[ 9 ]
காகவனம் என்று அழைக்கப்பட்ட அந்தச் சிற்றூர் முன்னூறு மூங்கில் இல்லங்களும் நடுவே வட்டவடிவமான மன்றுமுற்றமும் கொண்டிருந்தது. ஊரை வளைத்துச் சென்ற முள்மர வேலிக்கு நடுவே கன்றுகள் சென்று வருவதற்கான வலப்பக்க வாயிலும் மானுடரும் வண்டிகளும் செல்வதற்கான இடப்பக்க வாயிலும் இருந்தன. வலப்பக்க வாயிலில் புகுந்த காலடிப்பாதை வளைந்து சென்று ஊரின் பின்புறம் இருந்த குறுமரங்களால் ஆன சோலையை அடைந்தது. அதற்குள் கன்றுகளைக் கட்டும் தொழுவங்கள் அமைந்திருந்தன. இடப்பக்க வாயிலை அடைந்த வண்டிப்பாதை ஊரை வளைத்துச் சென்ற மூன்றாள் உயரமான அகழிக்கு மேல் போடப்பட்ட மரப்பாலத்தின் மேல் ஏறி உள்ளே சென்று முற்றமன்றில் முடிந்தது.
மன்று நடுவே நின்றிருந்த தொன்மையான அரசமரத்தினடியில் குலத்தலைவரும் குடிமூத்தாரும் அமர்ந்து நெறியுசாவும் மேடை அமைக்கப்பட்டிருந்தது. இல்லங்களுக்கு நடுவே பிறிதொரு சிறிய முள்வேலியால் காக்கப்பட்ட குலத்தலைவரின் மூன்றடுக்கு மூங்கில் இல்லம் அமைந்திருந்தது. அதன்மேல் அவர்களின் குடிமுத்திரையான ஆலிலை பொறிக்கப்பட்ட கொடி பறந்தது. ஓராள் உயரத்திற்கு மண்குவித்து மேலே மூன்றாள் உயரத்திற்கு முள்மரம் நட்டு அமைக்கப்பட்ட அவ்வேலியின் நான்கு மூலைகளிலும் தேக்குமரங்கள் நடப்பட்டு அவற்றின் உச்சியில் பரண் கட்டப்பட்டு காவல்மாடம் அமைக்கப்பட்டிருந்தது. அவற்றில் எந்நேரமும் காவலர் இருவர் தொலைதேரும் அம்புகளும் நீள்வில்லுமாக அமர்ந்திருந்தனர்.
புல்வெளியைக் கடந்து அவர்களின் வண்டி வருவதைக் கண்டதும் கிழக்கு வாயிலின் அருகே இருந்த காவல்மாடத்தின் உச்சியில் நின்றிருந்த வீரன் கொம்பை முழக்கினான். பிற மூன்று காவல்மாடங்களிலிருந்தும் கொம்புகள் எழுந்தன. வயலுக்கு வெளியே நான்கு குடிவீரர்கள் கையில் தோதகத்திமரம் செதுக்கிச் செய்த நீண்ட ஈட்டிகளுடன் தோன்றினர். அவர்களுக்குக் காவலாக சற்று பின்னால் நான்கு வில்லேந்திய வீரர்கள் வந்தனர். சண்டனும் கிருதனும் தங்கள் கையிலிருந்த முழவுகளை தலைக்கு மேல் தூக்கி விரல்களால் மீட்டி ஓசை எழுப்பினர்.
சூதர் வருகைக்குரிய குழூஉக்குறி அது. அந்த முழவோசை கேட்டதும் காவலர்கள் விரைவு தணிந்து உடல் இயல்புநிலை கொள்ள காத்து நின்றனர். உடலுக்கு இயல்புநிலை என்பது கோணல்நிலையா என பைலன் எண்ணிக்கொண்டான். அவர்கள் நேர்கொண்ட உடலுடன் சீரடிகளுடன் இரும்புப் பாவைகள்போல் அதுவரை வந்தனர். அது பயின்று உருவாக்கிய இறுக்கம். அவன் ஒவ்வொரு உடலாக நோக்கினான். ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணல் கொண்டிருந்தன. அந்தக் கோணல் எங்குள்ளது? அவர்களின் இயல்பிலா? அவ்வாறென்றால் அவர்களின் உள்ளத்திலுள்ளதா அது? எண்ணங்களிலும் உணர்வுகளிலும் அது இருக்குமா?
