்மைத்தெய்வமாகக் கொண்ட நூல்களில் உள்ள கதை பிறிதொன்று” என்றான். வைசம்பாயனன் அப்பால் சுனைநீரில் இடுப்பளவு ஆழத்தில் நின்று சுனைக்கு மறுகரையில் ஒரு நாணல்மேல் மீன்கொத்தி அமர்ந்திருப்பதை நோக்கிக்கொண்டிருந்தான்.
“இவன் எங்ஙனம் கற்றான் இக்கதைகளை?” என்றான் பைலன். சுமந்து “அவன் கற்றிருப்பதுபோல் தெரியவில்லை. கனவில் கண்டதுபோல் உள்ளது” என்றான். “கற்காமல் எப்படி இக்கதைகளை சொல்லமுடியும்?” என்றான் பைலன். “ஏன் முடியாது? நான் பிறந்தது அயோத்தியில். மலையென ஒன்றை நான் முதல்முறையாகக் கண்டது எந்தையுடன் கயிலை செல்லும்போது. முதல்முறை மலை என் முன் எழுந்தபோதே நான் உணர்ந்தேன், அதை நான் நன்கறிவேன் என்பதை” என்றான் ஜைமினி. “நாமும் மலையமைந்துள்ள இம்மண்ணில்தான் இருக்கிறோம். ஒரே உப்பு நாம். ஆகவே நாம் உள்ளறிந்திருக்கிறோம். கதைகள் காற்றுபோல, மூச்சென நம்முள் ஓடுவதுதான் உயிர்க்குலங்கள் அனைத்திலும் புகுந்து வெளிவந்துள்ளது. மானுடம் மூச்சாலும் கதைகளாலும் ஒன்றென கோக்கப்பட்டுள்ளது என்பார்கள்.”
பைலன் “விந்தைதான். இளவயதில் மெய்மையறிந்து நூலியற்றியவர்கள் என பல முனிவர்களைப்பற்றி நான் கேட்டிருக்கிறேன். சொல்திருந்தா இளமையில் இவ்வண்ணம் நிகழுமென்பதை எண்ணியும் பார்த்ததில்லை” என்றான். வைசம்பாயனன் நீரில் மூழ்கி எழுந்து குடுமியை அடித்து துளி களைந்தபடி கரை நோக்கி வந்தான். “நீங்கள் என்ன எண்ணுகிறீர்கள், வைசம்பாயனரே?” என்றான் ஜைமினி. “நீங்கள் பேசுவதைக் கேட்டேன். மலையுச்சிப்பாறையில்கூட பாசி முளைத்திருப்பதைக் காணலாம். ஈரமிருந்தால் போதும். பாசியின் விதை காற்றில் உள்ளது. அவனுக்குள் சொல்லூற்று உள்ளது. வெளியே இருந்து ஓர் எண்ணத்தின் விதை சென்று விழுந்தால்போதும்.” அவர்கள் அது மேலும் உகந்ததாக இருப்பதை உணர்ந்தனர்.
“அவன் சொன்ன கதை கிராதமதத்திற்கு மிக அண்மையானது” என்றான் பைலன். “சிவமேயாம் என்பது பொதுவான ஊழ்கச்சொல்” என்றான் சுமந்து. “ஆம், ஆனால் சிவம் ஒரு தவத்தோனின் சொல்லில் முளைத்து எழுந்து தன்னைத் தானுணர்ந்து பெருகியது என்பது அவர்களின் நோக்கே” என்றான் பைலன். “ஆம், அதை நானும் எண்ணினேன். விந்தைதான். கதைகளினூடாக எளிதில் சென்று தொடமுடிகிறது அனைத்தையும்” என்றான் வைசம்பாயனன். ஜைமினி “குரங்கு கைபற்றி முயன்றேறும் கிளைநுனியில் பூத்த மலரில் வண்ணத்துப்பூச்சி எளிதில் சென்றமைகிறது என்று ஒரு சூதர்சொல் உண்டு” என்றான். “அனைத்துக்கும் ஒப்புமை வைத்திருக்கிறார். அவருக்காக இந்தப் புவியே ஒன்றை ஒன்று ஒத்துப்போக முயல்கிறது” என்றான் பைலன். வைசம்பாயனன் நகைத்தான்.
