ஜெ
வண்ணதாசன் படைப்புகளைப்பற்றி நீங்கள் எழுதிய கட்டுரைத்தொடர் பல வினாக்களுக்குப் பதில் சொல்கிறது. அவரைப்பற்றிய இரு குற்றச்சாட்டுக்களைப் போகிறபோக்கிலே இன்று சிலர் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஒன்று, ஒரே வட்டத்தில் சுற்றிவருகிறார். இரண்டு, அன்பு கனிவு என ஒரே விஷயத்தைச் சொல்கிறார். உக்கிரமான விஷயங்களைச் சொல்வதில்லை.
இவை ஒருவகை டெம்ப்ளேட் கருத்துக்கள். இவற்றைச் சொல்பவருக்கு ஒரு அறிவுஜீவிக்களை கிடைக்கின்றது. நல்ல வாசகன் நமுட்டுச்சிரிப்பு சிரிப்பான். ஆனால் இவர்களுக்கு ஒரு வகையான பொது அங்கீகாரம்தான் முக்கியம். வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் இப்படி டெம்ப்ளேட் அபிப்பிரயத்துக்குள் சென்றுவிடுவோம் என்பது உண்மை. ஆனால் அதையே ஒரு நிலைப்பாடாகச் சொல்லி வாதாட ஆரம்பித்தால் மேற்கொண்டு வளர்ச்சியே இல்லாமலாகிவிடும்.
இந்தக்கருத்து என்பது கர்நாடக சங்கீதக்கச்சேரி வாசலிலே போய் நின்று பொதுவாகக்கேட்டுவிட்டு, ‘அதேபாட்டு, அதே வரி சும்மா ஸா ஸா என்று பாடிக்கொண்டிருக்கிறார்கள்’ என்று சொல்வதுபோலத்தான். அந்த இசைக்குள் செல்லவேண்டுமென்றால் ஒரு பயிற்சியும் கவனமும் தேவை. அதற்கு நமக்கு கொஞ்சம் தெரியாமலும் இருக்கலாம் என்ற அடக்கம் தேவை. அந்த இசைமரபு இசையின் நுணுக்கத்தைமட்டுமே கவனப்படுத்துகிறது. மற்ற அனைத்தையும் freeze செய்துவிடுகிறது. நுணுக்கத்தைச் சொல்ல விஷயத்தை freeze செய்யாமல் முடியாது. அந்த விஷயத்தை மிகத் திருத்தமாகச் சொல்லியிருக்கிறீர்கள். நுணுக்கத்தை அடைவதற்குச் சிறந்தவழி பேசுதளத்தை முடிந்தவரை குறுகலாக ஆக்குவதும் மேலுமேலும் நுணுகி ஒன்றையே சொல்வதும்தான். எல்லா கிளாஸிக் ஆர்ட்டும் இதைத்தான் சொல்கிறது
வண்ணதாசனின் forte என்பது ருசிதான். அந்த ருசியே அவருடைய தர்சனம். அதை அவர் வாழ்க்கையில் உள்ள எல்லா இருட்டுக்கும் அழிவுக்கும் மாற்றாகச் சொல்கிறார். அவர் அன்பையே சொல்கிறார் என்பது அஞ்சாறு கதைகளை வாசிப்பவர்களின் எண்ணம் . உண்மையில் அவர் எழுதிய பல கதைகள் கொடூரமான வாழ்க்கைச்சித்திரங்களைச் சொல்கின்றன. ஆனால் அவற்றை அவர் விரித்துச்சொல்வதில்லை. நீங்கள் சொல்வதைப்போல அதையெல்லாம் ஒற்றைவரியில் கடந்துசெல்கிறார். குழந்தைசெத்துப்போன அன்னையின் துக்கம் ரெண்டே வரிதான். ஆனால் ஒரு பூ விழுந்துகிடப்பதற்கு ஒருபக்கம். இது ஒரு தரிசனம். இதை வாசிக்க இங்கே நல்ல வாசகர்கள் வரவேண்டும்
ஒருகாலகட்டத்துக்கு என்று ஒரு எழுத்து உண்டு. அதுதான் trend எல்லாரும் அதையே எழுதுவார்கள். ஒருகும்பல் அத்தனை எழுத்தாளரிடம்போய் அதையே கேட்டுக்கொண்டிருக்கும். அவர்களின் தனித்தன்மையை நோக்கிச் செல்வதே நல்ல வாசகனுக்குரிய விஷயம். இன்றைக்கு வன்முறை செக்ஸ்மீறலை எழுதுவதே trend .சின்ன எழுத்தாளர்கள் அதையே எழுதுவார்கள். ஆனால் நல்ல எழுத்தாளனுக்கு அவன் உலகம் இருக்கும். அதுக்கும் வெளியுலகுக்கும் சம்பந்தமே இருக்காது. லா.ச.ராவுக்கு சௌந்தர்யம் மட்டும்தான். உங்க எழுத்திலே எங்கே துக்கம் என்று அவரிடம் கேட்டால் அது ஆபாசமான கேள்வி. மௌனியிடம்போய் அவர் கதையிலே எங்கே அரசியல் என்றுகேட்டால் அது மடத்தனம். நம் அமெச்சூர் விமர்சகர்களிடமிருந்து இலக்கியத்தைக் காப்பாற்ற நீங்கள் எழுதியதுபோல ஆணித்தரமாக எழுதவேண்டும். நன்றி ஜெமோ
சாரங்கன்
***
சமீபத்தில் கோவையில் நடந்த புத்தகத் திருவிழாவில் நிகழ்ந்த ஒரு சம்பவம் பற்றிக் கூற விரும்புகிறேன். விழா தொடங்கும்முன் என் பக்கத்து இருக்கையில் ஒரு இளைஞர் வந்து உட்கார்ந்தார். மலர்ச்சியும், தயக்கமும் கலந்திருந்த முகம். படப்படப்பாக இருந்தார். சிறு யோசனைக்குபின் தன் பையில் இருந்த ஒரு குறிப்பேட்டை எடுத்துக்கொண்டு மேடைக்கு சென்று திரும்பினார். எனக்கு ஆர்வமாக இருந்தது. நான் அவரிடம் ”யாரிடம் கையெழுத்து வாங்கச் சென்றீர்கள்” என்று கேட்டேன் (ஏனென்றால் மேடையில் இன்னும் சில பெரியவர்களும் இருந்தனர்).