அதோ அவன் இடையில் வலக்கை வைத்து சற்றே இடக்கால் வளைத்து நிற்கிறான். இன்னொருவன் அருகே மார்பில் கைகட்டி முதுகை வளைத்து நின்றிருக்கிறான். உடலில் எப்பகுதி கோணலாகிறதென்பதைக்கொண்டு அவர்கள் எவ்வகைப்பட்டவர்கள் எனச் சொல்லும் நிமித்திகமுறை உள்ளதா? உடல்நிமித்திகர் இதை அறிவார்களா என்ன? மறுகணமே அவன் புன்னகையுடன் அக்கோணலைக்கொண்டு அவர்களுக்குரிய தெய்வமேதென்று சொல்லும் ஒரு மெய்யியல் உருவாகக்கூடுமா என எண்ணினான். நீ இடப்பக்கம் கோணல்கொண்டிருக்கிறாய், உனக்குரியது அதர்வம். வலப்பக்கம் கோணலாகிய உனக்கு யஜுர். நடுவளைந்த உனக்கு ரிக். அதிலும் உன் தோள் சரிந்துள்ளது, ஆகையால் உன்னுடையது கரியகிளை. எந்த வேதமும் இல்லாதவர் யார்? முற்றிலும் நிகர்நிலைகொண்டவர்களா?
அவன் புன்னகைப்பதைக்கண்டு “மலைப்பகுதியின் சிற்றூர்கள் சிறிய அரசுகள் போலவே இயங்குகின்றன” என்றான் கிருதன். “இங்கு வரி கொள்வதற்கு மட்டுமே அரசென்று ஒன்று வந்து தொடுகிறது” என்றான் சண்டன். கிருதன் “ஆம், அதுவும் நன்றே. அரசு அங்கு நிகழ்த்தும் வேள்வியில் இவர்களுடையதென ஒரு பிடி அரிசி சென்றாலும் அந்நலன் இவர்களுக்குரியதல்லவா? எத்தனை தனித்து காட்டுக்குள் வாழ்ந்தாலும் வான்மழை அனைவருக்குமாகவே பெய்கிறது. மழை கொணரும் வேதம் அனைவருக்கும் உரியதே” என்றான். சண்டன் புன்னகைத்தான்.
உக்ரன் “ஏன் அத்தனைபேரும் வளைந்து நிற்கிறார்கள்?” என்றான். பைலன் திடுக்கிட்டான். “காற்று வீசும்போதுதான் செடிகள் இப்படி வளையும்” என்று உக்ரன் சுட்டிக்காட்டினான். “அங்கே கண்ணுக்குத் தெரியாத காற்று வீசுகிறது.” பைலன் சிரித்தபடி “ஆளுக்கொரு காற்றா?” என்றான். “ஒரே காற்றுதான். அவர்களின் வேரும் கிளைகளும்தான் வேறுவேறு” என்றான் உக்ரன். கிருதன் “இப்படித்தான் வாயில்வந்ததை உளறுவான். அவன் யாரைச் சொல்கிறானோ அவர்களை நோக்கி கையை வேறு சுட்டுவான். இவனால்தான் நான் ஒருநாள் கழுவிலேறி அமரப்போகிறேன்” என்றான்.
வண்டிக்குள் இருந்த அவன் அன்னை சுதை “அவன் பொருளில்லாமல் சொல்வதில்லை. நமக்குத்தான் புரிவதில்லை” என்றாள். “உன்னைப்போன்ற கரிய காட்டுப்பெண்ணை அணைந்தபோது லோமஹர்ஷணருக்கு சற்றே கிறுக்கு பிடித்திருக்கவேண்டும். அந்தக் கிறுக்குதான் இப்படி தனியாகப் பிரிந்து வந்து பிறந்திருக்கிறது” என்றான் கிருதன். “தந்தையே, கிறுக்கு தொற்றக்கூடியதா?” என்றான் உக்ரன். “இல்லை, இருந்தால் எனக்கு தொற்றியிருக்குமே?” என கிருதன் பல்லைக்கடித்தபடி சொன்னான்.
அவர்கள் அவ்வூரின் வாயிலை அடைந்ததும் கிருதன் கைகளை தலைக்குமேல் தூக்கி “என் பெயர் கிருதன், தொல்சூதர் மரபான மாயூரத்தில் சகரன் மைந்தனாகப் பிறந்த பாடகன். வண்டிக்குள் என் மனையாட்டி இருக்கிறாள்” என்றான். “அவள் கருவுற்றிருப்பதனால் நடக்கமுடியவில்லை.” திரும்பி சண்டனை சுட்டிக்காட்டி “அவர் பாசுபத நெறிகொண்ட சூதர். அவர்கள் அயலூர் வைதிகர். கல்விதேடி நிலம்பெயர்பவர்” என்றான். சுதை தன் பெரிய வயிற்றுடன் மெல்ல இறங்கினாள்.