சண்டன் வருவதை அவர்கள் கண்டனர். “பிந்தி எழுந்திருக்கிறார்” என்றான் சுமந்து. “ஆம், நேற்று நெடுநேரம் அவரும் குலத்தலைவரும் கிருதரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்” என்றான் பைலன். “எதை?” என்றான் வைசம்பாயனன். “நான் கேட்டபோது கிருதர்தான் பேசிக்கொண்டிருந்தார். அஸ்தினபுரியில் நிகழ்வதை” என்றான் பைலன். “பாண்டவர்களைத் தேடி நாடெங்கும் ஒற்றர்களை அனுப்பியிருக்கிறார் துரியோதனர்.” வைசம்பாயனன் “ஏன்?” என்றான். “அவர்கள் அரிய அம்புகளை தேடிச்சென்றிருப்பதாக சூதர் சொல்லிப்பரப்பும் கதைகளைக் கேட்டு அஞ்சியிருக்கலாம்” என்றான் பைலன்.
“ஏன் அஞ்சவேண்டும்? அவரிடம் அரசு இருக்கிறது. இந்திரப்பிரஸ்தத்திலும் அமுதகலசக்கொடியே பறக்கிறது. உஜ்ஜயினியில் நான் கேட்டது என்னவென்றால் பாரதவர்ஷத்தின் ஷத்ரியர்கள் அனைவருமே அவரைத்தான் தலைவராக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இன்று பாரதவர்ஷமெங்கும் எழுந்துவரும் அசுரர்களையும் நிஷாதர்களையும் சூத்திரர்களையும் வென்றொழிக்க அவரால்தான் இயலும் என நினைக்கிறார்கள்” என்றான் வைசம்பாயனன். “அரசர்களை அரியிட்டு அரியணை அமர்த்தியது நால்வேதம். அதை காக்கும் பொறுப்பு அரசர்களுக்குண்டு. இளைய யாதவர் வேதத்தை கடந்துசெல்ல முயல்கிறார் என்று சொல்கிறார்கள். அச்சொல்லே அத்தனை ஷத்ரியர்களையும் துரியோதனரிடம் சென்றுசேரச்செய்கிறது. இனி அவரை வெல்ல எவராலும் இயலாது.”
“ஆம், மறுபக்கம் துவாரகை அழிந்துகொண்டிருக்கிறது” என்றான் சுமந்து. “மூத்த யாதவர் சினம்கொண்டு பிரிந்துசென்று மதுராவில் இருக்கிறார். வசுதேவரும் அவருடன் இருக்கிறார். துவாரகை இருண்டுகிடக்கிறது. இளையவர் இன்னமும் தன் இருள்சூழ்ந்த தனிமையில்தான் இருந்துகொண்டிருக்கிறார்.” ஜைமினி “ஆம், இனி அவர்களை வெல்ல எதனாலும் இயலாது. பாண்டவர்கள் மாவீரர்கள் என்பதில் மாற்றுச்சொல் இல்லை. ஆனால் அரசும் படையும் குடியும் இன்றி அவர்கள் என்ன செய்யமுடியும்?” என்றான். சுமந்து “அதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். கதைகளுக்குள் புகுந்துகொள்கிறார்கள். அங்கே வாழ்வார்கள்” என்றான்.
அருகே வந்த சண்டன் “பாண்டவர்களைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறீர்கள் போலும். என்னிடம் ஒரு தெய்வம் வந்து சொன்னது” என்றான். சிரித்தபடி பைலன் “நீங்கள் இதழசைவு நோக்குவதில் திறத்தோர் என அறிவேன்” என்றான். சுமந்து “ஆம், அனைத்து வல்லமைகளும் வாய்ப்புகளும் துரியோதனருக்கே என்றும் பாண்டவர் கதைகளிலும் இளைய யாதவர் தத்துவத்திலும் வாழ்வதொன்றே எஞ்சும் என்றும் சொல்லிக்கொண்டிருக்கிறோம்” என்றான். வைசம்பாயனன் “இனி பாண்டவர் வெல்வதென்றால் தற்செயல் என தெய்வமெழவேண்டும்” என்றான்.