அவர், தான், திரு. வண்ணதாசன் அவர்களின் தீவிர வாசகன் என்றும், இன்று அலுவலகத்தில் இருந்து அனுமதி பெற்றுக்கொண்டு சீக்கிரமே வந்திருப்பதாகவும் கூறினார். நான் மகிழ்ச்சியாக ‘நானும் அவரை காணத்தான் வந்தேன்’ என்றேன். அவ்வளவுதான். அவர் தயக்கமெல்லாம் காணாமல் போயிற்று. விழா தொடங்கும் வரையில் பேசிக்கொண்டே இருந்தார். அவர் சிறுவயது முதல் மிகுந்த கூச்சச் சுபாவம் உடையவராம். அந்த தனிமையே நூல்கள் படிக்கக் காரணமாயிருந்ததும், எழுத்தாளர் சுஜாதா ஒருமுறை வண்ணதாசன் நூல்களை பற்றி எழுதியதை தொடந்து இவர் வண்ணதாசன் அவர்களின் நூல்களை வாசிக்க ஆரம்பித்திருக்கிறார். ஒரு சமயத்தில் தன்னையே அக்கதைகளில் கண்டு நெகிழ்ந்திருக்கிறார். தன்னுடைய தயக்கம் ஒரு பெருங்குறை அல்ல என உணர்ந்திருக்கிறார். அவருக்கான ஒரு வெளி அக்கதைகளில் இருப்பதை கண்டிருக்கிறார். அன்றுமுதல் அவர் பையில் எப்போதும் வண்ணதாசன் அவர்களின் நூல் ஒன்றினை வைத்துக்கொள்வாராம். அன்றும் வைத்திருந்தார். குடும்பத்தினரின் எதிர்ப்புகளுக்கும், பொருளாதார சுமைகளுக்கும் இடையில், தான் எப்படியாவது நூல்கள் வாங்குவது குறித்தும் பெருமிதம் கொண்டார்.
எப்போதும் ஓயாமல் பேசிக்கொண்டே இருக்கும் நான் பேசமுடியாமல் நெகிழ்ந்து போயிருந்தேன். நாங்கள் இருவருமே பெயரை கேட்டுக்கொள்ளவில்லை. (அந்த பெயர் தெரியாமல் போன பறவைக்கு இவ்விழா அழைப்பிதழ் கிடைத்திருக்க வேண்டும் என இரண்டு நாட்களாக எண்ணிக் கொண்டிருக்கிறேன்.)
வண்ணதாசன் அவர்களின் நூல்களை படித்துவிட்டு தங்கள் சிறு கூட்டுக்குள் இருந்து சற்றே உயரப் பறந்து நீலத்தில் கலந்தவர்களை எனக்கு தெரியும். தன் சக பாலினத்தினரை சக பயணியாக பார்க்கும் விதமும், பெண்கள் மீதான மரியாதையும், ஒரு குடும்பத்தின் மையப் பகுதி பெண் எனும் அம்சங்களும் இவர் கதைகளில் எனக்கு மிகப்பிடித்தவை.
’மனதில் காரணமின்றி அச்சமும், தாழ்வுணர்ச்சியும் உள்ளது, மன அழுத்தம் போக்கும் நூல்கள் ஏதாவது சொல்’ என்று கேட்கும் நண்பர்களிடம் நான் வண்ணதாசன் கதைகளையே பரிந்துரைக்கிறேன். எனக்கு மேடை போட்டு அறிவுரை சொல்பவர்கள்மேல் பிடித்தம் இல்லை. என்றுமே கைப்பிடித்தோ, தோள் அணைத்தோ ஆறுதல் சொல்லும் அப்பாவாக வண்ணதாசன் இருந்திருக்கிறார்.
இலக்கியம் என்ற பெயரில் பயமுறுத்தாத மிக எளிய நடை. எளிமையான மனிதர்கள். ஒவ்வொரு கதையிலும் ஏதோவொரு கதாபாத்திரத்தின் வடிவில் நம்மையே காணமுடிகிற நெருக்கம். இவைதான் நான் புரிந்துகொண்ட வண்ணதாசன் அவர்களின் கதைக் களம். எவ்வளவு எழுதினாலும் தீராத அளவுக்கு அவருக்கு மனிதர்கள் வாய்த்திருக்கிறார்கள். மட்டுமல்ல அவரும் அவரின் கதைகள் மூலமாக நாள்தோறும் நிறைய மனிதர்களை அடைந்து கொண்டேயிருக்கிறார். கடல் நீர் மழையாகி மீண்டும் கடல் சேர்வதுபோல, அவரை சுற்றியுள்ள நாமும் அவரின் கதைகளாகி மீண்டும் அக்கடல் சேர்கிறோம். தீராத அன்பின் பெருங்கடல்.
வித்யா