பைலனும் சுமந்துவும் வைசம்பாயனனும் ஜைமினியும் தங்களை அறிமுகம் செய்துகொண்டதும் ஊர்க்காவலர் முகங்கள் மாறின. அவர்களின் தலைவன் “நீங்கள் இங்கெழுந்தருளியது எங்கள் சிற்றூரை அருள் கொள்ளச்செய்கிறது, அந்தணர்களே” என்றான். திரும்பி அருகே நின்ற இன்னொருவனிடம் “அந்தணர்கள் என ஊர்த்தலைவரிடம் சொல்” என்று ஆணையிட அவன் உள்ளே ஓடினான்.
“வருக, தங்கள் கால்களால் எங்கள் ஊர் பொலிக!” என்று அவன் நால்வரிடமும் சொன்னான். ஆனால் ஐயத்துடன் அவன் விழிகள் ஜைமினியின் தோள்மேல் இருந்த உக்ரனை பார்த்துக்கொண்டிருந்தன. பின்னர் “அவருக்கு இன்னமும் மெய்யணைவுச் சடங்கு செய்யப்படவில்லையா?” என்றான். ஜைமினி புரியாமல் “சூதர்களுக்கு பன்னிரு வயதில்தானே அணைநூல் அளிப்பார்கள்?” என்றான். அவன் மேலும் குழம்பி “வடபுலத்து அந்தணர் இத்தனை கரியநிறம் கொண்டிருப்பதில்லை” என்றான். “இவன் அந்தணன் அல்ல, சூதன்” என்றான் ஜைமினி புரிந்துகொண்டு.
கிருதன் பதறியபடி “ஆம், அவன் என் மைந்தன். என் மனைவிக்கு முனிவராகிய லோமஹர்ஷணரில் பிறந்தவன். உக்ரசிரவஸ் சௌதி என்பது அவன் பெயர்” என்றான். அவர்கள் ஒருகணம் சொல்லிழந்தவர்களாக நோக்கினர். “அந்தணர் மேல் அமர்ந்து பயணம் செய்யும் முதல் சூதனை பார்த்திருக்கிறார்கள். அவர்களின் உலகம் இடிந்து சரிந்து மீண்டும் எழுந்து அமைய சற்றுநேரமாகும்” என்றான் சண்டன் சிரித்தபடி. காவலர்முதல்வன் பெருமூச்சுவிட்டு “வருக!” என்றான். கிருதன் “கீழிறங்கு, கரியா. உன்னை இவ்வண்ணம் கண்டால் ஊர்த்தலைவர் என்ன சொல்வார் என்று அறியேன்” என்றான். ஜைமினி “அவன் தனக்குரிய ஊர்தியிலேயே செல்கிறான் சூதரே, அமைதிகொள்க!” என்றான்.
ஊர்த்தலைவர் உள்ளிருந்து மேலாடையை எடுத்து சுற்றிக்கொண்டு ஓடிவந்தார். அதை அவர் விரைந்து பெட்டியிலிருந்து எடுத்திருக்கவேண்டுமென அதில் வீசிய தாழம்பூப் பொடியின் மணமே காட்டியது. கைகூப்பியபடி “வருக வருக! அந்தணர் காலடிபடுவதனால் எங்களூரில் அறமும் கல்வியும் செழிக்கட்டும். சூதர் சொற்களினூடாக மாவீரரும் பத்தினியரும் தவமுனிவரும் தேவரும் தெய்வங்களும் எங்களூரில் குடியேறட்டும்” என்றார். அவர் ஜைமினியின் மேல் அமர்ந்திருக்கும் உக்ரனை திட்டமிட்டு விழிதவிர்ப்பது தெரிந்தது. முன்னரே அவருக்கு சொல்லப்பட்டுவிட்டது என்று ஜைமினி உணர்ந்துகொண்டான்.