“நேற்று நெடுநேரம் இதைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தனர். கிருதர் நிறைய செய்திகளை வைத்திருக்கிறார். அதுவே அவருடைய வாழ்க்கை என்பதனால் சொல்லிச் சொல்லி நினைவில் வளர்த்திருக்கிறார். நிறைய சொல்லப்படுவது பிழையென்றாகிறது. எதிர்ச்சொல் எடுக்கப்படுகையில் பொய்யென தன்னை சமைத்துக்கொள்கிறது” என்றான் சண்டன். “ஆகவே, நான் பேசாமல் செவிமூடி சிவமூலி இழுத்தேன். அங்குள்ள சொற்களெல்லாம் மின்மினிகளாகி என்னைச் சூழ்ந்து பறந்தன. நான் கொண்ட சொற்கள் அனல்துளிகளாகி உடன் கலந்தன. தொலைவிலிருந்து ஒரு மணம் வந்து என்மேல் படிந்தது. உழுதவயலின் மணம். அது என்னை கொண்டுசென்றது” என்றான் சண்டன்.
“நீர் என்ன எண்ணுகிறீர், சூதரே?” என்றான் வைசம்பாயனன். “நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. அனைத்தும் துரியோதனருக்கு உகந்தவகையில் திரண்டுள்ளன” என்றான் சண்டன். “ஆனால் ஒன்று உள்ளது, அது பாண்டவர்களுக்கு ஆதரவானது. அதை தவிர்க்கமுடியாமை என நான் சொல்வேன். ஊழ் என்று நீங்கள் சொல்லலாம். இறைநெறி என்று அவர் சொல்லலாம்.” அவர்கள் நீரில் எழுந்து நின்று அவன் சொல்வதை விழிநட்டு கேட்டனர். “மரம் எனில் அது வளரும் என்பதுதான் தவிர்க்கமுடியாமை. வளரும் மரத்தில் அணிவிக்கப்பட்ட சட்டம் இரும்பேயானாலும் உடைந்து விழும் என்பது அதன் அடுத்தகட்டம். இளையோரே, ஒரு தவிர்க்கமுடியாமை இன்னொரு தவிர்க்கமுடியாமையை நெறியாக்குகிறது. அவை ஒரு சரடென நீண்டு வாழ்க்கையையும் வரலாற்றையும் இயற்கையையும் கட்டியிருக்கின்றன.”
“எனவே இங்கு தற்செயலென ஒன்று இல்லை. தற்செயல் காண்பவன் தன் அறியாமையையே அறிகிறான்” என்று சண்டன் தொடர்ந்தான். “நேற்று கிருதர் சொல்லிக்கொண்டிருக்கையில் நான் குலத்தலைவரின் விழிகளை நோக்கிக்கொண்டிருந்தேன். கிருதரின் சொற்களில் அவர் தனக்குரிய ஒன்றை தேடிக்கொண்டிருந்தார். அவர் தேடியது பாண்டவர்களின் வெற்றியை. அஸ்தினபுரியின் படைவல்லமையை, கௌரவர்களின் வீரத்தை, ஆசிரியர்களும் பிதாமகர்களும் ஆதரிக்கும் தகைமையை, ஷத்ரியகுடிகளின் முழுத்துணைப்பை அவர் சொல்லிக்கொண்டிருந்தார்.”
வரலாறு எழுந்து வந்து துரியோதனரின் அரியணையை தாங்கிநின்றிருக்கும் காட்சியை காட்டினார். ஒரு துளியும் மிச்சமில்லை. ஒரு விரிசலுக்கும் வாய்ப்பில்லை. ஆனால் குலத்தலைவர் தவித்துத் தவித்து சொல்லிடைவெளி தேடிக்கொண்டிருந்தார். “அவர்களை தெய்வங்கள் கைவிடுமா என்ன?” என்றார். “இந்திரனும் வாயுவும் தர்மனும் அவர்களை விட்டுவிலகிவிடுவார்களா?” என கேட்டார். நான் புன்னகையுடன் கிருதரை நோக்கிக்கொண்டே இருந்தேன். அவரால் அச்சொற்களை புரிந்துகொள்ளமுடியவில்லை. மேலும் ஊக்கத்துடன் “அஸ்தினபுரியின் அரசர் கலியின் வடிவம். நிமித்திகநூலின்படி கலியுகம் பிறந்துவிட்டது. எனவே அவர் ஆள்வதில் ஐயமே இல்லை” என்றார்.
குலத்தலைவர் “மூத்தவர் கந்தமாதனத்தை வென்றதாக சொல்லப்படுகிறதே?” என்றார். “இருக்கலாம். ஆனால் அவரால் படைக்கலம் ஏந்தமுடியுமா என்ன?” என்றார் கிருதர். “இளையவர் திசைத்தேவர்களை வென்று அம்புகளை வென்றிருக்கிறாராமே?” என்றார் குலத்தலைவர். “அவரை ஆளும் யாதவர்தான் இருண்டு அமைந்துவிட்டாரே?” என்றார் கிருதர். “இளைய யாதவர் எழுவார், அது விடியலுக்கான கருக்கிருட்டு என்கிறார்களே?” என்றார் குலத்தலைவர். “அது வீண்சொல், மூத்தவர் விலகியதுமே யாதவகுலம் அவரை கைவிட்டுவிட்டது. துவாரகைக்கு அவர் மீள்வதும் அரிதே” என்றார் கிருதர்.
கிருதர் ஏன் இன்னமும் செம்பு நாணயங்களுக்கு மேல் எதையும் கண்ணால் பார்க்காதவராக இருக்கிறார் என்பதை நான் உணர்ந்தேன். செய்தி என்பது நடந்தவை அல்ல, நாம் நினைப்பவையும் அல்ல, கேட்பவர்கள் நடுவே உருவாகும் நிகர்நிலைப்புள்ளிதான். அதை கண்டடைபவனே நல்ல சூதன். நான் புன்னகையுடன் “ஆனால் நிஷாத, அசுர, சூத்திரப்பேரரசுகளும் பெருகிவருகின்றனவே?” என்றேன். “தெற்கே திருவிடம் முதல் வடக்கே கின்னரநாடுவரை இன்று அவர்களின் அரசுகளே எண்ணிக்கையில் மிகுதி. அவர்களுக்கு எதிராக திரண்டிருக்கும் ஷத்ரியர்களோ முற்றொருமைகொள்ளவுமில்லை. அனல்குலத்து ஷத்ரியர்களை இன்னமும் பிறர் ஏற்கவில்லை” என்றேன்.
குலத்தலைவர் முகம் தெளிந்தது. “ஆம், அதை நானும் அறிந்தேன். ஷத்ரியர் ஒன்றுதிரள்வதே பிறர் குடிவேறுபாட்டை மறந்து ஒருங்கிணைவதற்கான உந்துதலாக ஆகும். இனி தங்கள் தலைமேல் அந்த அனல்முடியைச் சூட நிஷாதரும் அசுரரும் சூத்திரரும் ஒப்பமாட்டார்கள்” என்றார். “ஆனால் ஷத்ரியர் புலிகள். இவர்கள் இன்றுதான் உகிரும் எயிறும் முளைத்த நரிகள்” என்றார் கிருதர். “ஆனால் ஷத்ரியர்கள் வாழ்வதெல்லாம் தொல்நதிக்கரைகளில். புதிய சூத்திரநாடுகள் அனைத்தும் கடற்கரைகளில் எழுந்து வருகின்றன. கலவணிகத்தால் பொன் குவித்துள்ளன. பீதர்நாட்டு எரிபடைகளை சேர்த்துவைத்துள்ளன. அவர்களுக்கு இப்போது தேவை ஒரு வெற்றி மட்டுமே” என்றேன்.