அக்குடியின் ஆண்களும் பெண்களும் அவருக்குப் பின் வந்து கூடினர். பெண்கள் குடங்களில் மஞ்சள் கரைத்த நீருடனும் குடலைகளில் மலர்களுடனும் வந்தனர். அவர் குடங்களில் இருந்த நீரை எடுத்து வைதிகர் மூவரின் கால்களையும் கழுவினார். ஜைமினி உக்ரனை இறக்கிவிட்டான். குலத்தலைவர் ஜைமினியின் கால்களில் மஞ்சள்நீரூற்றிவிட்டு விழிவிலக்கிக்கொண்டார். ஜைமினி ஊர்த்தலைவர் ஒரு பெண்ணிடம் திரும்பக்கொடுத்த சுரைக்குடுக்கையை தான் வாங்கி மஞ்சள்நீரை அள்ளி உக்ரனின் கால்களில் விட்டு தானே கழுவினான். ஊர்த்தலைவரின் கழுத்தில் தசைகள் இழுபடுவதை காணமுடிந்தது.
மூன்று பெண்கள் சுடர், நீர், அரிசி, மலர், பொன் என ஐந்து மங்கலங்களைக் காட்டி அவர்களை வரவேற்றனர். பிறர் அரிமலர் தூவி வாழ்த்துரைத்தனர். குரவையோசை சூழ்ந்து ஒலித்தது. அவர்கள் தங்களுடன் அழைத்துச்சென்றமையால் உக்ரனும் அந்த வாழ்த்துக்களுடன் உள்நுழைந்தான். கிருதனும் அவன் மனைவியும் தொடர்ந்துசென்றனர். இரு காவலர் அவர்களின் வண்டியை அப்பால் கொண்டுசெல்ல இறுதியாக சண்டன் தன் தோல்மூட்டையுடனும் முழவுடனும் நுழைந்தான்.
ஊர்த்தலைவர் அவர்களை அழைத்துச்சென்று மன்றுநடுவே நின்றார். “தாங்கள் தங்குவதற்காக குடில்கள் ஒருக்கப்படுகின்றன, அந்தணர்களே. அந்தணர் தங்கும்பொருட்டு இங்கே குடில் ஒன்று உள்ளது. ஆனால் அந்தணர்கள் இங்கு வந்து பத்தாண்டுகளுக்கும் மேல் ஆகிறது. ஆகவே குடில் சற்று தூசடைந்துள்ளது. பெண்டிர் அதை சீரமைத்துக்கொண்டிருக்கிறார்கள். சற்றுநேரம் பொறுங்கள்” என்றார். திரும்பி சண்டனிடம் “சூதர்கள் தங்குவதற்கு அப்பால் குடில்கள் இரண்டு உள்ளன. அவை உழவுப்பொருட்கள் போட்டுவைக்க இப்போது பயன்படுத்தப்படுகின்றன. எடுத்து அகற்றிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் சற்றுநேரத்தில் சித்தமாகிவிடும்” என்றார்.
“இவன் எங்களுடன் தங்குவான்” என்றான் ஜைமினி. ஊர்த்தலைவர் அதை கேட்காதவர் போலிருந்தார். “நாங்கள் உரிய ஆசிரியரைத் தேடிச்செல்லும் மாணவர்கள். இங்கு ஒருநாள் மட்டுமே தங்குவதாக உள்ளோம்” என்றான் பைலன். “இப்போது எங்கள் மெய்யாசிரியராக வழிகாட்டி அழைத்துச்செல்பவர் இவர்.” ஊர்த்தலைவர் அதையும் கேட்டதாக காட்டிக்கொள்ளவில்லை. “அந்தணர்களே, இங்கு எங்கள் குலத்தின் சிறார் எண்ணும் எழுத்தும் பயில்கிறார்கள். அவர்களுக்கு சொல்முறை செய்ய அந்தணர் வேண்டும். பல்லாண்டுகாலமாக இங்கே அந்தணர்களை கொண்டுவர முயல்கிறோம். எவரும் இத்தனை தொலைவுக்கு வருவதில்லை. உங்கள் கையால் மெய்சொல் பெற்றால் அவர்களின் சித்தம் தெளியுமென நினைக்கிறேன்” என்றார். “ஆம், அது எங்கள் கடமை” என்றான் வைசம்பாயனன்.