கிருதர் சொல்லிழந்துவிட்டார். என்னை வாய்திறந்து நோக்கிக்கொண்டிருந்தார். குலத்தலைவர் உரக்க “ஆம், இப்போது தேவை வெற்றி. இப்போது வெல்லாவிட்டால் இனியில்லை” என்றார். அப்போதுதான் கிருதருக்கு அனைத்தும் புரிந்தது. அதற்குள் காலம் கடந்துவிட்டது. “இறையருள் எங்குள்ளதோ அது வெல்லும்” என்றார். “தெய்வங்கள் எளியவருடன் மட்டுமே உள்ளன. சவுக்கடிபட்டவர்களை நோக்கி வருவதே உண்மையான தெய்வம்” என்றார் குலத்தலைவர். இறுதியாக கிருதர் “வேள்வியால் வளர்க்கப்பட்ட தேவர்கள் அவர்களுடன் இருப்பதாக சொல்லிக்கொள்கிறார்கள்” என்றார். மேலும் தாழ்ந்த குரலில் “வேதமே மாபெரும் படைக்கலம் என்று ஒரு கவிஞர் பாடினார்” என்றதும் குலத்தலைவர் உரக்க “எங்களிடமும் வேதங்கள் உள்ளன. நாங்களும் அவியளித்து அன்னையரை போற்றுகிறோம். அவர்களின் தேவர்கள் எழட்டும், பிடாரிவடிவாக எங்கள் அன்னையர் அவர்களை களத்தில் சந்திப்பார்கள்” என்றார்.
அதன்பின் அப்படி வெளிப்பட்டுவிட்டதை எண்ணி அவரே சற்று நாணி “நாங்கள் எளிய மலைக்குடியினர். எங்களைக் காக்கும் அரசே எங்களுக்குரியது. எவர் வென்றாலும் நாங்கள் வரிகொடுத்து அடிபணியும் குடிகளே” என்றார். கிருதர் அச்சொல்லால் ஆறுதலடைந்து “ஆம், நாங்கள் சூதர். வென்றோர் எவரோ அவரே எங்கள் பாடலுக்குரியோர். தோற்றோரைப் பாடுபவை குலக்கதைகள் மட்டுமே” என்றார். “ஆனால் குலக்கதைகளை மீண்டும் நாம் பாடத் தொடங்குவோம் அல்லவா?” என்றேன். “ஆம், அதெல்லாம் சற்று கழித்துதானே?” என்றார் கிருதர். குலத்தலைவர் புன்னகை புரிந்தார்.
“இன்று காலை நான் வென்றதை கிருதர் புரிந்துகொண்டார். அவருக்கும் துணைவிக்கும் மரவுரி பரிசாகக் கிடைத்தது. எனக்கு கலிங்கத்து வெண்கூறை” என்று சண்டன் நகைத்தான். “குலத்தலைவரில் எழுந்த விசையையே தவிர்க்கமுடியாமை என்கிறேன். ஆலமரம் வேரை ஆறு காதத்திற்கு விரித்துவிட்டது. அடிமரம் பெருக்காமல் வழியே இல்லை. ஷத்ரியர்களின் கூட்டு அழியும், அதுவே வரலாற்றின் நெறி.”
“ஆனால் அது எப்படி?” என்றான் சுமந்து. “எப்படியேனும். நீர் தன் வழியை தன் முழு உடலாலும் கண்டடைகிறது” என்றான் சண்டன். “இது நிகழ்ந்தாகவேண்டும். பாரதவர்ஷம் தேங்கவேண்டுமா வளரவேண்டுமா என்பதே வினா. தேங்குதலென்பது அழிவு.” ஜைமினி பெருமூச்சுவிட்டான். பின்னர் “அவ்வண்ணமென்றால் வேதம் அழியுமா?” என்றான். “வேதச்சொல் கூர்மைபெறும்” என்றான் சண்டன். “அது அனைவருக்கும் உரியதென ஆகும்.”
அவர்கள் அச்சொல்லால் அமைதியை நோக்கி செலுத்தப்பட்டனர். சண்டன் நீரில் இறங்கும் ஒலி கேட்டது. நீரில் “சிவமேயாம்” என கூவியபடி இறங்கி மூழ்கி எழுந்தான். வைசம்பாயனன் “நான் இங்கு ஒரு பிச்சாண்டவரால் ஆற்றுப்படுத்தப்பட்டேன், சண்டரே” என்றான். சண்டன் எழுந்து முகத்தில் வழிந்த நீரை வழித்தபடி நோக்கினான். “நான் சொல்வளர்க்கும் ஆசிரியர் ஒருவரை சந்திப்பேன் என்று அவர் சொன்னார். அது ஒருவேளை நீங்களோ என்னும் ஐயமே என்னை விலகி நின்று உங்களை நோக்கச் செய்தது” என்றான் வைசம்பாயனன். “நான் நோக்கி நின்றிருக்கிறேன் என்பதையே நேற்று உக்ரன் சொன்னபோதுதான் அறிந்தேன். இரவெல்லாம் நான் அதையே எண்ணிக்கொண்டிருந்தேன்.”
சண்டன் “நான் எவருக்கும் ஆசிரியன் அல்ல” என்றான். “ஆம், நீங்கள் சொல்சுருக்கிச் செல்லும் வழிகொண்டவர்” என்றான் வைசம்பாயனன். “சொல்லுங்கள், நான் என் ஆசிரியரை எப்படி கண்டடைவேன்?” சண்டன் “இவர்கள் மூவரும்கூட ஆசிரியரைத் தேடியே வந்துள்ளனர்” என்றான். “ஆம், நாங்கள் ஒவ்வொருவரும் தேடுவது ஒவ்வொரு சிறப்புள்ள ஆசிரியனை” என்றான் பைலன். “சொல்லில் மாறாநெறியமைக்கும் ஆசிரியனை ஜைமின்யர் தேடுகிறார். நான் சொல்லைக் கலைத்துவிளையாடும் ஒருவரைத் தேடுகிறேன். இவர் தேடுவது உலகென அமையும் ஒருவரை. அவரோ கனவுகளைச் சமைப்பவரை விழைகிறார்.”
“ஒருவரே நால்வராகவும் ஏன் இருக்கக்கூடாது?” என்றான் சண்டன். அவர்கள் திகைப்புடன் அவனை நோக்க “ஐந்தாவதாக ஒருவன் வந்திருக்கிறான். அவன் தேடுவது இந்நான்காகவும் ஆகி அப்பாலும் என அமைந்திருக்கும் ஒருவரை. அவன் கண்டடைபவரே உங்களுக்கும் ஆசிரியர்” என்றான். அவர்கள் சொல்லிலாது நிற்க ஜைமினி மட்டும் மெல்ல அசைந்தான். “நோக்குவிழிக்கேற்ப உருக்கொள்ளும் மலைபோன்ற ஒருவர். அள்ளும் கலத்திற்கேற்ப அமையும் ஆறுபோன்ற ஒருவர்” என்று சண்டன் சொன்னான். தலை காய்ந்துவிட்டதாக உணர்ந்து மீண்டும் நீரில் மூழ்கினான்.
அவன் எழுந்துவருவதற்காக அவர்கள் காத்து நின்றிருந்தனர். அவன் நீர் பிளந்தெழுந்து சடைக்கற்றைகளை அள்ளி தோளிலிட்டு வாயில் அள்ளிய நீரை உமிழ்ந்தான். ஜைமினி “அவரை எப்படி கண்டடைவது?” என்றான். சண்டன் சிரித்து “காட்டில் நீர் கண்டடைய ஒரு வழி செய்வதுண்டு. குரங்குக்கு உப்பு அள்ளி ஊட்டி விடாய் கொள்ளச்செய்வார்கள். அது செல்லும் வழியில் தாங்களும் சென்று சுனையையோ ஊற்றையோ அடைவார்கள்” என்றான். அவன் சொல்வதை உணர்ந்து பைலன் புன்னகைத்தான்.
“எண்ணிஎண்ணிச் சென்று நீங்கள் அடையப்போவதில்லை, அந்தணர்களே. ஐயம்கொண்ட எவரும் ஆசிரியர்களை அணுகியதில்லை. நீரோடை நதிசேர்வதுபோல தன் இயல்பால் இருப்பால் நுண்மையால் தன்போக்கில் அவரை நோக்கி செல்பவனே அடைகிறான். அவனுக்கு பிறிதொரு பாதை இருப்பதில்லை.” மீண்டும் மூழ்கி எழுந்து சண்டன் சொன்னான் “சிறியவனைத் தொடர்க! அவன் உங்களை கொண்டுசேர்ப்பான். அவனை முன்னரே என்றும் வாழும் சொல் தன் நாவென தெரிவுசெய்துவிட்டது.”