[ 10 ]
காகவனத்தின் முற்றத்தில் நடுவே மன்றெரி மூட்டப்பட்டது. தழலெழுந்து இருளுக்குள் ஆட சூழ்ந்திருந்த இல்லங்கள் நிழல்திரையென ஆடின. ஊர்த்தலைவரும் குடிமூத்தாரும் கரிய கம்பளியாடைகளை போர்த்தியபடி வந்து எரியருகே இடப்பட்ட மணைகளில் அமர்ந்தனர். ஊரார் ஒவ்வொருவராக கம்பளிகளும் மரவுரிகளும் கொண்டு உடல்மூடி வந்து அமர்ந்தனர். சற்றுநேரத்தில் அந்த முற்றமே முழுமையாக நிறைந்தது. குழந்தைகள் முதல் வளையமாகவும் ஆண்கள் அடுத்த வளையமாகவும் அமர்ந்திருக்க இடப்பக்கத்தில் பெண்கள் தனியாக அமர்ந்தனர். நான்குபேர் பெரிய மரக்குடுவையிலிருந்து அவர்களுக்கு கொதிக்கும் இன்சுக்குநீரை மூங்கில் குவளைகளில் அளித்தனர். அனைவருமே ஊனுடன் உணவுண்டு நிறைந்திருந்தனர். சிலர் அப்போதே மெல்லிய துயிலில் எடைகொண்ட தலையுடன் ஆடினர். குழந்தைகள் விழிசொக்கி அன்னை மடிகளில் தலைசாய்த்தன.
கிருதனும் சண்டனும் தங்கள் முழவுகளுடன் வந்தனர். அவர்கள் நெருப்பருகே வந்து குலத்தலைவரை வணங்கியதும் அவர் “அந்தணர்கள் எங்கே?” என்றார். “அவர்களின் சடங்குகள் சில முடியவில்லை. வந்துகொண்டிருக்கிறார்கள்” என்றான் சண்டன். அவர் உக்ரனைப்பற்றி பேச விரும்புகிறார் எனத் தெரிந்தது. ஆனால் அவரை ஏதோ ஒன்று தடுத்தது. அப்பால் அந்தணர்குடில்களின் அருகே பேச்சொலியும் சிரிப்பும் கேட்டது. “அங்கு அவர்களுக்கு குறையென ஏதுமில்லை அல்லவா?” என்றார் ஊர்த்தலைவர். “நன்று என்றனர்” என்றான் சண்டன். உக்ரனின் குரல் உரக்க கேட்டது. “உங்கள் மைந்தனுக்கு மிகக்கூரிய குரல்” என்றார் குலத்தலைவர். “ஆம், அதன்பொருட்டே அவனுக்கு அப்பெயர் இடப்பட்டது” என்றான் கிருதன். அவர் முகம் சுளித்து திரும்பிக்கொண்டார்.
நால்வரும் நடந்து வந்தனர். இம்முறை வைசம்பாயனனின் தோள்மேல் உக்ரன் இருப்பதை ஊர்த்தலைவர் கண்டார். அறியாமலேயே அவர் விழி திரும்பி சண்டனைப் பார்த்துவிட்டு விலகியது. கிருதன் தாழ்ந்த குரலில் “என்ன நிகழ்கிறதென்றே தெரியவில்லையே” என்றான். “என் மனைவி சொன்னால்தான் கொஞ்சம் கேட்பான். அவள் பயணக்களைப்பில் படுத்துவிட்டாள். எனக்கு உண்மையிலேயே அச்சமாக இருக்கிறது. சண்டரே, நீராவது அவனிடம் கொஞ்சம் சொல்லமுடியுமா?” என்றான். சண்டன் புன்னகைமட்டும் செய்தான். ஊர்த்தலைவர் வேறுபக்கம் நோக்கியவராக “மைந்தருக்கு உலகமுறை தெரியாது. கற்றுத்தருவது பெற்றோரின் கடன்” என்றார். கிருதன் “நான் கற்றுத்தர ஏதுமில்லை, தலைவரே. அவன் தேவைக்குமேல் கற்றுக்கொண்டவன். நாகக்குஞ்சுக்கு நஞ்சதிகம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்” என்றான்.
அவர்கள் அருகே வந்து ஊர்த்தலைவரை வணங்கிவிட்டு அமர்ந்தனர். உக்ரன் “நாம் இப்போது பாடப்போகிறோமா?” என்று ஆவலுடன் கிருதனிடம் கேட்டான். “நான் பாடப்போகிறேன். நீ சென்று அமர்க!” என்று எரிச்சலுடன் கிருதன் சொன்னான். “நானும் பாடுவேனே” என்றான் உக்ரன். ஊர்த்தலைவர் எரிச்சலுடன் “நாங்கள் இங்கு புராணமும் கதையும் கேட்டு மெய்யுணரும்பொருட்டு அமர்ந்திருக்கிறோம். குழவிச்சொல் கேட்டு மகிழ்வதற்காக அல்ல” என்றார். உக்ரன் “குழவிச்சொல்லில் மெய்யுணர முடியாதா உங்களுக்கு? நீங்கள் விரும்பும் கதையை சொல்லுங்கள். நான் சொல்கிறேன்” என்றான்.
“என்ன இது?” என்றார் ஊர்த்தலைவர். “அவனுக்கு எல்லா கதையும் உளப்பாடமாகத் தெரியும். அவன் நினைவுத்திறன் ஏதோ தீயதெய்வத்திற்குரியதென்றே நான் அஞ்சுவதுண்டு” என்றான் கிருதன். ஊர்த்தலைவர் “ஆனால்…” என ஏதோ சொல்லமுயல கிருதன் “அவன் பல தருணங்களில் முற்றிலும் புதிய கதைகளையும் சொல்கிறான். அக்கதைகளை நூல்தேர்ந்தோர்கூட சொன்னதில்லை. ஆனால் அவற்றைக் கேட்டவர்கள் அவை நூலுக்குரிய கதைகள் என்றே சொல்கிறார்கள். சென்ற பிறப்பில் இவன் கதைகளை ஆண்ட மாமுனிவனாக இருக்கக்கூடும் என்று ஒரு அயலகச் சூதன் ஒருமுறை சொன்னான். ஒன்றுமட்டும் சொல்கிறேன் தலைவரே, இவன் சொல்லும் எச்சொல்லுக்கும் நான் பொறுப்பல்ல. நான் இவனுக்கு கற்பித்ததெல்லாம் மொழியை மட்டுமே” என்றான்.
ஊர்த்தலைவர் அவனையே நோக்கி சிலகணங்கள் இருந்தார். பின்னர் “இவ்வனல் எதன் வடிவம் என்று சொல்?” என்றார். “குலத்தலைவரே, முதன்மைப் பருப்பொருட்கள் மூன்றே. அனல், நீர், மண். வானம் என்பது பருப்பொருட்களின் இன்மைநிலை. அவ்வின்மையின் நீரோ நிலமோ அனலோ அமைக்கும் அசைவையே காற்று என்கிறோம்” என்றான் உக்ரன். “முப்பெரும் பருப்பொருட்களும் மூன்று முதலியல்புகளின் பருவெளிப்பாடுகள். மாறாநிலையியல்பு கொண்ட நிலம் தமஸ். அதை ஆளும் நீர் சத்வம். அதன்மேல் எரிந்தெழும் அனல் ராஜஸம்.” வைசம்பாயனன் “இதை நான் இதுவரை கேட்டதே இல்லை” என்றான்.
ஜைமினி “இது தொல்பிராமணங்களில் ஒன்றான கிருஷ்ணபதத்தில் வரும் ஒரு பாடலின் பொருள். நீ இதை எப்படி கற்றாய்?” என்றான். “நான் காட்டின் விளிம்பில் நின்றிருந்தபோது சிவந்த சிறகுகளும் கரிய தலையும் கொண்ட பறவை ஒன்றைக் கண்டேன். அது சென்றமர்ந்து எழுந்த இடங்களில் எல்லாம் அனல் பற்றி எரிந்தது. அப்பறவையை கைநீட்டி அருகே வரவழைத்தேன். என் கைகளில் அது வந்தமர்ந்தது. என் நாவில் தன் வெண்ணிற அலகால் தொட்டது. அப்போது இவையனைத்தும் எனக்கு தெரியவந்தன” என்றான் உக்ரன்.
வியப்புடன் எழுந்து “அந்தப் பறவையின் பெயர் அனலை. அக்னிக்கு கிரௌஞ்சப்பறவை ஒன்றில் பிறந்தது அது. அக்கதை தேவலரின் புராணகதாகௌமுதியில் உள்ளது” என்றான் பைலன். “இக்கதைகளை இவனுக்கு எவர் கற்பித்தார்கள்?” கிருதன் அச்சத்துடன் “நான் ஒன்றும் அறியேன், அந்தணர்களே. இந்த மூடன் இப்படி பல கதைகளைச் சொல்லி எங்கு சென்றாலும் என் அன்னத்தில் மண்ணிடுகிறான். அடேய், வாயை மூடு! சென்று உன் அன்னையருகே படுத்து துயில்! போ…” என்றான். சண்டன் “மேலே சொல், மைந்தா” என்றான்.
“பொருளென்பது ஒரு வெளிப்பாடு மட்டுமே” என்றான் உக்ரன். “அப்பால் கருத்து என்றும் இப்பால் பொருளென்றும் அறிதலில் இயல்பென்றும் அறியமுடியாமையில் முடிவிலி என்றும் தன்னை வெளிப்படுத்தும் ஒன்றின் ஒரு முகம். நிலமென்று நின்ற நேர்நிலை பிரம்மன். அதில் செயலென்று எழுந்த அனலே சிவன். அமைந்த நீரின் தண்மையே விஷ்ணு. நிலத்திலும் நீரிலும் உறைகிறது அனல். தழல்தலென்றும் எரிதலென்றும் வெம்மையென்றும் ஒளியென்றும் இங்கு நின்றிருப்பதை ருத்ரம் என்றது தொல்வேதம். அனைத்தையும் உண்டழிக்கும் அதன் நாக்கு திகழும் சுடலையில் அதை ருத்ரனென்று அமர்த்தினர் முன்னோர். அறிக, செம்மையெல்லாம் ருத்ரம்! குருதி ஒரு ருத்ரன். செங்காந்தள் மலர் ஒரு ருத்ரன். செம்புலத்து மண் ஒரு ருத்ரன். பதினாறு ருத்ரர்கள் ஆள்கிறார்கள் புவியை. அவையோரே, அலகிலாப் பெருவெளியை ஒரு சிதையென்றாக்கி நின்றெரிவது மகாருத்ரம். அறிக மானுடரே, எரிவதெல்லாம் சிவமே!”
சிவந்தெரிந்த தழலாட்டத்தில் அறியாத் தொல்தெய்வமொன்று வந்தமைந்த சிறு கருங்கற்சிலை என அவன் நின்றிருந்தான். அங்கிருந்த அனைவர் உணர்வுகளும் மாறிவிட்டிருந்தன. எரிகொள்ளும் கரி என அவன் சுடர்ந்துகொண்டே சென்றான். அவன் விழிகளில் ஆடிய செந்தழல் துளிகளை நோக்கி அவர்கள் அமர்ந்திருந்தனர். “அன்னமனைத்திலும் அனலுறைகிறது. வெளியெங்கும் ஒளியென அதுவே நிறைந்துள்ளது. சொல்லில் எண்ணத்தில் சித்தத்தில் துரியத்தில் அதுவே மெய்யென்று நின்றுள்ளது. ஆம், அவ்வாறே ஆகுக!” அவன் கைகூப்பினான்.
தீ எரியும் ஒலி மட்டும் அங்கு கேட்டுக்கொண்டிருந்தது. பின்னர் ஊர்த்தலைவர் “இவர் எங்ஙனம் இதையெல்லாம் கற்றார்? ஒலியணுகூட பிழைக்காத முழுமை இச்சொல்லில் எப்படி கைவந்தது?” என்றார். “நான் அறியேன், தலைவரே. இவனை நான் வளர்க்கவே இல்லை” என்றான் கிருதன். சண்டன் “வேளிரே, ஒன்றுணர்க! கற்றுத்தேரும் சொல் ஒருபோதும் மெய்மையை சென்றடைவதில்லை. அது ஓர் ஒப்பந்தம் மட்டுமே. கற்பித்தவர்களுக்கும் கற்றவர்களுக்கும் நடுவே ஒரு படைக்கலம் வைப்பு, ஒரு நிகர்நிலை ஒப்பு. அழியா மெய்ச்சொல் கல்லில் அனலென எழவேண்டும். அது கற்பதற்கேதுமில்லை. ஒலிகளையும் ஒப்புமைகளையும் மட்டுமே அது இங்கிருந்து பெற்றுக்கொள்கிறது” என்றான்.
“இவர் சொன்னவை முன்னரே மகாருத்ரபிரபாவம் என்னும் நூலில் உள்ளவை” என்றான் சுமந்து. “ஆனால் மேலும் கூரிய சொற்களில் இவரிடமிருந்து அவை வெளிப்படுகின்றன. அந்நூலை கற்றுத் தேர்ந்து தன்சொல்லென ஆக்கி அளிக்கும் ஆசிரியர் போலிருக்கிறார்.” உக்ரன் “அந்தச் சிறிய குருவி தன் அலகால் தொட்டு பாறைகளை உருகச் செய்துவிடும்” என்றான். அவன் சொன்னதென்ன என்று அறியாமல் தலைவர் திகைப்புடன் திரும்பி நோக்கினார். “அதன் குரல் கூரியது. சிக்கிமுக்கிக் கல் உரசும் ஒலிகொண்டது” என்று அவன் கைகளை அசைத்தான். சிறுவர்களுக்குரிய வகையில் சிறுநெஞ்சு விம்ம கைகளை அசைத்து “சிவ் சிவ் சிவ் சிவ்!” என்றான். ஊர்த்தலைவர் பெருமூச்சுடன் “ஆம், நாம் அறிந்தது சற்றே” என்றார்.
குடிமூத்தவர் ஒருவர் “இளைய சூதர் முதற்சிவம் வெளியில் எழுந்த கதையை சொல்லட்டும். இன்றிரவு நாம் அனலுருக்கொண்டு எழுந்த அவன் காலடியில் அமர்ந்திருக்கிறோம்” என்றார். “ஆம், தன்னை இவர் சொல்லவேண்டுமென அதுவே முடிவுசெய்துள்ளது போலும்” என்றார் ஊர்த்தலைவர். கைகூப்பி பணிந்து “நான் வேண்டுமென்றால் சிவபுராணத்திலிருந்து அக்கதையை சொல்கிறேன். நான் அதை பல மேடைகளில் பாடியதுண்டு” என்றான் கிருதன். ஊர்த்தலைவர் திரும்பிப்பார்த்தபின் மறுமொழி ஏதும் சொல்லாமல் நோக்கை விலக்கிக்கொண்டார்.
சண்டன் குனிந்து உக்ரனைத் தூக்கி அங்கிருந்த மரத்தாலான சிறிய பீடத்தின்மேல் நிறுத்தினான். தன் முழவை எடுத்து அவன் கைகளில் கொடுத்தான். “எழுக சொல்!” என்றான். உக்ரன் அந்த முழவை திருப்பித் திருப்பி பார்த்தபின் “இது எனக்கா?” என்றான். “ஆம்” என்றான் சண்டன். “நானே வைத்துக்கொள்ளலாமா?” என்றான். “ஆம், வைத்துக்கொள்!” என்றான் சண்டன் புன்னகையுடன். “கேட்டாலும் தரமாட்டேன்” என்று உக்ரன் தலையைச் சரித்து புருவம் சுளித்து சொன்னான். “உன்னுடையதேதான் இது, போதுமா?” அவன் அதன் தோற்பரப்பை கையால் வருடியபடி “மென்மையாக உள்ளது” என்றான். பின்பு நிமிர்ந்து “அழுதாலும் தரமாட்டேன்” என்றான். சண்டன் சிரித்து “வேண்டாம்” என்றான்.
“எந்தையின் முழவு இதைவிடப் பெரியது. ஆனால் அவர் அதை நான் தொடுவதற்கே விடமாட்டார். நான் அதை ஒருமுறை முள்வைத்து கிழித்துவிட்டேன்” என்று அவன் சொன்னான். “ஆனால் இதை கிழிக்கமாட்டேன்.” அவன் முகம் புன்னகையில் மலர்ந்தது. “ஏனென்றால் இது என்னுடையது. நான் எவரிடமும் இதை கொடுக்கமாட்டேன்.” அதன்மேல் கைகளால் வருடிக்கொண்டே இருந்தான். அவன் உள்ளம் அந்த அசைவில் தெரிந்தது. “முழவுமீட்டக் கற்றுள்ளாயா?” என்றான் பைலன். “இல்லை, ஆனால் நான் அனைத்துப் பொருட்களையும் தாளமாக்குவேன்” என்றான் அவன். அவன் கைகள் அசைய அசைய உடல் மயக்கு கொண்டது. விழியிமைகள் துயிலில் என தளர்ந்தன.
அவனுடையதா என்று ஐயுறச்செய்யும் குரலில் அவன் மெல்ல முனகினான். வண்டு முரல்வதுபோல. ஓநாய்க்குட்டியின் முனகலென அது ஆகியது. பின் புலிக்குருளையின் உறுமலைப்போல. அவன் மையச்சுருதியை பற்றிவிட்டான் என சண்டன் புரிந்துகொண்டான். சுட்டுவிரல் சீறிக்கொத்தும் நாகக்குழவி என முழவை தொட்டுச்சென்றது. அம்மெல்லிய ஒலிக்கேற்ப அவன் உடலே முழவுத்தோலென அசைந்தது. முழவென்று ஆகி ஒருவன் முழவுமீட்டுவதை அப்போதுதான் பார்க்கிறோம் என சண்டன் எண்ணிக்கொண்டான். “சிவமேயாம்!” என்று உக்ரன் சொன்னான். விரல் துடித்து எழ விசைகொண்ட தாளத்துடன் இசைந்து “சிவமேயாம்!” என்றான். மேலும் உரத்து வெடித்தெழுந்தது அச்சொல். “ஆம், சிவமேயாம்!”